About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Saturday, 10 February 2024

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.45

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

உலகின் உன்னத மனிதனைக் குறித்து 
நாரதரிடம் கேட்ட வால்மீகி 
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்

ஸ்லோகம் - 1.1.45

ப்ரதிஜ்ஞா தஸ்²ச ராமேண 
வத⁴: ஸம்யதி ரக்ஷஸாம்|
ருஷீணா மக்³நி கல்பா நாம் 
த³ண்ட³காரண்ய வாஸிநாம்|| 

  • ச - அன்றியும்
  • ஸம்யதி - யுத்தத்தில்
  • ரக்ஷஸாம் - இராக்ஷஸர்களுடைய
  • வத⁴ஸ் - வதம்
  • அக்³நி கல்பா நாம் - அக்நிக்கு நிகரானவர்களுமான
  • த³ண்ட³காரண்ய வாஸிநாம் - தண்டகாரண்ய வாஸிகளான
  • ருஷீணாம் - முனிவர்களுக்கு
  • ராமேண - ஸ்ரீராமரால்
  • ப்ரதிஜ்ஞாதஸ்² - பிரதிக்ஞை செய்யப்பட்டது

அன்றியும் யுத்தத்தில் இராக்ஷஸர்களுடைய வதம், தண்டகாரண்ய வாஸிகளான, அக்னிக்கு நிகரானவர்களுமான ரிஷிகளுக்கு ஸ்ரீராமரால் ப்ரதிக்ஞை  செய்யப்பட்டது.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திவ்ய ப்ரபந்தம் - 89 - பெரியாழ்வார் திருமொழி - 1.7.4

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் - 89 - மஹாலக்ஷ்மியை மார்பில் தரித்தவன்
பெரியாழ்வார் திருமொழி 
முதலாம் பத்து - ஏழாம் திருமொழி - நான்காம் பாசுரம்

கன்னல் குடம் திறந்தாலொத்தூறிக்
கண கண சிரித்து வந்து* 
முன் வந்து நின்று முத்தம் தரும்* 
என் முகில் வண்ணன் திருமார்வன்* 
தன்னைப் பெற்றேற்குத் தன் வாயமுதம் தந்து* 
என்னைத் தளிர்ப்பிக்கின்றான்*
தன்னெற்று மாற்றலர் தலைகள் மீதே* 
தளர் நடை நடவானோ!

  • கன்னல் குடம் - கரும்பு ரஸம் நிறைந்த குடம்
  • திறந்தால் - பொத்தல் விழுந்தால் அப் பொத்தல்  வழியாகச் சாறு பொழிவதைப் 
  • ஒத்து - போல
  • ஊறி - வாயில் இருந்து நீர் சுரந்து வடிய
  • கண கண - கண கண வென்று சப்தமுண்டாகும்படி சிரித்து
  • உவந்து - ஸந்தோஷித்து
  • முன் வந்து நின்று - என் முன்னே வந்து நின்று
  • முத்தம் தரும் என் - எனக்கு முத்தம் கொடுக்கும் தன்மை உள்ளவனும்
  • முகில் வண்ணன் - (முகில்) மேகம் போன்ற கருத்த நிறத்தை உடையவனும்
  • திரு - பெரிய பிராட்டியாரை
  • மார்வன் - மார்பில் கொண்டுள்ளவனுமான இவன்
  • தன்னை பெற்றேற்கு - தன்னைப் பெற்ற எனக்கு
  • தன் - தன்னுடைய
  • வாய் அமுதம் - அதர அம்ருதத்தை
  • தந்து - கொடுத்து
  • என்னை - தன்னைப் பிள்ளையாகப் பெற்ற பாக்யத்தை உடைய என்னை
  • தளிர்ப்பிக்கின்றான் - என்னை மகிழ்விக்கச் செய்கின்றவனுமாகிய இவன்
  • தன் எற்றும் - தன்னோடு எதிர்க்கிற
  • மாற்றலர் - சத்ருக்களுடைய
  • தலைகள் மீதே - தலைகளின் மேலே அடியிட்டு 
  • தளர் நடை - அழகிய இளம் நடையை
  • நடவானோ - நடக்க மாட்டானோ? நடக்க வேணும்

கண்ணன் மகிழ்ந்து வாய் விட்டு சப்தமாக சிரிக்கும் போது, அவன் வாயில் இருந்து எச்சில் நீர் வழிந்தது எப்படியிருந்தது என்றால், கருப்பஞ்சாறு வைத்திருக்கும் குடத்தின் ஒரு துளை வழியாக கசியும் இனிய சாறுபோல் இருந்ததாம். மேகம் போல் நிறமுடையவனும், திருமகளை தன் திருமார்பில் வைத்திருப்பவனுமான கண்ணன் என் முன்னால் வந்து நின்று, இந்த வாயமுதுடன் எனக்கு முத்தம் கொடுத்து, இவனைப் பெற்றதின் பாக்யத்தை எனக்கு கொடுத்துவிடுவான், என யசோதை பாவனையில் ஆழ்வார் அருளிச்செய்கிறார். தன்னை எதிர்க்கும் பகைவர்களின் தலைகள் மேலே இவன் தளர் நடையாக நடந்து வருவானோ என எதிர்பார்க்கிறார் ஆழ்வார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 026 - திரு இந்தளூர் 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

026. திருஇந்தளூர் (மாயவரம்)
இருபத்தி ஆறாவது திவ்ய க்ஷேத்ரம்

ஸ்ரீ பரிமள ரங்கநாதர் பெருமாள் திருக்கோயில்

ஸ்ரீ பரிமள ரங்கநாயகி தாயார் ஸமேத ஸ்ரீ பரிமள ரங்கநாதர் பெருமாள்
திருவடிகளே சரணம்||

  • பெருமாள் மூலவர்: பரிமள ரங்கநாதர்
  • பெருமாள் உற்சவர்: சுகந்தவன நாதர், மருவினிய மைந்தன்
  • தாயார் மூலவர்: பரிமள ரங்கநாயகி
  • தாயார் உற்சவர்: சந்திர சாப விமோசனவல்லி, புண்டரீக வல்லி 
  • திருமுக மண்டலம் திசை: கிழக்கு 
  • திருக்கோலம்: வீர ஸயனம்
  • புஷ்கரிணி/தீர்த்தம்: இந்து (சந்திர)
  • விமானம்: வேத சக்ர
  • ப்ரத்யக்ஷம்:  சந்திரன்
  • ஸம்ப்ரதாயம்: தென் கலை
  • மங்களாஸாஸநம்: 1 ஆழ்வார்
  • பாசுரங்கள்: 11

--------------------
ஸ்ரீ. உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி


ஸ்தல புராணம்

ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் 350 அடி நீளமும் 230 அடி அகலமும் கொண்ட பெரிய கோயில் இது. வாசலில் சந்திர புஷ்கரிணி தீர்த்தம் உள்ளது. இதில் நீராடித் தான் சந்திரன் தன் சாபம் நீங்கப் பெற்றான். பெருமாளின் முகத்தை சந்திரனும், பாதத்தை சூரியனும், நாபிக் கமலத்தை பிரம்மனும் பூஜிக்கிறார்கள். தலை மாட்டில் காவிரித் தாயாரும், கால்மாட்டில் கங்கை தாயாரும் வழிபடுகிறார்கள். எமனும், அம்பரீசனும் பெருமாளின் திருவடியை பூஜை செய்கிறார்கள். கங்கையை விட காவிரி புனிதமானவள் என்று பெயர் பெற்ற தலம்.

நினைத்ததை எல்லாம் பெற்றுத் தரும் ஏகாதசி விரதத்தை அம்பரீசன் என்ற மன்னன் பல ஆண்டுகளாக கடைப்பிடித்து வந்தான். இவன் ஏகாதசியில் விரதம் இருந்து மறுநாள் துவாதசி நல்ல நேரத்தில் பிரசாதம் உண்டு விரதம் முடிப்பான். இவனது நூறாவது விரத நாளில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. நாட்டு மக்கள் அனைவரும் மிகவும் சந்தோஷமாக இருந்தனர். ஆனால் தேவ லோகத்திலோ அனைவரும் கலக்கமாக இருந்தனர். அம்பரீசன் நூறாவது விரதம் முடித்து விட்டால் தேவ லோகப் பதவி கூட கிடைத்து விடும். மானிடனுக்கு இப்பதவி கிடைத்து விட்டால் தேவர்களின் மரியாதை குறைந்து விடும் என பயந்தனர். இதனால் தேவர்கள் துர்வாச முனிவரிடம் சென்றனர். துர்வாசரும் தேவர்களுக்கு உதவுவதாக தெரிவித்து விட்டு, மன்னனின் விரதத்தை தடுக்க பூமிக்கு வந்தார். அவர் வருவதற்குள் மன்னன் விரதத்தை முடித்து இருந்தான். அவன் ஏகாதசி விரதம் முடித்து இருந்தாலும் துவாதசி நேரம் முடிவதற்குள் அவன் உணவு அருந்தி இருக்க வேண்டும். அப்போது தான் ஏகாதசியின் முழுப்பயனும் அவனுக்கு கிடைக்கும். துவாதசி நேரம் முடிந்து விட்டால் பயனில்லை. துவாதசி ஆரம்பிக்க மன்னன் உணவு உண்ண தயாராக இருந்தான். அதற்குள் துர்வாசர் வந்து விட்டார். தன் விரதத்தை தடுக்கத் தான் இவர் வந்துள்ளார் என்பது மன்னனுக்கு தெரியாது. முனிவரை வரவேற்ற மன்னன், “தாங்களும் என்னுடன் உணவருந்தினால், எனக்கு மிகுந்த சந்தோஷம் உண்டாகும்” என்றான். முனிவரும் சம்மதித்து விட்டு நதியில் நீராடி விட்டு வருகிறேன். அதன் பின் உணவருந்தலாம் என கூறி சென்றார். முனிவரின் திட்டம் என்னவென்றால், தான் நீராடி விட்டு தாமதமாக வந்தால் அதற்குள் துவாதசி நேரம் முடிந்து விடும். மன்னன் நமக்காக காத்திருந்தால் அவனது விரதம் தடை படும் என்பது தான். துவாதசி முடிய இன்னும் சில மணி நேரங்களே இருந்தது. கோபக்கார துர்வாசர் வருவதற்குள் சாப்பிட்டு விட்டால் விரதத்தின் பலன் கிடைக்காமல் செய்து விடுவார். இன்னும் சில நிமிடங்களே இருந்தது. வேதியர்களிடமும், அந்தணர்களிடமும் என்ன செய்யலாம் என ஆலோசனை செய்தான். உடனே தலைமைப் பண்டிதர், “உள்ளங்கை அளவு தீர்த்தத்தை மூன்று முறை குடித்தால் விரதம் முடிந்து ஏகாதசியின் முழுப்பயனும் கிடைத்து விடும்” என்று கூறினர். அதே போல் பெருமாளை நினைத்து உள்ளங்கை அளவு தீர்த்தத்தை மூன்று முறை குடித்து தன் விரதத்தை பூர்த்தி செய்து விட்டு, முனிவருடன் சேர்ந்து சாப்பிடுவதற்காக காத்திருந்தான். இதனை தன் ஞான திருஷ்டியால் அறிந்த துர்வாசர் மிகுந்த கோபம் அடைந்தார். உடனே துர்வாசர் ஒரு பூதத்தை வரவழைத்து அம்பரீசனை கொல்லுமாறு ஆணையிட்டார். அம்பரீசன் இதற்கு பயந்து பரிமள ரங்கநாதரிடம் சென்று, “பெருமாளே! உனக்காக ஏகாதசி விரதம் இருக்கக் கூடாது என்பதற்காக ஏவப்பட்டுள்ள பூதத்திடம் இருந்து என்னைக் காப்பாற்று” என பெருமாள் பாதத்தில் சரணடைந்தார். பெருமாள் கோபத்துடன் பூதத்தை விரட்டினார். இதை எல்லாம் அறிந்த துர்வாசர் பெருமாளிடம் மன்னிப்பு கேட்க, பெருமாளும் மன்னித்து அவரது கர்வத்தை அடக்கினார். நூறு ஏகாதசி விரதம் இருந்து முடித்த மன்னனிடம், "வேண்டியதைக் கேள்” என்றார். அதற்கு மன்னன், "தாங்கள் இத்தலத்தில் வீற்றிருந்து வரும் பக்தர்களின் குறை கேட்டு அருள் புரிய வேண்டும்,' என வேண்டினான். பெருமாளும் மன்னனின் விருப்பப்படி இத்தலத்தில் அருள் புரிந்து வருகிறார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

லீலை கண்ணன் கதைகள் - 101

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

கிருஷ்ணர் அர்ஜுனனின் பயணம்|

இனிக் குழந்தை கிடைக்காது என்று தெரிந்ததும், தன் வாக்கைக் காப்பாற்றுவதற்காகத் தீமூட்டி அதில் குதிக்கத் தயாரானான். அப்பொழுது கிருஷ்ணர் அந்தப் பக்கமாக வந்து, அர்ஜுனனின் காதில் ரகசியமாக, "கவலைப்படாதே அர்ஜுனா! அந்தணரின் எல்லாக் குழந்தைகளும் எங்கே இருக்கின்றன என்று காட்டுகிறேன். இத்தனை நாளும் என்னை வைது கொண்டிருந்த இந்த அந்தணர் சிக்கிரமே என்னை வானளாவ புகழப் போகிறார் பார்" என்றார். 


பிறகு கிருஷ்ணர் அர்ஜுனனைத் தம்முடைய தெய்விக ரதத்தில் ஏற்றிக் கொள்ள அவர்கள் மேற்குத் திசையை நோக்கிச் சென்றார்கள். ஏழு கடல்களையும், ஏழு தீவுகளையும் கடந்தார்கள். கடைசியில் மிகவும் இருட்டான ஒரு பிரதேசத்தை அடைந்தார்கள். அந்த இருட்டில் குதிரைகளால் ரதத்தை இழுக்க முடியவில்லை. உடனே கிருஷ்ணர் தன் கையிலிருந்த சக்கராயுதத்தை எடுத்து விட்டார். அந்தச் சுதர்சன சக்கரம் சூரியனைப் போலப் பிரகாசித்தது. குதிரைகள் திரும்பவும் செல்ல ஆரம்பித்தன. 

அந்த ஒளி தாங்காமல் அர்ஜுனன் தன் கண்களை மூடிக் கொண்டான். பிறகு அவன் கண்களைத் திறந்து பார்த்த போது, ரதம் தண்ணீரின் மீது போய்க் கொண்டிருந்ததையும், அலைகள் அடித்துக் கொண்டிருந்ததையும் கண்டான். 

வெகு தூரம் பிரயாணம் செய்தபிறகு, கடலுக்கு அடியில் இருந்த ஒரு நகரை அவர்கள் அடைந்தார்கள். அதன் பெயர் மகாகாலபுரம் என்பது. அங்கே ஒரு பெரிய அரண்மனை இருந்தது. கிருஷ்ணரும் அர்ஜுனனும் அந்த அரண்மனைக்குள் நுழைந்தார்கள். அங்கு ருந்த ஒரு மிகப் பெரிய பயங்கரமான பாம்பைக் கிருஷ்ணர் அர்ஜுனனுக்குச் சுட்டிக் காட்டினார். அது தான் ஆயிரம் தலையுள்ள ஆதிசேஷன்! அதன் தலைகளில் கணக்கற்ற இரத்தின கற்கள் இருந்தன. ஒவ்வொரு கல்லும் ஒரு சூரியனைப் போல் பிரகாசித்தது.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவத புராணம் - 54

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

யாதவ குலத்தின் அழிவு

ஸ்கந்தம் 03

உத்தவர் தொடர்ந்தார். 

“சரத் கால இரவில் ப்ருந்தாவன ம் எங்கும் பௌர்ணமி நிலவு பரவியிருக்கும் வேளையில் கண்ணன் இனிய முளரி கானம் செய்துகொண்டு ராஸலீலை செய்தார். தாய் தந்தையரைக் காக்க வடமதுரை வந்து மாமன் கம்சனைக் கீழே தள்ளிக் கொன்று, அவன் உடலை தரதர என்று தரையில் இழுத்தார். சாந்தீபனி முனிவரின் குரு குலம் சென்று வேதங்களையும் அதன் ஆறு அங்கங்களையும் ஒரே முறை கேட்டு அத்யயனம் முடித்தார். அவரது இறந்த மகனை மீட்க பஞ்சஜனன் என்ற அரக்கனின் வயிற்றைக் கிழித்தார். பின்னர் யம லோகம் வரை சென்று அவனை மீட்டு வரும் வழியிலேயே குரு தனக்குச் சொன்ன அத்தனை வித்தைகளையும் அவனுக்கு போதித்து முழுமையாக்கி குருவிடமே ஒப்படைத்தார்.


பீஷ்மக மஹாராஜனின் மகளான ருக்மிணியின் அழைப்பை ஏற்று காந்தர்வ முறைப்படி விவாஹம் செய்ய எண்ணி, கருடன் அமுத கலசத்தை கவர்ந்து செல்வது போல் அவளை அழைத்து வந்தார். நக்னஜித் என்பவரின் மகளான ஸத்யாவை அவளது திருமணத்திற்குப் பணயமாக வைக்கப்பட்டிருந்த ஏழு காளைகளை அடக்கி திருமணம் செய்து கொண்டார். ஸத்யபாமா பாரிஜாத மலருக்கு ஆசைப்பட்டாள். அப்போது சாதாரண உலகியலைப் பின்பற்றி மனைவிக்குக் கட்டுப்பட்ட கணவன் போல் ஸ்வர்கத்திலிருந்து பாரிஜாத மரத்தையே எடுத்து வந்து அவளது ஆசையைப் பூர்த்தி செய்தார். 

இந்திரனின் வேண்டுதலுக்கிணங்க நரகாசுரனைக் கொன்றார். அவன் பிற அரசர்களிடமிருந்து கவர்ந்த செல்வம் போக மீதியையும், அரசாட்சியையும் அவனது பிள்ளையான பகதத்தனுக்குக் கொடுத்தார். நரகாசுரனின் அந்தப்புரத்தில் நுழைந்தார். அப்போது நரகாசுரனால் கடத்தி வந்து சிறை வைக்கப்பட்டிருந்த 16000 ராஜகுமாரிகள் கண்ணனைக் கண்ட நொடியில் காதல் கொண்டு மணக்க விரும்பினர். பகவான் தன் மாயையால், அவரவர்களுக்கு ஏற்ப தனித்தனி வடிவம் கொண்டு அவர்கள் அனைவரையும் மணந்தார்.


தன் அளவிடற்கரிய லீலைகளை வெளிப்படுத்த எண்ணிய பகவான் அவர்கள் ஒவ்வொருவரிடம் தனக்கு ஒப்பான பத்து பிள்ளைகளைத் தோற்றுவித்தார். காலயவனன், ஜராஸந்தன், சால்வன் முதலியோர் மதுரையை முற்றுகையிட்ட போது அவர்களை முசுகுந்தன், பீமன் முதலியோரைக் கொண்டு வதைத்தார். சம்பரன், த்விவிதன், பாணன், முரன், பல்வலன், தந்தவக்த்ரன் முதலிய அசுரர்களில் சிலரைத் தானே கொன்றார். சிலரை பீமனை விட்டுக் கொல்லச் செய்தார். 

விதுரரே! துரியோதனாதியர், பாண்டவர்கள் இன்னும் பல அரசர்களின் படையால் பூமியே நடுங்கிற்றே. அவர்களை உண்மையில் கொன்றவர் கண்ணனன்றோ. கர்ணன், துச்சாதனன், சகுனி போன்றவர்கள் பீமனால் முறிக்கப்பட்டு வீழ்ந்த போதும் பூபாரம் முழுமையாகத் தீர்க்கப்படவில்லை என்று எண்ணினார். பதினெட்டு அக்ஷௌஹிணி படைகள் அழிந்தன. ஆனால் எனது அம்ச பூதமாகத் தோன்றிய யாதவப் படை மிகப் பெரிதாக வளர்ந்து நிற்கிறதே. அவர்கள் தாமாகவே அழிந்தால் தான் உண்டு. வேறெவரும் அழிக்க இயலாது என்று எண்ணினார். தர்மபுத்ரரை அரச பீடத்தில் அமர்த்தினார். உத்தரையின் வயிற்றிலிருந்த பூரு வம்சத்தின் விதையான பரிக்ஷித்தைக் காப்பாற்றினார். தர்மபுத்ரருக்கு மூன்று அஸ்வமேத யாகங்களை நடத்திக் கொடுத்து அவர் நிலவுலகை மகிழ்ச்சியோடு வைத்துக் கொள்ள அறிவுறுத்தினார்.

உள்ளும் புறமும் எங்கும் வியாபித்திருக்கும் பகவான் எதிலும் ஒட்டாமல் உலகியல் நெறிகளை மேற்கொண்டு அனைத்து சுக போகங்களையும் அனுபவித்துக் கொண்டு துவாரகையில் வசித்து வந்தார். ஒரு சமயம் விளையாடிக் கொண்டிருந்த யாதவ குமாரர்களும், போஜ குமாரர்களும் சில முனிவர்களை சினம் கொள்ளச் செய்தனர். யாதவ குலத்தின் அழிவே பகவானின் திருவுளம் என்றறிந்த முனிவர்கள் அவர்களுக்குச் சாபமிட்டனர். சில மாதங்கள் கழித்து வ்ருஷ்ணி, போஜ, அந்தக வம்சத்து யாதவர்கள் ப்ரபாஸ தீர்த்தத்திற்கு வந்தனர். அங்கு நீராடி ரிஷிகள், பித்ருக்களுக்குத் தர்ப்பணம் செய்து அந்தணர்களுக்குச் சிறந்த தானங்களை அளித்தனர். அங்கு தங்கியிருந்த சமயத்தில் உணவு ஏற்று, பின்னர் மதுவருந்தினர். அதனால் மதிகெட்டு ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டு அடித்துக் கொள்ள ஆரம்பித்தனர். மூங்கில்கள் ஒன்றோடொன்று உராய்ந்து தீ ஏற்பட்டு காட்டை அழிப்பது போல் தங்களுக்குள் அடித்துக் கொண்டு மாய்ந்து போனார்கள். 

பகவான் தன் மாயையின் திறனைக் கண்டு பின் ஸரஸ்வதி நதி தீரத்தில் ஒரு மரத்தடியில் அமர்ந்தார். தன் குலம் அழிவதைக் காண என் மனம் தாங்காது எனவும், என்னை பதரிகாச்ரமம் செல்லும் படியும் கட்டளையிட்டார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்