About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Sunday, 17 December 2023

திவ்ய ப்ரபந்தம் - 66 - பெரியாழ்வார் திருமொழி - 1.5.3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் - 66 - திரிவிக்கிரமனே! யானை, காளைகளை அடக்கியவனே! 
பெரியாழ்வார் திருமொழி 
முதலாம் பத்து - ஐந்தாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்

நம்முடை நாயகனே! நான்மறையின் பொருளே!* 
நாவியுள் நற்கமல நான்முகனுக்கு ஒருகால்* 
தம்மனை ஆனவனே! தரணி தலம் முழுதும்* 
தாரகையின் உலகும் தடவி அதன் புறமும்* 
விம்ம வளர்ந்தவனே! வேழமும் ஏழ் விடையும்* 
விரவிய வேலை தனுள் வென்று வருமவனே!* 
அம்ம! எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை* 
ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே|

  • நம்முடை - எங்களுக்கு
  • நாயகனே - நாதனானவனே!
  • நால் மறையின் - நான்கு வேதங்களுக்கும்
  • பொருளே - பொருளாய் இருப்பவனே!
  • நாபியுள் - திருநாபியில் 
  • நல் கமலம் - நல்ல தாமரை மலரில் பிறந்த
  • நான்முகனுக்கு - பிரம்மாவுக்கு
  • ஒரு கால் - அவன் வேதத்தைப் பறி கொடுத்துத் திகைத்த காலத்தில்
  • தம்மனை ஆனவனே - தாய் போலே பரிந்து அருளினவனே!
  • தரணி தலம் முழுதும் - பூலோகம் முழுவதும்
  • தாரகையின் உலகும் - நக்ஷத்திர லோகம் முழுவதும்
  • அதன்புறமும் - அதற்குப் புறம்பாயுள்ள தேசமும்
  • தடவி - திருவடிகளால் ஸ்பர்சித்து
  • விம்ம - நெடுவாய் (பெரியவனாய்)
  • வளர்ந்தவனே - த்ரிவிக்ரமனாய் வளர்ந்தவனே!
  • வேழமும் - குவலயாபீடம் என்ற யானையும் 
  • ஏழ்விடையும் - ஏழு ரிஷபங்களும்
  • விரவிய - உன்னை ஹிம்ஸிப்பதற்காக தாக்க
  • வேலைதனுள் - வந்த சமயத்திலே
  • வென்று - அவற்றை ஜெயித்து 
  • வருமவனே - வந்தவனே!
  • அம்ம - ஸ்வாமியானவனே!
  • எனக்கு - எனக்காக
  • ஒருகால் - ஒரு முறை
  • செங்கீரை ஆடுக - செங்கீரை ஆடியருள வேணும்
  • ஆயர்கள் - இடையர்களுக்காக 
  • போர் ஏறே - போர் செய்ய, ரிஷபம் போலே நின்ற கண்ணனே! 
  • ஆடுக ஆடுகவே - ஆடிக் காட்டுவாயாக

எங்கள் ஆயர் குலத்தரசே! எங்களுக்குத் தலைவனே, முழுமுதற் கடவுளே! வேதங்கள் நான்கின் மெய்ப் பொருளாய் இருப்பவனே!, உன்னுடைய திருநாபிக் கமலத்தில் இருந்து உதித்த பிரம்மா, மது கைடபர்களிடம் வேதங்களை இழந்து பெரும் துயரத்தில் ஆழ்ந்து இருந்த போது, வேதங்களை மீட்டு பிரம்மனிடமே ஒப்படைத்து பிரமனுக்கு தாய் போல் அருளினவனே! மண்ணை ஓர் அடியாலும், விண்ணுலகையும், நக்ஷத்திர லோகங்களையும் இரண்டாம் அடியாலும் அளந்து அதற்கும் அப்பாற்ப் பட்டு த்ரிவிக்ரமனாய் வளர்ந்த வாமனனே!, மதம் கொண்ட குவலயாபீடம் என்கிற யானையையும், கூரிய கொம்புகளைக் கொண்ட ஏழு காளைகளையும் போட்டியில் எதிர் கொண்டு, அவற்றை எல்லாம் எளிதில் அடக்கி, என்றும் வெற்றி வாகை சூடுபவனே! என் செல்லமே, ஆயர்கள் குலத்தில் உதித்த, போர் செய்ய வல்ல காளையைப் போன்ற வலிமை      உடையவனே! பசுக்களின் ரக்ஷகனே! என் கூற்றுக்கு செவி சாய்ப்பாயாக! எனக்காக ஒரு முறை, ஒரே ஒரு முறை செங்கீரை ஆடிக் காட்டுவாயாக! என்கிறாள் யசோதை!  

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment