About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Friday, 2 February 2024

ஸ்ரீமத் பாகவத புராணம் - 48

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

புராண லக்ஷணங்கள்

ஸ்கந்தம் 02

படைப்பின் ரஹசியங்களையும் பகவான் உபதேசித்த சதுஸ்லோகீ பாகவதத்தையும் நாரதர்க்கு எடுத்துச் சொன்னார் ப்ரும்மா. நாரதர் அவற்றை வியாஸருக்குக் கூறினார்.

ஸ்ரீ சுகர் மேலும் கூறலானார்.


“அரசே! புராணம் என்பது பத்து லக்ஷணங்கள் கொண்டது. அவை அத்தனையும் கொண்டது ஸ்ரீமத் பாகவதம். ஸர்கம், விஸர்கம், ஸ்தானம், போஷணம், ஊதிகள், மன்வந்தரங்கள், பகவத் கதைகள், நிரோதம், முக்தி, ஆஸ்ரயம் ஆகியவையே பத்து லக்ஷணங்களாகும். 

பகவானின் நியமனத்தால் ஏற்பட்ட முக்குண பரிமாணங்களால் தோன்றிய பஞ்சபூதங்கள், சப்தம் போன்ற தன்மாத்திரைகள், ஐம்புலன்கள், அஹங்காரம், மஹத் முதலியவை பற்றிக் கூறுவது ஸர்கம்.

விராட் புருஷனிடமிருந்து தோன்றிய ப்ரும்மதேவரின் படைப்புகளைப் பற்றிக்கூறுவது விஸர்கம்.

ஜீவன்களைத் தன் கட்டுப்பாட்டில் வைக்கும் இறைவனின் பெருமைகளே ஸ்தானம் ஆகும்.

தன் பக்தர்களிடம் இறைவன் காட்டும் கருணையே போஷணம் ஆகும்.

அன்புடன் மக்களைக் காக்கும் தூய தர்மத்தைப் பின்பற்றும் மனு என்னும் அரசர்களைப் பற்றிக் கூறுவது மன்வந்தரக் கதைகள்.

ஜீவனைக் கர்மத் தளைகளில் மாட்டி விடும் வாஸனைகளைப் பற்றிக் கூறுவது ஊதிகள் ஆகும்.

பகவானின் பற்பல திருத்தோற்றங்களையும், பக்தர்களின் கதைகளையும் கூறுவது ஈசானு கதைகள் அல்லது பகவத் கதைகள் ஆகும்.

இறைவன் யோக நித்ரை புரியும் போது, ஜீவன் உபாதிகளுடனேயே இறைவனோடு கலப்பது நிரோதம்.

நான் என்ற அஹங்காரத்தைத் துறப்பது முக்தி. அதுவும் விளக்கப்படுகிறது.

அசைவனவும், அசையாதனவும் தோன்றுவதற்கு ஆதாரமான இறைவனிடமே அவை அனைத்தும் லயமாகின்றன. இதுவே ஆஸ்ரயம். இதை விளக்குவதற்கு ஏராளமான உதாரணங்களும், அனுபவக்கதைகளும் கூறப்படுகின்றன.

ஐம்பொறிகளில் எதை எடுத்துக் கொண்டாலும், அதன் உருவம், அதன் அதிஷ்டான தேவதை, அதன் உணர்ச்சி மூன்றும் உண்டு. அனைத்திற்கும் ஜீவன் பொதுவானது.

கண்ணை எடுத்துக் கொண்டால் பஞ்சபூதங்களால் ஆன கோளம் ஆதி பௌதிகம். அதன் பார்வைக்கு தேவதை சூரியன். அது ஆதி தைவிகம். பார்க்கும் சக்தி ஞானமே வடிவான பகவான். அது ஆத்யாமிகம். இம்மூன்றும் ஒரே ஜீவனுக்குள் வெளிப்படுகிறது. இம்மூன்றிலும் ஒன்றில்லாவிடில் மற்றொன்றை நம்மால் அறிய முடியாது. மூன்றையும் சாட்சியாக இருந்து அறிபவர் பரமாத்மா. அவரே ஆஸ்ரயன் ஆவார்.

விராட் புருஷன் ப்ரும்மாண்டத்தைப் பிளந்து கொண்டு வெளி வந்து தான் வசிக்க இடம் வேண்டி நீரைப் படைத்தார். விராட் புருஷனுக்கே நரன் என்ற பெயருண்டு. அவரிடமிருந்து தோன்றியதால் நீருக்கு நாரம் என்ற காரணப் பெயர் வந்தது. நீரிலேயே ஆயிரம் வருஷங்கள் குடியிருந்ததால் நாராயணன் என்று பெயர் வந்து விட்டது.

பகவானின் சங்கல்பத்தாலேயே பஞ்ச பூதங்கள், கர்மாக்கள், அவற்றின் கதி, அவற்றை செயல்படுத்தும் காலம், அதன் இயல்பு, இவையனைத்தையும் அனுபவிக்கும் ஜீவன் அனைவர்க்கும் செயல்படும் சக்தி கிட்டுகிறது. பகவான் செயல்படாமல் இருப்பாராயின் இவை அனைத்துமே சக்தியற்றுச் செயல் படாமல் இருக்கின்றன.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment