||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
075 யான் சிறியேன் என்றேனோ திருமலை நம்பியைப் போலே|
பெரிய திருமலை நம்பி, திருமலையில் அவதரித்தவர், ஆளவந்தாரின் முதன்மை சீடர்களுள் ஒருவர். ஸ்ரீசைல பூர்ணர் என்ற திருநாமமும் இவருக்கு உண்டு. ராமானுஜரின் தாய்மாமனான இவரிடம், ஆளவந்தார், ராமானுஜருக்கு ராமாயணத்தை கற்றுக் கொடுக்கும் பொறுப்பினை நியமனம் செய்தார். ராமானுஜருக்கு இளையாழ்வார் எனும் இயற்பெயரை சூட்டிய பெரிய திருமலை நம்பி, திருவேங்கடத்தில் இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களில் முதன்மையானவராக கருதப்பட்டவர். திருவேங்கடமுடையானுக்கு நித்ய கைங்கர்யபரராக இருந்து சேவை புரிந்த திருமலை நம்பி, அவருக்காக தினமும் ஆகாச கங்கையிலிருந்து தீர்த்தம் கொண்டு வருவார்.
ஒரு சமயம், ராமானுஜர், வேங்கடவனைத் தரிசிக்க, திருப்பதிக்கு எழுந்தருளினார். பெரிய திருமலை நம்பியோ அந்நேரம் திருமலையில் இருந்தார். ராமானுஜரின் சீடர்கள் அவரை மலை மீது ஏறி எம்பெருமானுக்கு மங்களாஸாஸனம் செய்ய வேண்டினர். தவிர, ஆனந்தாழ்வாரின் நந்தவனத்தையும் பார்க்க வேண்டினர். ஆனால், ராமானுஜரோ, அந்த மலை ஆதிஷேசன் என்றும், அதில் தன் கால்கள் படலாமா"? என்றும் யோசித்தார். ஆனால், சீடர்கள் தொடர்ந்து வற்புறுத்தியதால் மலை மீது ஏற ஒப்புக் கொண்டு ஏறினார்.
ராமானுஜரின் வருகையை அறிந்த பெரிய திருமலைநம்பி, பெருமாளின் தீர்த்த பிரசாதத்தை எடுத்துக் கொண்டு, ராமானுஜரை வரவேற்க, அவரே மலை இறங்கி சென்றார். தனது ஆசார்யன் என்ற முறையிலும், முதியவர் என்ற முறையிலும், ராமானுஜர் அவரிடம், ‘‘அடியேன் போன்ற சிறியோனை வரவேற்க தாங்களே வர வேண்டுமா? யாரேனும் தாழ்ந்தவர் இல்லயோ?’’ என்றார்.
திருமலை நம்பி, பெருந்தன்மையுடன், ‘‘ராமானுஜா! திருமலையில் நான்கு வீதிகளிலும் தேடினேன்; என்னை விடச் சிறியவர் எவரும் கிடைக்கவில்லை! அதனால் நானே கொண்டு வந்தேன்.’’ என்று பதிலளித்தார். நம்பியின் தன்னடகத்தைக் கண்ட எம்பெருமானார் பெரிதும் வியந்தார்.
திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, " ஸ்ரீவைணவ கோட்பாடுகளை பாராட்டி, அதன் வழி வாழ்ந்து, அந்த திருமலை நம்பி தன்னை சிறியோன் என்றுக் கூறிக் கொண்டது போல நான் கூறினேனா? என்னை சிறியன் என்றேனா? இல்லையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment