About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Saturday, 12 August 2023

லீலை கண்ணன் கதைகள் - 10

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
 ||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

யோக மாயை|

வசுதேவர் குழந்தையை மாற்றி விட்டு மதுரா திரும்பினார். தேவகியின் பக்கத்தில் இருந்த பெண் குழந்தை அழ ஆரம்பித்தது. குழந்தையின் குரல் கேட்டதும் காவலர்கள் கம்சனிடம் ஓடிச் சென்று "அரசே! தேவகிக்கு ஒரு குழந்தை பிறந்திருந்தது. தங்களிடம் செய்தி சொல்லுவதற்காக நாங்கள் ஓடி வந்தோம்" என்று சொன்னார்கள். தூக்கம் வராமல் கம்சன் படுக்கையில் படுத்து புரண்டு கொண்டிருந்தான். அவனுக்குத் தூக்கம் போய் எத்தனையோ நாட்களாகிவிட்டன. தேவகியின் எட்டாவது குழந்தையைப் பற்றிய பயமே அவன் மனதை வாட்டிக் கொண்டிருந்தது. மன நிம்மதி இல்லாத அவனால் எப்படி தூங்க முடியும்? குழந்தை பிறந்து விட்டது என்று கேள்விப்பட்டதும் பக்கத்தில் இருந்த ஒரு கத்தியைக் கையிலேந்தி அவன் சிறையை நோக்கி விரைந்தான்.


கருணையற்ற முகத்துடன் கம்சன் தன்னை நோக்கி வருவதைத் தேவகி பார்த்தாள். அவள் அவன் காலடியில் விழுந்து, "என் அருமை அண்ணா! இவள் உன் மருமகளுக்குச் சமம். இவளைக் கொல்லாதே. இவள் ஒரு பெண். ஒரு பெண்ணினால் உன்னை என்ன செய்ய முடியும்? இவள் பெண்ணாதலால், உன்னைப் பயமுறுத்திக் கொண்டிருக்கும் தீர்க்க தரிசன வார்த்தைகளை இவளால் நிறைவேற்ற முடியாது. தயவு செய்து இவளை விட்டு விடு. நீ என் எத்தனையோ குழந்தைகளைக் கொன்று விட்டாய். இந்த ஒரு பெண்ணையாவது எனக்கு விட்டு வை" என்று கெஞ்சினாள், கதறினாள். அழுது கொண்டே அவள் அந்தக் குழந்தையைத் தன மார்போடு அணைத்துக் கொண்டாள். அவளுடைய கண்ணீர் அந்த குழந்தையின் உடலை நனைத்தது. ஆனால் அவள் கெஞ்சிக் கேட்டுக் கொண்டது ஒன்றும் கம்சன் காதில் விழவில்லை. 


ஏதோ வெறி பிடித்தவன் போல குழந்தையை அவளிடமிருந்து பறித்து, அதன் சின்னசிறு கால்களைப் பற்றிக் கொண்டு அதை ஒரு கல்லின் மீது அறையப் போனான். ஆனால் அந்த குழந்தையோ யோகமாயை! அதனால் அது அவன் கைகளிலிருந்து நழுவி, மேலே உயரச் சென்று, துர்க்காதேவி உருவில் காட்சியளித்தது. துர்க்கைக்கு எட்டுக் கைகள் இருந்தன. கைகளில் பலவித ஆயுதங்கள் காணப்பட்டன. 


துர்க்கை கம்சனைப் பார்த்து, "அடே மடையா! எதற்காக வீணாக என்னைக் கொல்லப் பார்க்கிறாய்? உன்னைக் கொல்லுவதாக உள்ள குழந்தை ஏற்கனவே பிறந்து எங்கோ வளர்ந்து கொண்டிருக்கிறது. தேவையின்றி பச்சிளங் குழந்தைகளைக் கொல்லாதே. உன் உண்மையான எதிரியைத் தேடு" என்று சொல்லி விட்டு மறைந்தாள். கம்சன் தூர்க்கா தேவியின் பக்தன். துர்க்கை தன் எட்டுக் கைகளுடன் அவன் முன் தோன்றியது அவன் மனதை மாற்றியது. 

துர்கா தேவியை ஈன்று எடுத்த தேவகி சாதாரணப் பெண்ணாக இருக்க முடியாது என்று நினைத்தான். தேவகிக்கும் வசுதேவருக்கும் தான் இழைத்த அக்கிரமங்களைக் குறித்து அவன் வருத்தப்பட்டான். உடனே, தன கைகளினாலேயே அவர்களுடைய கைகளில் பூட்டியிருந்த சங்கிலிகளையும் களைந்தான். மிக்க அடக்கத்துடன் அவர்களைப் பார்த்து, "என் அருமைச் சகோதரியே! என் சகோதரரே! உண்மையிலேயே நான் ஒரு பாவி. என்னுடைய கொடுஞ் செயல்களைக் குறித்து நான் பெரிதும் வருந்துகிறேன். குழந்தைகளைக் கொன்ற பாவத்தை நான் செய்துள்ளேன். எனக்கு என்ன நரகம் கிடைக்குமோ இரக்கமற்ற கொடுஞ் செயல்களைத் தயவுசெய்து மன்னித்து விடுங்கள்" என்றான்.

கண்களில் கண்ணீர் வழிய அவன் தன் தங்கை காலிலும் அவளுடைய கணவர் காலிலும் விழுந்து மன்னிப்புக் கேட்டான். பெருந்தன்மை வாய்ந்த தேவகியும் வசுதேவரும் அவனை மன்னித்து அவன் அவர்களுக்கு இழைத்த கொடுமைகளை மறந்து வீடு திரும்பினர். அவர்களுடைய பெருந்தன்மையைப் பாராட்டிக் கொண்டே கம்சன் சற்று மன நிம்மதியுடன் தன் அரண்மனை திரும்பினான்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 001 - திருவரங்கம் 12

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
 ||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

001. திருவரங்கம் 
ஸ்ரீரங்கம் - திருச்சி 
முதலாவது திவ்ய க்ஷேத்ரம்

இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 249 - 8

தொண்டரடிப்பொடி ஆழ்வார் 

127. திவ்ய ப்ரபந்தம் - 910 - அன்பு செய்யும் அடியாரையே உசுக்கிறாய்
திருமாலை - நான்காம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம் (39)
அடிமையில் குடிமை இல்லா* அயல் சதுப்பேதி மாரில்*
குடிமையில் கடைமை பட்ட* குக்கரில் பிறப்பர் ஏலும்*
முடியினில் துளபம் வைத்தாய்!* மொய் கழற்கு அன்பு செய்யும்*
அடியரை உகத்தி போலும்* அரங்கமா நகருளானே|

128. திவ்ய ப்ரபந்தம் - 911 - நின்னையே மனத்தில் வைக்க வேண்டும்
திருமாலை - நான்காம் திருமொழி - பத்தாம் பாசுரம் (40)
திருமறு மார்வ! நின்னைச்* சிந்தையுள் திகழ வைத்து*
மருவிய மனத்தர் ஆகில்* மாநிலத்து உயிர்கள் எல்லாம்*
வெருவரக் கொன்று சுட்டிட்டு* ஈட்டிய வினையரேலும்*
அருவினைப் பயனதுய்யார்* அரங்கமா நகருளானே|

129. திவ்ய ப்ரபந்தம் - 912 - அடியவர் உண்டு மிஞ்சிய சேடமே சிறந்தது
திருமாலை - ஐந்தாம் திருமொழி - முதலாம் பாசுரம் (41)
வானுளார் அறியலாகா* வானவா! என்பராகில்*
தேனுலாம் துளப மாலைச்* சென்னியாய்! என்பராகில்*
ஊனமா யினகள் செய்யும்* ஊன காரகர்கள் ஏலும்*
போனகம் செய்த சேடம்* தருவரேல் புனிதமன்றே?

130. திவ்ய ப்ரபந்தம் - 913 - எக்குலத்தாராயினும் நின் அடியவர்களே உயர்ந்தவர்கள்
திருமாலை - ஐந்தாம் திருமொழி - இரண்டாம் பாசுரம் (42)
பழுதிலா ஒழுகல் ஆற்றுப்* பல சதுப்பேதி மார்கள்*
இழி குலத்தவர் களேலும்* எம் அடியார் களாகில்*
தொழுமினீர் கொடுமின் கொள்மின்!* என்று நின்னோடும் ஒக்க*
வழிபட அருளினாய் போல்* மதிள் திருவரங்கத் தானே|

131. திவ்ய ப்ரபந்தம் - 914 - அடியார்களைப் பழிப்பவர் புலையர்
திருமாலை - ஐந்தாம் திருமொழி - மூன்றாம் பாசுரம் (43)
அமர ஓர் அங்கம் ஆறும்* வேதம் ஓர் நான்கும் ஓதி*
தமர்களில் தலைவராய* சாதி அந்தணர் களேலும்*
நுமர்களைப் பழிப்பராகில்* நொடிப்பது ஓரளவில்* 
ஆங்கே அவர்கள் தாம் புலையர் போலும்* அரங்கமா நகருளானே|

132. திவ்ய ப்ரபந்தம் - 915 - ஆனைக்கு அன்று அருள் செய்தாயே!
திருமாலை - ஐந்தாம் திருமொழி - நான்காம் பாசுரம் (44)
பெண்ணுலாம் சடையினானும்* பிரமனும் உன்னைக் காண்பான்*
எண்ணிலா ஊழி ஊழி* தவம் செய்தார் வெள்கி நிற்ப*
விண்ணுளார் வியப்ப வந்து* ஆனைக்கு அன்று அருளை ஈந்த கண்ணறா*
உன்னை என்னோ* களை கணாக் கருது மாறே| (2)

133. திவ்ய ப்ரபந்தம் - 916 - என் கவிதைகள் எம்பிரானுக்கு இனிக்கும்
திருமாலை - ஐந்தாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம் (45)
வள எழும் தவள மாட* மதுரை மா நகரம் தன்னுள்*
கவள மால் யானை கொன்ற* கண்ணனை அரங்க மாலை*
துவளத் தொண்டாய தொல் சீர்த்* தொண்டரடிப் பொடி சொல்*
இளைய புன் கவிதை ஏலும்* எம்பிரார்கு இனிய வாறே| (2)

134. திவ்ய ப்ரபந்தம் - 917 - சூரியன் உதித்த விட்டான்: பள்ளி ழுந்தருள்
திருப்பள்ளியெழுச்சி - முதலாவது பாசுரம்
கதிரவன் குணதிசைச் சிகரம் வந்து அணைந்தான்* 
கனை இருள் அகன்றது காலைய‌ம் பொழுதாய்* 
மது விரிந்து ஒழுகின மா மலர் எல்லாம்*  
வானவர் அரசர்கள் வந்து வந்து ஈண்டி*
எதிர் திசை நிறைந்தனர் இவரொடும் புகுந்த*  
இரும் களிற்று ஈட்டமும் பிடியொடு முரசும்* 
அதிர்தலில் அலை கடல் போன்றுளது எங்கும்*  
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்தருளாயே|

135. திவ்ய ப்ரபந்தம் - 918 - கஜேந்திரனுக்கு அருளியவனே! பள்ளி ழுந்தருள்
திருப்பள்ளியெழுச்சி - இரண்டாவது பாசுரம்
கொழுங்கொடி முல்லையின் கொழு மலரணவிக்*  
கூர்ந்தது குண திசை மாருதம் இதுவோ* 
எழுந்தன மலரணைப் பள்ளிக் கொள் அன்னம்*  
ஈன்பணி நனைந்த தம் இருஞ் சிறகுதறி*
விழுங்கிய முதலையின் பிலம் புரை பேழ்வாய்*  
வெள் எயிறு உற அதன் விடத்தனுக்கு அனுங்கி* 
அழுங்கிய ஆனையின் அருந்துயர் கெடுத்த*  
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்தருளாயே|

136. திவ்ய ப்ரபந்தம் - 919 - காலைக் காற்று வீசுகிறது, பள்ளி எழுந்தருள்
திருப்பள்ளியெழுச்சி - மூன்றாவது பாசுரம்
சுடர் ஒளி பரந்தன சூழ் திசை எல்லாம்*  
துன்னிய தாரகை மின்னொளி சுருங்கி* 
படர் ஒளி பசுத்தனன் பனி மதி இவனோ*  
பாயிருள் அகன்றது பைம் பொழில் கமுகின்*
மடலிடைக் கீறி வண் பாளைகள் நாற*  
வைகறை கூர்ந்தது மாருதம் இதுவோ* 
அடல் ஒளி திகழ் தரு திகிரி அம் தடக்கை*  
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்தருளாயே|

137. திவ்ய ப்ரபந்தம் - 920 - அயோத்தி அரசே! பள்ளி ழுந்தருள்
திருப்பள்ளியெழுச்சி - நான்காவது பாசுரம்
மேட்டிள மேதிகள் தளை விடும் ஆயர்கள்*  
வேய்ங்குழல் ஓசையும் விடை மணிக் குரலும்* 
ஈட்டிய இசை திசை பரந்தன வயலுள்*  
இருந்தின சுரும்பினம் இலங்கையர் குலத்தை*
வாட்டிய வரிசிலை வானவர் ஏறே!*  
மாமுனி வேள்வியைக் காத்து*  
அவ பிரதம் ஆட்டிய அடு திறல் அயோத்தி எம் அரசே!*  
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்தருளாயே|

138. திவ்ய ப்ரபந்தம் - 921 - தேவர்கள் பணிய வந்துள்ளனர்: பள்ளி ழுந்தருள்
திருப்பள்ளியெழுச்சி - ஐந்தாவது பாசுரம்
புலம்பின புட்களும் பூம் பொழில்களின் வாய்*  
போயிற்றுக் கங்குல் புகுந்தது புலரி* 
கலந்தது குண திசை கனைகடல் அரவம்*  
களி வண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த*
அலங்கல் அம் தொடையல் கொண்டு அடியிணை பணிவான்*  
அமரர்கள் புகுந்தனர் ஆதலில் அம்மா* 
இலங்கையர் கோன் வழிபாடு செய் கோயில்*  
எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே|

139. திவ்ய ப்ரபந்தம் - 922 - யாவரும் காத்துள்ளனர்: பள்ளி ழுந்தருள்
திருப்பள்ளியெழுச்சி - ஆறாவது பாசுரம்
இரவியர் மணிநெடும் தேரொடும் இவரோ?*  
இறையவர் பதினொரு விடையரும் இவரோ?* 
மருவிய மயிலினன் அறுமுகன் இவனோ?*  
மருதரும் வசுக்களும் வந்து வந்து ஈண்டி'*
புரவியொடு ஆடலும் பாடலும் தேரும்* 
குமரதண்டம் புகுந்து ஈண்டிய வெள்ளம்*
அருவரை அனைய நின் கோயில் முன் இவரோ?*  
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்தருளாயே|

140. திவ்ய ப்ரபந்தம் - 923 - தேவருடன் முனிவர்கள் நின்னைத் தொழ நிற்கின்றனர்
திருப்பள்ளியெழுச்சி - ஏழாவது பாசுரம்
அந்தரத்து அமரர்கள் கூட்டங்கள் இவையோ?*  
அருந்தவ முனிவரும் மருதரும் இவரோ?* 
இந்திரன் ஆனையும் தானும் வந்து இவனோ?*  
எம்பெருமான் உன் கோயிலின் வாசல்*
சுந்தரர் நெருக்க விச்சாதரர் நூக்க*  
இயக்கரும் மயங்கினர் திருவடி தொழுவான்* 
அந்தரம் பார் இடம் இல்லை மற்று இதுவோ?*  
அரங்கத்தம்மா!பள்ளி எழுந்தருளாயே|

141. திவ்ய ப்ரபந்தம் - 924 - சூரியனும் ஒளி பரப்பித் தோன்றினன்
திருப்பள்ளியெழுச்சி - எட்டாவது பாசுரம்
வம்பவிழ் வானவர் வாயுறை வழங்க*  
மாநிதி கபிலை ஒண் கண்ணாடி முதலா* 
எம்பெருமான் படி மக்கலம் காண்டற்கு*  
ஏற்பன ஆயின கொண்டு நன் முனிவர்*
தும்புரு நாரதர் புகுந்தனர் இவரோ?*  
தோன்றினன் இரவியும் துலங்கு ஒளி பரப்பி* 
அம்பர தலத்தில் நின்று அகல்கின்றது இருள் போய்*  
அரங்கத்தம்மா பள்ளி! எழுந்தருளாயே|

142. திவ்ய ப்ரபந்தம் - 925 - யாவருக்கும் காட்சி தர வேண்டுமே! பள்ளி ழுந்தருள்
திருப்பள்ளியெழுச்சி - ஒண்பதாவது பாசுரம்
ஏதம் இல் தண்ணுமை எக்கம் மத்தளியே*  
யாழ் குழல் முழவமோடு இசை திசை கெழுமி* 
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்*  
கந்தரு வரவர் கங்குலுள் எல்லாம்*
மாதவர் வானவர் சாரணர் இயக்கர்*  
சித்தரும் மயங்கினர் திருவடி தொழுவான்* 
ஆதலில் அவர்க்கு நாள் ஓலக்கம் அருள*  
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்தருளாயே|

143. திவ்ய ப்ரபந்தம் - 926 - அடியார்க்கு அடியன் ஆவேன்
திருப்பள்ளியெழுச்சி - பத்தாவது பாசுரம்
கடி மலர்க் கமலங்கள் மலர்ந்தன இவையோ?* 
கதிரவன் கனை கடல் முளைத்தனன் இவனோ?* 
துடியிடையார் சுரி குழல் பிழிந்து உதறித்*  
துகில் உடுத்து ஏறினர் சூழ் புனல் அரங்கா*
தொடை ஒத்த துளவமும் கூடையும் பொலிந்து*  
தோன்றிய தோள் தொண்டரடிப்பொடி என்னும் அடியனை*  
அளியன் என்று அருளி உன் அடியார்க்கு ஆட்படுத்தாய்|
பள்ளி எழுந்து அருளாயே!!

திருப்பாணாழ்வார்

144. திவ்ய பிரபந்தம் - 927 - அரங்கனின் கமல பாதம் வந்து விட்டது!
அமலனாதிபிரான் -  முதலாம் பாசுரம்
அமலனாதி பிரான்* அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன்* 
விண்ணவர் கோன்* விரையார் பொழில் வேங்கடவன்*
நிமலன் நின்மலன் நீதி வானவன்* நீள் மதில் அரங்கத்து அம்மான்* 
திருக்கமல பாதம் வந்து* என் கண்ணின் உள்ளன ஒக்கின்றதே|(2) 

145. திவ்ய பிரபந்தம் - 928 - அரங்கனின் சிவந்த ஆடையைச் சிந்திக்கின்றேன்
அமலனாதிபிரான் -  இரண்டாம் பாசுரம்
உவந்த உள்ளத்தனாய்* உலகம் அளந்து அண்டம் உற*
நிவந்த நீள் முடியன்* அன்று நேர்ந்த நிசாசரரை*
கவர்ந்த வெம் கணைக் காகுத்தன்* கடியார் பொழில் அரங்கத்து அம்மான்* 
அரைச் சிவந்த ஆடையின் மேல்* சென்றது ஆம் என சிந்தனையே| (2)

146. திவ்ய பிரபந்தம் - 929 – அவனது திருவுந்தியின் மேல் என் மனம் உள்ளது
அமலனாதிபிரான் -  மூன்றாம் பாசுரம்
மந்தி பாய்* வட வேங்கட மா மலை* 
வானவர்கள் சந்தி செய்ய நின்றான்* அரங்கத்து அரவின் அணையான்*
அந்தி போல் நிறத்து ஆடையும்* அதன் மேல் அயனைப் படைத்தது ஓர் எழில்*
உந்தி மேல் அதன்றோ* அடியேன் உள்ளத்து இன் உயிரே| (2)

147. திவ்ய பிரபந்தம் - 930 – அவனது திருவயிறு என் மனத்தில் உலவுகிறது
அமலனாதிபிரான் -  நான்காம் பாசுரம்
சதுர மா மதிள் சூழ் இலங்கைக்கு இறைவன்* தலை பத்து உதிர ஓட்டி* 
ஓர் வெம் கணை உய்த்தவன்* ஓத வண்ணன்*
மதுர மா வண்டு பாட* மா மயில் ஆடு அரங்கத்து அம்மான்* 
திருவயிற்று உதர பந்தம்* என் உள்ளத்துள் நின்று உலாகின்றதே|

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திவ்ய ப்ரபந்தம் - 6 - திருப்பல்லாண்டு 6

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

திவ்ய ப்ரபந்தம் - 6 - நரசிம்மனைப் பாடு
திருப்பல்லாண்டு - ஆறாம் பாசுரம்

எந்தை தந்தை தந்தை தந்தைத் தம் மூத்தப்பன்* 
ஏழ் படிகால் தொடங்கி* 
வந்து வழி வழி ஆட்செய்கின்றோம்* 
திருவோணத் திருவிழவில்* 
அந்தியம் போதில் அரியுருவாகி* 
அரியை அழித்தவனைப்* 
பந்தனை தீரப் பல்லாண்டு* 
பல்லாயிரத்தாண்டென்று பாடுதுமே|


இப்படி ஆழ்வார் மூன்று விதமான அதிகாரிகளையும் அழைத்த பிறகு, ஒவ்வொருவராக வரத் தொடங்குகின்றனர். இதில், வாழாட்பட்டு பாசுரத்தில் சொல்லப்பட்ட பகவத் கைங்கர்யார்த்திகள் தங்கள் தன்மைகளையும், செயல்களையும் சொல்லிக்கொண்டு வந்து புகுர, அவர்களை ஆழ்வார் உடன் அழைத்துக்கொள்கிறார்.

  • எந்தை - நானும்  
  • தந்தை - என் பிதாவும் 
  • தந்தை தந்தை - அவருடைய பிதாவும் அவருடைய பிதாவும் 
  • தம் மூத்தப்பன் - அவருடைய பிதாவும் பாட்டனுமாகிய 
  • ஏழ்படிகால் தொடங்கி - ஏழு தலைமுறை தொடங்கி 
  • வந்து - உரிய காலங்களில் வந்து 
  • வழி வழி - முறை தப்பாமல்
  • ஆள் செய்கின்றோம் - கைங்கரியம் பண்ணுகிறோம் 
  • திரு ஓணம் - ச்ரவண நக்ஷத்ரம் என்கிற 
  • திருவிழவில் - திரு நாளிலே 
  • அந்தியம் போதில் - அழகிய ஸரயம் ஸந்தியா காலத்தில் 
  • அரி உரு ஆகி - நரஸிம்ஹ மூர்த்தியாய்த் தோன்றி 
  • அரியை - ஆச்ரிதனான ப்ரஹலாதனுக்குப் சத்ருவான இரணியனை 
  • அழித்தவனை - கொன்றொழித்த பெருமானுக்கு 
  • பந்தனை தீர - அன்றைய ஆயாசம் தீரும்படி 
  • பல்லாண்டு - பல காலம் 
  • பல்லாயிரத்து ஆண்டு என்று - பல ஆயிரம் ஆண்டுகள் என்று 
  • பாடுதுமே - மங்களாசாசனம் செய்வோம்

ஆழ்வார் இப்பாசுரத்தில் தாம் தம் தந்தை முதல் ஏழு தலைமுறையாக பகவானுக்கே கைங்கர்யம் செய்து வருகிறோம் என பெருமையுடன் கூறுகிறார். திருவோணத் திருநாளில் மாலைப் பொழுதில் அழகியதான நரஸிம்ஹ உருவத்தைக் கொண்டு, தன் எதிரியான ஹிரண்யனை அழித்தவனுக்கு, தன்னுடைய அடியவனுக்காகச் செய்த அந்த செயலினால் ஏற்பட்ட சோர்வு தீரும்படியாக, காலம் உள்ளவரை பல்லாண்டு பாடுவோம்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 1.4

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
 ||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² ப்ரத²மோ அத்⁴யாய꞉||
||அர்ஜுந விஷாத³ யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||முதல் அத்யாயம்||
||அர்ஜுந விஷாத யோகம்||
||குழப்பமும் கலக்கமும்||

ஸ்லோகம் – 1.4 

அத்ர ஸூ²ரா மஹேஷ் வாஸா
பீ⁴மார்ஜுந ஸமா யுதி⁴|
யுயுதா⁴ நோ விராடஸ்² ச
த்³ருபத³ஸ்² ச மஹாரத²:||

  • அத்ர - அங்கு
  • மஹேஷ் வாஸா - பலமுள்ள வில்லாளிகள்
  • யுதி⁴ - போரில்
  • பீ⁴மார்ஜுந - பீமனுக்கும் அர்ஜுனனுக்கும்
  • ஸமா - சமமான 
  • ஸூ²ரா - வீரர்கள்
  • யுயுதா⁴ந - யுயுதானன்
  • ச - மேலும்
  • விராடஸ்² - விராடன் 
  • ச - மற்றும் 
  • மஹாரத² த்³ருபத³ஸ்² - மகாரதனாகிய துருபதன்

இப்பாண்டவச் சேனையில், பீமனுக்கும் அர்ஜுனனுக்கும் சமமான பெரிய வில்லாளிகள் பலரும் இருக்கின்றனர். யுயுதானன், விராடன், மகாரதனாகிய துருபதன் போன்ற மாபெரும் வீரர்கள் உள்ளனர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பாகவதம் - 1.1.11

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
 ||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² ப்ரத²ம: அத்⁴யாய꞉||
||நைமிஷ க்ஷேத்ரே ஸ்ரீமத் பாகவத விஷயே  
ஸூதம், ப்ரதி ஸொ²னகாதி முனீநாம் ப்ரஸ்ந:||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்|| 
||முதல் ஸ்கந்தம்||
||முதல் அத்யாயம்|| 
||ஞானிகளின் கேள்விகள்||

ஸ்லோகம் - 1.1.11

பூ⁴ரீணி பூ⁴ரி கர்மாணி 
ஸ்²ரோ தவ்யாநி விபா⁴க³ஸ²꞉|
அத꞉ ஸாதோ⁴த்ர யத்ஸாரம் 
ஸமுத்³ த்⁴ருத்ய மநீஷயாம்||
ப்³ரூஹி ந꞉ ஸ்²ரத்³ த³தா⁴ நாநாம் 
யேநாத்மா ஸம்ப்ர ஸீத³தி||

  • விபா⁴க³ஸஹ - முறைகளால் அனுஷ்டிக்க வேண்டிய 
  • பூ⁴ரி கர்மாணி - அநேகம் கர்மாக்கள் இருக்கின்றன
  • ஸ்²ரோ தவ்யாநி - அதே போல் கேட்க வேண்டிய ஸாஸ்திரங்கள்
  • பூ⁴ரீணி - அநேகம் இருக்கின்றன
  • அதஸ் - ஆகையால் 
  • ஸாதோ⁴ - ஹே! மகரிஷே!
  • அத்ர - இவைகளில்
  • யத்ஸாரம் - யாதென்று ஸாரமானதே 
  • யேந ஆத்மா - எதனால் புத்தியானது 
  • ஸம்ப்ர ஸீத³தி - நன்கு அமைதி அடையுமோ 
  • மநீஷயாம் ஸமுத்³ த்⁴ருத்ய - தங்களது அறிவுத் திறத்தால் அதனை எடுத்து 
  • ஸ்²ரத்³ த³தா⁴ நாநாம் நஸ் - கேட்பதில் ஸ்ரத்தையோடு கூடிய எங்களுக்கு 
  • ப்³ரூஹி - எடுத்துச் செல்லும்

முறைப்படி கடை பிடிக்க வேண்டிய கடமைகளோ ஏராளம். கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டிய ஸாஸ்திரங்களோ அநேகம். ஆகையால், ஹே! மகரிஷியே! இவைகளில் கடைந்தெடுக்கப்பட்ட ஸாரமான பொருள் எதுவோ, எதை கேட்பதால் மனம் நன்கு அமைதியடையுமோ, அதை உங்களது அனுபவத்தாலும் அறிவுத் திறத்தாலும் உலகோரின் நன்மைக்காகக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற விருப்பு கொண்ட எங்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டுகிறோம்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 19

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
 ||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

யாநி நாமாநி கௌ³ணாநி 
விக்²யாதாநி மஹாத்மந:|
ருஷிபி⁴ஃ பரிகீ³தாநி 
தாநி வக்ஷ்யாமி பூ⁴தயே||


மஹாத்மந: - மஹாத்மநஹ
ருஷிபி⁴: - ருஷிபி⁴ஃ

பகவான் அளவிட முடியாத பெருமை உடையவர். அவரே மஹாத்மா. எந்தெந்த நாமங்கள் பகவானுடைய கல்யாண குணங்களினாலும், சரிதத்தினாலும் பிரசித்தி பெற்றவையோ, ஆத்ம ஞானிகளான ரிஷிகளால் எங்கும் பாடப் பெற்றவையோ அவற்றை ஆன்ம ஈடேற்றத்தின் பொருட்டு உனக்குச் சொல்லுகிறேன். 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் - பதினாறாவது வார்த்தை

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
 ||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

016 யான் ஸத்யம் என்றேனோ க்ருஷ்ணனைப் போலே|

நான் சத்யம், நான் சொல்வது சத்யம், நானே சத்யம் என்று கண்ணன் எம்பெருமான் சத்ய பிரதிக்ஜை பண்ணுகிறார். அதை செய்து காட்டிய விஷயங்களில் இரண்டு இடங்களை இங்கே பார்க்கலாம். ஒன்று பரிக்க்ஷித் மகாராஜா கரிக்கட்டையாக வந்து பிறந்த போது, அந்த குழந்தையை உயிர் பெற்று எழ செய்வதற்காக கண்ணன் பண்ணின பிரதிக்ஜை. மற்றொன்று, என்றுமே நடக்காத விஷயங்கள் சிலது உள்ளன. ஆகாசம் இடிந்து விழாது. பூமி பிளக்காது. சமுத்திரம் வற்றாது. ஹிமாச்சலம் உடையாது. ஆனால் இது எல்லாமே எதிர்மாறாக நடந்தாலும் என் வார்த்தை மட்டும் ஒரு நாளும் பொய்க்காது என்று கண்ணன், திரௌபதியிடம் பிரதிக்ஜை பண்ணுகிறார். 


அர்ஜுனனுக்கும் சுபதரைக்கும் கல்யாணம் நடந்தது. அர்ஜுனனுக்கு அபிமன்யு பிறந்தான். அபிமன்யுக்கும் உத்தரைக்கும் கல்யாணம் நடந்தது. உத்தரையின் கர்பத்தில் பரிக்க்ஷித் இருக்கிறான். ஆனால் துரோணரின் மகன் அஸ்வத்தாமா, பாண்டவர்களால் கௌரவர்கள், தன் தந்தை ஆகியோரை இழந்த அசுவத்தாமன், பாண்டவர்களை பழி வாங்க எண்ணுகிறான். அப்போது, உறக்கத்தில் இருக்கும் உபபாண்டவர்களை, பாண்டவர்கள் என எண்ணி வெட்டிக் கொன்று விடுகிறான். இதை அறிந்ததும் பாண்டவர்கள், அசுவத்தாமனனைத் தேடி வியாசரின் குடிலுக்கு வருகின்றனர்

பாண்டவர்கள் வருவதை அறிந்த அசுவத்தாமன், ஒரு புல்லை உருவி அதை பிரம்மாஸ்திரமாக பாண்டவர்கள் மீது ஏவுகிறான். அர்ச்சுனனும் பிரம்மாஸ்திரத்தை ஏவுகிறான். இதனால் விளைவுகள் மிகவும் மோசமாகும் என்பதால் வியாச பகவான், அதைத் திரும்பப் பெறுமாறு அறிவுறுத்துகிறார். அர்ச்சுனன் பிரம்மாஸ்திரத்தைத் திரும்பப் பெறுகிறான். ஆனால், அசுவத்தாமனுக்கோ, திரும்பப் பெறும் மந்திரம் தெரியாது.


அந்த அஸ்தரம் உத்தரையின் கர்பத்திற்குள் சென்று சிதைக்க பார்த்தது. அப்பொழுது உத்தரை, த்ரௌபதி அனைவரும் கண்ணனிடம் சரணாகதி அநுஷ்டித்தார்கள். அப்பொழுது தான் எம்பெருமான் உள்ளுக்குள் போய் கர்ப்பத்தை சுற்றி சுற்றி வந்து குழந்தையை காத்தான். ஆனால் பிறக்கும் போது எதுவுமே இல்லாத ஒரு கரி கட்டையாக பிறந்தது. மறுபடியும் சரணாகதி அநுஷ்டித்தார்கள். அப்பொழுது தான் கண்ணன் "நான் சத்தியமே பேசுவது உண்மையாக இருந்தால், நான் சத்யன் என்பது உண்மையாக இருந்தால், நான் இதுவரை பிரமச்சாரி என்பது உண்மையாக இருந்தால் இந்த குழந்தை உயிர் பெற்று எழட்டும்" என்று பிரதிக்ஜை பண்ணி தன் திருவடி கட்டை விரலாலே அதை தீண்டுகிறார். அந்த குழந்தை உயிர் பெற்று எழுந்து விடுகிறது.

கிருஷ்ணர் சத்தியம் பேசுவாரா என்பது கேள்விக்குறியானாலும், சத்திய சங்கல்பத்தின் காரணமாகத் தான் எனக் கூறி விடலாம். ஆனால் அவர் நைஷ்டிக பிரம்மச்சாரி என்பது எப்படி? இந்த கேள்வி, நாரதருக்கு எழ, பிரம்மாவிடம் போய்க் கேட்கிறார். பிரம்மாவோ, உன் சந்தேகத்தை நித்திய உபவாசி துர்வாசர் தீர்த்து வைப்பார் எங்கிறார். 

நாரதருக்கோ மீண்டும் சந்தேகம். ஒருவேளை பசியைக் கூட பொறுக்க முடியாத துர்வாசர் எப்படி "நித்திய உபவாசி" என. அந்த சந்தேகத்தை கிரிஷ்ணர் தீர்த்து வைப்பார் என்கிறார் பிரம்மா.

நாரதர், துர்வாசரிடம் சென்று கேட்டார். துர்வாசர் சொன்னார். "ராம அவதாரத்தின் போது ஒரு முறை ராமர் காட்டினுள் செல்கையில், அங்கு இருந்த ரிஷிகள் எல்லாம், ராமனின் தோள்களின் அழகைப் பார்த்து விட்டு” ஆஹா இந்தத் தோள்களை நாம் ஒரு முறையாவது பற்ற மாட்டோமா? என்று. அடுத்து, கிருஷ்ண அவதாரத்தில், அந்த ரிஷிகள் எல்லாம் கோபிகைகளாக அவதரித்தனர். இதுவே, பதினாயிரம் மனைவியர் என்பது. ஆண்டவன் ஒருவனே சரணாகதன் மற்றவர்கள் சரணம் அனுஷ்டிப்பவர்கள். அவ்வளவு தான்"

நாரதர் அடுத்த சந்தேகத்தை கிருஷ்ணரிடம் வந்து கேட்டார். 

உடன் கிருஷ்ணர், "நாரதா! சற்று நேரம் பொறு. துர்வாசர் இன்று சற்று அதிகம் உண்டு விட்டார். அதனால் எனக்கு வயிற்று வலி. ருக்மணியிடம், சற்று சுக்கும், வெல்லமமும் வாங்கி சாப்பிட்டு விட்டு வருகிறேன்' என்று உள்ளே சென்றார். 

நாரதருக்கோ, துர்வாசர் அதிகம் உண்டால் கிருஷ்ணருக்கு வயிற்று வலி எப்படி வரும்? என அதற்கு கிருஷ்ணர், "துர்வாசர் தான் உணவு உண்பதற்கு முன் சர்வம் கிருஷ்ணார்ப்பணமஸ்து எனச் சொல்லி உண்கிறார். ஆகவே, அவர் உண்ணூம் உணவு என்னை வந்தடையும். அவரோ நித்திய உபவாசியாகிறார்" என்றார்

திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, “இப்படி நான் சத்தியமே பேசலையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்