ஸ்ரீ:
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
திவ்ய ப்ரபந்தம் – 44 - பிரமன் அளித்த தொட்டில்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - மூன்றாம் திருமொழி - முதலாம் பாசுரம்
மாணிக்கம் கட்டி*
வயிரம் இடைக்கட்டி*
ஆணிப் பொன்னால் செய்த*
வண்ணச் சிறுத் தொட்டில்*
பேணி உனக்குப்*
பிரமன் விடு தந்தான்*
மாணிக் குறளனே தாலேலோ*
வையம் அளந்தானே தாலேலோ| (2)
- மாணிக்கம் - மாணிக்கத்தை
- கட்டி - பதித்து
- இடை - நடுவில்
- வயிரம் - வயிரத்தை
- கட்டி - பொருத்தியும்
- ஆணிப் பொன்னால் - தூய தங்கத்தால்
- செய்த - செய்யப்பட்ட
- வண்ணம் - அழகிய
- சிறு தொட்டில் - சிறிய தொட்டிலை
- பிரமன் - சதுர்முகனானவன் (பிரம்மா)
- பேணி - ஆசையுடன்
- உனக்கு - உனக்கு
- விடுதந்தான் - அனுப்பி வைத்தான்
- மாணி குறளனே - மிகச் சிறு உருவமெடுத்த வாமனனே
- தாலேலோ! - கண்ணுறங்கு!
- வையம் - உலகங்களை
- அளந்தானே - த்ரிவிக்ரமனாய் அளந்தவனே!
- தாலேலோ! - கண்ணுறங்கு!
கண்ணன் எம்பெருமானுக்கு சதுர்முகனான பிரம்மா ஆசையோடு ஒரு மிகச்சிறந்த தங்கத் தொட்டிலை ஸமர்ப்பிக்கிறான். மாணிக்கக் கற்களை வரிசையாகக் கோர்த்து, அதற்கு நடுவில் வைரக்கல்லைப் பதித்து, சுத்தமான தங்கத்தால் செய்த வண்ணச் சிறுத் தொட்டிலை மிகவும் ரசனையோடு செய்து, பாதுகாப்பாக கட்டப்பட்டிருந்ததாம். வாமனனாக குள்ள உருவம் தரித்து சிறுவனாக வந்தவனே! பின் திரிவிக்கிரம அவதாரம் எடுத்தவனே! நீ கண்ணுறங்கு, உலங்கங்களை தன் திருவடியால் அளந்தவனே! உனக்குத் தாலேலோ! உலகம் அனைத்தையும் உன் திருவடிகளால் அளந்தாய்! உனக்குத் தாலேலோ! நீ கண்ணுறங்கு என்று கண்ணனை தொட்டிலில் இட்டுத் தாலாட்டு பாடுகிறாள்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment