About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Saturday, 10 February 2024

திவ்ய ப்ரபந்தம் - 89 - பெரியாழ்வார் திருமொழி - 1.7.4

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் - 89 - மஹாலக்ஷ்மியை மார்பில் தரித்தவன்
பெரியாழ்வார் திருமொழி 
முதலாம் பத்து - ஏழாம் திருமொழி - நான்காம் பாசுரம்

கன்னல் குடம் திறந்தாலொத்தூறிக்
கண கண சிரித்து வந்து* 
முன் வந்து நின்று முத்தம் தரும்* 
என் முகில் வண்ணன் திருமார்வன்* 
தன்னைப் பெற்றேற்குத் தன் வாயமுதம் தந்து* 
என்னைத் தளிர்ப்பிக்கின்றான்*
தன்னெற்று மாற்றலர் தலைகள் மீதே* 
தளர் நடை நடவானோ!

  • கன்னல் குடம் - கரும்பு ரஸம் நிறைந்த குடம்
  • திறந்தால் - பொத்தல் விழுந்தால் அப் பொத்தல்  வழியாகச் சாறு பொழிவதைப் 
  • ஒத்து - போல
  • ஊறி - வாயில் இருந்து நீர் சுரந்து வடிய
  • கண கண - கண கண வென்று சப்தமுண்டாகும்படி சிரித்து
  • உவந்து - ஸந்தோஷித்து
  • முன் வந்து நின்று - என் முன்னே வந்து நின்று
  • முத்தம் தரும் என் - எனக்கு முத்தம் கொடுக்கும் தன்மை உள்ளவனும்
  • முகில் வண்ணன் - (முகில்) மேகம் போன்ற கருத்த நிறத்தை உடையவனும்
  • திரு - பெரிய பிராட்டியாரை
  • மார்வன் - மார்பில் கொண்டுள்ளவனுமான இவன்
  • தன்னை பெற்றேற்கு - தன்னைப் பெற்ற எனக்கு
  • தன் - தன்னுடைய
  • வாய் அமுதம் - அதர அம்ருதத்தை
  • தந்து - கொடுத்து
  • என்னை - தன்னைப் பிள்ளையாகப் பெற்ற பாக்யத்தை உடைய என்னை
  • தளிர்ப்பிக்கின்றான் - என்னை மகிழ்விக்கச் செய்கின்றவனுமாகிய இவன்
  • தன் எற்றும் - தன்னோடு எதிர்க்கிற
  • மாற்றலர் - சத்ருக்களுடைய
  • தலைகள் மீதே - தலைகளின் மேலே அடியிட்டு 
  • தளர் நடை - அழகிய இளம் நடையை
  • நடவானோ - நடக்க மாட்டானோ? நடக்க வேணும்

கண்ணன் மகிழ்ந்து வாய் விட்டு சப்தமாக சிரிக்கும் போது, அவன் வாயில் இருந்து எச்சில் நீர் வழிந்தது எப்படியிருந்தது என்றால், கருப்பஞ்சாறு வைத்திருக்கும் குடத்தின் ஒரு துளை வழியாக கசியும் இனிய சாறுபோல் இருந்ததாம். மேகம் போல் நிறமுடையவனும், திருமகளை தன் திருமார்பில் வைத்திருப்பவனுமான கண்ணன் என் முன்னால் வந்து நின்று, இந்த வாயமுதுடன் எனக்கு முத்தம் கொடுத்து, இவனைப் பெற்றதின் பாக்யத்தை எனக்கு கொடுத்துவிடுவான், என யசோதை பாவனையில் ஆழ்வார் அருளிச்செய்கிறார். தன்னை எதிர்க்கும் பகைவர்களின் தலைகள் மேலே இவன் தளர் நடையாக நடந்து வருவானோ என எதிர்பார்க்கிறார் ஆழ்வார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment