About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Sunday, 7 April 2024

திவ்ய ப்ரபந்தம் - 112 - பெரியாழ்வார் திருமொழி - 1.9.5

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் - 112 - வெண்கலத்தால் செய்த இலையை அணிந்த வாமனன்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்

வெண்கலப் பத்திரம் கட்டி* விளையாடிக்*
கண் பல பெய்த* கருந்தழைக் காவின் கீழ்ப்*
பண் பல பாடிப்* பல்லாண்டு இசைப்ப* 
பண்டு மண் பல கொண்டான் புறம் புல்குவான்* 
வாமனன் என்னைப் புறம் புல்குவான்|

  • பண்டு - முன்னொரு காலத்திலே
  • வெண்கலம் - வெண்கலத்தால் செய்யப்பட்ட
  • பத்திரம் -  இலையை
  • கட்டி - அரையில் கட்டிக் கொண்டு
  • விளையாடி - விளையாடி, மாவலியிடத்தில் மூவடி மண்ணை இரந்து பெற்று
  • பல கண் - பல மயில் பீலிக் கண்களைக் கொண்டு 
  • செய்த - செய்யப்பட்ட பெரிய குடை போன்ற
  • கரு தழை - அடர்ந்த சோலை 
  • காவின் கீழ் - நிழலின் கீழேயிருந்து 
  • பல பண் பாடி - அநுகூலரானவர்கள் பலவித ராகங்களைப் பாடிக் கொண்டு
  • பல்லாண்டு இசைப்ப - மங்களாசாஸநம் செய்ய
  • பல மண் கொண்டான் - ஸகலமான லோகங்களையும் அளந்து தன்னதாக்கிக் கொண்ட இவன்
  • புறம் - முதுகை
  • புல்குவான் - கட்டிக் கொள்வான்
  • வாமனன் - வாமனப் பெருமான் 
  • என்னை - என்னுடைய 
  • புறம் புல்குவான் -  முதுகை கட்டிக் கொள்வான்

வெண்கலத்தால் செய்த ஆடையைக் கட்டிக் கொண்டும் , மயில் தோகை போன்றவற்றால் செய்த பெரிய குடையின் கீழ் இருந்து, விளையாடிய படியும், மகாபலியிடம் மூவடி மண்ணை பெற்று, பிறகு தேவர்கள் புகழ் பாட சகல உலகங்களையும் தன் வசமாக்கிக் கொண்டவன், என் பின்னால் வந்து என்னைக் கட்டிக்கொள்வான்! வாமனன் என்னைப் பின்புறம் வந்து கட்டிக் கொள்வான்!

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 034 - திருவாலி – திருநகரி 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

034. திருவாலி – திருநகரி (திருநாங்கூர்)
முப்பத்தி நான்காவது திவ்ய க்ஷேத்ரம்

மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த 
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில் 
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
2 ஆழ்வார்கள் - 42 பாசுரங்கள்

1. குலசேகராழ்வார் - 1 பாசுரம் 
பெருமாள் திருமொழி (முதலாம் ஆயிரம்) 

  • திவ்ய ப்ரபந்தம் - 725 - எட்டாம் திருமொழி - ஏழாம் பாசுரம்


2. திருமங்கையாழ்வார் - 41 பாசுரங்கள் 
1. பெரிய திருமொழி (இரண்டாம் ஆயிரம்) - 38 பாசுரங்கள்

  • திவ்ய ப்ரபந்தம் - 1078 - இரண்டாம் பத்து - நான்காம் திருமொழி - முதலாம் பாசுரம் - 1 பாசுரம்
  • திவ்ய ப்ரபந்தம் - 1188 - 1197 - மூன்றாம் பத்து - ஐந்தாம் திருமொழி – 10 பாசுரங்கள்
  • திவ்ய ப்ரபந்தம் – 1198 - 1207 - மூன்றாம் பத்து - ஆறாம் திருமொழி - 10 பாசுரங்கள்
  • திவ்ய ப்ரபந்தம் – 1208 - 1217 - மூன்றாம் பத்து - ஏழாம் திருமொழி – 10 பாசுரங்கள்
  • திவ்ய ப்ரபந்தம் - 1329 - நான்காம் பத்து - ஒண்பதாம் திருமொழி - இரண்டாம் பாசுரம் - 1 பாசுரம்
  • திவ்ய ப்ரபந்தம் - 1519 - ஆறாம் பத்து - எட்டாம் திருமொழி - இரண்டாம் பாசுரம் - 1 பாசுரம்
  • திவ்ய ப்ரபந்தம் - 1733, 1735 - எட்டாம் பத்து - ஒண்பதாம் திருமொழி – 6 & 8 - 2 பாசுரங்கள்
  • திவ்ய ப்ரபந்தம் - 1850 - பத்தாம் பத்து - முதலாம் திருமொழி - மூன்றாம் பாசுரம் - 1 பாசுரம்
  • திவ்ய ப்ரபந்தம் - 2014 - பதினொன்றாம் பத்து - ஏழாம் திருமொழி - மூன்றாம் பாசுரம் - 1 பாசுரம்
  • திவ்ய ப்ரபந்தம் - 2027 - பதினொன்றாம் பத்து - எட்டாம் திருமொழி - ஆறாம் பாசுரம் - 1 பாசுரம்

2. திருநெடுந்தாண்டகம் (இரண்டாம் ஆயிரம்) 1 பாசுரம்

  • திவ்ய ப்ரபந்தம் – 2063 - இரண்டாம் திருமொழி - இரண்டாம் பாசுரம் (12)
3. சிறிய திருமடல் (மூன்றாம் ஆயிரம்) - 1 பாசுரம்

  • திவ்ய ப்ரபந்தம் – 2706 - நான்காம் திருமொழி - நான்காம் பாசுரம் (34)
4. பெரிய திருமடல் (மூன்றாம் ஆயிரம்) - 1 பாசுரம்

  • திவ்ய ப்ரபந்தம் – 2773 - ஏழாம் திருமொழி - முதலாம் பாசுரம் (61)

-------------------------
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி

தனியன்

மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ*

அந்தாதி

கழன்று போம் வாயுவினைக் கட்டாமல் தீர்த்தம்
உழன்று போய் ஆடாமல் உய்ந்தேன் அழன்று
பொரு வாலி காலன் பரகாலன் போற்றும்
திருவாலி மாயனையே சேர்ந்து 

  • அழன்று – கோபித்து
  • பொரு – போர் செய்த
  • வாலி – வாலிக்கு
  • காலன் – யமனாய் நின்றவனும்
  • பரகாலன் போற்றும் திருவாலி மாயனை – திருமங்கை ஆழ்வாரால் பாடித் துதிக்கப் பெற்ற திருவாலி திருநகரி என்னும் திவ்ய ஸ்தலத்தில் எழுந்தருளி இருப்பவனுமான ஆஸ்சரிய குண சேஷ்டிதங்களை உடைய எம்பெருமானை
  • சேர்ந்து – உபாயமாகப் பற்றியதனால் 
  • கழன்றுபோம் வாயு வினை கட்டாமல் – உடம்பிலிருந்து வெளிச் செல்லுகின்ற மூச்சுக் காற்றைப் (பிராணயாமத்தால்) அடக்காமலும்
  • உழன்று போய் தீர்த்தம் ஆடாமல் – வருந்திப் பல இடங்களிலும் சென்று புண்ணிய தீர்த்தங்களில் மூழ்காமலும்
  • உய்ந்தேன் – நற்கதி பெற்றேன்

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவத புராணம் - 79

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

விதுர மைத்ரேய ஸம்வாதம் - 24

ஸ்கந்தம் 03

தன் ஒண்பது பெண்களின் திருமணத்தையும் முடித்த கர்தமர், தனக்கு மகனாகப் பிறந்திருக்கும் கபிலரிடம்‌ தனிமையில் சென்றார். அவரை வணங்கிப் பின் கூறலானார்.


தத்தம் ‌வினைகளால் பாவ புண்யங்களை அனுபவிக்கும் ஜீவர்களிடம்‌ தேவதைகள் வெகு நாள்கள் கழித்துத்தான் அனுக்ரஹம் செய்கிறார்கள்.

துறவிகளோ பக்தியோகத்தினால் தனிமையில் தங்களது திருப்பாத கமலங்களை ஆராதிக்கிறார்கள்.

ஆனால், பகவானாகிய தாங்களோ ஸம்சாரிகளான இவர்கள் உலகியல்‌ இன்பங்களை விரும்புபவர்கள் என்றும், எங்களது தாழ்மையையும்‌ சற்றும்‌ நினையாமல் அற்பர்களான எங்கள் வீட்டில்‌ வந்து அவதாரம்‌ செய்தீர்கள்.

முன்பு‌ என்னிடம்‌ என் மகவாய்ப் பிறப்பதாகக்‌ கூறிய வாக்கை மெய்ப்பித்தீர்கள். நான்கு கரங்கள்‌ கொண்ட திருமேனியை விட்டு இரு கரங்களோடு மானிட உருவம்‌ கொண்டீர்.

ஐஸ்வர்யம், வைராக்யம், புகழ், அறிவு, வீரம், ஸ்ரீ எனப்படும் செல்வம் இவை ஆறும் ஒருங்கே கொண்ட பகவான் ஆகிய உங்களை சரணமடைகிறேன். மேற்சொன்ன ஆறு குணங்களும் ஒன்றிணைந்தது 'பக' என்னும் குணம். அந்த குணத்தை உடையவர் பகவான்.  சக்திகள் அனைத்தும் தங்களுக்கு அடிமை. ப்ரக்ருதி, அதன் அதிஷ்டான புருஷன், மஹத் தத்வம், அவற்றை இயக்கும்‌ காலம், முக்குணங்களின்‌ அஹங்காரம், அண்ட சராசரங்கள், அதனுடைய பாலர்கள் அனைத்தும்‌ தாங்களே. அனைத்தையும் நீங்கள் ‌உங்கள் வாயில் அடக்கிக்கொள்கிறீர்கள். அனைத்திலும் பெரியவரான கபில மூர்த்தியான தங்களைச் சரணமடைகிறேன்.

தங்கள்‌ கருணையால் மூன்று விதமான கடன்களிலிருந்தும் விடுபட்டேன். என் விருப்பங்கள்‌ அனைத்தும் நிறைவேறின. நான் துறவறம்‌ ஏற்று இவ்வுலகியல் இன்ப துன்பங்களிலிருந்து விடுபட்டு உங்களையே எப்போதும் நினைத்துக்கொண்டு உலா வர விரும்புகிறேன். எனக்கு அனுமதி தாருங்கள், என்றார்.

பகவான் கூறினார். முனிவரே, நான் முன்பு உம்மிடம் கூறியதை மெய்ப்பிக்கவே உமக்கு மகனாகப்‌ பிறந்தேன்.

இவ்வுடலானது ஆன்மா என்று தவறாக அறியப்பட்டு வருகிறது. இவ்வுலகோர்க்கு ப்ரக்ருதி, ஜீவன், பரமன் இவைகளின் உண்மை தத்துவத்தை எடுத்துரைக்கவே அவதாரம்‌ செய்துள்ளேன். ஆன்ம அறிவைப் பற்றிய இந்த நுண்ணிய வழி வெகு காலமானதால் அழிந்தேபோனது. அதைத் திரும்பவும் நிறுவுவதற்காகவே இத்திருமேனியைக் கொண்டுள்ளேன். நான் உமக்கு அனுமதி அளிக்கிறேன். நீங்கள் துறவறம்‌ மேற்கொள்ளலாம். பயனில் பற்றில்லாமல் பணி செய்து, பயனை எனக்கு அர்ப்பணம் செய்து, ம்ருத்யுவை வெற்றிகொண்டு முக்தி அடைவதற்காக என்னைப் பணிந்து வாரும்.

நான் தேவஹூதிக்கு ஆன்மவித்யையை உபதேசிக்கப் போகிறேன். அவளும் உலகியல்‌ துன்பங்களைத் தாண்டி, ஞானம்‌ பெற்று என்னை அடையப்போகிறாள்.

மைத்ரேயர் தொடர்ந்தார்.. பகவான் சொன்னதைக் கேட்டு கர்தமர் கபில பகவானை விழுந்து வணங்கிவிட்டு யாருக்கும் சொல்லாமல் அவ்விடம் விட்டு நீங்கினார். அதன் பின் அஹிம்சையை வேராகக் கொண்ட துறவறத்தை ஏற்று, வைதிக கர்மங்களையும்‌ துறந்து, எங்கும், எதிலும் பற்றின்றிச் சுற்றித் திரிந்தார். யான், எனது என்ற அஹங்காரத்தை விட்டு பகவானிடம்‌ மனத்தை ஒரு நிலைப்படுத்தினார். அவரது அறிவு உள்நோக்கி அமைதியாய் இருந்தது.

அலைகளற்ற நடுக்கடல்போல் அமைதியாய் விளங்கினார் கர்தமர். அனைத்துத் தளைகளிலிருந்தும் விடுதலை பெற்று, விருப்பு வெறுப்பற்ற சமநோக்குடன் பகவத் பக்தி நிறைவு பெற்று பரமபதத்தை அடைந்தார் கர்தமர்.

சாங்க்ய சாஸ்திரத்தை எடுத்துரைக்க வந்த கபில பகவானின் பெருமைகள் கேட்கக் கேட்க அலுக்கவேயில்லையே. அவர் மேலும் என்னென்ன செய்தார் என்று விளக்கிக் கூறுங்கள் என்றார் சௌனகர்.

ஸூத பௌராணிகர் இதையே தான் விதுரரும் கேட்டார். அதற்கு மைத்ரேயர் கூறியவற்றைக் கூறுகிறேன் என்று கூறி, தொடர்ந்து தேவஹூதிக்கும் கபிலருக்கும் நடைபெற்ற உரையாடலைக் கூறத் துவங்கினார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்