||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
- அம்சம் - பூமாதேவி
- அவதார ஸ்தலம் - திருவில்லிபுத்தூர் பெரியாழ்வார் நந்தவனத்தில் திருத்துழாய் மாடத்தின் அருகில் சுயம்பு
- காலம் - கி.பி. 9ம் நூற்றாண்டு
- வருடம் - நள
- மாதம் - ஆடி
- திரு நக்ஷத்திரம் - பூரம்
- திதி - சுக்ல பக்ஷம் சதுர்த்தசி - கலி பிறந்து 98 ம் வருஷம்
- கிழமை - செவ்வாய்
- ஆசார்யன் - பெரியாழ்வார்
- பரமபத ப்ராப்தி ஸ்தலம் - திருவரங்கம்
- அருளிச் செய்தவை - 1. திருப்பாவை - முதலாம் ஆயிரம் - 474-503 (30 பாசுரங்கள்), 2. நாச்சியார் திருமொழி - முதலாம் ஆயிரம் - 504-646 (143 பாசுரங்கள்)
- பாசுரங்கள் - 173
----------
மங்களாஸாஸநம் செய்த திவ்ய தேச
ஸ்தலங்கள் - 11; பாசுரங்கள் - 71
- திருவரங்கம் 11 பாசுரங்கள்
- திருக்குடந்தை 1 பாசுரம்
- திருக்கண்ணபுரம் 1 பாசுரம்
- திருவில்லிபுத்தூர் 1 பாசுரம்
- திருமாலிருஞ் சோலை 11 பாசுரங்கள்
- திரு வடமதுரா 17 பாசுரங்கள்
- திருவாய்ப்பாடி 5 பாசுரங்கள்
- திரு துவாரகா 4 பாசுரங்கள்
- திருவேங்கடம் 16 பாசுரங்கள்
- திருப்பாற் கடல் 3 பாசுரங்கள்
- திரு பரமப்பதம் 1 பாசுரம்
----------
பிற பெயர்கள்
கோதை, சூடி கொடுத்த நாச்சியார்
----------
கோதை நாச்சியார் என்று கொண்டாடப்படுபவள் ஆண்டாள். பெரியாழ்வாருக்குப் பெண்பிள்ளையாக ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்தவள். பூமிப் பிராட்டியின் அவதாரம். எம்பெருமானிடத்து இயற்கையான அன்பு கொண்டவள். பத்தினி என்ற உறவை உடையவள். ஆண்டாள் நாச்சியாரும் க்ருஷ்ணாவதாரத்தில் மிகவும் ஊன்றியவள். அனைவருடைய உஜ்ஜீவனத்திற்காகவும் இந்த உலகத்தில் அவதரித்து எல்லோருக்கும் நன்மையை தேடிக் கொடுத்தவள். இந்த உலகத்தில் உள்ள சேதநர்கள் அனைவரும் எம்பெருமானுடைய திருநாமங்களைப் பாடி உஜ்ஜீவனத்தை அடைய வேண்டுமென்று திருப்பாவையை அருளிச் செய்தவள். “பிஞ்சாய்ப் பழுத்தாளை, ஆண்டாளை நாளும் வழுத்தாய் மனமே மகிழ்ந்து” என்று மணவாள மாமுநிகள் உபதேச ரத்தின மாலையில் கொண்டாடுகிறார். “சூடிக்கொடுத்த சுடர்க்கொடி” என்றும் பெயர் பெற்றவள். பெரியாழ்வார் தொடுத்து வைத்திருந்த மாலையைத் தான் சூடி எம்பெருமானுக்கு அதற்குப் பிறகு கொடுத்தவள்.
வேதமனைத்துக்கும் வித்தாக விளங்கும் திருப்பாவையில் 'ஏல் ஓர் எம்பாவாய்' என்ற சொற்றொடரால், "தோழி! இதன் பொருளைத் தெரிந்து கொண்டு ஏற்றுக்கொள்" என்று ஆண்டாள் அறிவுறுத்துகிறாள். திருப்பாவையில் அன்றாட வாழ்விற்குத் தேவையான எண் குறிப்பு, நாள் குறிப்பு, திசை குறிப்பு போன்றவற்றைக் காட்டித் தருவதோடு அல்லாமல் இந்த ஆத்மா உய்வடையும் பொருட்டு பலபல உபாயங்களையும் காட்டித் தருகிறாள். வைணவ லக்ஷணத்தின் குறிப்பு, ஸம்ப்ராயத்தில் அனுஷ்டிக்கும் பஞ்ச சம்ஸ்காரம் பற்றிய குறிப்பு, எம்பெருமானின் தசாவதாரக் குறிப்பு என்று அநேக விஷயங்கள் கொட்டி கிடக்கும் ஒரு பொக்கிஷமாக திகழ்கிறது. மேலும் நாம் முக்கியமாக அறிய வேண்டிய அர்த்த பஞ்சகத்தின் பொருள், ஸம்பிரதாய விசேஷ அர்த்தங்கள், ரஹஸ்ய அர்த்தங்கள் என்று ஸகல உபநிஷத்துக்களின் ஸாரமாக மிளிர்கிறது. நாம் உள்ளவரையும் மார்கழி மாத உபன்யாசங்களில் புதுப்புது அர்த்தங்களைக் கேட்டு இன்புறலாம்.
நாச்சியார் திருமொழியில் மன்மதனிடம், கண்ணன் தன்னை வந்தடையும்படி நீயே செய்ய வேண்டும் என்று வேண்டுகிறாள். அனைத்து கோபியர்களும் சேர்ந்து கண்ணனை தங்கள் மனக்கோயிலில் குடியேறும்படி வேண்டுகின்றனர். கண்ணன் அவர்களுடன் விளையாடுதல், அவன் தங்களுடன் கூடுவானா என்று குறிப்பு பார்த்தல், அவன் தன்னை கூடும்படி குயிலை கூவுமாறு வேண்டுதல் என்று பலபடி ஏங்க, கண்ணன் தன்னை வந்து மணப்பதாக கனவு கண்டு தோழிகளிடம் சொல்கிறாள் ஆண்டாள்.
தான் கண்டது கனவாகி விட்டதே! என்று கலங்கி அவன் திருக்கையிலிருக்கும் சங்கினிடம் அவன் திருப்பவளச் செவ்வாய் இருக்கும் தித்திப்பை சொல்லும்படி கேட்கிறாள். அவன் பிரிவை தாங்க மாட்டாமல் மேகத்தை தூது விடுகிறாள். பார்க்கும் எல்லா வஸ்துக்களிடமும் முறையிட்டு, தான் திருவரங்கனிடம் கொண்டுள்ள தீராக் காதலை தெரியப்படுத்துகிறாள். அவன் அருள் புரியாததால் அவன் இருக்கும் இடத்தில் தன்னைச் சேர்த்து விடும்படி வேண்டுகிறாள். எம்பெருமான் ஸம்பந்தப்பட்ட வஸ்துக்களை கொண்டு தன் தாகத்தை தீர்க்கும் படி வேண்டுகிறாள். கடைசியாக அவனுடைய பெருமைகளை எடுத்துக் கூறி இப்படிப்பட்டவனை கண்டீரோ கண்டீரோ எனக் கேட்க, ஆம் பிருந்தாவனத்தில் கண்டோம்! என்று பதில் கிடைக்கப் பெற்று பிரபந்தத்தை முடிக்கிறாள்.
----------
தனியன் 1
கர்க்கடே பூர்வ பல்குந்யாம்
துளஸீ காந நோத் பவாம்|
பாண்ட்ய விஸ்வம் பராம் கோதாம்
வந்தே ஸ்ரீ ரெங்க நாயகீம்||
தனியன் 2
நீளா துங்க³ ஸ்தந கி³ரி தடீ*
ஸுப்தம் உத்³போ³த்⁴ய க்ருக்ஷ்ணம்*|
பாரார்த்²யம் ஸ்வம் ஸ்²ருதி ஸ²த ஸி²ரஸ்*
ஸித்³த⁴ம் அத்⁴யா பயந்தீ*||
ஸ்வோச் சி²ஷ்டாயாம் ஸ்ரஜி நிக³ளிதம்*
யா ப³லாத் க்ருத்ய பு⁴ங்க்தே*|
கோ³தா³ தஸ்யை நம இத³ம் இத³ம்*
பூ⁴ய ஏ வாஸ்து பூ⁴யஹ||
தனியனின் விளக்கம்
நீளா தேவியின் திருமார்பில் தலை வைத்துறங்கும் கண்ணன் எம்பெருமானை, பாரதந்தர்யம் உணர்த்தும் வகையில் துயிலுணர்த்துபவள், எம்பெருமானுக்கே தான் சூடிக் களைந்த மாலையை அவன் விரும்பியபடி சமர்ப்பித்தவள் திருவடிகளை மீண்டும் மீண்டும் தொழுகிறேன்.
வாழி திருநாமம்
1. திருவாடிப்பூரத்து செகத்து உதித்தாள் வாழியே|
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே|
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளை வாழியே|
பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே|
ஒரு நூற்று நாற்பத்து மூன்று உரைத்தாள் வாழியே|
உயர் அரங்கற்கே கண்ணி உகந்து அளித்தாள் வாழியே|
மருவாரும் திருமல்லி வளநாடி வாழியே|
வண்புதுவை நகர்க் கோதை மலர்ப் பதங்கள் வாழியே||
வேதப்பிரான் பட்டர் அருளிச் செய்தவை
2. கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழுமூர்
சோதி மணி மாடம் தோன்றும் ஊர்
நீதியால் நல்ல பத்தர் வாழும் ஊர் நான்மறைகள் ஓதுமூர்
வில்லிபுத்தூர் வேதக் கோனூர்|
3. பாதகங்கள் தீர்க்கும் பரமன் அடிகாட்டும்
வேதம் அனைத்துக்கும் வித்தாகும்
கோதை தமிழ் ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை
வையம் சுமப்பது வம்பு|
4. கமலமுடன் வில்லிபுத்தூர் விளங்க வந்தாள் வாழியே|
காரார் நற்றுழாய்க் கானத்து அவதரித்தாள் வாழியே|
விமலமாம் திருவாடிப் பூரத்தாள் வாழியே|
விட்டு சித்தன் வளர்தெடுத்த இளங்கிழையாள் வாழியே|
அமலத் திருப்பாவை ஐயாறு அளித்து அருள்வாள் வாழியே|
ஆக நூற்றி எழுபத்தி மூன்று உரைத்தாள் வாழியே|
அமுதனாம் அரங்கனுக்கே மாலை இட்டாள் வாழியே|
ஆண்டாள் தம் இணை அடிகள் அநவரதம் வாழியே||
திருநாள் பாட்டு
1. இன்றோ திருவாடிப்பூரம்* எமக்காக அன்றோ*
இங்கு ஆண்டாள் அவதரித்தாள்*
குன்றாத வாழ்வாக* வைகுந்த வான் போகம் தன்னை இகழ்ந்து*
ஆழ்வார் திருமகளாராய்|
2. பெரியாழ்வார் பெண் பிள்ளையாய்* ஆண்டாள் பிறந்த*
திருவாடிப் பூரத்தின் சீர்மை*
ஒரு நாளைக்கு உண்டோ* மனமே! உணர்ந்துப் பார்*
ஆண்டாளுக்கு உண்டாகில் ஒப்பு இதற்கும் உண்டு|
3. அஞ்சுக் குடிக்கொரு சந்ததியாய்* ஆழ்வார்கள் தன் செயலை*
விஞ்சி நிற்கும் தன்மையளாய்*
பிஞ்சாய்ப் பழுத்தாளை ஆண்டாளைப்* பத்தியுடன் நாளும்*
வழுத்தாய் மனமே மகிழ்ந்து|
மங்கள ஸ்லோகம்
ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தந ஹேதவே|
நந்த நந்தந ஸுந்தர்யை கோதாயாஇ நித்ய மங்களம்||
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்