||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
ஜராசந்தனின் ஏமாற்றம்|
முசுகுந்தரின் கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் வழிந்து, அவர் தழுதழுத்த குரலில், "என் பிரபுவே, உலகம் அநித்தியம் என்பதை நான் அறிவேன். இது ஒரு கதையை எனக்கு நினைவு படுத்துகிறது. அடுப்பங் கரையில் உத்தரத்தில் இருந்து ஒரு வெண்ணெய்ச் சட்டி தொங்கிக் கொண்டிருந்தது. வெண்ணையை ருசி பார்க்க விரும்பும் ஒரு எலி, பானையைத் தாங்கிக் கொண்டிருக்கும் கயிற்றின் நுனிக்குச் சென்று, அங்கிருந்து மெல்லக் கீழே இருங்கிக் கொண்டிருக்கிறது.
இதற்கிடையில் ஒரு பாம்பு எலியைத் தின்பதற்காக, அதன் மீது பாயக் காத்துக் கொண்டிருகிறது. இந்த விஷயம் எலிக்குத் தெரியாது. இது போலவே உலக விஷயங்களிலிருந்து, இன்பத்தை நாடும் மனிதனையும் அவனுடைய ஆசைகளையும் அழிக்கக் காலம் காத்துக் கொண்டிருக்கிறது என்பதை மனிதன் அறியாமல் இருக்கிறான். நான் கேட்கும் வரமெல்லாம் தங்களுக்குச் சேவை செய்ய வேண்டும், தங்கள் பாத கமலங்களுக்கு அடியில் என்றும் இருக்க வேண்டும் என்பது தான். எனக்கு வேறு ஒன்றும் வேண்டாம்" என்றார். அதற்குக் கிருஷ்ணன், "உமது பக்தியை மெச்சினேன். நீர் உலக ஆசை இல்லாமல் இருக்கிறீர். அதனால் என் ஞாபகம் உமக்கு என்றும் இருக்கும். கடைசியில் நீர் என்னை வந்து அடைவீர்" என்றார்.
கிருஷ்ணன் மதுரா திரும்பினான். பலராமனும் கிருஷ்ணனும் சேர்ந்து காலயவனனின் படைகளை அழித்தனர். காலயவனன் கொள்ளையடித்த பொருட்களையெல்லாம் அவர்கள் பறித்து, அதைத் துவாரகைக்குக் கொண்டு வந்தனர். வழியில் ஒரு பெரிய சேனையுடன் ஜராசந்தன் அவர்களைத் தடுத்தான். உடனே தங்கள் உயிருக்குப் பயந்தவர்களைப் போல இருவரும் ஓட ஆரம்பித்தனர். இதைக் கண்டு ஜராசந்தன் ஆச்சரியப்பட்டான். அவர்களிடம் ஆயுதங்கள் இல்லை என்பதை அவன் கண்டான். ஆகவே தன்னுடைய சேனை பின் தொடர, அவன் அவர்களைத் தன் இரதத்தில் இருந்த படியே பின் தொடர்ந்தான்.
வெகு நேரம் அவர்களைப் பின் தொடர்ந்தான். பலராமனும் கிருஷ்ணரும் பிரவர்ஷணம் என்ற மலையின் அடிவாரத்தை அடைந்தார்கள். இருவரும் மலையுச்சிக்கு விரைந்தார்கள். இருவரும் மலைக்குள் எங்கோ ஒளிந்து விட்டார்கள் என்று ஜராசந்தன் நினைத்து, மலைச் சுற்றி விறகுகளை அடுக்கி அவற்றுக்குத் தீ வைத்தான். தீ பாதிமலைக்கு பரவியதும் பலராமனும் கிருஷ்ணனும் மலை உச்சியிலிருந்து கீழே குதித்தார்கள். ஜராசந்தன் அதை கவனிக்கவில்லை. அந்த தீயில் இருவரும் இறந்து விட்டார்கள் என்று நினைத்துக் கொண்டு, அவன் தன் பெரிய சேனையுடன் தனது மகத நாட்டுத் தலைநகரை அடைந்தான்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்