||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
திவ்ய ப்ரபந்தம் – 60 - ஆலிலையில் வளர்ந்த சிறுக்கன்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - நான்காம் திருமொழி - ஏழாம் பாசுரம்
பாலகனென்று*
பரிபவம் செய்யேல்*
பண்டொரு நாள் ஆலினிலை வளர்ந்த*
சிறுக்கன் அவனிவன்*
மேலேழப் பாய்ந்து*
பிடித்துக் கொள்ளும் வெகுளு மேல்*
மாலை மதியாதே*
மா மதீ! மகிழ்ந்து ஓடி வா!
- பாலகன் என்று - இவனொரு சிறு குழந்தை என்று
- பரிபவம் செய்யேல் - அலட்சியமாய் எண்ணி விடாதே
- பண்டு ஒரு நாள் - முன்பொரு காலத்திலே
- ஆலின் இலை - ஆலிலை மேல்
- வளர்ந்த - சயனத் திருக்கோலத்தில் பால முகுந்தனாக மிதந்து வந்தப் புராணங்களிலே சொல்லப்படுகிற
- சிறுக்கண் அவன் - அந்த சிறு பிள்ளை தான்
- இவன் - இவன் என்பதை உணர்வாய்
- மேல் எழப் பாய்ந்து - உன் மேல் ஒரு பாயலாகப் பாய்ந்து
- பிடித்துக் கொள்ளும் - உன்னைப் பிடித்துக் கொள்வான்
- வெகுளும் ஏல் - இவனுக்கு கோபம் வந்து விட்டால்
- மாலை - இந்த பெருமைப் படைத்த மஹா புருஷனை
- மதியாதே - சிறுவன் என்று எடை போடாதே!
- மா மதீ! – பூத்திருக்கின்ற பூரண நிலவே!
- மகிழ்ந்து ஓடி வா! - உகப்புடன் விரைந்தோடி வா
பௌர்ணமி நாளில் பூத்திருக்கின்ற பூரண நிலவே! என் மகனை சிறிய மழலை தானே என்று எளிமையாய் எண்ணி விடாதே. முன்னொரு காலத்தில், ஊழிப் பிரளயத்தின் போது, அண்டங்கள் அனைத்தையும் தன் வயிற்றினுள் பாதுகாப்பாக வைத்துக் கொண்டு, பங்கயப் பாத விரலை பவள இதழால் சுவைத்துக் கொண்டே பிரளய நீரில் ஆலிலை மேல் சயனத் திருக்கோலத்தில் பால முகுந்தனாக மிதந்து வந்த அந்த சிறுவன் தான் இவன். இவனுக்குக் கோபம் வந்துவிட்டால், உன்னை ஒரே பாய்ச்சலில் எட்டிப் பறித்து, எங்கும் அசைய விடாமல் பிடித்துக் கொள்வான். அதற்காக நீ அச்சம் கொள்ளவும் தேவையில்லை; என் மகன் உன்னுடன் அன்பாக விளையாடுவான் அதனால் இம்மஹா புருஷனை அவமதியாமல் விரைந்தோடி வா வெண்மதியே!
||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment