||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
022. திருவெள்ளியங்குடி (கும்பகோணம்)
இருபத்தி இரண்டாவது திவ்ய க்ஷேத்ரம்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 10
திருமங்கையாழ்வார்
001. திவ்ய ப்ரபந்தம் - 1338 - கண்ணன் கருதிய கோயில் இது
பெரிய திருமொழி - நான்காம் பத்து - பத்தாம் திருமொழி - முதலாம் பாசுரம்
ஆய்ச்சியர் அழைப்ப வெண்ணெய் உண்டு ஒரு கால்*
ஆல் இலை வளர்ந்த எம் பெருமான்*
பேய்ச்சியை முலை உண்டு இணை மருது இறுத்துப்*
பெரு நிலம் அளந்தவன் கோயில்*
காய்த்த நீள் கமுகும் கதலியும் தெங்கும்* எங்கும் ஆம் பொழில்களின் நடுவே*
வாய்த்த நீர் பாயும் மண்ணியின் தென்பால்* திருவெள்ளியங்குடி அதுவே|
002. திவ்ய ப்ரபந்தம் - 1339 - காளியன் மேல் நடனமாடியவன் வாழ்விடம் இது
பெரிய திருமொழி - நான்காம் பத்து - பத்தாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
ஆநிரை மேய்த்து அன்று அலை கடல் அடைத்திட்டு*
அரக்கர்தம் சிரங்களை உருட்டி*
கார் நிறை மேகம் கலந்தது ஓர் உருவக்* கண்ணனார் கருதிய கோயில்*
பூ நிரைச் செருந்தி புன்னை முத்து அரும்பி* பொதும்பிடை வரி வண்டு மிண்டி*
தேன் இரைத்து உண்டு அங்கு இன் இசை முரலும்* திருவெள்ளியங்குடி அதுவே|
003. திவ்ய ப்ரபந்தம் - 1340 - காளமேகன் கருதும் கோயில் இது
பெரிய திருமொழி - நான்காம் பத்து - பத்தாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
கடு விடம் உடைய காளியன் தடத்தைக்* கலக்கி முன் அலக்கழித்து*
அவன் தன் படம் இறப் பாய்ந்து பல் மணி சிந்தப்*
பல் நடம் பயின்றவன் கோயில்*
பட அரவு அல்குல் பாவை நல்லார்கள்* பயிற்றிய நாடகத்து ஒலி போய்*
அடை புடை தழுவி அண்டம் நின்று அதிரும்* திருவெள்ளியங்குடி அதுவே|
004. திவ்ய ப்ரபந்தம் - 1341 - பார்த்தசாரதியாய் இருந்தவன் இருக்கும் இடம் இது
பெரிய திருமொழி - நான்காம் பத்து - பத்தாம் திருமொழி - நான்காம் பாசுரம்
கறவை முன் காத்து கஞ்சனைக் காய்ந்த* காளமேகத் திரு உருவன்*
பறவை முன் உயர்த்து பாற்கடல் துயின்ற* பரமனார் பள்ளிகொள் கோயில்*
துறைதுறைதோறும் பொன் மணி சிதறும்*
தொகு திரை மண்ணியின் தென்பால்*
செறி மணி மாடக் கொடி கதிர் அணவும்* திருவெள்ளியங்குடி அதுவே|
005. திவ்ய ப்ரபந்தம் - 1342 - கோலவில்லி ராமன் கோயில் இது
பெரிய திருமொழி - நான்காம் பத்து - பத்தாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்
பாரினை உண்டு பாரினை உமிழ்ந்து* பாரதம் கையெறிந்து*
ஒரு கால் தேரினை ஊர்ந்து தேரினைத் துரந்த*
செங் கண் மால் சென்று உறை கோயில்*
ஏர் நிரை வயலுள் வாளைகள் மறுகி*
எமக்கு இடம் அன்று இது என்று எண்ணி*
சீர் மலி பொய்கை சென்று அணைகின்ற* திருவெள்ளியங்குடி அதுவே|
006. திவ்ய ப்ரபந்தம் - 1343 - திருவிக்கிரமன் கோயில் இது
பெரிய திருமொழி - நான்காம் பத்து - பத்தாம் திருமொழி - ஆறாம் பாசுரம்
காற்றிடைப் பூளை கரந்தென அரந்தை உறக்* கடல் அரக்கர்தம் சேனை*
கூற்றிடைச் செல்ல கொடுங் கணை துரந்த* கோல வில் இராமன்தன் கோயில்*
ஊற்றிடை நின்ற வாழையின் கனிகள்* ஊழ்த்து வீழ்ந்தன உண்டு மண்டி*
சேற்றிடைக் கயல்கள் உகள் திகழ் வயல் சூழ்* திருவெள்ளியங்குடி அதுவே|
007. திவ்ய ப்ரபந்தம் - 1344 - நரசிங்கப் பெருமான் வாழ்விடம் இது
பெரிய திருமொழி - நான்காம் பத்து - பத்தாம் திருமொழி - ஏழாம் பாசுரம்
ஒள்ளிய கருமம் செய்வன் என்று உணர்ந்த* மாவலி வேள்வியில் புக்கு*
தெள்ளிய குறள் ஆய் மூவடி கொண்டு* திக்கு உற வளர்ந்தவன் கோயில்*
அள்ளி அம் பொழில்வாய் இருந்து வாழ் குயில்கள்*
அரி அரி என்று அவை அழைப்ப*
வெள்ளியார் வணங்க விரைந்து அருள் செய்வான்*
திருவெள்ளியங்குடி அதுவே|
008. திவ்ய ப்ரபந்தம் - 1345 - ஆழியான் அமரும் கோயில் இது
பெரிய திருமொழி - நான்காம் பத்து - பத்தாம் திருமொழி - எட்டாம் பாசுரம்
முடி உடை அமரர்க்கு இடர் செய்யும்* அசுரர் தம் பெருமானை*
அன்று அரி ஆய் மடியிடை வைத்து மார்வம் முன் கீண்ட*
மாயனார் மன்னிய கோயில்*
படியிடை மாடத்து அடியிடைத் தூணில்* பதித்த பல் மணிகளின் ஒளியால்*
விடி பகல் இரவு என்று அறிவு அரிது ஆய* திருவெள்ளியங்குடி அதுவே|
009. திவ்ய ப்ரபந்தம் - 1346 - இவ்வுலகை ஆள்வர்
பெரிய திருமொழி - நான்காம் பத்து - பத்தாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
குடி குடி ஆகக் கூடி நின்று அமரர்* குணங்களே பிதற்றி நின்று ஏத்த*
அடியவர்க்கு அருளி அரவுஅணைத் துயின்ற*
ஆழியான் அமர்ந்து உறை கோயில்*
கடி உடைக் கமலம் அடியிடை மலரக்* கரும்பொடு பெருஞ் செந்நெல் அசைய*
வடிவு உடை அன்னம் பெடையொடும் சேரும்* வயல் வெள்ளியங்குடி அதுவே|
010. திவ்ய ப்ரபந்தம் - 1347 - திருப்புள்ளம் பூதங்குடி
பெரிய திருமொழி - நான்காம் பத்து - பத்தாம் திருமொழி - பத்தாம் பாசுரம்
பண்டு முன் ஏனம் ஆகி அன்று ஒருகால்* பார் இடந்து எயிற்றினில் கொண்டு*
தெண் திரை வருடப் பாற்கடல் துயின்ற* திருவெள்ளியங்குடியானை*
வண்டு அறை சோலை மங்கையர் தலைவன்*
மான வேல் கலியன் வாய் ஒலிகள்*
கொண்டு இவை பாடும் தவம் உடையார்கள்* ஆள்வர் இக் குரை கடல் உலகே|
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்