அத்தனை விஷயங்களும் கை கூடியிருந்த போதிலும் அவருக்கு ஒரு பெரிய மனக்குறை. அவருக்கு குழந்தைகள் இல்லை. அத்தனை சாஸ்திரங்களையும் கற்று உணர்ந்திருந்தபடியால், புத்ரன் இல்லாவிட்டால் புத்து என்னும் நரகம் சம்பவிக்கும் என்று அஞ்சினார். எனவே குழந்தைப் பேறு வேண்டி ஏராளமான வைத்யங்கள், பரிகாரங்கள், யாத்திரைகள் என்று செய்து கொண்டேயிருந்தார். ஆனால், ஒரு பலனும் இல்லை.
அவரது மனைவி துந்துலி என்பவள். அவளுக்கோ குழந்தை ஆசை அறவே இல்லை. குழந்தை பிறந்தால், நிறைய பொறுப்புகள் வரும், அழகு கெட்டு விடும் என்று அஞ்சினாள். குணத்தில் ஆத்ம தேவனுக்கு எதிர்மறையாய் இருந்தாள். எப்போதும் ஏதாவது வேலை செய்து கொண்டே இருப்பாள்.
எத்தனையோ கோவில்களுக்குச் சென்று வேண்டிக் கொண்ட போதிலும் குழந்தை பிறக்கவில்லை என்று மனம் வாடினார் ஆத்ம தேவன்.
ஒரு சமயம் வருத்தத்தோடு காட்டு வழி நடந்தார். ஒரு மரத்தடியில் அமர்ந்தார். துக்கம் தாளாமல் கண்ணீர் வந்தது. அந்த வழியாகச் சென்ற ஒரு ஸாது அவரைப் பார்த்தார்.
ஸாதுக்கள் இளகிய மனமும் கருணையும் கொண்டவர்கள். பார்த்தால் தேஜஸ்வியாய், வேதம் படித்தவர் மாதிரி இருக்கிறார். அழுகிறாரே என்று மனமிரங்கி ஆத்ம தேவனை உற்று நோக்கினார். நிமிர்ந்து பார்த்த ஆத்ம தேவன், ஒரு ஸாதுவைப் பார்த்ததும் ஓடிச் சென்று வீழ்ந்து வணங்கினார்.
"ஏம்பா அழற?" கேட்டதும் இன்னும் அழுகை பெரிதாக வெடித்தது. அவரை ஆசுவாசப்படுத்தி மீண்டும் கேட்டார்.
"ஏன் அழற?"
"ஸ்வாமி! சாஸ்திரங்கள் எல்லாம் புத்திரன் இல்லாதவனுக்கு கதியில்லை, நரகம் தான்னு சொல்றது. எனக்கு புத்திரனும் இல்லை. கதியுமில்லை ஸ்வாமி."
"இதுக்கா இப்படி அழற? புத்திரன் இருந்து அவன் சரியா ஸம்ஸ்காரம் செய்தால் தானப்பா நரகம் வராது. ஆனா, சந்ததி இல்லாம எவ்வளவோ பேர் இருக்காங்க. புத்ரனே இருந்தாலும் அவன் நமக்கு ஸம்ஸ்காரம் செய்ய அந்திம நேரத்தில் பக்கத்தில் இருப்பான்னு என்ன நிச்சயம்? சாஸ்திரம் சொல்றது என்னவோ உண்மை தான். நீ ஏதாவது பரிகாரம் செய்தியா?"
"எல்லா விதமான பரிகாரங்களும் செய்துட்டேன். ஏராளமான வழிபாடுகள், ஹோமங்கள் எல்லாம் பண்ணியாச்சு."
ஸாதுவுக்கு அவரைப் பார்த்தால் பாவமாய் இருந்தது. அந்த ஸாதுவுக்கு ஒருவரது தலையெழுத்தைப் படிக்கும் சக்தி இருந்தது.
"சரி, உட்கார்" என்று சொல்லி அவரது தலையெழுத்தைப் பார்த்தார்.
"ஆத்ம தேவா, இதற்கு முன்னால் ஏழு பிறவிகளுக்கும் உனக்கு குழந்தை இல்லை. இனி வரப் போகும் ஏழு பிறவிகளுக்கும் குழந்தை பிறக்கப் போவதில்லை. அதனால, நீ குழந்தை ஆசையை விட்டு விட்டு ஸந்நியாசம் வாங்கிக்கோ. நானே கொடுக்கறேன். அது அடுத்த ஜென்மாவுக்கு சமானம் ஆயிடும். பிறவி இல்லாம முக்தியும் கிடைக்கும். நரகத்துக்காக பயம் வேண்டாம்."
ஆத்ம தேவன் கேட்டு விட்டு முன்னிலும் பெரிதாய் அழுதான். ஸாதுவோ திகைத்தார்.
"என்னப்பா சொல்லிட்டேன். இப்படி அழற?"
"எனக்கு குழந்தை பிறந்துடும் என்கிற நம்பிக்கைலயாவது காலத்தை ஓட்டியிருப்பேன். நீங்க மஹாத்மாவா இருக்கீங்கன்னு பார்த்தா ஏழு ஜென்மத்துக்கு குழந்தை இல்லங்கறீங்க. இது தெரியாம இருந்திருந்தா நிம்மதியாவாது இருந்திருப்பேன். குழந்தை வரம் கேட்கறவன் கிட்ட போய் ஸந்நியாசம் வாங்கச் சொல்றீங்க."
ஸாது பார்த்தார், இவரைப் பேசி சமாதானப் படுத்த முடியாது என்று உணர்ந்து கொண்டார். அருகில் ஒரு மாமரத்தில் ஒரு மாங்கனி தொங்கிக் கொண்டு இருந்தது. அதைப் பறித்து ஏதோ ஜபம் செய்து,
"இதை உன் பத்நியிடம் கொடுத்து சாப்பிடச் சொல் நல்ல குழந்தையாகப் பிறக்கும்" என்றார்.
ஆத்ம தேவர் மிகவும் மகிழ்ந்து அவரை நமஸ்கரித்து விட்டு பழத்தோடு வீட்டுக்கு ஓடினார்.
ஏழு ஜென்மத்துக்கு குழந்தை கிடையாது என்றார். இப்போது பழம் கொடுத்து பிறக்கும் என்கிறாரே என்றால், முன்னது விதி. பின்னது அனுக்ரஹம்.
ஒரு கஷ்டத்திற்கு காரணம் நாம் செய்யும் முன்வினை. அனுக்ரஹம் செய்யும் போது ஸாதுக்கள் தங்கள் தவத்தின் ஒரு பகுதியை பழம், விபூதி, குங்குமம் அல்லது ஏதோ ஒரு பொருளில் ஏற்றிக் கொடுக்கிறார்கள். அந்த வினையின் வீரியத்தை விட அனுக்ரஹ பலம் அதிகமாக இருந்தால் கஷ்டம் விலகும். மாறாய் இருந்தால், தவத்தின் அளவுக்கேற்ற அளவு வினைப் பயன் விலகும். முற்றிலும் விலக்க மறுபடி ப்ரார்த்தனையும் அனுக்ரஹமும் தேவை.