||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
017. திருக்கண்ணபுரம்
க்ருஷ்ணாரண்ய க்ஷேத்ரம் – நாகப்பட்டினம்
பதினாறாவது திவ்ய க்ஷேத்ரம்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 129 - 5
திருமங்கையாழ்வார்
101. திவ்ய ப்ரபந்தம் - 1735 - பிறவா வரம் பெற்று விட்டேன்
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - எட்டாம் பாசுரம்
கற்றார் பற்று அறுக்கும்* பிறவிப் பெருங் கடலே*
பற்றா வந்து அடியேன்* பிறந்தேன் பிறந்த பின்னை*
வற்றா நீர் வயல் சூழ்* வயல் ஆலி அம்மானைப் பெற்றேன்*
பெற்றதுவும்* பிறவாமை பெற்றேனே|
102. திவ்ய ப்ரபந்தம் - 1736 - கண்ணபுரத்தானை எப்பொழுது நேரில் காண்பேன்?
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
கண் ஆர் கண்ணபுரம்* கடிகை கடி கமழும்*
தண் ஆர் தாமரை சூழ்* தலைச்சங்கம் மேல்திசையுள்*
விண்ணோர் நாண்மதியை* விரிகின்ற வெம் சுடரை*
கண் ஆரக் கண்டுகொண்டு* களிக்கின்றது இங்கு என்று கொலோ?
103. திவ்ய ப்ரபந்தம் - 1737 - உலகம் உய்ய இவற்றைப் பாடி ஆடுங்கள்
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - பத்தாம் பாசுரம்
செரு நீர வேல் வலவன்* கலிகன்றி மங்கையர்கோன்*
கரு நீர் முகில் வண்ணன்* கண்ணபுரத்தானை*
இரு நீர் இன் தமிழ்* இன் இசை மாலைகள் கொண்டு தொண்டீர்*
வரும் நீர் வையம் உய்ய* இவை பாடி ஆடுமினே|
104. திவ்ய ப்ரபந்தம் - 1738 - பெருமானே! எனக்கு நீ என்ன செய்யப் போகிறாய்?
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - பத்தாம் திருமொழி - முதலாம் பாசுரம்
வண்டு ஆர் பூ மா மலர் மங்கை* மண நோக்கம் உண்டானே! *
உன்னை உகந்து உகந்து* உன் தனக்கே தொண்டு ஆனேற்கு*
என் செய்கின்றாய்? சொல்லு * நால்வேதம் கண்டானே*
கண்ணபுரத்து உறை அம்மானே|
105. திவ்ய ப்ரபந்தம் - 1739 - கண்ணபுரத்தானே! நீயே என் தெய்வம்
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - பத்தாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
பெரு நீரும் விண்ணும்* மலையும் உலகு ஏழும்*
ஒரு தாரா நின்னுள் ஒடுக்கிய* நின்னை அல்லால்*
வரு தேவர் மற்று உளர் என்று* என் மனத்து இறையும் கருதேன் நான் *
கண்ணபுரத்து உறை அம்மானே|
106. திவ்ய ப்ரபந்தம் - 1740 - அஷ்டாக்ஷரத்தையே நான் கற்றேன்
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - பத்தாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
மற்றும் ஓர் தெய்வம் உளது என்று* இருப்பாரோடு
உற்றிலேன்* உற்றதும்* உன் அடியார்க்கு அடிமை*
மற்று எல்லாம் பேசிலும்* நின் திரு எட்டு எழுத்தும் கற்று*
நான் கண்ணபுரத்து உறை அம்மானே|
107. திவ்ய ப்ரபந்தம் - 1741 - கண்ணனே! உன்னை நான் உகந்தேன்
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - பத்தாம் திருமொழி - நான்காம் பாசுரம்
பெண் ஆனாள்* பேர் இளங் கொங்கையின் ஆர் அழல்போல்*
உண்ணா நஞ்சு உண்டு உகந்தாயை* உகந்தேன் நான் *
மண் ஆளா வாள் நெடுங் கண்ணி* மது மலராள் கண்ணாளா*
கண்ணபுரத்து உறை அம்மானே|
108. திவ்ய ப்ரபந்தம் - 1742 - யாரையும் விரும்பாமல் உன்னையே அடைந்தேன்
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - பத்தாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்
பெற்றாரும் சுற்றமும்* என்று இவை பேணேன் நான்*
மற்று ஆரும் பற்று இலேன்* ஆதலால் நின் அடைந்தேன்*
உற்றான் என்று உள்ளத்து வைத்து* அருள் செய் கண்டாய் *
கற்றார் சேர்* கண்ணபுரத்து உறை அம்மானே|
109. திவ்ய ப்ரபந்தம் - 1743 - உன் அடியாரை யம தூதர் நெருங்க மாட்டார்
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - பத்தாம் திருமொழி - ஆறாம் பாசுரம்
ஏத்தி உன் சேவடி* எண்ணி இருப்பாரை*
பார்த்திருந்து அங்கு* நமன் தமர் பற்றாது*
சோத்தம் நாம் அஞ்சுதும் என்று* தொடாமை நீ காத்தி போல் *
கண்ணபுரத்து உறை அம்மானே|
110. திவ்ய ப்ரபந்தம் - 1744 - உன் அடியார்க்கு யம தூதர் அஞ்சுவர்
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - பத்தாம் திருமொழி - ஏழாம் பாசுரம்
வெள்ளை நீர் வெள்ளத்து* அணைந்த அரவு அணை மேல்*
துள்ளு நீர் மெள்ளத்* துயின்ற பெருமானே*
வள்ளலே உன் தமர்க்கு என்றும்* நமன் தமர் கள்ளர் போல் *
கண்ணபுரத்து உறை அம்மானே|
111. திவ்ய ப்ரபந்தம் - 1745 - உன்னை நினைத்தால் என் துன்பங்கள் நீங்கின
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - பத்தாம் திருமொழி - எட்டாம் பாசுரம்
மாண் ஆகி* வையம் அளந்ததுவும் வாள் அவுணன்*
பூண் ஆகம் கீண்டதுவும்* ஈண்டு நினைந்து இருந்தேன்*
பேணாத வல்வினையேன்* இடர் எத்தனையும் காணேன் நான் *
கண்ணபுரத்து உறை அம்மானே|
112. திவ்ய ப்ரபந்தம் - 1746 - என் நெஞ்சில் நீ இருப்பதை வெளிப்படுத்தினாய்
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - பத்தாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
நாட்டினாய் என்னை* உனக்கு முன் தொண்டு ஆக*
மாட்டினேன் அத்தனையே கொண்டு* என் வல்வினையை*
பாட்டினால் உன்னை* என் நெஞ்சத்து இருந்தமை காட்டினாய் *
கண்ணபுரத்து உறை அம்மானே|
113. திவ்ய ப்ரபந்தம் - 1747 - விண்ணுலக ஆட்சி கிடைக்கும்
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - பத்தாம் திருமொழி - பத்தாம் பாசுரம்
கண்ட சீர்க்* கண்ணபுரத்து உறை அம்மானை*
கொண்ட சீர்த் தொண்டன்* கலியன் ஒலி மாலை*
பண்டமாய்ப் பாடும்* அடியவர்க்கு எஞ்ஞான்றும்*
அண்டம் போய் ஆட்சி* அவர்க்கு அது அறிந்தோமே|
114. திவ்ய ப்ரபந்தம் - 2067 - திருமால் செயல் கூறிக் கண்ணீர் விடுகிறாளே!
திருநெடுந்தாண்டகம் - இரண்டாம் திருமொழி - ஆறாம் பாசுரம் (16)
கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் என்றும்*
கடி பொழில் சூழ் கணபுரத்து என் கனியே என்றும்*
மன்று அமரக் கூத்து ஆடி மகிழ்ந்தாய் என்றும்*
வட திருவேங்கடம் மேய மைந்தா! என்றும்*
வென்று அசுரர் குலம் களைந்த வேந்தே! என்றும்
விரி பொழில் சூழ் திருநறையூர் நின்றாய்! என்றும்*
துன்று குழல் கரு நிறத்து என் துணையே! என்றும்*
துணை முலைமேல் துளி சோர சோர்கின்றாளே|
115. திவ்ய ப்ரபந்தம் - 2078 - நாராய்! என் காதலைக் கண்ணனுக்குக் கூறு
திருநெடுந்தாண்டகம் - மூன்றாம் திருமொழி - ஏழாம் பாசுரம் (27)
செங் கால மட நாராய் இன்றே சென்று*
திருக்கண்ணபுரம் புக்கு என் செங் கண் மாலுக்கு*
என் காதல் என் துணைவர்க்கு உரைத்தியாகில்*
இது ஒப்பது எமக்கு இன்பம் இல்லை*
நாளும் பைங் கானம் ஈது எல்லாம் உனதே ஆகப்*
பழன மீன் கவர்ந்து உண்ணத் தருவன்*
தந்தால் இங்கே வந்து இனிது இருந்து உன் பெடையும் நீயும்*
இரு நிலத்தில் இனிது இன்பம் எய்தலாமே|
116. திவ்ய ப்ரபந்தம் - 2707 - தலைவி சென்று தேடிய திவ்ய தேசங்கள்
சிறிய திருமடல் - நான்காம் திருமொழி - நான்காம் பாசுரம் (35)
கார் ஆர் மணி நிறக் கண்ணனூர் விண்ணகரம்*
சீர் ஆர் கணபுரம் சேறை திருவழுந்தூர்*
கார் ஆர் குடந்தை கடிகை கடல் மல்லை*
ஏர் ஆர் பொழில் சூழ் இடவெந்தை நீர்மலை*
சீர் ஆரும் மாலிருஞ்சோலை திருமோகூர்*
117. திவ்ய ப்ரபந்தம் - 2759 - மன்மதன் துன்புறுத்துகிறானே!
பெரிய திருமடல் - ஐந்தாம் திருமொழி - ஏழாம் பாசுரம் (47)
பேதையேன் கல் நவிலும் காட்டகத்து ஓர் வல்லிக் கடி மலரின்*
நல் நறு வாசம் மற்று ஆரானும் எய்தாமே*
மன்னும் வறு நிலத்து வாளாங்கு உகுத்தது போல்*
என்னுடைய பெண்மையும் என் நலனும் என் முலையும்*
மன்னும் மலர் மங்கை மைந்தன்* கணபுரத்துப்*
118. திவ்ய ப்ரபந்தம் – 2782 - எனக்குத் திருமால் அருளாவிடில் அவனுடைய இரக்கமிலாச் செயல்களை யாவரிடமும் கூறி மடலூர்வேன்
பெரிய திருமடல் - ஏழாம் திருமொழி - பத்தாம் பாசுரம் (70)
மன்னும் மறை நான்கும் ஆனானை*
புல்லாணித் தென்னன் தமிழை வடமொழியை*
நாங்கூரில் மன்னு மணிமாடக் கோயில் மணாளனை*
நல் நீர்த் தலைச்சங்க நாள் மதியை*
நான் வணங்கும் கண்ணனைக் கண்ணபுரத்தானை*
தென் நறையூர் மன்னு மணிமாடக் கோயில் மணாளனை*
நம்மாழ்வார்
119. திவ்ய ப்ரபந்தம் - 3772 - திருக்கண்ணபுரத்தானைத் தொழுதெழுமின்
திருவாய்மொழி - ஒண்பதாம் பத்து - பத்தாம் திருவாய்மொழி - முதலாம் பாசுரம்
மாலை நண்ணித்* தொழுது எழுமினோ வினை கெட*
காலை மாலை* கமல மலர் இட்டு நீர்*
வேலை மோதும் மதிள் சூழ்* திருக் கண்ணபுரத்து*
ஆலின் மேல் ஆல் அமர்ந்தான்* அடி இணைகளே|
120. திவ்ய ப்ரபந்தம் - 3773 - தொண்டர்களே! திருகண்ணபுரத்தானை மலரிட்டு இறைஞ்சுமின்
திருவாய்மொழி - ஒண்பதாம் பத்து - பத்தாம் திருவாய்மொழி - இரண்டாம் பாசுரம்
கள் அவிழும் மலர் இட்டு* நீர் இறைஞ்சுமின்*
நள்ளி சேரும் வயல் சூழ்* கிடங்கின் புடை*
வெள்ளி ஏய்ந்த மதிள் சூழ்* திருக் கண்ணபுரம்*
உள்ளி நாளும் தொழுது எழுமினோ தொண்டரே|
121. திவ்ய ப்ரபந்தம் - 3774 - கண்ணனை இறைஞ்சினால் துயர் நீங்கும்
திருவாய்மொழி - ஒண்பதாம் பத்து - பத்தாம் திருவாய்மொழி - மூன்றாம் பாசுரம்
தொண்டர் நும் தம்* துயர் போக நீர் ஏகமாய்*
விண்டு வாடா மலர் இட்டு* நீர் இறைஞ்சுமின்*
வண்டு பாடும் பொழில் சூழ்* திருக்கண்ணபுரத்து*
அண்ட வாணன்* அமரர் பெருமானையே|
122. திவ்ய ப்ரபந்தம் - 3775 - கண்ணனை இறைஞ்சிச் சரண் புகுக
திருவாய்மொழி - ஒண்பதாம் பத்து - பத்தாம் திருவாய்மொழி - நான்காம் பாசுரம்
மானை நோக்கி* மடப் பின்னை தன் கேள்வனை*
தேனை வாடா மலர் இட்டு* நீர் இறைஞ்சுமின்*
வானை உந்தும் மதிள் சூழ்* திருக்கண்ணபுரம்*
தான் நயந்த பெருமான்* சரண் ஆகுமே|
123. திவ்ய ப்ரபந்தம் - 3776 - கண்ணனைச் சரணடைந்தால் வைகுந்தம் கிடைக்கும்
திருவாய்மொழி - ஒண்பதாம் பத்து - பத்தாம் திருவாய்மொழி - ஐந்தாம் பாசுரம்
சரணம் ஆகும்* தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்*
மரணம் ஆனால்* வைகுந்தம் கொடுக்கும் பிரான்*
அரண் அமைந்த மதிள் சூழ்* திருக்கண்ணபுரத்து*
தரணியாளன்* தனது அன்பர்க்கு அன்பு ஆகுமே|
124. திவ்ய ப்ரபந்தம் - 3777 - மெய்யார்க்கு மெய்யன் திருக்கண்ணபுரத்தான்
திருவாய்மொழி - ஒண்பதாம் பத்து - பத்தாம் திருவாய்மொழி - ஆறாம் பாசுரம்
அன்பன் ஆகும்* தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்*
செம் பொன் ஆகத்து* அவுணன் உடல் கீண்டவன்*
நன் பொன் ஏய்ந்த மதிள் சூழ்* திருக்கண்ணபுரத்து
அன்பன்* நாளும் தன மெய்யர்க்கு மெய்யனே|
125. திவ்ய ப்ரபந்தம் - 3778 - கண்ணபுரத்து ஐயன் பக்தர்கட்கு அருகிருப்பான்
திருவாய்மொழி - ஒண்பதாம் பத்து - பத்தாம் திருவாய்மொழி - ஏழாம் பாசுரம்
மெய்யன் ஆகும்* விரும்பித் தொழுவார்க்கு எல்லாம்*
பொய்யன் ஆகும்* புறமே தொழுவார்க்கு எல்லாம்*
செய்யில் வாளை உகளும்* திருக்கண்ணபுரத்து*
ஐயன்* ஆகத்து அணைப்பார்கட்கு அணியனே|
126. திவ்ய ப்ரபந்தம் - 3779 - கண்ணபுரத்தானைப் பணிக; பிணியும் பிறவியும் கெடும்
திருவாய்மொழி - ஒண்பதாம் பத்து - பத்தாம் திருவாய்மொழி - எட்டாம் பாசுரம்
அணியன் ஆகும்* தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்*
பிணியும் சாரா* பிறவி கெடுத்து ஆளும்*
மணி பொன் ஏய்ந்த மதிள் சூழ்* திருக்கண்ணரம்*
பணிமின்* நாளும் பரமேட்டி தன் பாதமே|
127. திவ்ய ப்ரபந்தம் - 3780 - திருக்கண்ணபுரத்தானை அடைந்தால் துன்பம் இல்லை
திருவாய்மொழி - ஒண்பதாம் பத்து - பத்தாம் திருவாய்மொழி - ஒண்பதாம் பாசுரம்
பாதம் நாளும்* பணியத் தணியும் பிணி*
ஏதம் சாரா* எனக்கேல் இனி என்குறை?*
வேத நாவர் விரும்பும்* திருக்கண்ணபுரத்து*
ஆதியானை* அடைந்தார்க்கு அல்லல் இல்லையே|
128. திவ்ய ப்ரபந்தம் - 3781 - திருக்கணபுரம் என்றால் துயர் இல்லை
திருவாய்மொழி - ஒண்பதாம் பத்து - பத்தாம் திருவாய்மொழி - பத்தாம் பாசுரம்
இல்லை அல்லல்* எனக்கேல் இனி என் குறை?*
அல்லி மாதர் அமரும்* திருமார்பினன்*
கல்லில் ஏய்ந்த மதிள் சூழ்* திருக்கண்ணபுரம்*
சொல்ல* நாளும் துயர் பாடு சாராவே|
129. திவ்ய ப்ரபந்தம் - 3782 - இவற்றைப் பாடிப் பணிக; பற்று நீங்கும்
திருவாய்மொழி - ஒண்பதாம் பத்து - பத்தாம் திருவாய்மொழி - பதினொன்றாம் பாசுரம்
பாடு சாரா* வினை பற்று அற வேண்டுவீர்*
மாடம் நீடு* குருகூர்ச் சடகோபன்* சொல்
பாடலான தமிழ்* ஆயிரத்துள் இப்பத்தும்*
பாடி ஆடி* பணிமின் அவன் தாள்களே|
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்