||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
013. திருவிண்ணகரம்
மார்க்கண்டேய க்ஷேத்ரம் – கும்பகோணம்
பதிமூன்றாவது திவ்ய க்ஷேத்ரம்
திருவிண்ணகரம்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 47 - 1
திருமங்கையாழ்வார்
001. திவ்ய ப்ரபந்தம் - 1448 - மனை வாழ்க்கை வேண்டாம்; நின்னருள் தா
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - முதலாம் திருமொழி - முதலாம் பாசுரம்
வண்டு உணும் நறு மலர் இண்டை கொண்டு* பண்டை நம் வினை கெட என்று*
அடிமேல் தொண்டரும் அமரரும் பணிய நின்று*
அங்கு அண்டமொடு அகல் இடம் அளந்தவனே*
ஆண்டாய் உனைக் காண்பது ஓர்* அருள் எனக்கு அருளுதியேல்*
வேண்டேன் மனை வாழ்க்கையை* விண்ணகர் மேயவனே|
002. திவ்ய ப்ரபந்தம் - 1449 - திருமகள் கணவனே! திருவருள் தா
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - முதலாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
அண்ணல் செய்து அலை கடல் கடைந்து*
அதனுள் கண்ணுதல் நஞ்சு உண்ணக்கண்டவனே*
விண்ணவர் அமுது உண அமுதில் வரும்*
பெண் அமுது உண்ட எம் பெருமானே*
ஆண்டாய் உனைக் காண்பது ஓர்* அருள் எனக்கு அருளுதியேல்*
வேண்டேன் மனை வாழ்க்கையை* விண்ணகர் மேயவனே|
003. திவ்ய ப்ரபந்தம் - 1450 - நீல மேனியனே! நின்னைக் காண அருள் செய்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - முதலாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
குழல் நிற வண்ண நின் கூறு கொண்ட*
தழல் நிற வண்ணன் நண்ணார் நகரம் விழ*
நனி மலை சிலை வளைவு செய்து* அங்கு அழல் நிற அம்பு அதுஆனவனே*
ஆண்டாய் உனைக் காண்பது ஓர்* அருள் எனக்கு அருளுதியேல்*
வேண்டேன் மனை வாழ்க்கையை* விண்ணகர் மேயவனே|
004. திவ்ய ப்ரபந்தம் - 1451 - ஆலிலையில் கண் வளர்ந்தவனே! அருள் செய்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - முதலாம் திருமொழி - நான்காம் பாசுரம்
நிலவொடு வெயில் நிலவு இரு சுடரும்* உலகமும் உயிர்களும் உண்டு ஒரு கால்*
கலை தரு குழவியின் உருவினை ஆய்* அலை கடல் ஆல் இலை வளர்ந்தவனே*
ஆண்டாய் உனைக் காண்பது ஓர்* அருள் எனக்கு அருளுதியேல்*
வேண்டேன் மனை வாழ்க்கையை* விண்ணகர் மேயவனே|
005. திவ்ய ப்ரபந்தம் - 1452 - திருவிண்ணகரானே! திருவருள் தா
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - முதலாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்
பார் எழு கடல் எழு மலை எழும் ஆய்ச்* சீர் கெழும் இவ் உலகு ஏழும் எல்லாம்*
ஆர் கெழு வயிற்றினில் அடக்கி நின்று* அங்கு ஓர் எழுத்து ஓர் உரு ஆனவனே*
ஆண்டாய் உனைக் காண்பது ஓர்* அருள் எனக்கு அருளுதியேல்*
வேண்டேன் மனை வாழ்க்கையை* விண்ணகர் மேயவனே|
006. திவ்ய ப்ரபந்தம் - 1453 - நான்மறைப் பொருளே! நல்லருள் நல்கு
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - முதலாம் திருமொழி - ஆறாம் பாசுரம்
கார் கெழு கடல்களும் மலைகளும் ஆய்* ஏர் கெழும் உலகமும் ஆகி*
முதலார்களும் அறிவு அரும் நிலையினை ஆய்ச்*
சீர் கெழு நான்மறை ஆனவனே*
ஆண்டாய் உனைக் காண்பது ஓர்* அருள் எனக்கு அருளுதியேல்*
வேண்டேன் மனை வாழ்க்கையை* விண்ணகர் மேயவனே|
007. திவ்ய ப்ரபந்தம் - 1454 - வேத ஒலியானவனே! அருள் காட்டு
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - முதலாம் திருமொழி - ஏழாம் பாசுரம்
உருக்கு உறு நறு நெய் கொண்டு ஆர் அழலில்*
இருக்கு உறும் அந்தணர் சந்தியின் வாய்*
பெருக்கமொடு அமரர்கள் அமர நல்கும்* இருக்கினில் இன் இசை ஆனவனே*
ஆண்டாய் உனைக் காண்பது ஓர்* அருள் எனக்கு அருளுதியேல்*
வேண்டேன் மனை வாழ்க்கையை* விண்ணகர் மேயவனே|
008. திவ்ய ப்ரபந்தம் - 1455 - பெண்ணாசை விடுத்தேன்; நின்னைக் காண அருள் செய்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - முதலாம் திருமொழி - எட்டாம் பாசுரம்
காதல் செய்து இளையவர் கலவி தரும்*
வேதனை வினை அது வெருவுதல் ஆம்*
ஆதலின் உனது அடி அணுகுவன் நான்*
போது அலர் நெடுமுடிப் புண்ணியனே*
ஆண்டாய் உனைக் காண்பது ஓர்* அருள் எனக்கு அருளுதியேல்*
வேண்டேன் மனை வாழ்க்கையை* விண்ணகர் மேயவனே|
009. திவ்ய ப்ரபந்தம் - 1456 - மும்மூர்த்தியானவனே; நின்னைக் காண வேண்டும்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - முதலாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
சாதலும் பிறத்தலும் என்று இவற்றை*
காதல் செய்யாது உன கழல் அடைந்தேன்*
ஓதல் செய் நான்மறை ஆகி* உம்பர் ஆதல் செய் மூவுரு ஆனவனே*
ஆண்டாய் உனைக் காண்பது ஓர்* அருள் எனக்கு அருளுதியேல்*
வேண்டேன் மனை வாழ்க்கையை* விண்ணகர் மேயவனே|
010. திவ்ய ப்ரபந்தம் - 1457 - திருமால் திருவடி சேர்வர்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - முதலாம் திருமொழி - பத்தாம் பாசுரம்
பூ மரு பொழில் அணி* விண்ணகர் மேல்*
காமரு சீர்க்* கலிகன்றி சொன்ன*
பா மரு தமிழ் இவை* பாட வல்லார்*
வாமனன் அடி இணை* மருவுவரே|
011. திவ்ய ப்ரபந்தம் - 1458 - எல்லாவற்றையும் துறந்து நின்னை அடைந்தேன்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - இரண்டாம் திருமொழி - முதலாம் பாசுரம்
பொறுத்தேன் புன்சொல் நெஞ்சில்*
பொருள் இன்பம் என இரண்டும் இறுத்தேன்*
ஐம்புலன்கள் கடன் ஆயின* வாயில் ஒட்டி அறுத்தேன்*
ஆர்வச் செற்றம் அவை தம்மை* மனத்து அகற்றி வெறுத்தேன்*
நின் அடைந்தேன்* திருவிண்ணகர் மேயவனே|
012. திவ்ய ப்ரபந்தம் - 1459 - திருவிண்ணகரானே! நீயே சரணம்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - இரண்டாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
மறந்தேன் உன்னை முன்னம்* மறந்த மதி இல் மனத்தால்*
இறந்தேன் எத்தனையும்* அதனால் இடும்பைக் குழியில்*
பிறந்தே எய்த்து ஒழிந்தேன்* பெருமான் திரு மார்பா*
சிறந்தேன் நின் அடிக்கே* திருவிண்ணகர் மேயவனே|
013. திவ்ய ப்ரபந்தம் - 1460 - மனத்திருந்த தேனே! உன்னையே சரணடைந்தேன்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - இரண்டாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
மான் ஏய் நோக்கியர் தம்* வயிற்றுக் குழியில் உழைக்கும்*
ஊன் ஏய் ஆக்கை தன்னை* உதவாமை உணர்ந்து உணர்ந்து*
வானே மா நிலமே* வந்து வந்து என் மனத்து இருந்த தேனே!*
நின் அடைந்தேன்* திருவிண்ணகர் மேயவனே|
014. திவ்ய ப்ரபந்தம் - 1461 - பந்த பாசங்களை அகற்றி உன்னைச் சேர்ந்தேன்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - இரண்டாம் திருமொழி - நான்காம் பாசுரம்
பிரிந்தேன் பெற்ற மக்கள்* பெண்டிர் என்று இவர் பின் உதவாது அறிந்தேன்*
நீ பணித்த அருள் என்னும்* ஒள் வாள் உருவி எறிந்தேன்*
ஐம்புலன்கள் இடர் தீர* எறிந்து வந்து செறிந்தேன்*
நின் அடிக்கே* திருவிண்ணகர் மேயவனே|
015. திவ்ய ப்ரபந்தம் - 1462 - எதுவும் நிலையாது; எனவே நின்னைச் சேர்ந்தேன்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - இரண்டாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்
பாண் தேன் வண்டு அறையும் குழலார்கள்* பல்லாண்டு இசைப்ப*
ஆண்டார் வையம் எல்லாம்* அரசு ஆகி முன் ஆண்டவரே*
மாண்டார் என்று வந்தார்* அந்தோ மனை வாழ்க்கை தன்னை வேண்டேன்*
நின் அடைந்தேன்* திருவிண்ணகர் மேயவனே|
016. திவ்ய ப்ரபந்தம் - 1463 - மல்லர்களை அடர்த்தவனே! சரணம்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - இரண்டாம் திருமொழி - ஆறாம் பாசுரம்
கல்லா ஐம்புலன்கள் அவை* கண்டவாறு செய்யகில்லேன்*
மல்லா மல் அமருள் மல்லர் மாள* மல் அடர்த்த மல்லா*
மல்லல் அம் சீர்* மதிள் நீர் இலங்கை அழித்த வில்லா*
நின் அடைந்தேன்* திருவிண்ணகர் மேயவனே|
017. திவ்ய ப்ரபந்தம் - 1464 - திருவிண்ணகரானே! நீயே சரணம்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - இரண்டாம் திருமொழி - ஏழாம் பாசுரம்
வேறா யான் இரந்தேன்* வெகுளாது மனக்கொள் எந்தாய்*
ஆறா வெம் நரகத்து* அடியேனை இடக் கருதி*
கூறா ஐவர் வந்து குமைக்கக்* குடி விட்டவரை*
தேறாது உன் அடைந்தேன்* திருவிண்ணகர் மேயவனே|
018. திவ்ய ப்ரபந்தம் - 1465 - வானவர் தலைவா! யான் நின் அடைக்கலம்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - இரண்டாம் திருமொழி - எட்டாம் பாசுரம்
தீ வாய் வல் வினையார்* உடன் நின்று சிறந்தவர் போல்*
மேவா வெம் நரகத்து இட* உற்று விரைந்து வந்தார்*
மூவா வானவர் தம் முதல்வா* மதி கோள் விடுத்த தேவா*
நின் அடைந்தேன்* திருவிண்ணகர் மேயவனே|
019. திவ்ய ப்ரபந்தம் - 1466 - பாண்டவர் தூதா! என்னை ஏற்றுக் கொள்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - இரண்டாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
போது ஆர் தாமரையாள்* புலவி குல வானவர் தம் கோதா*
கோது இல் செங்கோல்* குடை மன்னர் இடை நடந்த தூதா*
தூ மொழியாய் சுடர் போல்* என் மனத்து இருந்த வேதா*
நின் அடைந்தேன்* திருவிண்ணகர் மேயவனே|
020. திவ்ய ப்ரபந்தம் - 1467 - தேவர் உலகு சேர்வர்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - இரண்டாம் திருமொழி - பத்தாம் பாசுரம்
தேன் ஆர் பூம் புறவில்* திருவிண்ணகர் மேயவனை*
வான் ஆரும் மதிள் சூழ்* வயல் மங்கையர் கோன் மருவார்*
ஊன் ஆர் வேல் கலியன்* ஒலிசெய் தமிழ் மாலை வல்லார்*
கோன் ஆய் வானவர் தம்* கொடி மா நகர் கூடுவரே|
021. திவ்ய ப்ரபந்தம் - 1468 - திருவிண்ணகரானே! நின் உருவத்தை மறவேன்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - மூன்றாம் திருமொழி - முதலாம் பாசுரம்
துறப்பேன் அல்லேன்* இன்பம் துறவாது*
நின் உருவம் மறப்பேன் அல்லேன்* என்றும் மறவாது*
யான் உலகில் பிறப்பேன் ஆக எண்ணேன்* பிறவாமை பெற்றது*
நின் திறத்தேன் ஆதன்மையால்* திருவிண்ணகரானே|
022. திவ்ய ப்ரபந்தம் - 1469 - திருமாலே! நான் உனக்கு அடிமை
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - மூன்றாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
துறந்தேன் ஆர்வச் செற்றச்* சுற்றம் துறந்தமையால்*
சிறந்தேன் நின் அடிக்கே* அடிமை திருமாலே*
அறம் தான் ஆய்த் திரிவாய்* உன்னை என் மனத்து அகத்தே*
திறம்பாமல் கொண்டேன்* திருவிண்ணகரானே|
023. திவ்ய ப்ரபந்தம் - 1470 - திருநறையூர்த் தேனே! நின்னை அடைந்தேன்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - மூன்றாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
மான் ஏய் நோக்கு நல்லார்* மதிபோல் முகத்து உலவும்*
ஊன் ஏய் கண் வாளிக்கு* உடைந்து ஓட்டந்து உன் அடைந்தேன்*
கோனே குறுங்குடியுள் குழகா* திருநறையூர்த் தேனே*
வரு புனல் சூழ்* திருவிண்ணகரானே|
024. திவ்ய ப்ரபந்தம் - 1471 - உன்னைச் சேர்ந்து என் தீவினைகளைப் போக்கினேன்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - மூன்றாம் திருமொழி - நான்காம் பாசுரம்
சாந்து ஏந்து மென் முலையார்*
தடந் தோள் புணர் இன்ப வெள்ளத்து ஆழ்ந்தேன்*
அரு நரகத்து அழுந்தும்* பயன் படைத்தேன்*
போந்தேன் புண்ணியனே* உன்னை எய்தி என் தீவினைகள் தீர்ந்தேன்*
நின் அடைந்தேன்* திருவிண்ணகரானே|
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்