||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
கிருஷ்ணருக்கும் ஜாம்பவானுக்கும் இடைப்பட்ட போர்|
தமது தம்பியின் வரவுக்காக சத்ராஜித் வெகு ஆவலாகக் காத்துக் கொண்டு இருந்தார். அவர் தம் மணியைத் திரும்பப் பெற மிகவும் ஆவலாய் இருந்தார். இரவு எப்பொழுது கழியும் என்று வேதனையோடு இருந்தார். பொழுது விடிந்தது, ஆனால் பிரசேனன் வரவில்லை. சத்ராஜித்தின் கவலை மேலும் அதிகரித்தது. சில ஆட்களை அழைத்துக் கொண்டு காட்டுக்குள் நுழைந்தார். நடுக்காட்டில் தம் தம்பியின் உடலைக் கண்டார். அதைக் கண்டதும் வருத்தமும் வேதனையும் கோபமும் கொண்ட சத்ராஜித், "என் தம்பியை யாரோ கொன்று விட்டார்கள், ஸ்யமந்தக மணிக்காகக் கிருஷ்ணர் அவனைக் கொன்று இருந்தாலும் வியப்படைவதற்கு இல்லை" என்றான்.
இந்த அவதூறு மெல்ல உருவமெடுத்து ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பரவி, இறுதியில் கிருஷ்ணரின் காதை எட்டியது. தாம் அந்தக் குற்றத்தைச் செய்யவில்லை என்று நிரூபிக்க வேண்டும் என்று தீர்மானித்தார். தம் நண்பர்கள் சிலரை அழைத்துக் கொண்டு, பிரசேனன் எப்படி இறந்தான் என்று கண்டுப்பிடிக்கக் கிளம்பினர்.
பிரசேனன் கொல்லப்பட்ட இடத்தைக் கூர்ந்து கவனித்ததில் ஒரு சிங்கத்தின் காலடிச் சுவடுகள் தெரிந்தது. அந்தச் சுவடுகளைப் பின்பற்றிச் சென்றதில் ஒரு சிங்கத்தின் உயிரற்ற உடல் தென் பட்டது. அங்கிருந்து ஒரு கரடியின் காலடிகள் எங்கோ செல்வது தெரிந்தது. அதைப் பின்பற்றிச் சென்றதில் ஒரு பெரிய இருண்ட குகை தென்பட்டது.
தம் நண்பர்கள் அதற்குள் நுழையப் பயப்படுவார்கள் என்பது கிருஷ்ணருக்குத் தெரியும். அதனால் அவர்களை வெளியே இருக்கச் சொல்லி விட்டுத் தாம் மட்டும் அந்த இருண்ட குகைக்குள் நுழைந்தார். அந்தக் கரடியும், மணியும் அங்கு இருக்கிறதா என்று அவர் புலன் விசாரணை செய்ய விரும்பினர். அங்கு ஒரு கரடிக் குட்டி விளையாடிக் கொண்டு இருந்தது. அதன் கையில் அந்த ஸ்யமந்தக மணி இருந்தது. மணியை எடுப்பதற்காகக் கிருஷ்ணர் அந்தக் குட்டியின் அருகில் சென்றார். யாரோ மனிதன் வருவதைக் கண்டு தாய்க் கரடி, பயந்துக் கத்தியது. இதை கேட்டு, ஜாம்பவான் மிக்க கோபத்தோடு அங்கே வந்தார். தன்னுடைய தெய்வமான ஸ்ரீராமபிரான் தான் இப்பொழுது கிருஷ்ணர் வடிவத்தில் வந்திருக்கிறார் என்பதை அறியாத ஜாம்பவான், வந்தவர் யாரோ சாதாரணமான மனிதர் என்று நினைத்தார். தம்மோடு சண்டை போடும் படி கிருஷ்ணருக்குச் சவால் விடுத்தார்.
கிருஷ்ணருக்கும் ஜம்பவானுக்கும் மிகவும் கடுமையான சண்டை இருபத்தி எட்டு நாட்கள் நடந்தன. முதலில் ஒருவரை ஒருவர் ஆயுதங்களால் தாக்கினர், பிறகு கற்களால் தாக்கினார்கள். பிறகு மரங்களால் தாக்கினார்கள், அடுத்து முஷ்டிகளால் ஒருவரை ஒருவர் தாக்கினார்கள். அதனால் ஏற்பட்ட சப்தம் இடி முழக்கம் போல ஒலித்தது.
ஜாம்பவான் தான் அன்று உலகிலேயே மிகப் பெரிய பலசாலி. ஆனாலும், கிருஷ்ணருடைய குத்துகளால் அவருடைய எல்லா அவயவங்களும் தளர்ந்தன. தம்முடன் போர் செய்பவர் பகவானாகத் தான் இருக்க வேண்டும் என்று ஜாம்பவான் உணர ஆரம்பித்தார். தம்முடைய தெய்வமான ஸ்ரீராமர் தாம் இப்பொழுது கிருஷ்ணராக வந்துள்ளார் என்று அறிந்தார். உடனே கிருஷ்ணரின் கால்களில் விழுந்து, "பகவானே, தாங்கள் யார் என்பதை இப்பொழுது நான் தெரிந்து கொண்டு விட்டேன். தாங்கள் விஷ்ணுவின் அவதாரம், நான் வணங்கும் ராமச்சந்திர பிரபுவே தான் தாங்கள்" என்று பூரித்தார்.
கிருஷ்ணர் புன்முறுவல் பூத்தார். தாமரைப் போன்ற தம் உள்ளங்கைகளால் ஜாம்பவனின் உடல் முழுவதும் தடவினார். உடனே ஜாம்பவானின் களைப்பு எல்லாம் பறந்தது. கிருஷ்ணர் தாமுடைய கம்பீரமான குரலில், "கரடியரசே, இந்த ஸ்யமந்தக மணி காரணமாக எனக்கு ஏற்பட்ட பழியைப் போக்கிக் கொள்ளுவதற்காகத் தான் நான் இங்கு வந்தேன்" என்று சொன்னார். ஜாம்பவான் நிலைமையைப் புரிந்து கொண்டார். தம் தெய்வத்திற்குத் தம்மால் உதவ முடிகிறதே என்று மகிழ்ச்சி அடைந்தார். அவர் ஸ்யமந்தக மணியை கிருஷ்ணருக்குக் கொடுத்ததோடு, தம் பெண் ஜாம்பவதியையும் அவருக்குக் கொடுத்தார். கிருஷ்ணர் ஜாம்பவதியை மணந்தார்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment