||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
016. திருக்கண்ணமங்கை
க்ருஷ்ண மங்கள க்ஷேத்ரம் - திருவாரூர்
பதினாறாவது திவ்ய க்ஷேத்ரம்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 14
திருமங்கையாழ்வார்
001. திவ்ய ப்ரபந்தம் - 1638 - பத்தராவிப் பெருமாளைக் கண்டு கொண்டேன்
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - பத்தாம் திருமொழி - முதலாம் பாசுரம்
பெரும் புறக் கடலை அடல் ஏற்றினைப்* பெண்ணை ஆணை*
எண் இல் முனிவர்க்கு அருள் தரும் தவத்தை முத்தின் திரள் கோவையைப்*
பத்தர் ஆவியை நித்திலத் தொத்தினை*
அரும்பினை அலரை அடியேன் மனத்து ஆசையை*
அமுதம் பொதி இன் சுவை* கரும்பினை கனியை சென்று நாடிக்*
கண்ணமங்கையுள் கண்டு கொண்டேனே|
002. திவ்ய ப்ரபந்தம் - 1639 - எல்லாப் பொருள்களுமாக இருப்பவன் பக்தவத்சலன்
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - பத்தாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
மெய்ந் நலத் தவத்தை திவத்தைத் தரும்*
மெய்யைப் பொய்யினை கையில் ஓர் சங்கு உடை*
மைந் நிறக் கடலைக் கடல் வண்ணனை மாலை*
ஆல் இலைப் பள்ளி கொள் மாயனை*
நென்னலைப் பகலை இற்றை நாளினை*
நாளை ஆய் வரும் திங்களை ஆண்டினை*
கன்னலைக் கரும்பினிடைத் தேறலைக்*
கண்ணமங்கையுள் கண்டு கொண்டேனே|
003. திவ்ய ப்ரபந்தம் - 1640 - நான் தேடிய தெய்வம் பக்தவத்சலனே
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - பத்தாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
எங்களுக்கு அருள்செய்கின்ற ஈசனை*
வாச வார் குழலாள் மலை மங்கை தன் பங்கனை*
பங்கில் வைத்து உகந்தான்* தன்னைப் பான்மையைப் பனி மா மதியம் தவழ்*
மங்குலைச் சுடரை வட மா மலை உச்சியை*
நச்சி நாம் வணங்கப்படும் கங்குலை*
பகலை சென்று நாடிக்* கண்ணமங்கையுள் கண்டு கொண்டேனே|
004. திவ்ய ப்ரபந்தம் - 1641 - எனக்கு உற்றுழி உதவுபவன் பக்தவத்சலன்
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - பத்தாம் திருமொழி - நான்காம் பாசுரம்
பேய் முலைத் தலை நஞ்சு உண்ட பிள்ளையைத்*
தெள்ளியார் வணங்கப்படும் தேவனை*
மாயனை மதிள் கோவல் இடைகழி மைந்தனை*
அன்றி அந்தணர் சிந்தையுள் ஈசனை*
இலங்கும் சுடர்ச் சோதியை* எந்தையை எனக்கு எய்ப்பினில் வைப்பினை*
காசினை மணியைச் சென்று நாடிக்*
கண்ணமங்கையுள் கண்டு கொண்டேனே|
005. திவ்ய ப்ரபந்தம் - 1642 - இம்மைக்கும் மறுமைக்கும் மருந்து இவனே
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - பத்தாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்
ஏற்றினை இமயத்துள் எம் ஈசனை*
இம்மையை மறுமைக்கு மருந்தினை*
ஆற்றலை அண்டத்து அப்புறத்து உய்த்திடும் ஐயனை*
கையில் ஆழி ஒன்று ஏந்திய கூற்றினை*
குரு மா மணிக் குன்றினை* நின்றவூர் நின்ற நித்திலத் தொத்தினை*
காற்றினைப் புனலைச் சென்று நாடிக்*
கண்ணமங்கையுள் கண்டு கொண்டேனே|
006. திவ்ய ப்ரபந்தம் - 1643 - திருமங்கை மணாளன் திருக்கண்ணமங்கையில் உள்ளான்
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - பத்தாம் திருமொழி - ஆறாம் பாசுரம்
துப்பனைத் துரங்கம் படச் சீறிய தோன்றலைச்*
சுடர் வான் கலன் பெய்தது ஓர் செப்பினை*
திருமங்கை மணாளனைத்* தேவனைத் திகழும் பவளத்து ஒளி ஒப்பனை*
உலகு ஏழினை ஊழியை* ஆழி ஏந்திய கையனை அந்தணர் கற்பினை*
கழுநீர் மலரும் வயல்* கண்ணமங்கையுள் கண்டு கொண்டேனே|
007. திவ்ய ப்ரபந்தம் - 1644 - மூவரில் முதல்வன் பக்தவத்சலன்
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - பத்தாம் திருமொழி - ஏழாம் பாசுரம்
திருத்தனை திசை நான்முகன் தந்தையைத்*
தேவ தேவனை மூவரில் முன்னிய விருத்தனை*
விளங்கும் சுடர்ச் சோதியை*
விண்ணை மண்ணினைக் கண்ணுதல் கூடிய அருத்தனை*
அரியைப் பரி கீறிய அப்பனை* அப்பில் ஆர் அழல் ஆய் நின்ற கருத்தனை*
களி வண்டு அறையும் பொழில்* கண்ணமங்கையுள் கண்டு கொண்டேனே|
008. திவ்ய ப்ரபந்தம் - 1645 - பக்தர்களின் தலை மேல் இருப்பவன் பக்தவத்சலன்
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - பத்தாம் திருமொழி - எட்டாம் பாசுரம்
வெம் சினக் களிற்றை விளங்காய் வீழக்* கன்று வீசிய ஈசனை*
பேய் மகள் துஞ்ச நஞ்சு சுவைத்து உண்ட தோன்றலைத்*
தோன்றல் வாள் அரக்கன் கெடத் தோன்றிய நஞ்சினை*
அமுதத்தினை நாதனை* நச்சுவார் உச்சி மேல் நிற்கும் நம்பியை*
கஞ்சனைத் துஞ்ச வஞ்சித்த வஞ்சனைக்*
கண்ணமங்கையுள் கண்டு கொண்டேனே|
009. திவ்ய ப்ரபந்தம் - 1646 - பக்தவத்சலனைக் கண்ணாரக் கண்டேன்
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - பத்தாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
பண்ணினைப் பண்ணில் நின்றது ஓர் பான்மையைப்*
பாலுள் நெய்யினை மால் உரு ஆய் நின்ற விண்ணினை*
விளங்கும் சுடர்ச் சோதியை* வேள்வியை விளக்கின் ஒளி தன்னை*
மண்ணினை மலையை அலை நீரினை*
மாலை மா மதியை மறையோர் தங்கள் கண்ணினை*
கண்கள் ஆரளவும் நின்று* கண்ணமங்கையுள் கண்டு கொண்டேனே|
010. திவ்ய ப்ரபந்தம் - 1647 - கண்ணபிரானை! நீ கூட இப்பாடல்களைச் சுவைக்கலாம்
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - பத்தாம் திருமொழி - பத்தாம் பாசுரம்
கண்ணமங்கையுள் கண்டு கொண்டேன் என்று*
காதலால் கலிகன்றி உரை செய்த*
வண்ண ஒண் தமிழ் ஒன்பதோடு ஒன்று இவை*
வல்லர் ஆய் உரைப்பார் மதியம் தவழ்*
விண்ணில் விண்ணவர் ஆய் மகிழ்வு எய்துவர்*
மெய்ம்மை சொல்லில் வெண் சங்கம் ஒன்று ஏந்திய கண்ண*
நின் தனக்கும் குறிப்பு ஆகில் கற்கலாம்* கவியின் பொருள் தானே|
011. திவ்ய ப்ரபந்தம் - 1848 - திருநீர்மலையும் திருக்கண்ணமங்கையும்
பெரிய திருமொழி - பத்தாம் பத்து - முதலாம் திருமொழி - முதலாம் பாசுரம்
ஒரு நல் சுற்றம்* எனக்கு உயிர் ஒண் பொருள்*
வரும் நல் தொல் கதி* ஆகிய மைந்தனை*
நெரு நல் கண்டது* நீர்மலை இன்று போய்*
கரு நெல் சூழ்* கண்ணமங்கையுள் காண்டுமே|
012. திவ்ய ப்ரபந்தம் - 2008 - கண்ணனை எண்ணாத மனிதரை மதியாதே
பெரிய திருமொழி - பதினொன்றாம் பத்து - ஆறாம் திருமொழி - ஏழாம் பாசுரம்
மண் நாடும் விண் நாடும்* வானவரும் தானவரும் மற்றும் எல்லாம்*
உண்ணாத பெரு வெள்ளம்* உண்ணாமல் தான் விழுங்கி உய்யக் கொண்ட*
கண்ணாளன் கண்ணமங்கை நகராளன்* கழல் சூடி அவனை உள்ளத்து*
எண்ணாத மானிடத்தை* எண்ணாத போது எல்லாம் இனிய ஆறே|
013. திவ்ய ப்ரபந்தம் - 2706 - தலைவி சென்று தேடிய திவ்ய தேசங்கள்
சிறிய திருமடல் - நான்காம் திருமொழி - நான்காம் பாசுரம் (34)
நான் அவனைக் கார் ஆர் திருமேனி காணும் அளவும் போய் *
சீர் ஆர் திருவேங்கடமே திருக்கோவலூரே*
மதிள் கச்சி ஊரகமே பேரகமே*
பேரா மருது இறுத்தான் வெள்ளறையே வெஃகாவே*
பேர் ஆலி தண்கால் நறையூர் திருப்புலியூர்*
ஆராமம் சூழ்ந்த அரங்கம்* கணமங்கை|
014. திவ்ய ப்ரபந்தம் - 2773 - எம்பெருமான் தங்கியிருக்கும் திவ்ய தேசங்களை அவள் புகழ்ந்து வணங்குகிறாள்
பெரிய திருமடல் - ஏழாம் திருமொழி - முதலாம் பாசுரம் (61)
மா மலர் மேல் அன்னம் துயிலும் அணி நீர் வயல் ஆலி*
என்னுடைய இன் அமுதை எவ்வுள் பெரு மலையை*
கன்னி மதிள் சூழ் கண மங்கைக் கற்பகத்தை*
மின்னை, இரு சுடரை, வெள்ளறையுள் கல் அறை மேல் பொன்னை*
மரதகத்தை புட்குழி எம் போர் ஏற்றை* மன்னும் அரங்கத்து எம் மா மணியை|
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்