About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Saturday, 10 February 2024

108 திவ்ய தேசங்கள் - 026 - திரு இந்தளூர் 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

026. திருஇந்தளூர் (மாயவரம்)
இருபத்தி ஆறாவது திவ்ய க்ஷேத்ரம்

ஸ்ரீ பரிமள ரங்கநாதர் பெருமாள் திருக்கோயில்

ஸ்ரீ பரிமள ரங்கநாயகி தாயார் ஸமேத ஸ்ரீ பரிமள ரங்கநாதர் பெருமாள்
திருவடிகளே சரணம்||

  • பெருமாள் மூலவர்: பரிமள ரங்கநாதர்
  • பெருமாள் உற்சவர்: சுகந்தவன நாதர், மருவினிய மைந்தன்
  • தாயார் மூலவர்: பரிமள ரங்கநாயகி
  • தாயார் உற்சவர்: சந்திர சாப விமோசனவல்லி, புண்டரீக வல்லி 
  • திருமுக மண்டலம் திசை: கிழக்கு 
  • திருக்கோலம்: வீர ஸயனம்
  • புஷ்கரிணி/தீர்த்தம்: இந்து (சந்திர)
  • விமானம்: வேத சக்ர
  • ப்ரத்யக்ஷம்:  சந்திரன்
  • ஸம்ப்ரதாயம்: தென் கலை
  • மங்களாஸாஸநம்: 1 ஆழ்வார்
  • பாசுரங்கள்: 11

--------------------
ஸ்ரீ. உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி


ஸ்தல புராணம்

ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் 350 அடி நீளமும் 230 அடி அகலமும் கொண்ட பெரிய கோயில் இது. வாசலில் சந்திர புஷ்கரிணி தீர்த்தம் உள்ளது. இதில் நீராடித் தான் சந்திரன் தன் சாபம் நீங்கப் பெற்றான். பெருமாளின் முகத்தை சந்திரனும், பாதத்தை சூரியனும், நாபிக் கமலத்தை பிரம்மனும் பூஜிக்கிறார்கள். தலை மாட்டில் காவிரித் தாயாரும், கால்மாட்டில் கங்கை தாயாரும் வழிபடுகிறார்கள். எமனும், அம்பரீசனும் பெருமாளின் திருவடியை பூஜை செய்கிறார்கள். கங்கையை விட காவிரி புனிதமானவள் என்று பெயர் பெற்ற தலம்.

நினைத்ததை எல்லாம் பெற்றுத் தரும் ஏகாதசி விரதத்தை அம்பரீசன் என்ற மன்னன் பல ஆண்டுகளாக கடைப்பிடித்து வந்தான். இவன் ஏகாதசியில் விரதம் இருந்து மறுநாள் துவாதசி நல்ல நேரத்தில் பிரசாதம் உண்டு விரதம் முடிப்பான். இவனது நூறாவது விரத நாளில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. நாட்டு மக்கள் அனைவரும் மிகவும் சந்தோஷமாக இருந்தனர். ஆனால் தேவ லோகத்திலோ அனைவரும் கலக்கமாக இருந்தனர். அம்பரீசன் நூறாவது விரதம் முடித்து விட்டால் தேவ லோகப் பதவி கூட கிடைத்து விடும். மானிடனுக்கு இப்பதவி கிடைத்து விட்டால் தேவர்களின் மரியாதை குறைந்து விடும் என பயந்தனர். இதனால் தேவர்கள் துர்வாச முனிவரிடம் சென்றனர். துர்வாசரும் தேவர்களுக்கு உதவுவதாக தெரிவித்து விட்டு, மன்னனின் விரதத்தை தடுக்க பூமிக்கு வந்தார். அவர் வருவதற்குள் மன்னன் விரதத்தை முடித்து இருந்தான். அவன் ஏகாதசி விரதம் முடித்து இருந்தாலும் துவாதசி நேரம் முடிவதற்குள் அவன் உணவு அருந்தி இருக்க வேண்டும். அப்போது தான் ஏகாதசியின் முழுப்பயனும் அவனுக்கு கிடைக்கும். துவாதசி நேரம் முடிந்து விட்டால் பயனில்லை. துவாதசி ஆரம்பிக்க மன்னன் உணவு உண்ண தயாராக இருந்தான். அதற்குள் துர்வாசர் வந்து விட்டார். தன் விரதத்தை தடுக்கத் தான் இவர் வந்துள்ளார் என்பது மன்னனுக்கு தெரியாது. முனிவரை வரவேற்ற மன்னன், “தாங்களும் என்னுடன் உணவருந்தினால், எனக்கு மிகுந்த சந்தோஷம் உண்டாகும்” என்றான். முனிவரும் சம்மதித்து விட்டு நதியில் நீராடி விட்டு வருகிறேன். அதன் பின் உணவருந்தலாம் என கூறி சென்றார். முனிவரின் திட்டம் என்னவென்றால், தான் நீராடி விட்டு தாமதமாக வந்தால் அதற்குள் துவாதசி நேரம் முடிந்து விடும். மன்னன் நமக்காக காத்திருந்தால் அவனது விரதம் தடை படும் என்பது தான். துவாதசி முடிய இன்னும் சில மணி நேரங்களே இருந்தது. கோபக்கார துர்வாசர் வருவதற்குள் சாப்பிட்டு விட்டால் விரதத்தின் பலன் கிடைக்காமல் செய்து விடுவார். இன்னும் சில நிமிடங்களே இருந்தது. வேதியர்களிடமும், அந்தணர்களிடமும் என்ன செய்யலாம் என ஆலோசனை செய்தான். உடனே தலைமைப் பண்டிதர், “உள்ளங்கை அளவு தீர்த்தத்தை மூன்று முறை குடித்தால் விரதம் முடிந்து ஏகாதசியின் முழுப்பயனும் கிடைத்து விடும்” என்று கூறினர். அதே போல் பெருமாளை நினைத்து உள்ளங்கை அளவு தீர்த்தத்தை மூன்று முறை குடித்து தன் விரதத்தை பூர்த்தி செய்து விட்டு, முனிவருடன் சேர்ந்து சாப்பிடுவதற்காக காத்திருந்தான். இதனை தன் ஞான திருஷ்டியால் அறிந்த துர்வாசர் மிகுந்த கோபம் அடைந்தார். உடனே துர்வாசர் ஒரு பூதத்தை வரவழைத்து அம்பரீசனை கொல்லுமாறு ஆணையிட்டார். அம்பரீசன் இதற்கு பயந்து பரிமள ரங்கநாதரிடம் சென்று, “பெருமாளே! உனக்காக ஏகாதசி விரதம் இருக்கக் கூடாது என்பதற்காக ஏவப்பட்டுள்ள பூதத்திடம் இருந்து என்னைக் காப்பாற்று” என பெருமாள் பாதத்தில் சரணடைந்தார். பெருமாள் கோபத்துடன் பூதத்தை விரட்டினார். இதை எல்லாம் அறிந்த துர்வாசர் பெருமாளிடம் மன்னிப்பு கேட்க, பெருமாளும் மன்னித்து அவரது கர்வத்தை அடக்கினார். நூறு ஏகாதசி விரதம் இருந்து முடித்த மன்னனிடம், "வேண்டியதைக் கேள்” என்றார். அதற்கு மன்னன், "தாங்கள் இத்தலத்தில் வீற்றிருந்து வரும் பக்தர்களின் குறை கேட்டு அருள் புரிய வேண்டும்,' என வேண்டினான். பெருமாளும் மன்னனின் விருப்பப்படி இத்தலத்தில் அருள் புரிந்து வருகிறார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

No comments:

Post a Comment