About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Sunday, 16 July 2023

7. குலசேகர ஆழ்வார்

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

  • அம்சம் - கௌஸ்துபம்
  • அவதார ஸ்தலம் - திருவஞ்சிக்களம்
  • காலம் - கி.பி. 8ம் நூற்றாண்டு
  • வருடம் - பராபவ - கலி பிறந்த 28ம் வருஷம்
  • மாதம் - மாசி
  • திரு நக்ஷத்திரம் - புனர்பூசம்
  • திதி - சுக்ல பக்ஷம் துவாதசி
  • கிழமை - வியாழன்
  • ஆசார்யன்ஸேனை முதலியார்
  • பரமபத ப்ராப்தி ஸ்தலம் - திருநெல்வேலி  அம்பாசமுத்திரம் அருகிலுள்ள மன்னார் கோயில்
  • அருளிச் செய்தவை - 1. பெருமாள் திருமொழி - முதலாம் ஆயிரம் - 647-751
  • பாசுரங்கள் - 105

----------
மங்களாஸாஸநம் செய்த திவ்ய தேச 
ஸ்தலங்கள் - 9; பாசுரங்கள் - 82

  • திருவரங்கம்         31 பாசுரங்கள்
  • திருக்கோழி 1 பாசுரம்
  • திருக்கண்ணபுரம் 11 பாசுரங்கள்
  • திருவாலி திருநகரி 1 பாசுரம்
  • திருச்சித்திரகூடம் 11 பாசுரங்கள்
  • திருவித்துவக்கோடு 10 பாசுரங்கள்
  • திரு அயோத்தி         4 பாசுரங்கள்
  • திருவேங்கடம்         11 பாசுரங்கள்
  • திருப்பாற் கடல் 2 பாசுரங்கள்

-----------
பிற பெயர்கள்
கொள்ளிக் காவலன், கூடல் நாயகன், கோயிக்கோன், வில்லவர் கோன், சேரலர் கோன்
----------
ஸ்ரீராமாவதாரத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். எப்பொழுதும் ஸ்ரீராமாயணத்தைக் கேட்டுக் கொண்டே இருப்பவர். பெரியோர்களை விட்டு ஸ்ரீராமாயணத்தை உபன்யாசம் சொல்லச் சொல்லி அதைக் கேட்டு அனுபவித்துக் கொண்டே இருக்கக் கூடியவர். க்ஷத்ரிய வர்ணத்தில் பிறந்தவர். பெரிய சக்ரவர்த்தியாக இருந்த போதிலும் தன்னை ஒரு அடியவன் ஆகவே நினைத்துக்கொண்டு, அதையே ஒரு பெரிய பாக்யமாகக் கருதியவர். குலசேகராழ்வார் ஸ்ரீரங்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். தினமும் ஸ்ரீரங்கத்திற்குப் போக வேண்டும் என்று ஆசைப்பட்டு கொண்டிருந்தவர். அடியார்கள் இடத்தில் மிகுந்த பக்தி மற்றும் நம்பிக்கை கொண்டவர். கொல்லி காவலனான குலசேகர ஆழ்வார் தான் ராஜ்யத்தை விட்டு பூலோக வைகுண்டமாம் திருவரங்கம் சென்று எம்பெருமானுக்கு கைங்கரியம் செய்யும் பேறு என்று கிடைக்கப் பெறுவேன் என்றும், பரமாத்மாவின் மெய்யடியார்களுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்றும் உருகுகிறார். இப்படி அல்லாதாரோடு தனக்கொரு சேர்க்கை வேண்டாம் என்று நிச்சயத்துடன் பெரிய பெருமாள், சேதனர்களை கரை சேர்ப்பதற்காக திருமலையில் திருவேங்கடவனாக எழுந்தருளி இருக்கவே 'பகவானே! உன் தொண்டுக்கு ஆட்படும் வஸ்துக்களில் ஏதேனும் ஒன்றாக ஆக கடவேன்' என்று ஆசைப்படுகிறார். இவ்வாறு ஊற்றம் இருந்தும் பலன் உடனே கிடைக்காமல் போகவே, வித்துவக்கோட்டு அம்மானிடம் உன்னை விட்டால் வேறு கதி இல்லாத என்னிடம் நீ உதாசீனமாக இருந்தாலும் உன் திருவடிகளை விட்டு அகலமாட்டேன் என்று சரணாகதி செய்கிறார்.

தன் ஆத்ம பரத்தை அவன் திருவடிகளில் ஸமர்பித்த அளவில், எம்பெருமானின் விபவாவதார சேஷ்டிதங்களை அனுபவிக்க ஆசைப்பட்டு ஸ்ரீக்ருஷ்ணாவதாரத்தில் ஈடுபடுகிறார். உடன் அவருக்கு தேவகி பிராட்டி இழந்த எம்பெருமானது பால லீலைகள் நினைவுக்கு வர, தான் தேவகி நிலையை அடைந்து புலம்புகிறார். அடுத்து தேவகி போல் இல்லாமல் கௌசல்யா தேவி அருமை பெருமையுடன் தாலாட்டி, சீராட்டி, ஸ்ரீராமனை வளர்த்த அநுபவத்தில் ஆழங்கால் படுகிறார். அடுத்து தசரத சக்கரவர்த்தியின் நிலையை அடைந்து, 'ஐயோ! கைகேயியின் சொல் கேட்டு என் அருமை புதல்வனே கானகத்திற்கு அனுப்பினேனே' என்று சொல்ல முடியாதத்துயரில் ஆழ்ந்து போனவர், பின்பு தெளிந்து ஸ்ரீமத்ராமாயணத்தை பரிபூரணமாக அனுபவிக்கிறார்.
------------
தனியன் 1
கும்பே புனர்வஸவ் ஜாதம் 
கேரளே வஞ்சி மண்டலே|
கௌஸ்துப மாம்சம் தராதீசம் 
குலசேகரம் ஆஸ்ரயே||

தனியன் 2
குஷ்யதே யஸ்ய நகரே 
ரங்க யாத்ரா திநே திநே|
தமஹம் ஸி²ரஸா வந்தே 
ராஜா நம் குலசேகரம்||

தனியனின் விளக்கம்
எப்போதும் ஸ்ரீ ரங்க யாத்ரை பற்றிய பேச்சே நிகழும் நகரைத் தலைநகராகக் கொண்ட அரசர் குலசேகரப் பெருமாள் திருவடிகளை அடியேன் தலையால் வணங்குகிகிறேன்.

வாழி திருநாமம்
அஞ்சன மாமலைப் பிறவி ஆதரித்தோன் வாழியே|
அணி அரங்கர் மணத்தூணை அடைந்து உய்ந்தோன் வாழியே|
வஞ்சி நகரம் தன்னில் வாழ வந்தோன் வாழியே|
மாசி தன்னில் புனர்பூசம் வந்து உதித்தான் வாழியே|
அஞ்சல் எனக் குடப்பாம்பில் அங்கை இட்டான் வாழியே|
அநவரதம் ராம கதை அருளும் அவன் வாழியே|
செஞ்சொல் மொழி நூற்றஞ்சும் செப்பினான் வாழியே|
சேரலர் கோன் செங்கமலத் திருவடிகள் வாழியே||

திருநாள் பாட்டு
மாசிப் புனர்பூசம்* காண்மின் இன்று மண்ணுலகீர்*
தேசு இத்திவசத்துக்கு ஏதென்னில்*
பேசுகின்றேன் கொல்லி நகர்க்கோன்*
குலசேகரன் பிறப்பால்* நல்லவர்கள் கொண்டாடும் நாள்!


||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment