About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Sunday, 16 July 2023

8. பெரியாழ்வார்

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

  • அம்சம் - கருடாழ்வார்
  • அவதார ஸ்தலம் - திருவில்லிபுத்தூர்
  • காலம் - கி.பி. 9ம் நூற்றாண்டு
  • வருடம் - குரோதன - கலி பிறந்து 47 ம் வருஷம்
  • மாதம் - ஆனி
  • திரு நக்ஷத்திரம் - ஸ்வாதி
  • திதி - சுக்ல பக்ஷம் ஏகாதசி
  • கிழமை - ஞாயிறு
  • தந்தை - முகுந்தர்
  • தாய் - பதுமவல்லி
  • ஆசார்யன் - ஸேனை முதலியார்
  • பரமபத ப்ராப்தி ஸ்தலம் - திருமாலிருஞ்சோலை
  • அருளிச் செய்தவை -                                                                                                  1. திருப்பல்லாண்டு - முதலாம் ஆயிரம் - 1-12 (12 பாசுரங்கள்),                  2. பெரியாழ்வார் திருமொழி - முதலாம் ஆயிரம் - 13-473 (461 பாசுரங்கள்)
  • பாசுரங்கள் - 473

----------
மங்களாஸாஸநம் செய்த திவ்ய தேச 
ஸ்தலங்கள் - 19; பாசுரங்கள் - 179

  • திருவரங்கம்              37 பாசுரங்கள்
  • திருவெள்ளறை      11 பாசுரங்கள்
  • திருப்பேர்நகர்              2 பாசுரங்கள்
  • திருக்குடந்தை              3 பாசுரங்கள்
  • திருக்கண்ணபுரம்      1 பாசுரம்
  • திருக்குறுங்குடி      1 பாசுரம்
  • திருவில்லிபுத்தூர்      1 பாசுரம்
  • திருமாலிருஞ் சோலை      34 பாசுரங்கள்
  • திருக்கோஷ்டியூர்      22 பாசுரங்கள்
  • திரு அயோத்தி               6 பாசுரங்கள்
  • திருக்கண்டமெனும் கடிநகர் 11 பாசுரங்கள்
  • திருவதரியாஷ்ரமம்       1 பாசுரம்
  • திருசாளக்கிராமம்               2 பாசுரங்கள்
  • திரு வடமதுரா               16 பாசுரங்கள்
  • திருவாய்ப்பாடி       10 பாசுரங்கள்
  • திரு துவாரகா               5 பாசுரங்கள்
  • திருவேங்கடம்               7 பாசுரங்கள்
  • திருப்பாற் கடல்       5 பாசுரங்கள்
  • திரு பரமப்பதம்       4 பாசுரங்கள்

----------
பிற பெயர்கள்
விஷ்ணுசித்தர், பட்ட நாதன், பட்டர் பிரான், ஸ்ரீ வில்லிபுத்தூரார், ஸ்ரீரங்கநாத ஸ்வசூரர் 
----------
எம்பெருமானுடைய நியமனத்தின் பேரில் பாண்டியன் சபையில் பரதத்துவ நிர்ணயம் செய்யவும் பகவான் ப்ரீதி மேலிட்டு தன் பரிவாரங்களுடன் ஆகாய மார்க்கமாக வந்து காட்சி கொடுக்க, நித்யவிபூதி நாதனின் திவ்ய மங்கள திருமேனி அழகில் ஸம்சாரிகளின் திருஷ்டி பட்டு, அவனுக்கு என்ன தீங்கு நேருமோ! என்று கலங்கி பொங்கும் பரிவுடன் பகவானுக்கு காப்பாக திருப்பல்லாண்டு பாடுகிறார். தான் மங்களாசாஸனம் செய்யும் பொழுது பகவானை அடைய விரும்பும் அனைத்து தரப்பு மக்களையும் பல்லாண்டு பாட அழைக்கிறார்.

ஸ்ரீக்ருஷ்ணன் அவதரித்த காலந்தொட்டு அக்குழந்தைக்கு உண்டான பல பல அபாயங்கள் காரணமாக அவனிடமே மனம் ஈடுபட, தானே யசோதையாக மாறி அனுதினமும் அவனது பால லீலைகளை அனுபவித்து பாசுரம் பாடுகிறார். அவனது குழலோசைக்கு தேவ, மனுஷ்ய, திர்யக், ஸ்தாவரங்கள் அனைத்தும் மயங்குவதைக் கண்டு நெகிழ்கிறார். ஸ்ரீக்ருஷ்ணாநுபவத்துடன் ஸ்ரீராமபிரானையும் அனுபவிக்கும் விருப்பத்துடன் சிறிய திருவடி அசோகவனத்தில் ஸீதாபிராட்டியைக் கண்டு அடையாள மோதிரத்தை கொடுத்து விண்ணப்பம் செய்த அடையாளங்களை அனுபவிக்கிறார்.

இந்த சரீரத்தை விட்டு ஆத்மா கிளம்பும் சமயம் வாதம், பித்தம் போன்றவை துன்புறுத்தும் பொழுது பகவானே! உன்னை நினைக்க மாட்டேன், அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் என்று பகவான் திருவாய் மலர்ந்தருளிய வராஹ சரம ஸ்லோகத்தின்படி செய்து காட்டுகிறார்.

எம்பெருமானைப் பார்த்து நன்றாக இருக்க வேண்டும் என்று மிகுந்த அன்புடன் / மிகுந்த பரிவுடன் வாழ்த்தியவர். மற்றைய ஆழ்வார்களுக்கும் பெரியாழ்வாருக்கும் ஒரு பெரிய வித்தியாசம் என்னவென்றால் ஏனைய ஆழ்வார்கள் எம்பெருமானை பார்க்கும் பொழுது ‘எனக்கு இந்த சம்சாரம் மிகவும் சிரமமாக இருக்கிறது, என்னை இங்கிருந்து விடுவித்து மோட்சத்துக்கு அழைத்துக் கொண்டு போ’ என்று ப்ரார்த்திப்பார்கள். ஆனால் பெரியாழ்வாரோ எம்பெருமான் எதிரே வந்த பொழுது ‘இந்த சம்சாரத்தில் நீ வந்து விட்டாயே! உனக்கு ஏதாவது கேடு வந்து விடப்போகிறது!’ என்று பயந்தவர். அவர் எம்பெருமானுடைய பரத்வத்தை நிர்ணயம் செய்து இருந்தாலும் அந்த சமயத்தில் எம்பெருமானுடைய ஸௌகுமார்யத்தை மனதில் கொண்டு, கண்கள் கொண்டு காண முடியாத அழகு / மென்மை போன்ற குணங்கள் கொண்டவன்; இந்த உலகத்தில் உதித்திருக்கிறானே! எவ்வளவு ஆபத்துக்கள் நிறைந்த உலகமிது! என்று பயந்து எம்பெருமான் நன்றாக இருக்கவேண்டும் என்று மங்களாசாசனம் செய்தவர்.
----------
தனியன்
கு³ருமுக²ம் அநதீ⁴த்ய 
ப்ராஹ வே³தாந் அஸே²ஷாந்* 
நரபதி பரிக்லுப்தம் 
ஸு²ல்கம் ஆதா³து காம:*
ஸ்²வஸு²ரம் அமர வந்த்³யம் 
ரங்க³ நாத²ஸ்ய ஸாக்ஷாத்* 
த்³விஜ குல திலகம் தம் 
விஷ்ணு சித்தம் நமாமி|

தனியனின் விளக்கம்
ஒரு குருவிடமும் பயிலாது எம்பெருமான் க்ருபையினாலேயே அனைத்து வேதங்களையும் அறிந்து வேத சாரங்களை சொல்லிப் பரத்வ ஸ்தாபநம் பண்ணிய அந்தணர் தலைவர், ஆண்டாளின் தமப்பனார், திருவரங்க நாதனுக்கே மாமனார் ஆகிய பெரியாழ்வாரை அடி பணிகிறேன்.

வாழி திருநாமம்
நல்ல திருப்பல்லாண்டு நான்மூன்றோன் வாழியே|
நானூற்றி அறுபத்தி ஒன்றும் நமக்கு உரைத்தான் வாழியே|
சொல்ல அரிய ஆனி தனில் சோதி வந்தான் வாழியே|
தொடை சூடிக் கொடுத்தாள் தன் தொழும் அப்பன் வாழியே|
செல்வ நம்பி தனைப் போலச் சிறப்பு உற்றான் வாழியே|
சென்று கிழி அறுத்து மால் தெய்வம் என்றான் வாழியே|
வில்லிபுத்தூர் நகரத்தை விளங்க வைத்தான் வாழியே|
வேதியர் கோன் பட்டர்பிரான் மேதினியில் வாழியே||

திருநாள் பாட்டு
1. இன்றைப் பெருமை அறிந்திலையோ* ஏழை நெஞ்சே!*
இன்றைக்கென் ஏற்றமெனில் உரைக்கேன்*
நன்றி புனை பல்லாண்டு பாடிய* 
நம் பட்டர்பிரான் வந்துதித்த* நல்லானியில் சோதி நாள்|

2. மாநிலத்தில் முன்னம்* பெரியாழ்வார் வந்துதித்த*
ஆனி தன்னில் சோதி நாள் என்றால் ஆதரிக்கும்* 
ஞானியருக்கு ஒப்பொருவர் இலை* 
இவ்வுலகு தனில் என்று நெஞ்சே* எப்பொழுதும் சிந்தித்திரு|

3. மங்களாசாசனத்தில்* மற்றுள்ள ஆழ்வார்கள்*
தங்கள் ஆர்வத்தளவு தானன்றி* பொங்கும் பரிவாலே* 
வில்லிபுத்தூர் பட்டர்பிரான் பெற்றான்*
பெரியாழ்வார் என்னும் பெயர்|

4. கோதிலவாம் ஆழ்வார்கள்* கூறு கலைக்கெல்லாம்*
ஆதி திருப்பல்லாண்டு ஆனதுவும்* 
வேதத்துக்கு ஓம் என்னும் அது போல்* 
உள்ளதுக்கெல்லாம் சுருக்காய்த்* தான் மங்களம் ஆதலால்|

5. உண்டோ திருப்பல்லாண்டுக்கு* ஒப்பதோர் கலை தான்*
உண்டோ பெரியாழ்வாருக்கு ஒப்பொருவர்?* 
தண்டமிழ் நூல் செய்தருளும் ஆழ்வார்கள் தம்மில்* 
அவர் செய்கலையில்* பைதல் நெஞ்சே நீ உணர்ந்து பார்|

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment