About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Sunday, 17 December 2023

திவ்ய ப்ரபந்தம் - 65 - பெரியாழ்வார் திருமொழி - 1.5.2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் - 65 - கோளரியே! கோவர்த்தன மலையை குடையாக பிடித்தவனே!
பெரியாழ்வார் திருமொழி 
முதலாம் பத்து - ஐந்தாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்

கோளரியின் உருவங் கொண்டு அவுணன் உடலம்* 
குருதி குழம்பியெழ கூருகிரால் குடைவாய்!* 
மீள அவன் மகனை மெய்ம்மை கொளக் கருதி* 
மேலை அமரர் பதி மிக்கு வெகுண்டு வரக்*
காள நன் மேகமவை கல்லொடு கால் பொழியக்* 
கருதி வரை குடையாக் காலிகள் காப்பவனே!* 
ஆள! எனக்கொரு கால் ஆடுக செங்கீரை* 
ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே|

  • கோள் - வலிமையை உடைய
  • அரியின் - சிங்கத்தின்
  • உருவம் கொண்டு - உருவத்தை எடுத்துக் கொண்டு
  • அவுணன் - ஹிரண்யாஸுரனுடைய
  • உடலம் - சரீரத்தில்
  • குருதி - ரத்தமானது
  • குழம்பி எழ - கிளரி எழும் படியாகவும்
  • மீள - மறுபடியும்
  • அவன் - அவ்வஸுரனானவன்
  • மகனை - தன் மகனான ப்ரஹ்லாதனை
  • மெய்ம்மை - ஸத்யவாதி
  • கொள கருதி - என நினைக்கச் செய்யக் கருதி
  • கூர் உகிரால் - கூர்மையான நகங்களாலே
  • குடைவாய் - அவ்வசுரன் உடலைக் கிழித்து அருளியவனே!
  • மேலை - மேன்மை பொருந்திய
  • அமரர் பதி - தேவேந்திரன்
  • மிக்கு வெகுண்டு வர - மிகவும் கோபித்து வர அதனால்
  • காள - கறுத்த
  • நன் - சிறந்த
  • மேகம் அவை - மேகங்களானவை
  • கல்லொடு - கல்லோடு கூடின
  • கார் பொழிய - கட்டி மழையைப் பொழிய
  • கருதி வரை - முன்னொரு காலத்தில் செய்ததைப் போல்
  • குடையா - அந்த கோவர்த்தந கிரியை குடையாகக் கொண்டு
  • காலிகள் - பசுக்களை
  • காப்பவனே - ரக்ஷித்தருளினவனே!
  • ஆள - போர் செய்ய வல்லமை கொண்ட காளையைப் போன்றவனே!
  • எனக்கு - எனக்காக
  • ஒருகால் - ஒரு முறை
  • செங்கீரை ஆடுக - செங்கீரை ஆடியருள வேணும்
  • ஆயர்கள் - இடையர்களுக்காக 
  • போர் ஏறே - போர் செய்ய, ரிஷபம் போலே நின்ற கண்ணனே! 
  • ஆடுக ஆடுகவே - ஆடிக் காட்டுவாயாக

உன் பக்தனும், இரணியனின் மைந்தனுமான பிரகலாதனின் வார்த்தைகளை மெய்ப்பிக்கவும், அவனை ஹிரண்யாசுரனிடம் இருந்து மீட்கவும், வலிமையான ஆண் சிங்கத்தின் உருவமெடுத்து வந்து, தன் கூரிய நகங்களாலேயே, இரத்தம் பொங்கி எழுமளவுக்கு அசுரனான இரணியனின் உடலைக் கிழித்தாய்! விண்ணுலகத்தில் வாழ்கின்ற தேவர்களின் தலைவனான இந்திரன், தனக்கு பூஜை அளிக்காததால் கோபித்து கொண்டு கருத்த மேகங்களை அனுப்பி இடயர்களை விடாத கல் மழை பொழிய வைத்து துன்புறுத்திய போது, ஆநிரைகளையும், ஆயர்களையும் காப்பதற்காக கோவர்த்தன மலையையே திருக்கைகளால் தூக்கி ஒரு குடையாகப் பிடித்தவனே! என் தலைவனே! உன் அன்னைக்கு ஒரு முறை செங்கீரை ஆடிக் காட்டுவாயாக. ஆயர்கள் குலத்திலுதித்த வலிமை மிக்க காளையைப் போன்றவனே செங்கீரை ஆடிவிடு என்கிறாள் யசோதை!

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment