||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
033. திருவைகுந்த விண்ணகரம் (திருநாங்கூர்)
முப்பத்தி மூன்றாவது திவ்ய க்ஷேத்ரம்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 10
001. திவ்ய ப்ரபந்தம் - 1228 - மனமே! வைகுந்த விண்ணகரத்தை வணங்கு
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - முதலாம் பாசுரம்
சலம் கொண்ட இரணியனது அகல் மார்வம் கீண்டு*
தடங் கடலைக் கடைந்து அமுதம் கொண்டு உகந்த காளை*
நலம் கொண்ட கரு முகில்போல் திருமேனி அம்மான்*
நாள்தோறும் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில்*
சலம் கொண்டு மலர் சொரியும் மல்லிகை ஒண் செருந்தி*
செண்பகங்கள் மணம் நாறும் வண் பொழிலினூடே*
வலம் கொண்டு கயல் ஓடி விளையாடு நாங்கூர்*
வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே|
002. திவ்ய ப்ரபந்தம் - 1229 - நரஸிங்கன் உறையும் இடம் வைகுந்த விண்ணகரம்
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
திண்ணியது ஓர் அரி உருவாய்த் திசை அனைத்தும் நடுங்கத்*
தேவரொடு தானவர்கள் திசைப்ப*
இரணியனை நண்ணி அவன் மார்வு அகலத்து உகிர் மடுத்த நாதன்*
நாள்தோறும் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில்*
எண் இல் மிகு பெருஞ் செல்வத்து எழில் விளங்கு மறையும்*
ஏழ் இசையும் கேள்விகளும் இயன்ற பெருங் குணத்தோர்*
மண்ணில் மிகு மறையவர்கள் மலிவு எய்தும் நாங்கூர்*
வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே|
003. திவ்ய ப்ரபந்தம் - 1230 - மூட மனமே! வைகுந்த விண்ணகரையே வணங்கு
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
அண்டமும் இவ் அலை கடலும் அவனிகளும் எல்லாம்*
அமுது செய்த திரு வயிற்றன் அரன் கொண்டு திரியும்*
முண்டம் அது நிறைத்து அவன்கண் சாபம் அது நீக்கும்*
முதல்வன் அவன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில்*
எண் திசையும் பெருஞ் செந்நெல் இளந் தெங்கு கதலி*
இலைக்கொடி ஒண் குலைக் கமுகோடு இசலி வளம் சொரிய*
வண்டு பல இசை பாட மயில் ஆலும் நாங்கூர்*
வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே|
004. திவ்ய ப்ரபந்தம் - 1231 - இராமன் தங்குமிடம் வைகுந்த விண்ணகரம்
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - நான்காம் பாசுரம்
கலை இலங்கும் அகல் அல்குல் அரக்கர் குலக் கொடியைக்*
காதொடு மூக்கு உடன் அரியக் கதறி அவள் ஓடி*
தலையில் அங் கை வைத்து மலை இலங்கை புகச் செய்த*
தடந் தோளன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில்*
சிலை இலங்கு மணி மாடத்து உச்சிமிசைச் சூலம்*
செழுங் கொண்டல் அகடு இரியச் சொரிந்த செழு முத்தம்*
மலை இலங்கு மாளிகைமேல் மலிவு எய்தும் நாங்கூர்*
வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே|
005. திவ்ய ப்ரபந்தம் - 1232 - இராவணனைக் கொன்றவன் கோயில் இது தான்
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்
மின் அனைய நுண் மருங்குல் மெல்லியற்கா*
இலங்கை வேந்தன் முடி ஒருபதும் தோள் இருபதும் போய் உதிர*
தன் நிகர் இல் சிலை வளைத்து அன்று இலங்கை பொடி செய்த*
தடந் தோளன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில்*
செந்நெலொடு செங்கமலம் சேல் கயல்கள் வாளை*
செங்கழு நீரொடு மிடைந்து கழனி திகழ்ந்து எங்கும்*
மன்னு புகழ் வேதியர்கள் மலிவு எய்தும் நாங்கூர்*
வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே|
006. திவ்ய ப்ரபந்தம் - 1233 - கண்ணபிரான் உறையும் கோயில் இது தான்
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - ஆறாம் பாசுரம்
பெண்மை மிகு வடிவு கொடு வந்தவளைப்*
பெரிய பேயினது உருவு கொடு மாள உயிர் உண்டு*
திண்மை மிகு மருதொடு நல் சகடம் இறுத்தருளும்*
தேவன் அவன்மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில்*
உண்மை மிகு மறையொடு நல் கலைகள் நிறை பொறைகள்*
உதவு கொடை என்று இவற்றின் ஒழிவு இல்லா*
பெரிய வண்மை மிகு மறையவர்கள் மலிவு எய்தும் நாங்கூர்*
வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே|
007. திவ்ய ப்ரபந்தம் - 1234 - வெண்ணெய் உண்ட கண்ணன் விரும்பும் இடம் இது
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - ஏழாம் பாசுரம்
விளங்கனியை இளங் கன்று கொண்டு உதிர எறிந்து*
வேல் நெடுங் கண் ஆய்ச்சியர்கள் வைத்த தயிர் வெண்ணெய்*
உளம்குளிர அமுது செய்து இவ் உலகு உண்ட காளை*
உகந்து இனிது நாள்தோறும் மருவி உறை கோயில்*
இளம்படி நல் கமுகு குலைத் தெங்கு கொடிச் செந்நெல்*
ஈன் கரும்பு கண் வளரக் கால் தடவும் புனலால்*
வளம் கொண்ட பெருஞ் செல்வம் வளரும் அணி நாங்கூர்*
வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே|
008. திவ்ய ப்ரபந்தம் - 1235 - நரகாசுரனை அழித்தவன் மகிழ்ந்து உறையும் இடம் இது
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - எட்டாம் பாசுரம்
ஆறாத சினத்தின் மிகு நரகன் உரம் அழித்த*
அடல் ஆழித் தடக் கையன் அலர் மகட்கும் அரற்கும்*
கூறாகக் கொடுத்தருளும் திரு உடம்பன் இமையோர்*
குல முதல்வன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில்*
மாறாத மலர்க் கமலம் செங்கழு நீர் ததும்பி*
மது வெள்ளம் ஒழுக வயல் உழவர் மடை அடைப்ப*
மாறாத பெருஞ் செல்வம் வளரும் அணி நாங்கூர்*
வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே|
009. திவ்ய ப்ரபந்தம் - 1236 - தேவர்கள் வணங்கும் வைகுந்த விண்ணகரை வணங்கு
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
வங்கம் மலி தடங் கடலுள் வானவர்களோடு*
மா முனிவர் பலர் கூடி மா மலர்கள் தூவி*
எங்கள் தனி நாயகனே எமக்கு அருளாய் என்னும்*
ஈசன் அவன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில்*
செங் கயலும் வாளைகளும் செந்நெலிடைக் குதிப்பச்*
சேல் உகளும் செழும் பணை சூழ் வீதிதொறும் மிடைந்து*
மங்குல் மதி அகடு உரிஞ்சு மணி மாட நாங்கூர்*
வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே|
010. திவ்ய ப்ரபந்தம் - 1237 - மண்ணும் விண்ணும் ஆள்வர்
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - பத்தாம் பாசுரம்
சங்கு மலி தண்டு முதல் சக்கரம் முன் ஏந்தும்*
தாமரைக் கண் நெடிய பிரான் தான் அமரும் கோயில்*
வங்கம் மலி கடல் உலகில் மலிவு எய்தும் நாங்கூர்*
வைகுந்தவிண்ணகர்மேல் வண்டு அறையும் பொழில் சூழ்*
மங்கையர் தம் தலைவன் மருவலர் தம் உடல் துணிய*
வாள் வீசும் பரகாலன் கலிகன்றி சொன்ன*
சங்கம் மலி தமிழ் மாலை பத்து இவை வல்லார்கள்*
தரணியொடு விசும்பு ஆளும் தன்மை பெறுவாரே|
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்