||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
016 யான் ஸத்யம் என்றேனோ க்ருஷ்ணனைப் போலே|
நான் சத்யம், நான் சொல்வது சத்யம், நானே சத்யம் என்று கண்ணன் எம்பெருமான் சத்ய பிரதிக்ஜை பண்ணுகிறார். அதை செய்து காட்டிய விஷயங்களில் இரண்டு இடங்களை இங்கே பார்க்கலாம். ஒன்று பரிக்க்ஷித் மகாராஜா கரிக்கட்டையாக வந்து பிறந்த போது, அந்த குழந்தையை உயிர் பெற்று எழ செய்வதற்காக கண்ணன் பண்ணின பிரதிக்ஜை. மற்றொன்று, என்றுமே நடக்காத விஷயங்கள் சிலது உள்ளன. ஆகாசம் இடிந்து விழாது. பூமி பிளக்காது. சமுத்திரம் வற்றாது. ஹிமாச்சலம் உடையாது. ஆனால் இது எல்லாமே எதிர்மாறாக நடந்தாலும் என் வார்த்தை மட்டும் ஒரு நாளும் பொய்க்காது என்று கண்ணன், திரௌபதியிடம் பிரதிக்ஜை பண்ணுகிறார்.
அர்ஜுனனுக்கும் சுபதரைக்கும் கல்யாணம் நடந்தது. அர்ஜுனனுக்கு அபிமன்யு பிறந்தான். அபிமன்யுக்கும் உத்தரைக்கும் கல்யாணம் நடந்தது. உத்தரையின் கர்பத்தில் பரிக்க்ஷித் இருக்கிறான். ஆனால் துரோணரின் மகன் அஸ்வத்தாமா, பாண்டவர்களால் கௌரவர்கள், தன் தந்தை ஆகியோரை இழந்த அசுவத்தாமன், பாண்டவர்களை பழி வாங்க எண்ணுகிறான். அப்போது, உறக்கத்தில் இருக்கும் உபபாண்டவர்களை, பாண்டவர்கள் என எண்ணி வெட்டிக் கொன்று விடுகிறான். இதை அறிந்ததும் பாண்டவர்கள், அசுவத்தாமனனைத் தேடி வியாசரின் குடிலுக்கு வருகின்றனர்
பாண்டவர்கள் வருவதை அறிந்த அசுவத்தாமன், ஒரு புல்லை உருவி அதை பிரம்மாஸ்திரமாக பாண்டவர்கள் மீது ஏவுகிறான். அர்ச்சுனனும் பிரம்மாஸ்திரத்தை ஏவுகிறான். இதனால் விளைவுகள் மிகவும் மோசமாகும் என்பதால் வியாச பகவான், அதைத் திரும்பப் பெறுமாறு அறிவுறுத்துகிறார். அர்ச்சுனன் பிரம்மாஸ்திரத்தைத் திரும்பப் பெறுகிறான். ஆனால், அசுவத்தாமனுக்கோ, திரும்பப் பெறும் மந்திரம் தெரியாது.
அந்த அஸ்தரம் உத்தரையின் கர்பத்திற்குள் சென்று சிதைக்க பார்த்தது. அப்பொழுது உத்தரை, த்ரௌபதி அனைவரும் கண்ணனிடம் சரணாகதி அநுஷ்டித்தார்கள். அப்பொழுது தான் எம்பெருமான் உள்ளுக்குள் போய் கர்ப்பத்தை சுற்றி சுற்றி வந்து குழந்தையை காத்தான். ஆனால் பிறக்கும் போது எதுவுமே இல்லாத ஒரு கரி கட்டையாக பிறந்தது. மறுபடியும் சரணாகதி அநுஷ்டித்தார்கள். அப்பொழுது தான் கண்ணன் "நான் சத்தியமே பேசுவது உண்மையாக இருந்தால், நான் சத்யன் என்பது உண்மையாக இருந்தால், நான் இதுவரை பிரமச்சாரி என்பது உண்மையாக இருந்தால் இந்த குழந்தை உயிர் பெற்று எழட்டும்" என்று பிரதிக்ஜை பண்ணி தன் திருவடி கட்டை விரலாலே அதை தீண்டுகிறார். அந்த குழந்தை உயிர் பெற்று எழுந்து விடுகிறது.
கிருஷ்ணர் சத்தியம் பேசுவாரா என்பது கேள்விக்குறியானாலும், சத்திய சங்கல்பத்தின் காரணமாகத் தான் எனக் கூறி விடலாம். ஆனால் அவர் நைஷ்டிக பிரம்மச்சாரி என்பது எப்படி? இந்த கேள்வி, நாரதருக்கு எழ, பிரம்மாவிடம் போய்க் கேட்கிறார். பிரம்மாவோ, உன் சந்தேகத்தை நித்திய உபவாசி துர்வாசர் தீர்த்து வைப்பார் எங்கிறார்.
நாரதருக்கோ மீண்டும் சந்தேகம். ஒருவேளை பசியைக் கூட பொறுக்க முடியாத துர்வாசர் எப்படி "நித்திய உபவாசி" என. அந்த சந்தேகத்தை கிரிஷ்ணர் தீர்த்து வைப்பார் என்கிறார் பிரம்மா.
நாரதர், துர்வாசரிடம் சென்று கேட்டார். துர்வாசர் சொன்னார். "ராம அவதாரத்தின் போது ஒரு முறை ராமர் காட்டினுள் செல்கையில், அங்கு இருந்த ரிஷிகள் எல்லாம், ராமனின் தோள்களின் அழகைப் பார்த்து விட்டு” ஆஹா இந்தத் தோள்களை நாம் ஒரு முறையாவது பற்ற மாட்டோமா? என்று. அடுத்து, கிருஷ்ண அவதாரத்தில், அந்த ரிஷிகள் எல்லாம் கோபிகைகளாக அவதரித்தனர். இதுவே, பதினாயிரம் மனைவியர் என்பது. ஆண்டவன் ஒருவனே சரணாகதன் மற்றவர்கள் சரணம் அனுஷ்டிப்பவர்கள். அவ்வளவு தான்"
நாரதர் அடுத்த சந்தேகத்தை கிருஷ்ணரிடம் வந்து கேட்டார்.
உடன் கிருஷ்ணர், "நாரதா! சற்று நேரம் பொறு. துர்வாசர் இன்று சற்று அதிகம் உண்டு விட்டார். அதனால் எனக்கு வயிற்று வலி. ருக்மணியிடம், சற்று சுக்கும், வெல்லமமும் வாங்கி சாப்பிட்டு விட்டு வருகிறேன்' என்று உள்ளே சென்றார்.
நாரதருக்கோ, துர்வாசர் அதிகம் உண்டால் கிருஷ்ணருக்கு வயிற்று வலி எப்படி வரும்? என அதற்கு கிருஷ்ணர், "துர்வாசர் தான் உணவு உண்பதற்கு முன் சர்வம் கிருஷ்ணார்ப்பணமஸ்து எனச் சொல்லி உண்கிறார். ஆகவே, அவர் உண்ணூம் உணவு என்னை வந்தடையும். அவரோ நித்திய உபவாசியாகிறார்" என்றார்
திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, “இப்படி நான் சத்தியமே பேசலையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment