About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Thursday, 23 November 2023

லீலை கண்ணன் கதைகள் - 70

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

கிருஷ்ணன் ருக்மிணியை தூக்கி செல்வது|

மணப்பெண் கோவிலை நோக்கி நடக்க வேண்டிய தருணம் வந்தது. ருக்மிணி கோவிலை நோக்கி நடக்க ஆரம்பித்தாள், கண்கள் பாதி மூடியிருக்க, கிருஷ்ணர் ஞாபகமாகவே ஏதோ மயக்கத்தில் செல்வது போல் நடந்தாள். வயதான மூதாட்டிகளும், அவளுடைய தோழிகளும் அவளைச் சூழ்ந்துவர, ஒரு பெரிய ஊர்வலத்தின் நடுவில் அவள் மௌனமாக நடந்தாள். அவளைச் சுற்றி ஆயுதம் தாங்கிய வீரர்கள் நின்று அவளைப் பாதுகாத்தனர். மிருதங்கம், பணவம், தூரியம், பேரிகை முதலிய பல வாத்தியங்கள் முழங்கின.


தேவியின் கோவிலை அடைந்ததும், அவள் தன் கை, கால்களைக் கழுவிக் கொண்டாள், நிர்மலமான மனதுடன் கோவிலுக்குள் புகுந்தாள். பூஜையெல்லாம் முடிந்த பிறகு அவள் தேவியை மனதில் தியானித்தாள். "தாயே! நான் உன்னை மீண்டும் மீண்டும் வணங்குகிறேன். கிருஷ்ணர்தாம் எனக்குக் கணவராக வர வேண்டுமென்று என்னை ஆசிர்வதி. நான் உன்னைப் பெரிதும் வேண்டுகிறேன்" என்று மனப்பூர்வமாக வேண்டிக் கொண்டாள்.

பிறகு ருக்மிணி கோவிலிருந்து வெளியே வந்தாள், மெல்ல நடந்தாள், கிருஷ்ணர் வந்திருக்கிறாரா என்று நாலா பக்கமும் மெதுவாகப் பார்த்தாள். தெருவோரத்தில் அவர் தம் இரதத்தில் நின்றுக் கொண்டிருப்பதைப் பார்த்ததும் அவள் கொண்ட ஆனந்தம் சொல்ல முடியாதது, அவரது வலக் கை வெளியே நீட்டி இருந்தது. ருக்மிணி பக்கத்தில் வந்ததும், அவர் இரதத்தில் இருந்து வெளியே சாய்ந்து அவளுடைய வலக் கையைத் தம் வலக் கையால் பற்றி, அவளைத் தூக்கி இரதத்தில் நிற்க வைத்தார். உடனே அவரும் பலராமரும் மற்றவர்களும் தாங்கள் இரதங்களை மெல்ல நடத்த ஆரம்பித்தார்கள். கிருஷ்ணரின் விரோதியான ஜராசந்தன் கூடத்தில் இருந்தான்.

"என்ன இது! எத்தனை தைரியமாகக் கிருஷ்ணன் ருக்மிணியை தூக்கிச் செல்கிறான்! அரசர்களாகிய நாம் எல்லோரும் இங்கு இருந்து என்ன பயன்? வாருங்கள், கிருஷ்ணனை தாக்குவோம்" என்று சொன்னான்.

ஜராசந்தனும், மற்ற அரசர்களும் கிருஷ்ணனைத் துரத்த ஆரம்பித்தார்கள். இவர்களின் படைகள் தங்களை நோக்கி முன்னேறுவதைக் கண்டு, யாதவப் படையின் தலைவர்கள், தங்கள் வில்களையும், அம்புகளையும் எடுத்துக் கொண்டார்கள். பலராமர், தம் படையின் உதவியுடன் எதிர்ப் படைகளின் இரதங்கள், குதிரைகள், யானைகள் இவற்றை அழிக்க ஆரம்பித்தார். ஒரு கொடிய போர் நடந்தது. இரதத்தில் உட்கார்ந்திருந்த ருக்மிணி இதைக் கண்டு நடுங்கினாள். கிருஷ்ணர் சிரித்துக் கொண்டே அவளுக்கு ஆறுதல் கூறினார். "கவலைப் படாதே. சிக்கிரமே நம் படை எதிரிப் படையை அழிப்பதைக் காண்பாய்" என்றார்.

ஜராசந்தனாலும் மற்றவர்களாலும் பலராமரை எதிர்த்து நிற்க முடியவில்லை, பலராமர் தனக்கு இருந்த கோபத்தில் எதிரிப் படைகள் முழுவதையும் அழித்தார். ஜராசந்தனைப் போன்றவர்கள், போர் புரிவதை நிறுத்தி விட்டு அங்கிருந்து ஓடினார்கள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment