About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Monday, 20 November 2023

ஸ்ரீமத் பாகவத புராணம் - 22

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

பக்தனின் ஊடல்

ஸ்கந்தம் 01

பகவானான கண்ணனே உடனிருந்து யுத்தத்தை நடத்தி அதில் வெற்றிக் கனியைப் பெற்றுத் தந்த போதும், தர்ம புத்திரனின் மனக் கலக்கம் நீங்கவில்லை.

வியாஸரும் மற்ற மஹரிஷிகளும், கண்ணனும் தேற்றியும், தன் சுற்றத்தார் அனைவரும் போரில் இறந்து படத் தானே காரணம் என்று எண்ணி சோகத்தில் ஆழ்ந்தார்.

"அழியக்கூடிய இவ்வுடலைக் காக்க, எவ்வளவு சேனைகள் கொல்லப்பட்டன. குழந்தைகள், அந்தணர்கள், உறவினர்கள் நண்பர்கள், சகோதரர்கள், ஆசிரியர்கள் அனைவர்க்கும் துரோகம் இழைத்து விட்டேன். குடிகளைக் காக்க நேர்ந்த தர்மப் போர் என்றாலும் என் மனம் கேட்கவில்லை. ஆயிரக்கணக்கான உயிர்களைக் கொன்ற பாவத்தினால் ஏற்பட்ட கறையை எப்படிப் போக்கிக் கொள்வது?" என்று புலம்பினார்.

பின்னர் அந்திம காலத்தில் இருக்கும் பீஷ்மரிடம் சென்று தர்மங்களைக் கேட்டு அறியச் சென்றார். அவரைத் தொடர்ந்து அர்ஜுனனோடு கண்ணனும் பீஷ்மரைப் பார்க்கச் சென்றான்.

பீஷ்மர் யுத்தத்தில் கண்ணன் மேலுள்ள அபரிமிதமான பக்தியால், கண்ணன் மீது அம்பு மழை பொழிந்தார்.

தன் மீது சாக்கிய நாயனார் எறிந்த கற்களைப் பூக்களால் ஆன பூஜை போன்று சிவபெருமான் ஏற்றார். அதைப் போலவே, பீஷ்மர் விட்ட அத்தனை அம்புகளையும் தானே விரும்பி ஏற்றான் கண்ணன். அந்த அம்புகளால் ஏற்பட்ட வடுக்களை பூஷ்ணமாக ஏற்று இன்றும்  பார்த்த ஸாரதியாய் திருவல்லிக்கேணியில் காட்சியளிக்கிறான்.

சாதாரண மாந்தர்க்கே அந்திம நேரத்தில் பகவானை நினைத்தால் மோக்ஷம் கிட்டும் என்றால், பீஷ்மருக்கு? அவருக்கு மோக்ஷத்தைக் கண்ணன் அருள வேண்டியதில்லை. அவரது தந்தை சந்தனுவால் விரும்பியபடி மரணம் என்ற வரத்தைப் பெற்றிருந்தார். கடுமையான ஸாதனைகளாலும், ப்ரும்மச் சர்யத்தாலும் யோகீஷ்வரராகவும் ஆகி விட்டார். தன் உடலைத் தான் விரும்பிய நேரம் நீங்கலாம் என்ற வரம் பெற்றிருந்தும் அம்புப் படுக்கையில் படுத்திருந்தார்.

அதென்ன அம்புகளை வரிசையாக நட்டுப்போட்ட படுக்கையா என்ன? யுத்தத்தின் பத்தாம் நாளன்று அர்ஜுனன் விட்ட அம்புகள் அனைத்தும் பீஷ்மரின் உடலின் முன்புறம் குத்தி பின்புறமாய் வெளி வந்திருக்கின்றன. உடலில் உள்ள குருதி முழுதும் வடிந்து விட்டது. அதன் பின்னர் யுத்தம் எட்டு நாள்கள் நடந்தது.

அஸ்தினாபுரத்தின் அரியணை ஒரு தர்மவானிடத்து ஒப்படைக்கப்பட்டது என்ற சேதியும் அவருக்கு வந்தது. உடல் முழுவதும் வலிகளோடு துடித்துக் கொண்டு, ப்ராணனை விடாமல், அதற்காகக் காத்திருந்தார் என்று சொல்பவர்கள் உண்டு. இன்னும் சிலர் உத்தராயண புண்ய காலத்திற்காகக் காத்திருந்தார் என்று சொல்வார்கள். யுத்தம் மார்கழி மாதக் கடைசியில் முடிந்து விட்டது. மகர சங்கராந்தி புண்ய காலமும், உத்தராயணமும் வந்து ஒரு வாரம் ஆயிற்று. இன்னும் வலிகளோடு உயிரைப் பிடித்துக் கொண்டிருக்கிறார். எதற்காக?

அந்திம காலத்தில் கண்ணனைக் காண வேண்டும் என்பதற்காக. அதற்கென்ன? அஸ்தினாபுரத்தில் தானே இருக்கிறான்? யாரிடமாவது சொல்லி விட்டால் ஓடி வர மாட்டானா? இல்லை. இது பக்தனுக்குள்ள பிடிவாதம். அதென்ன நான் சொல்லி அவர் தெரிந்து கொள்வது? அவருக்கு என்னைத் தெரியாதா? என் கஷ்டம் அறியாதவரா? என்னைப் பார்க்க அவருக்கு எப்போது விருப்பமோ அப்போது வரட்டும். அது வரை காத்திருப்பேன். வராமல் இருந்து விடுவாரா என்ன? பக்தனுக்கும் பகவானுக்கும் உள்ள ஊடல். அவரது எண்ணம் தெரிந்தே கண்ணனும் ஒரு வாரம் சோதித்து விட்டு, இப்போது தானே வந்து அவர் முன் நின்றான். கண்ணன் பீஷ்மரைக் காண விரும்பியே தன் பயணத்தைத் தள்ளிப் போட்டான்.

யுதிஷ்டிரன் பிதாமகரை, உயர்ந்த தர்மங்களை எடுத்துச் சொல்லும்படி கேட்டார்.

"ஒருவன் தன் கடைசி காலத்தில் சில ரகசியமான சொத்துக்களை மகனிடம் கொடுப்பது போல், நீங்கள் எனக்கு இது வரை சொல்லாத விசேஷ தர்மங்கள் இருந்தால் அவற்றைச் சொல்லுங்கள்" என்றார்.

தன் முன் வந்து நின்ற பகவானைக் கண்ணால் பருகிக் கொண்டே யுதிஷ்டிரனின் கேள்விக்கு பதில் சொன்னார் பீஷ்மர்.

"ப்ரும்மாதி தேவர்களுக்கும் கிட்டாத பகவான் உன் வீட்டில் வந்து சகஜமாகப் பழகுகிறான். பகவானையே எப்போதும் நம்பியிருந்த போதிலும் பாண்டவர்களான உங்கள் வாழ்வில் எவ்வளவு கஷ்டங்கள். விதி எவ்வளவு வலிமையானது பார்த்தாயா? எல்லாமே காலத்தின் கோலம். எனவே நடப்பதெல்லாம் நாராயணனின் சங்கல்பம் என்று கொள்வாய். இவ்வுலகைப் படைத்து காத்து அழிக்கும் ஸர்வ வல்லமை படைத்த பகவானே உன் வீட்டில் இதோ இந்த க்ருஷ்ணனாக நடிக்கிறான்" என்று சொல்லி, பகவானை ஸஹஸ்ரநாமங்களால் துதித்தார்.

இதற்குள் ரிஷிகள் பலரும், அமரர்களும் அங்கு கூடினர். மஹாபாரதத்தில் விஸ்தாரமாகச் சொல்லி விட்டதால், இங்கு சுருக்கமாகச் சொல்கிறார் வியாஸர். அதன் பின் பீஷ்மர் மானிடப் பிறவி எடுத்த ஒவ்வொருவரும் பொதுவாகக் கடைப்பிடிக்க வேண்டிய தர்மங்கள், ப்ரும்மச்சாரிகள், இல்லறவாசிகளின் தர்மங்கள், தான தர்மங்கள், ராஜ தர்மங்கள், மோக்ஷ நெறி, கற்பு நெறி, பெண்களுக்குண்டான தர்மங்கள், ஏகாதசி போன்ற விரத தர்மங்கள், அறம், பொருள், இன்பம், வீடு அச்கிய நால்வகைப் புருஷார்த்தங்களை அடையும் முறை ஆகியவற்றை சாஸ்திரங்களிலும், புராணங்களிலும் கூறியுள்ளபடி சுருக்கமாகக் கூறினார்.

பின்னர் தன் கண் முன் நிற்கும் கண்ணனைக் கண்ணாரக் கண்டு தன் அந்திம ப்ரார்த்தனையை அவன் முன் ஸமர்ப்பித்தார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment