||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
சதுஸ்லோகீ பாகவதம்
ஸ்கந்தம் 02
தன்னை வணங்கிய ப்ரும்ம தேவரின் கரங்களைப் பிடித்துக் கொண்டு பகவான் உபதேசம் செய்த நான்கு ஸ்லோகங்களும் சதுஸ்லோகீ பாகவதம் எனப்படுகின்றன.
1. அஹமே வாஸமே வாக்³ரே
நாந்யத்³ யத் ஸத³ ஸத்பரம்|
பஸ்²சாத³ ஹம் யதே³ தஸ்²ச யோ
ஆவசிஷ்யேத் ஸோ அஸ்ம்யஹம்||
படைப்பிற்கு முன் நான் மட்டுமே இருந்தேன். அது தான் என் தூய்மையான பரிபூரண நிலை. என்னைத் தவிர ஸ்தூலமாகவோ, ஸூக்ஷ்மமாகவோ வேறு எதுவும் இல்லை. படைப்பின் உருவமாகத் தோன்றும் அனைத்தும் நானே. எந்த காரணமும் இல்லை, எந்த விளைவும் இல்லை. இப்போது காணப்படுவதும் 'நான்' தான். ப்ரபஞ்சம் ப்ரளயத்தில் லயமடைந்த பிறகு எஞ்சியிருப்பதும் நான் தான். நானே தனித்திருப்பேன்.
2. ருதே அர்த்த²ம் யத் ப்ரதீ யேத
ந ப்ரதி யேத சாத்மநி|
தத்³ வித்³யா தா³த்மநோ மாயாம்
யதா² பா⁴ஸோ யதா² தம:||
ஒரு பொருளின் பிம்பம் என்பது உண்மையில் அந்தப் பொருள் அல்ல. அது வெறும் பிம்பமே. பரமாத்மாவான என்னைத் தவிர வேறொரு பொருள் இல்லை. என் ப்ரதிபிம்பமாகத் தோன்றும் பொருள்கள் நிஜம் இல்லை. ராகு என்று ஒரு கிரகம் ஆகாயத்தில் காணப்படாத போதிலும் உண்மையில் இருப்பது போல், நான் யாராலும் காணப்படாவிடினும் உண்மையில் நான் மட்டுமே இருக்கிறேன். இருக்கும் பொருளை மறைப்பதும், இல்லாத பொருளைக் காட்டுவதுமாக, என் மாயை இரண்டு விதமாக செயல்படுகிறது. எந்தவொரு மதிப்பும் இருப்பதாகத் தோன்றினாலும் அது என்னுடன் தொடர்புடையதாக இல்லாவிட்டால் அது உண்மை இல்லை. அதுவே இருளில் பிரதிபலிப்பது போல் தோன்றும் எனது மாயையான ஆற்றல் (மாயா).
3. யதா² மஹாந்தி பூ⁴தாநி
பூ⁴தேஸ்² ச வச் சேஷ்வாநு|
ப்ரவிஷ்டாந்ய ப்ரவிஷ்டாநி
ததா² தேஷு ந தேஷ்வஹம்||
ஆகாயம் முதலிய ஐம்பெரும்பூதங்கள் எல்லா பொருள்களிலும் உள் நிரம்பியுள்ளன. ஆனால், அப்பொருள்கள் தோன்று முன்னேயும் பஞ்ச பூதங்களும் இருந்தன. எனவே உட்புகவில்லை என்றும் கூறலாம். இருவிதமாகவும் கொள்வதற்கு வாய்ப்பளிக்கிறது. அது போல், அனைத்து உயிர்களிலும் ஆன்மாவாக உள் நுழைந்து உள்ளவன் நானே. ஆனால், உடல்களில் மட்டுமின்றி எல்லாவற்றிலும் எங்கும் வியாபித்தும் இருக்கிறேன். நான் எல்லாவற்றுக்கும் வெளியே இருக்கிறேன். உதாரணத்திற்கு, மண்ணைக் கொண்டு சுவற்றைக் கட்டுகிறார்கள். சுவற்றில் மண் இருக்கிறது. மண் இல்லாமல் சுவர் இல்லை. ஆனால், சுவர் இல்லாமலும் மண் உண்டு.
4. ஏதாவ தே³வ ஜிஜ்ஞாஸ்யம்
தத்த்வ ஜிஜ்ஞா ஸுநாத்மந:|
அந்வய வ்யதிரே காப்⁴யாம்
யத் ஸ்யாத் ஸர்வத்ர ஸர்வதா³||
உலகியல் வஸ்துக்கள் ஒவ்வொன்றையும் இது ப்ரும்மம் அல்ல, இது ப்ரும்மம் அல்ல என்று எதிர்மறைப் போக்கில் தள்ளிக் கொண்டு வருவதாலும், அவற்றின் ஆன்மாவாக விளங்குவதால் இது ப்ரும்மமே என்ற நேர்மறைப் போக்கிலும் அறியப் படுபவன் நான் ஒருவனே. அனைத்தையும் கடந்தும், உள் நுழைந்து வியாபித்தும் இருப்பவன் இறைவன் ஒருவனே. பரமாத்மாவின் உண்மைத் தத்துவம் இதுவொன்றே. உயர்ந்த முழுமையான உண்மையைத் தேடும் ஒரு நபர், எல்லா சூழ்நிலைகளிலும், எல்லா இடங்களிலும் நேரங்களிலும், நேரடியாகவும் மறைமுகமாகவும் அதைத் தேட வேண்டும்.
“இக்கொள்கையை ஒரு மனத்துடன் பற்றிக் கொள். உனக்கு எப்போதும் எவ்விதமான படைப்புகளாலும் மயக்கம் ஏற்படாது” என்று கூறி ப்ரும்ம தேவரை ஆசீர்வதித்து விட்டு தன் ஸ்வரூபத்தை மறைத்துக் கொண்டார் இறைவன்.
அந்த ஸ்ரீ ஹரியை வணங்கி விட்டு தன் படைப்புத் தொழிலைத் துவங்கினார் ப்ரும்ம தேவர்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment