About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Thursday, 23 November 2023

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 79

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 49

ஸுவ்ரத: ஸுமுக²: ஸூக்ஷ்ம:
ஸுகோ⁴ஷ: ஸுக²த³: ஸுஹ்ருத்|
மநோ ஹரோ ஜிதக் ரோதோ⁴
வீரபா³ஹுர் விதா³ரண:||

  • 456. ஸுவ்ரதஸ் - கர்மத்தை விடாமல் அநுஷ்டிப்பவர். தம்மிடம் சரணடைபவரைக் காக்க வேண்டும் என்ற தனது சபதங்களை நிறைவேற்றுபவர்.
  • 457. ஸுமுக²ஸ் - மலர்ந்த திருமுகம் உடையவர்.
  • 458. ஸுக்ஷ்மஸ் - மிகவும் நுட்பமானவர். புரிந்து கொள்வது கடினம்.
  • 459. ஸுகோ⁴ஷஸ் - வேதத்தின் குரலாக உள்ளவர். வேதங்களாலும், உபநிஷதங்களாலும் ஒலிக்கப்படுபவர். இனிமையான, ஆழமான மற்றும் இனிமையான குரல் கொண்டவர்.
  • 460. ஸுக²த³ஸ் - மேலான இன்பமயமான பயன் தருபவர்.
  • 461. ஸுஹ்ருத்து - சிறந்த நண்பனாக இருப்பவர். நல்ல உள்ளம் கொண்டவர்.
  • 462. மநோஹரோ - மனதைக் கவரக் கூடியவர்.
  • 463. ஜிதக் ரோதோ⁴ - கோபத்தை வென்றவர்.
  • 464. வீரபா ஹுர் - மிக்க பலமுடைய கைகளையுடையவர்.
  • 465. விதா³ரணஹ - அநியாயம் செய்பவர்களை அழிப்பவர். பக்தர்களின் பாவங்களை அழிப்பவர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 2.16

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||

ஸ்லோகம் - 2.16 

நாஸதோ வித்³யதே பா⁴வோ 
நாபா⁴வோ வித்³யதே ஸத:|
உப⁴யோ ரபி த்³ருஷ்டோ அந்தஸ்
த்வந யோஸ் தத் த்வத³ர் ஸி²பி⁴:||

  • ந - என்றுமில்லை 
  • அஸத: - இல்லாத 
  • வித்³யதே - உள்ளது 
  • பா⁴வ - நீடிக்கின்ற 
  • ந - என்றுமில்லை 
  • அபா⁴வ - மாறுகின்ற குணம்
  • வித்³யதே - இருக்கின்றது 
  • ஸதஹ - நித்யமானதன் 
  • உப⁴யோ - இவ்விரண்டில் 
  • அபி - மிகவும் 
  • த்³ருஷ்டா - கண்டுள்ளவர் 
  • அந்தஸ் - முடிவு 
  • து - ஆனால் 
  • அநயோஸ் - அவற்றில் 
  • தத்த்வ - உண்மையை 
  • த³ர் ஸி²பி⁴ஹி - கண்டவர்களால்

இல்லாதது உண்மையாகாது, உள்ளது பொய்யாகாது, இவ்விரண்டில், இயற்கை தன்மையை கண்டுள்ளவர்கள் இவ்வேற்றுமைகளை அறிய மாட்டார்கள்.

இவ்வாறு அர்ஜுநனுக்கு நீ அழியக்கூடிய இந்த உடல் அல்ல அழிவற்ற ஆத்மா என்று கூறி மேலும் விளக்குகிறான் பகவான்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவதம் - 1.3.14

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்ருதீயோ அத்⁴யாய꞉||
||பகவதஸ்² சதுர் விம்ஸ²த் யவதாராணாம் 
ஸம்க்ஷேபதோ வர்ணம்||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||மூன்றாம் அத்யாயம்||
||ஸ்ரீ பகவானது திரு அவதாரங்களைக் கூறுதல்||

ஸ்லோகம் - 1.3.14

ருஷிபி⁴ர் யாசிதோ பே⁴ஜே 
நவமம் பார்தி²வம் வபு:|
து³க்³தே⁴மா மோஷதீ⁴ர் விப்ராஸ்
தேநாயம் ஸ உ ஸ²த்தம:||

  • ருஷிபி⁴ர் - மஹரிஷிகளால்
  • யாசிதோ - வேண்டப்பட்டவராய்
  • நவமம் -  ஒண்பதாவதாக
  • பார்தி²வம் வபுஹு பே⁴ஜே - ப்ருது ரூபத்தை அடைந்தார் (அரச சரீரத்தை அடைந்தார்)
  • இமாம் - இந்த பூமியை (பூமியிடத்திலிருந்து)
  • ஓஷதீ⁴ர் - எல்லா வஸ்துக்களையும்
  • து³க்³த⁴ - கறந்தார் 
  • தேந - அதனால்
  • விப்ராஸ் - ஹே! ப்ராம்மணோத்தமர்களே!
  • அயம் ஸ - அப்படிப்பட்ட இந்த அவதாரம்
  •  உஸ²த்தமஹ - ரொம்பவும் விரும்பத்தக்கது

முனிவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, ஒன்பதாவதாக 'பிருது' என்ற திருப்பெயருடன் அரசனாக அவதாரம் செய்து, இந்த பூமியிலிருந்து எல்லா வஸ்த்துக்களையும் கறந்து எடுத்தார். ஆகவே, அந்தணர்களே! இந்த அவதாரம் எல்லோராலும் விரும்பத்தக்கதாக ஆகிறது.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.14

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

உலகின் உன்னத மனிதனைக் குறித்து 
நாரதரிடம் கேட்ட வால்மீகி 
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்

ஸ்லோகம் - 1.1.14

ரக்ஷிதா ஸ்வஸ்ய த⁴ர்மஸ்ய
ஸ்வஜ நஸ்ய ச ரக்ஷிதா|
வேத³ வேதா³ங்க³ தத்த் வஜ்ஞோ
த⁴நுர் வேதே³ ச நிஷ்டி²த:||

  • ஸ்வஸ்ய - தம்முடைய
  • த⁴ர்மஸ்ய - தர்மத்திற்கு
  • ரக்ஷிதா -  ரக்ஷகர்  
  • ஸ்வஜ நஸ்ய ச -  தமது ஜனத்திற்கும்
  • ரக்ஷிதா -  ரக்ஷகர்
  • வேத³ வேதா³ங்க³ - வேத வேதாந்தங்களின் 
  • தத்த் வஜ்ஞோ -  தத்துவங்களை அறிந்தவர்
  • த⁴நுர் வேதே³ -  தநுர் வேதத்தில்
  • ச -  முழுவதும்
  • நிஷ்டி²தஹ -  தேர்ச்சி அடைந்தவர்

அவன் தன்னறம் பாதுகாப்பவனாகவும், மன்னர்களின் கடமைகளை வழுவறச் செய்பவனாகவும், தன் மக்களின் வெற்றி வீரனாகவும், வேத வேதாங்கங்களில் அறிஞனாகவும், தநுர் வேதத்தில் திறன் மிக்கவனாகவும் இருக்கிறான்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திவ்ய ப்ரபந்தம் - 61 - பெரியாழ்வார் திருமொழி - 1.4.8

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் – 61 - கண்ணன் நெடுமால்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - நான்காம் திருமொழி - எட்டாம் பாசுரம்

சிறியனென்று என்னிளஞ் சிங்கத்தை* 
இகழேல் கண்டாய்*
சிறுமையின் வார்த்தையை* 
மாவலியிடைச் சென்று கேள்*
சிறுமைப் பிழை கொள்ளில்* 
நீயும் உன் தேவைக்கு உரியை காண்*
நிறைமதீ! நெடுமால்* 
விரைந்துன்னைக் கூவுகின்றான்|

  • சிறியன் என்று - சிறு குழந்தை தானே என்ன செய்து விட முடியும் என்று 
  • என் இள சிங்கத்தை - என் சிங்கக்குட்டியை, கண்ணபிரானை
  • இகழேல் - அவமதியாதே, சிறுபிள்ளை என்று எண்ணி ஏளனம் செய்யாதே
  • சிறுமையில் - இவனுடைய பால பிராயத்தில் நடந்த
  • வார்த்தையை - செய்கையை
  • மாவலி இடை சென்று கேள் - மஹாபலியிடம் போய்க் கேட்டுக் கொள் 
  • சிறுமை பிழை கொள்ளில் - இவ்வளவு அழைத்தும் வராமல் அபசாரம் புரியும் அத்தப்பை நீ உணர்ந்தால், 
  • நீயும்; உன் தேவைக்கு - நீயும்  பகவானுக்கு அடிமை செய்ய
  • உரியை காண் - யோக்யதை பெறுவாய் 
  • நிறை மதி - பூர்ண சந்திரனே!
  • நெடு மால் - சர்வேஸ்வரனான இவன்
  • விரைந்து உன்னை கூவுகின்றான் - உன்னை அழைக்கின்றான்! மகிழ்ந்து ஓடி வா 

பூர்ண சந்திரனே! என் சிங்கக்குட்டி கண்ணனை சிறியவன் என்று மற்ற பிள்ளைகளைப் போல் நினைத்து அவமதிக்காதே. இவனைச் சிறுவனாக முதலில் எண்ணி, பிறகு தான் செய்த அபசாரத்திற்க்காக வருந்திய மஹாபலியிடம் போய்க் கேள் இவன் செய்கையை. இவ்வளவு அழைத்தும் வராமல் அபசாரம் புரியும் நீயும் அத்தப்பை உணர்ந்தால், பகவானுக்கு அடிமை செய்ய யோக்யதை பெறுவாய். பூர்ண சந்திரனே! சர்வேஸ்வரன் உன்னை அழைக்கின்றான்! மகிழ்ந்து ஓடி வா.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 017 - திருக்கண்ணபுரம் 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

017. திருக்கண்ணபுரம்
க்ருஷ்ணாரண்ய க்ஷேத்ரம் – நாகப்பட்டினம்
பதினாறாவது திவ்ய க்ஷேத்ரம்

ஸ்ரீ ஸௌரிராஜப் பெருமாள் திருக்கோயில்

ஸ்ரீ கண்ணபுரநாயகி தாயார் ஸமேத ஸ்ரீ சௌரிராஜ பெருமாள் 
திருவடிகளே சரணம்||

  • பெருமாள் மூலவர்: நீலமேகம்
  • பெருமாள் உற்சவர்: ஸௌரிராஜன்
  • தாயார் மூலவர்: கண்ணபுரநாயகி
  • திருமுக மண்டலம் திசை: கிழக்கு 
  • திருக்கோலம்: நின்ற 
  • புஷ்கரிணி/தீர்த்தம்: நித்ய
  • விமானம்: உத்பலாவதக
  • ப்ரத்யக்ஷம்: கண்வர், கருடன்
  • ஆகமம்: வைகாநஸம்
  • ஸம்ப்ரதாயம்: தென் கலை
  • மங்களாஸாஸநம்: 5 ஆழ்வார்கள்
  • பாசுரங்கள்: 129 

-----------
ஸ்ரீ. உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி


ஸ்தல புராணம்

ஒரு சமயம் இக்கோயில் அர்ச்சகர் ஒருவர் ஸ்வாமிக்கு சாத்திய மாலையை தன் காதலிக்கு சூடி விட்டார். அந்த நேரத்தில் மன்னர் கோயிலுக்கு வந்து விடவே, அவருக்கு மரியாதை செய்ய அர்ச்சகரிடம் மாலை இல்லை. எனவே, தன் காதலிக்கு சூட்டிய மாலையையே மன்னருக்கு போட்டு விட்டார். அதில் பெண்ணின் கூந்தல் முடி இருந்ததைக் கண்ட மன்னர் மாலையில் முடி எப்படி வந்தது? என கேட்டார். அர்ச்சகர் பெருமாளின் தலையில் இருந்த முடி தான் அது என பொய் சொல்லி விட்டார். மன்னனுக்கு சந்தேகம் வரவே, தான் பெருமாளின் திருமுடியை பார்க்க வேண்டும் என்றார். மறுநாள் கோயிலுக்கு வந்தால் முடியைக் காட்டுவதாக அர்ச்சகர் கூறினார். ஸ்வாமிக்கு திருமுடி இல்லாத பட்சத்தில் தண்டனைக்கு ஆளாக வேண்டும் என எச்சரித்து விட்டுச் சென்றார் மன்னர். கலங்கிய அர்ச்சகர் அன்றிரவில் ஸ்வாமியை வணங்கி தன்னை காக்கும்படி வேண்டினார். மறுநாள் மன்னர் கோயிலுக்கு வந்தார். அர்ச்சகர் பயந்து கொண்டே ஸ்வாமியின் தலையை மன்னருக்கு காட்ட, திருமுடியுடனே காட்சி தந்தார் பெருமாள். எனவே "சௌரிராஜப் பெருமாள்' என்ற பெயரும் பெற்றார். இவர் இத்தலத்தில் உற்சவராக தலையில் முடியுடன் இருக்கிறார். அமாவாசையன்று உலா செல்லும் போது மட்டுமே திருமுடி தரிசனம் காண முடியும். "சௌரி' என்ற சொல்லுக்கு ‘முடி' என்றும், ‘அழகு' என்றும் பொருள்கள் உண்டு.

இங்கு ஸ்வாமி எட்டெழுத்து மந்திரத்தின் வடிவமாக கையில் முழுவதும் திரும்பிய பிரயோகச் சக்கரத்துடன் அருளுகிறார். அருகிலேயே கருடன் வணங்கிய கோலத்தில் இருக்கிறார். வைகாசி பிரம்மோற்ஸவத்தின் போது ஸ்வாமி அதிகாலையில் சிவன், மாலையில் பிரம்மா, இரவில் விஷ்ணு என மும்மூர்த்திகளாக காட்சி தருகிறார். விஷ்ணுவின் இந்த மும்மூர்த்தி தரிசனம் விசேஷ பலன்களைத் தரக் கூடியது. விபீஷ்ணனை தம்பியாக ஏற்றுக் கொண்ட ராமபிரான், அவனுக்கு இத்தலத்தில் பெருமாளாக நடந்து காட்சி தந்தார். அமாவாசை தோறும் உச்சி கால பூஜையில் பெருமாள் விபீஷணனுக்கு நடந்து காட்டிய நிகழ்ச்சி நடக்கிறது. 

தன் தாயை விடுவிப்பதற்காக பாற்கடலில் அமிர்தம் பெற்று திரும்பிக் கொண்டிருந்தார் கருடன். வழியில் யாருக்கும் கிடைக்காத அமிர்தத்தை தான் கொண்டு வருவதை எண்ணி அவர் மனம் கர்வம் கொண்டது. கர்வத்துடன் அவர் இத்தலத்திற்கு மேலே சென்றதால் தன் சக்தி இழந்து கடலில் வீழ்ந்தார். தவறை உணர்ந்த கருடன் மன்னிப்பு வேண்டி கடலினுள் இருந்த ஒரு மலையின் மீது ஸ்வாமியை வேண்டி தவம் செய்தார். விஷ்ணு அவரை மன்னித்து வாகனமாகவும் ஏற்றுக் கொண்டார். மாசி பௌர்ணமியில் கடற்கரையில் கருடனுக்கு காட்சி தரும் விழா நடக்கிறது. இவ்விழாவின் போது பக்தர்கள் ஸ்வாமியை "மாப்பிள்ளை!' என்று கோஷமிட்டு வித்தியாசமாக வரவேற்கின்றனர்.

முன்னொரு காலத்தில் இப்பகுதியை முனையதரையன் என்றொரு குறுநில மன்னர் ஆட்சி செய்து வந்தார். தினசரி பெருமாளை வணங்கி விட்டு உணவு உண்பதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார். பெருமாள் சேவைக்காக பணத்தை எல்லாம் செலவழித்ததால் வறுமையில் வாடிய அவர் மன்னனுக்கும் வரி கட்டவில்லை. எனவே, மன்னன் அவரை சிறைப் பிடித்துச் சென்றார். அன்று மன்னரின் கனவில் தோன்றிய விஷ்ணு, அவரை விடுவிக்கும்படி சொல்லவே முனையதரையன் விடுவிக்கப்பட்டார். இரவில் வீடு திரும்பிய முனையதரையனுக்கு அரிசி, பருப்பு, உப்பு மட்டும் கலந்த பொங்கல் செய்து கொடுத்தாள் மனைவி. அவர் பெருமாளுக்கு மானசீகமாக (மனதில் நினைத்து) நைவேத்யம் படைத்து சாப்பிட்டார். மறுநாள் அர்ச்சகர் கோயிலுக்கு வந்த போது கருவறையில் ஸ்வாமியின் வாயில் பொங்கல் ஒட்டியிருந்ததைக் கண்டார். இத்தகவல் மன்னரிடம் தெரிவிக்கப்படவே அவர்கள் முனையதரையன் படைத்த பொங்கலை ஸ்வாமி உண்டதை அறிந்து கொண்டனர். அன்றிலிருந்து இக்கோயிலில் இரவு பூஜையின் போது பொங்கல் படைக்கும் பழக்கம் நடைமுறையில் இருக்கிறது. இதனை "முனையதரையன் பொங்கல்' என்றே சொல்கின்றனர்.

இங்குள்ள தீர்த்தம் மிகவும் விசேஷமானது. உத்ராயணத்தின் போது மூன்று நாட்கள் இத்தீர்த்தத்தில் அனைத்து நதிகளும் நீராடி தங்கள் பாவத்தை போக்கிக் கொள்வதாக ஐதீகம். இதில் அமாவாசை தினத்தில் பித்ரு பூஜைகள் செய்கிறார்கள். தோஷத்தால் பாதிக்கப் பட்ட இந்திரன் இங்கு வந்து நவக்கிரக பிரதிஷ்டை செய்து ஸ்வாமியை வணங்கி தோஷம் நீங்கப் பெற்றான். இந்திரன் பிரதிஷ்டை செய்த நவக்கிரகம் கோபுரத்திற்கு அடியில் மதிற்சுவரில் மேற்கு பார்த்தபடி இருக்கிறது. இந்த நவக்கிரகம் சுற்றிலும் 12 ராசிகளுடன் இருப்பது வித்தியாசமான அமைப்பாகும். இத்தலம் பூலோக வைகுண்டம் என கருதப்படுவதால் இங்கு சொர்க்க வாசல் இல்லை. திவ்ய தேசங்களில் கீழை வீடாக இருக்கும் இத்தலம் பஞ்ச கிருஷ்ண தலங்களில் ஒன்றாகவும் இருக்கிறது. கருவறைக்கு மேல் உள்ள உத்பலாவதக விமானத்தில் விஷ்ணுவை வணங்கி முனிவர்கள் தவம் இருப்பதாக ஐதீகம். எனவே, இங்கு விமானத்தை தரிசனம் செய்ய முடியாதபடி சுற்றி மதில் எழுப்பப்பட்டுள்ளது.

உற்சவ மூர்த்தியின் திருமேனியில் வலப்புருவத்திற்கு மேல் சிறு தழும்பும் இன்றும் காணலாம். முன் காலத்தில் அந்நியர் திருமதில்களை இடித்து வந்த போது திருக்கண்ணபுரத்து அரையர், மனம் புழுங்கி, "பெருமானே பொருவரை முன் போர் தொலைத்த பொன்னழி மற்றொரு கை என்றது பொய்த்ததோ' என்று கையிலிருந்த தாளத்தை வீசி எறிந்தார். அது பெருமானது புருவத்தில் பட்டது. "தழும்பிருந்த பூங்கோரையாள் வெருவப் பொன் பெயரோன் மார்பிடந்த வீங்கோத வண்ணர் விரல்' என்ற பாசுரத்தில் போல இத்தழும்பை இன்றும் காட்டித் தமக்கு அடியாரிடம் கொண்ட பரிவைப் பெருமான் விளங்குகின்றார். 
 
"ஓம் நமோ நாராயணா' என்ற மந்திரத்தின் முடிவு நிகழ்ந்த இடம் இது. அஷ்டாச்சர சொரூபி மந்திர உபதேசம் பெற்ற தலம். இந்த ஊரில் கால் பட்டாலே வைகுந்தம் கிடைக்கும் என்பதால் இந்த பெருமாள் தலத்தில் சொர்க்க வாசல் கிடையாது. மற்ற தலங்களில் அபய காட்சியோடு பெருமாள் இருப்பார். இங்குள்ள பெருமாள் தானம் வாங்கிக் கொள்தல் போல காட்சியில் இருப்பார். இதன் பொருள் நம் கஷ்டங்களை பெருமாள் வாங்கிக் கொள்ளுதல் போல ஐதீகம்.

இத்தலத்தில் பெருமாள் சக்கரம் பிரயோகச் சக்கரம் வதம் பண்ணுவதாய் உள்ளது. உற்சவ பெருமாளுக்கு சௌரி முடி வளர்ந்ததால் சௌரிராஜ பெருமாள் என்று பெயர். சௌரிராஜப் பெருமாளிடம் திருமங்கை ஆழ்வார் மந்திர உபதேசம் பெற்ற தலம் இது. குலசேகர ஆழ்வார் சௌரிராஜப் பெருமாளை இராமனாக நினைத்துக் கொண்டு தாலேலோ (ராத்திரி தூங்க வைக்கப் பாடும் பாசுரம்) பாடிய திவ்யதேசம் திருக்கண்ணபுரம் மட்டுமே. கருட தண்டக மகரிஷிக்கு பெருமாள் காட்சி தந்த தலம்.

கிருஷ்ணாரண்ய ஷேத்திரம் என்று திருக்கண்ணபுரம், திருக்கண்ணமங்கை, திருக்கண்ணங்குடி, கபிஸ்தலம், திருக்கோயிலூர் என்று இந்த ஐந்தும் கிருஷ்ணன் வாழ்ந்து உறைந்த இடம். கிருஷ்ணாரண்ய க்ஷேத்ரம், பஞ்ச கிருஷ்ண க்ஷேத்ரம், ஸப்த புண்ணிய க்ஷேத்ரம்.

திருப்புட்குழியில் வறுத்த பயிறு, திருப்பதியில் லட்டு, ஸ்ரீரங்கத்தில் அரவணை (பாயாசம்) கும்பகோணத்தில் தோசை (பால் பாயாசம்) அது போல் இங்கு முனியோதரன் பொங்கல் பிரசித்தம். 108 திவ்ய தேசங்களுள் சிறப்புடையதாக மேலை வீடு - திருவரங்கம், வடக்கு வீடு – திருவேங்கடம், தெற்கு வீடு – திருமாலிருஞ்சோலை (அழகர் கோயில்) என அமைந்த வரிசையுள் கீழை வீடு திருக்கண்ணபுரம் ஆகும்.

முன்னொரு காலத்தில் சில முனிவர்கள் இத்தலத்தில் பெருமாளை வேண்டி தவம் செய்து கொண்டிருந்தனர். சாப்பாடு, தூக்கம் என எதனையும் பொருட்படுத்தாமல் பெருமாளை மட்டும் எப்போதும் தியானித்து வணங்கி வந்ததால் அவர்கள் நெற் கதிர்கள் போன்று மிகவும் மெலிந்த தேகம் உடையவர்களாக இருந்தனர். மகாவிஷ்ணுவிடம் "அஷ்டாட்சர மந்திரம்' கற்றிருந்த உபரிசிரவசு எனும் மன்னன் ஒரு சமயம் தன் படையுடன் இவ்வழியாக திரும்பிக் கொண்டிருந்தான். அப்போது வீரர்களுக்கு பசியெடுத்தது. எனவே, இங்கு தவம் செய்து கொண்டிருந்த முனிவர்களை நெற் கதிர்கள் என நினைத்த வீரர்கள் அவர்களை வாளால் வெட்டினர். முனிவர்களின் நிலையைக் கண்ட விஷ்ணு, சிறுவன் வடிவில் வந்து உபரிசிரவசுவுடன் போர் புரிந்தார். மன்னனின் படையால் சிறுவனை ஒன்றும் செய்ய முடியவில்லை. எனவே, இறுதியாக மன்னன் தான் கற்றிருந்த அஷ்டாட்சர மந்திரத்தை சிறுவன் மீது ஏவினான். அம்மந்திரம் சிறுவனின் பாதத்தில் சரணடைந்தது. இதைக் கண்ட மன்னன் தன்னை எதிர்த்து நிற்பது மகாவிஷ்ணு எனத் தெரிந்து மன்னிப்பு கேட்டான். விஷ்ணு அவனை மன்னித்து நீலமேகப் பெருமாளாக காட்சி தந்தார். அவனது வேண்டுதலுக்காக இங்கேயே எழுந்தருளினார். பின், மன்னன் விஸ்வகர்மாவைக் கொண்டு இங்கு கோயில் எழுப்பினான்.
 
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

லீலை கண்ணன் கதைகள் - 70

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

கிருஷ்ணன் ருக்மிணியை தூக்கி செல்வது|

மணப்பெண் கோவிலை நோக்கி நடக்க வேண்டிய தருணம் வந்தது. ருக்மிணி கோவிலை நோக்கி நடக்க ஆரம்பித்தாள், கண்கள் பாதி மூடியிருக்க, கிருஷ்ணர் ஞாபகமாகவே ஏதோ மயக்கத்தில் செல்வது போல் நடந்தாள். வயதான மூதாட்டிகளும், அவளுடைய தோழிகளும் அவளைச் சூழ்ந்துவர, ஒரு பெரிய ஊர்வலத்தின் நடுவில் அவள் மௌனமாக நடந்தாள். அவளைச் சுற்றி ஆயுதம் தாங்கிய வீரர்கள் நின்று அவளைப் பாதுகாத்தனர். மிருதங்கம், பணவம், தூரியம், பேரிகை முதலிய பல வாத்தியங்கள் முழங்கின.


தேவியின் கோவிலை அடைந்ததும், அவள் தன் கை, கால்களைக் கழுவிக் கொண்டாள், நிர்மலமான மனதுடன் கோவிலுக்குள் புகுந்தாள். பூஜையெல்லாம் முடிந்த பிறகு அவள் தேவியை மனதில் தியானித்தாள். "தாயே! நான் உன்னை மீண்டும் மீண்டும் வணங்குகிறேன். கிருஷ்ணர்தாம் எனக்குக் கணவராக வர வேண்டுமென்று என்னை ஆசிர்வதி. நான் உன்னைப் பெரிதும் வேண்டுகிறேன்" என்று மனப்பூர்வமாக வேண்டிக் கொண்டாள்.

பிறகு ருக்மிணி கோவிலிருந்து வெளியே வந்தாள், மெல்ல நடந்தாள், கிருஷ்ணர் வந்திருக்கிறாரா என்று நாலா பக்கமும் மெதுவாகப் பார்த்தாள். தெருவோரத்தில் அவர் தம் இரதத்தில் நின்றுக் கொண்டிருப்பதைப் பார்த்ததும் அவள் கொண்ட ஆனந்தம் சொல்ல முடியாதது, அவரது வலக் கை வெளியே நீட்டி இருந்தது. ருக்மிணி பக்கத்தில் வந்ததும், அவர் இரதத்தில் இருந்து வெளியே சாய்ந்து அவளுடைய வலக் கையைத் தம் வலக் கையால் பற்றி, அவளைத் தூக்கி இரதத்தில் நிற்க வைத்தார். உடனே அவரும் பலராமரும் மற்றவர்களும் தாங்கள் இரதங்களை மெல்ல நடத்த ஆரம்பித்தார்கள். கிருஷ்ணரின் விரோதியான ஜராசந்தன் கூடத்தில் இருந்தான்.

"என்ன இது! எத்தனை தைரியமாகக் கிருஷ்ணன் ருக்மிணியை தூக்கிச் செல்கிறான்! அரசர்களாகிய நாம் எல்லோரும் இங்கு இருந்து என்ன பயன்? வாருங்கள், கிருஷ்ணனை தாக்குவோம்" என்று சொன்னான்.

ஜராசந்தனும், மற்ற அரசர்களும் கிருஷ்ணனைத் துரத்த ஆரம்பித்தார்கள். இவர்களின் படைகள் தங்களை நோக்கி முன்னேறுவதைக் கண்டு, யாதவப் படையின் தலைவர்கள், தங்கள் வில்களையும், அம்புகளையும் எடுத்துக் கொண்டார்கள். பலராமர், தம் படையின் உதவியுடன் எதிர்ப் படைகளின் இரதங்கள், குதிரைகள், யானைகள் இவற்றை அழிக்க ஆரம்பித்தார். ஒரு கொடிய போர் நடந்தது. இரதத்தில் உட்கார்ந்திருந்த ருக்மிணி இதைக் கண்டு நடுங்கினாள். கிருஷ்ணர் சிரித்துக் கொண்டே அவளுக்கு ஆறுதல் கூறினார். "கவலைப் படாதே. சிக்கிரமே நம் படை எதிரிப் படையை அழிப்பதைக் காண்பாய்" என்றார்.

ஜராசந்தனாலும் மற்றவர்களாலும் பலராமரை எதிர்த்து நிற்க முடியவில்லை, பலராமர் தனக்கு இருந்த கோபத்தில் எதிரிப் படைகள் முழுவதையும் அழித்தார். ஜராசந்தனைப் போன்றவர்கள், போர் புரிவதை நிறுத்தி விட்டு அங்கிருந்து ஓடினார்கள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் - எழுபத்தி ஆறாவது வார்த்தை

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

076 நீரில் குதித்தேனோ கணபுரத்தாளைப் போலே|

நல்ல அடை மழையுடன் கூடிய இரவுப் பொழுது. ஸ்ரீநம்பிள்ளை, தனது சீடர்கள் சிலருடன் ஒரு சிறிய படகில் காவிரி நதியைக் கடந்துக் கொண்டிருந்தார். மழை மற்றும் எதிர்காற்றின் காரணமாக, படகினை படகோட்டியால் விரைவாக செலுத்த இயல முடியாது திணறினார். ஆற்றில் வெள்ளம் கூடும் அறிகுறி தென்பட, படகோட்டி, "படகின் பாரம் அதிகமாய் உள்ளது. யாரேனும் நீந்தத் தெரிந்தவர் நீரில் குதித்தால் மற்றவர்களை காப்பாற்ற இயலும்" என்றார்.


அப்போது, கணப்புரத்தாள் என்ற பெண், படகோட்டியிடம், "எங்கள் ஆசாரியார் நம்பிள்ளையைக் காப்பாற்றுங்கள். நீங்கள் நூறு வயது வாழ்வீர்கள்” என வாழ்த்தி விட்டு, காவிரி ஆற்றில் குதித்து விட்டார். படகும் கரை சேர்ந்தது. நம்பிள்ளைக்கோ, தமக்காக ஒரு பெண் தண்ணீரில் குதித்து விட்டாரே என்ற வருத்தம் ஏற்பட அதைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது, எங்கிருந்தோ கணப்புரத்தாள், "ஸ்வாமி! நான் பத்திரமாக இருக்கிறேன். சிறு தீவு ஒன்றிருக்க, அதில் ஏறிக் கொண்டேன். தாங்கள் கவலைப்பட வேண்டாம்", என்றார். நம்பிள்ளை மிகவும் ஆனந்தம் அடைந்தார். படகோட்டி படகை எடுத்துச் சென்று அவரைக் காப்பாற்றி அழைத்து வந்தார். 

கணப்புரத்தாள், நம்பிள்ளையை நமஸ்கரித்து, "ஸ்வாமி! தாங்கள் தான் சிறு தீவு உருவில் வந்து எனைக் காத்தீர்கள்" என்றாள். கணப்புரத்தாளுக்கு அனைத்தும் தனது ஆசார்யராய் தெரிந்தது. அவரது உலகமே ஆசார்யர் குறித்த எண்ணங்களால் நிறைந்திருந்தது. அதனால், அவரது உயிரைக் கூட பொருட்படுத்தாது, தனது ஆசார்யருக்காக உயிர் விட துணிந்தார்.

திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, "கணப்புரத்தாளைப் போல் உயிரை துச்சமென எண்ணி, ஆசார்யரை உலகமாய் நினைத்தேனா? ஆசாரியாரின் உயிரைக் காப்பாற்ற நீரில் குதித்த கணப்புரத்தாளைப் போல நான் செய்தேனா? இல்லையே! ஆகவே நான் இங்கிருந்தால் என்ன! வெளியேறினால் என்ன! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பாகவத புராணம் - 23

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

பீஷ்ம ஸ்துதி

ஸ்கந்தம் 01

ஸூரியன் வடகிழக்கு திசையில் திரும்ப, உத்தராயண புண்ய காலம் துவங்குகிறது.

பீஷ்மர் என்ற யோகீஷ்வரர், தந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற, விரும்பி ப்ரும்மச்சர்யத்தை ஏற்றவர். கங்கா மாதாவின் புதல்வர். அத்தனை விதமான தர்மங்களையும் அறிந்தவர். இப்போது யோக பலத்தால் சரீரத்தை விடப் போகிறார். சபரியின் மோக்ஷத்திற்கு ராமன் சாட்சியாக விளங்கியதைப் போல், இப்போதும், பகவான் சாட்சியாகவே விளங்குகிறான்.


அவர் கண்ணனைக் காண விரும்பினார் என்றாலும், கிளம்புவதற்கு முன்பாக அர்ஜுனனிடம், பீஷ்மரை தரிசனம் செய்து விட்டு வரலாம் வா என்று சொல்லி அழைத்துக் கொண்டு வருகிறான். பகவானே காண விரும்பித் தேடி வரும் அளவுக்கு பீஷ்மர் பக்தியிலும் சிறந்து விளங்கினார்.

இப்போது, பீஷ்மர் கண்ணனைப் பார்த்து ப்ரார்த்தனை செய்கிறார்.

"எந்த விருப்பமும் இல்லாத என் மனத்தை, உயிர் துறக்கும் இந்நேரத்தில் ஸ்ரீ கிருஷ்ணனான உன் திருவடிகளில் ஸமர்ப்பிக்கிறேன். நீ ஆத்மா ராமனாக இருந்த போதிலும் சில சமயங்களில் லீலைக்காக உன் சக்தியான ப்ரக்ருதியை ஏற்று உலகைப் படைக்கிறாய். உன் திருமேனியழகு மூவுலகையும் ஈர்ப்பது. நீல மேக ஷ்யாமளன், சூரிய ஒளி போல் மின்னும் பீதாம்பரம் தரித்தவன். சுருண்ட கேசம் முன்னெற்றியில் விழுந்து உன் தாமரையொத்த முகத்தில் விழுகிறது. அர்ஜுனனின் தோழன், உன்னிடம் எனக்கு பயன் கருதாத அன்பு உண்டாகட்டும். 

போரில், தூசுகளால் உடலும், முடியும் அழுக்கடைந்திருக்கும். முன்னெற்றியில் கேசம் அசைந்தாடும். வியர்வைத்துளிகள் முகத்தை அலங்கரிக்கும். பாவியான என் பாணங்கள் பட்டு கவசங்கள் பிளந்து உடலில் காயங்கள் ஏற்பட்டன. அப்படி இருந்த போதும் நீ பேரழகனாகவே திகழ்ந்தாய். அந்தக்கோலத்தில் இருக்கும் உன்னிடம் எனக்கு பக்தி ஏற்படட்டும்.

தோழனான அர்ஜுனனின் சொல் கேட்டு, பாண்டவ கௌரவ சேனைகளின் நடுவே தேரை நிறுத்தி, சத்ரு சேனையின் உயிரைப் பார்வையாலேயே அபகரித்த உன்னிடம் எனக்கு பற்று ஏற்படட்டும்.

உறவினர்களைக் கொல்வதா என்று குற்ற உணர்ச்சியால் மயங்கிய அர்ஜுனனுக்கு பகவத் கீதை என்ற ஞானோபதேசத்தை வழங்கி 'நான் செய்கிறேன்' என்ற அகங்காரத்தை அழித்து அவனை ஊக்குவித்த பரமனான உன் திருவடிகளில் என் மனம் நிலைத்திருக்கட்டும்."

போரில் ஆயுதம் எடுக்க மாட்டேன் சபதம் செய்திருந்தான் கண்ணன். அவனது சபதத்தை உடைத்து ஆயுதம் எடுக்கச் செய்வதாக பீஷ்மர் ஒரு சபதம் செய்தார். அதற்காக அம்புகளை மழையாக அர்ஜுனன் மீது பொழிந்தார். அர்ஜுனனைக் காக்க அத்தனை அம்புகளையும் தானே முன் வந்து வாங்கிக் கொண்டான் பகவான். ஒரு கட்டத்தில் பீஷ்மரைக் கட்டுப்படுத்த சக்ராயுதத்தை எடுக்க அவகாசம் இன்றி, பக்கத்தில் உடைந்து கிடந்த தேரின் சக்கரத்தைப் பிடுங்கிக் கொண்டு ஓடினான். அவ்வாறு கண்ணன் பீஷ்மரை நோக்கி சக்கரத்தை எடுத்துக் கொண்டு ஓடும் போது அவனது உத்தரீயம் (மேலாடை) நழுவி தேர்த் தட்டில் விழுந்தது.

கவசமும் உடைபட்ட நிலையில், உத்தரீயமும் நழுவி, தன் மார்பழகை முழுமையாக பீஷ்மருக்குக் காட்டிக் கொண்டு ஓடி வந்தான்.

மேலும், அர்ஜுனன் மீதும் தேரின் மீதும் பல திவ்யாஸ்திரங்கள் ஏவப்பட்டிருந்தன. அர்ஜுனன் மீது அவை தாக்காமல் கண்ணன் காத்தான். ஆனால் தேரில் அவற்றின் வீரியம் இருந்தது. பகவான் தேரில் இருந்ததால் அவை தேரை அழிக்காமல் இருந்தன. கண்ணன் தேரை விட்டிறங்கினால், அர்ஜுனனுக்கு ஏற்கனவே ஏவப்பட்ட திவ்யாஸ்திரங்களின் வீரியத்தால் ஆபத்து நிகழலாம் என்றெண்ணி ரக்ஷையாக உத்தரீயத்தைத் தேர்த் தட்டில் விட்டான் போலும்.

மேலும் அது தன் இருக்கை. அர்ஜுனனுக்கு ஸாரத்தியம் செய்வது தன் உரிமை என்று நிலை நாட்ட, துண்டு போடுவது போல் போட்டு விட்டுப் போனானோ..

அம்பு மழையிலிருந்து அர்ஜுனனைக் காக்க பீஷ்மரைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற எண்ணமே இருந்ததால், மேலாடை நழுவுவதைக் கூட கவனியாமல் ஓடினானோ..

ஆயுதம் எடுக்கமாட்டேன் என்ற தன் ப்ரதிக்ஞையைக்கூட விட்டுவிட்டு, பீஷ்மரின் ப்ரதிக்ஞையைக் காக்க ஆயுதம் எடுத்தானோ..

தன் சபதத்தை விட பக்தனின் சபதம் முக்கியம் என்று நினைத்தானோ...

ஏழாம் நாள் போரில் இவ்வாறு ஓடிவந்த கண்ணனின் அழகில் என் மனம் ஈடுபடட்டும் என்கிறார் பீஷ்மர்.

அர்ஜுனனுடைய ரதத்தையே தன் குடும்பமாக எண்ணி சாட்டையும் கடிவாளமும் ஏந்தி தேரோட்டியாக அமர்ந்திருந்த கோலத்தைக் காண்பதே பெரும் பேறு. போரில் இறந்த அனைவருக்கும் சாரூப்ய முக்தி அளித்தானே. அந்த கண்ணனிடம் எனக்கு பற்று உண்டாகட்டும்.

யோகீஷ்வரரான பீஷ்மர், தன் அந்திம காலத்தில் இடைப் பெண்களான கோபிகளை நினைக்கிறார். எனில், கோபிகளின் பக்தி எத்தகையது?

அழகிய நடை, லீலைகள், புன்சிரிப்பு, கனிந்த பார்வை இவற்றால் கண்ணனிடம் ஈர்க்கப்பட்ட கோபியர், ராச லீலையில் மயங்கி அவனது லீலைகளை அனுகரணம் செய்து, தன்வயமானார்களே.. அவர்களை வணங்குகிறேன்.

அப்படிப்பட்ட பக்தி எனக்கும் ஏற்படட்டும். மறுபிறவி என்று ஒன்று எனக்கு ஏற்படுமாயின் ப்ருந்தாவனத்தில் ஒரு கோபியாக எனக்கு பிறவி அமையட்டும்.

ராஜ ஸூய யாகத்தில் முதல் மரியாதையை ஏற்பதற்காக வந்த பரந்தாமன் என் கண்முன் நிற்கிறாரே.

காற்று மூங்கில்களை உராயச் செய்து தீயை உண்டாக்கி, அம்மூங்கில் காட்டையே அழிக்கும். அது போல் சூதாட்டம் என்ற தீயால், அரக்கர்களை அழித்து பூபாரம் குறைத்த க்ருஷ்ணனின் திருவடித் தாமரைகளில் என் மனத்தை இருத்தி இம்மானுட உடலை விட்டொழிக்கிறேன்.

ஒரே சூரியன் பல பாத்திரங்களில் உள்ள நீரில் ப்ரதிபலித்து பல சூரியன்களாகக் காட்சி தருகிறான். அது போல் கண்ணனும் ஒவ்வொரு ஜீவனின் ஹ்ருதயத்திலும் ப்ரதிபலித்து வெவ்வேறாகக் காட்சியளிறான். இவனை நான் காணப் பெற்றது பெரும் பாக்யம்" என்கிறார்.

இது மற்ற ஸ்துதிகளைப் போலன்றி தன் அனுபவத்தை வைத்து ஸ்துதி செய்கிறார். படிப்பை விட அனுபூதி சிறந்ததல்லவா? எனவே, எவ்வளவோ துதிகள் பகவானைக் குறித்து இருந்த போதிலும், பீஷ்மர் செய்த ஸ்துதி மிகவும் சிறந்ததாகப் பெரியோர்களால் போற்றப்படுகிறது.

பீஷ்மர் தன் மனம், உடல், வாக்கு அனைத்தையும் அடக்கி ஆன்மாவை க்ருஷ்ணனிடம் ஒடுங்கச் செய்து ஓய்வடைந்தார். அவருக்கு விதிப்படி ஈமக்கிரியைகளைச் செய்து விட்டு தர்மர் சோகத்தில் மூழ்கினார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்