||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
069 கடலோசை என்றேனோ பெரிய நம்பியைப் போலே|
மாறனேரி நம்பி ஆளவந்தாரின் சீடர். இவர் உழவுத் தொழிலில் ஈடுபட்டிருந்தார். ஆளவந்தார், வைணவ சித்தாந்த உண்மைகளை பரப்பும் நோக்கில் தம் சீடர்களுடன் பயணிக்கும் போது, ஒரு வயல் வழியே செல்ல நேரிட்டது. அங்கு உழவர் ஒருவர் உழுது கொண்டிருந்தார். உச்சி வேளை ஆனதால், பசியும் தாகமும் பொறுக்காத அவர், அருகில் உள்ள ஓடைக்குச் சென்று சேற்று நீரை கையால் அள்ளி எடுத்து, எம்பெருமானுக்கு நிவேதனம் செய்துவிட்டு, பின் பருகினார். இச்செயல் ஆளவந்தாரின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. உடன் இருந்த பெரிய நம்பி இச்செயல் குறித்து அந்த உழவரிடம் வினவ, “இந்த மண்ணும் அந்த மண்ணும் ஒன்றுதான். சேற்றுக்கும் சோற்றுக்கும் வேறுபாடு காணேன்.” என்றார்.
சடகோப மாறன் என்ற பெயரை உடைய நம்மாழ்வாருக்கு நிகரானவர் என்று கூறி அவருக்கு மாறன் நேர் (இணையான) நம்பி என்று பெயர் சூட்டினார் ஆளவந்தார். நம்பிக்கு பஞ்ச சமஸ்காரம் செய்வித்து வைணவ சித்தாந்தம், நாலாயிரத் திவ்யப் பிரபந்தம், பகவத் கீதை முதலிய சகல வேத சாத்திரங்களை உபதேசம் செய்தார் ஆளவந்தார். நம்பியும் அனைத்தையும் கற்றுத் தெளிந்து சிறந்த ஞானியாக விளங்கினார். பெரிய நம்பியும் மாறனேரி நம்பியும் குரு பக்தியிலும் குருவிற்கு சேவை புரிவதிலும், குருவிடம் இருந்து கற்றுக் கொள்வதிலும் என அனைத்தையும் ஒன்றாகவே செய்து, பேதம் பாராது நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள்.
ஆளவந்தார் ராஜ பிளவை நோயினால் அவதியுற்ற போது, மாறனேரி நம்பிகள், உபதேசங்களை கேட்டு வாங்குவதைப் போல் ராஜ பிளவை நோயையும், குருவின் வலியினையும் வாங்கிக் கொண்டார். ஆளவந்தாருக்கு பணிவிடைகள் செய்து, நம்பியும் நோயினால் அவதியுற்றார். ஆளவந்தாரின் மறைவுக்குப் பின், மனதாலும் நோயினாலும் அவதியுற்ற மாறனேரி நம்பியை பெரிய நம்பி கவனித்துக் கொண்டார்.
மாறனேரி நம்பி, தனது இறுதி காலத்தில், பெரிய நம்பியிடம், “வாழும் காலத்தில் என்னை புரிந்து கொள்ளாத என் உறவினர்களிடம் என் உடலை வழங்காதே. இராஜ பிளவை நோயை குருப்பிரசாதமாக பெற்றுக் கொண்டப் படியால் எனது உடலும் குருப் பிரசாதம் ஆகும். அதனை வைணவர்கள் அல்லாத என் குடும்பத்தினரிடம் அளிப்பது என்பது உயர்ந்தயாக நெய்யை தெரு நாய்களுக்கு இடுவதற்கு ஒப்பாகும். எனது இறுதி சடங்குகளை நீயே முன் நின்று செய்.”, என்றார்.
மாறனேறி நம்பி மறைந்து விட வைணவர்கள் யாரும் அவருக்கு இறுதிச் சடங்கு செய்ய முன் வரவில்லை. வேதியரான பெரிய நம்பியே, அவருக்கு இறுதி சடங்குகளை செய்தார். தாழ்ந்த குலத்தில் பிறந்த ஒருவனுக்கு வைணவன் ஒருவன், அதுவும் ஆசார்யன், இறுதி சடங்குகளை செய்வதா என எண்ணி, மற்ற வேதியர்கள் பெரிய நம்பியை தள்ளி வைத்தனர்.
அரங்கன் தேர்த் திருவிழா அன்று, மாறனேரி நம்பிக்கு சடங்குகள் செய்தவர்கள் அக்ரஹாரத்தில் இருக்க யோக்யதை அற்றவர்கள் என்று கருதி பெரிய நம்பியின் வீட்டு வாசலில் சிலர் முள் கட்டுகளைப் போட்டு இருந்தனர். அவரது மகள் கோபமுற்று, தேரில் உலா வந்து கொண்டிருந்த எம்பெருமாளை நோக்கி- "எனது தந்தை மாறனேரி நம்பிக்கு இறுதிக் கடன் செய்தது நியாயம் என்றால், உமது தேர் அசையாது நிற்கட்டும்" என்றாள். தேரும் அப்படியே நின்றது. பின் பெரிய நம்பிக்கு தீர்த்தம் வழங்கிய பின்னரே, தேர் நகன்றது.
அப்போது ராமானுஜர் அங்கு வந்தார். ராமானுஜர், பெரிய நம்பியின் செயலுக்கு விளக்கம் கேட்க, பெரிய நம்பிகள், "பறவையினத்தைச் சேர்ந்த ஜடாயூவிற்கு ஸ்ரீராமன் இறுதிக் கடன் செய்தாரே! விதுரருக்கு தர்ம புத்திரர் இறுதிக் கடன் செய்தாரே! மாறனேரி நம்பி இவர்களை விட தாழ்ந்தவரா? ராமர் மற்றும் தர்மரின் செயல்களைப் பாராட்டி ஆழ்வார்கள் பாடியுள்ளனர். அதனால் தான் மாறனேரி நம்பிக்கு இறுதிக் கடன் செய்ததாகப் பெரிய நம்பி சான்றுகள் காட்டிப் பேசினார். மேற்கண்ட சான்றுகளை எடுத்துக் காட்டிப் பேசிய பெரிய நம்பிகள் முத்தாய்ப்பு வைத்தாற் போல் ஒரு கருத்தைத் தெரிவித்தார்.
‘‘ராமர், தருமர் செய்த செயல்களை ஆழ்வாராதியர் குறிப்பிட்டுப் போற்றிப் பாடிய பாசுரங்கள் கடலோசை போன்றவையா?’’ என்று வினவினார். அதாவது, கடலோசை ஓயாமல் ஒலித்துக் கொண்டு தான் இருக்கிறது! அதனை எவர் பொருட்படுத்துகின்றனர்? முற்போக்குச் சிந்தனைகளையும் சீர்திருத்தக் கருத்துக்களையும் அவ்வப்போது தோன்றும் மகான்கள் சான்றோர்கள் கூறிக் கொண்டே இருக்கின்றனர். அவை வீணில் ஒலிக்கும் கடலோசையைப் போன்று அலட்சியம் செய்யப்படுகின்றனவே? என்று பெரிய நம்பி எடுத்துப் பேசினார்.
திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, "ஆழ்வார்களின் பாசுரங்களை வெறும் கடலோசை என எண்ணாமல், பாசுரங்களில் உள்ள அர்த்தங்களை உணர்ந்து, அது வழி நடந்து பாகவத சேவையில் ஈடுபட்டேனா? இல்லையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment