About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Tuesday, 12 December 2023

ஸ்ரீமத் பாகவத புராணம் - 28

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

பாண்டவரின் ஸ்வர்க ஆரோஹணம்

ஸ்கந்தம் 01

உலகிலுள்ள அசுரர்கள் அனைவரையும் பல யுத்தங்கள் மூலமாக அழித்து முக்தி அளித்து பூபாரம் குறைத்த பெருமான், அதற்காகத் தன் உதவிக்கு இறங்கிய பரிவாரத்தின் பாரத்தை, முள்ளை முள்ளால் எடுப்பது போல் குறைத்தார். பின்னர் தன் உடலையும் மறைத்து விட்டார். ஆம், உடலைத் தான். ஜ்யோதிஸாகக் கிளம்பி ஸ்ரீமத் பாகவதத்திற்குள் புகுந்து விட்டான் என்று சொல்கிறது மாஹாத்மியம்.


புராண லக்ஷணத்திற்காக ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரங்கள், ஸ்வர்க நரகாதி வர்ணனைகள் எல்லாம் சொல்லப்பட்டாலும், பக்தர்களின் மேன்மையும், க்ருஷ்ண லீலைகளையுமே ப்ரதானமாய்ச் சொல்கிறது ஸ்ரீ மத் பாகவதம்.

ஆம், பக்தர்களின் சரித்திரத்திலும், அவனது லீலைகளை விளக்கும் கதைகளிலும், பாடல்களிலும் அவன் பூரண ஸாந்நித்யத்தோடு விளங்குகிறான். அதைப் படிப்பவர், பாடுபவர் நெஞ்சங்களில் குடி கொண்டு அவர்களோடு ப்ரத்யக்ஷமாக விளையாடவும் துவங்குகிறான்.

தர்ம புத்ரர் கலி பிறந்து விட்டது, தானும் கிளம்ப வேண்டிய காலம் வந்தது என்று உணர்ந்தார். தன் பேரனான பரீக்ஷித்திற்கு முடி சூட்டினார். கார்ஹபத்யம் என்ற அக்னியை ஒரு இஷ்டி யாகம் செய்து தன் மேல் ஏற்றிக் கொண்டார். தினமும் அக்னி ஹோத்ரம் செய்து பாதுகாக்கபடும் மூவித அக்னிகளை துறவு பூணும் போது தன்னிடமே ஆவாஹனம் செய்து கொள்ள வேண்டும் என்பது விதி. பின்னர் அனைத்தையும் துறந்து மனத்தை அடக்கி ப்ரும்மத்தை உணர்ந்தார்.

மரவுரி உடுத்து, பேச்சை அடக்கி, உணவை விரித்து, தலை விரிகோலமாய், பார்ப்பவர்கள் பித்தென்று எண்ணும் படியாக ப்ரும்மத்தை த்யானம் செய்து கொண்டு அரண்மனையை விட்டு வெளியேறி வட திசை நோக்கிக் கிளம்பினார். மற்ற பாண்டவர்களும் மனத்தில் ஸ்ரீ கிருஷ்ணனையே தியானம் செய்து அண்ணனின் வழிச் சென்று நற்கதியை அடைந்தனர்.
த்ரௌபதியும் தன்னைத் தன் கணவர்கள் எதிர் பார்க்காமல் சென்றதை உணர்ந்து ஸ்ரீ க்ருஷ்ண த்யானம் செய்து அவரையே அடைந்தாள்.

இந்த பரம மங்கலமான சரித்திரத்தைச் சிரத்தையுடன் கேட்பவர்கள் பகவானிடம் பக்தி பெற்று மோக்ஷத்தை அடைவர்கள் என்று பலச்ருதி சொல்லப்பட்டிருக்கிறது.

வாழ்வாங்கு வாழ்ந்த போதிலும், மரணத்தை எவ்வாறு அமைதியுடன் எதிர்கொள்ள வேண்டும் என்று தெளிவாக உரைக்கிறது இந்நிகழ்வு.

பரீக்ஷித் பெரியோர்கள் அறிவுரைப்படி செவ்வனே ஆட்சி செய்து வந்தான். அவன் பிறந்த போது ஜோதிட வல்லுநர்கள் உரைத்த அத்தனை நற்குணங்களையும் கொண்டு பேரரசனாகத் திகழ்ந்தான். ஸ்வர்கபுரி போல் பூமியை மாற்றினான். தன் மாமன் உத்தரனின் மகளான இராவதியை மணந்து ஜனமேஜயன் முதலான நான்கு புதல்வர்களைப் பெற்றான்.

ஒரு சமயம் திக் விஜயம் செல்லும் போது, ஓரிடத்தில் குரூரமாக நீசன் போலிருந்த ஒருவன், அரச வேஷம் தாங்கி ஒரு காளையையும், பசுவையும் காலால் உதைப்பது கண்டு அவனைப் பிடித்து தண்டித்தான்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 83

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 53

உத்தரோ கோ³பதிர் கோ³ப்தா
ஜ்ஞாந க³ம்ய: புராதந:|
ஸ²ரீர பூ⁴த ப்⁴ருத்³ போ⁴க்தா
கபீந்த்³ரோ பூ⁴ரி த³க்ஷிண:||

  • 496. உத்தரோ - மீட்பவர். ஸம்சாரத்தின் பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியின் அடிமைத் தனத்தில் இருந்து பகவான் நம்மை விடுவிக்கிறார். 
  • 497. கோ³பதிர் - அனைத்து வேதங்களுக்குத் தலைவர். பக்தரின் வார்த்தைகளின் பாதுகாவலர். பசுக்களின் பாதுகாவலர். தாய் பூமியின் இறைவன். வான உலகத்தின் இறைவன். சுற்றி நகரும் அனைத்தையும் பாதுகாப்பவர்.
  • 498. கோ³ப்தா - கலைகளைக் காப்பாற்றுபவர். அனைத்து உயிரினங்களையும் பாதுகாக்கிறார்.
  • 499. ஜ்ஞாந க³ம்யஃ - அறிவினால் அடையப்படுபவர். அறிவினால் உணரப்பட வேண்டியவர். உலகத்தின் காவலர்.
  • 500. புராதநஹ - மற்றவர்களை விட மிகப் பழமையானவர். நித்யமானவர். ஆன்மீக அறிவின் மூலம் அடையக்கூடியவர், சடங்குகள் மற்றும் படிப்புகளின் கலவையால் அல்ல. அவர் காலத்தின் தடைகளுக்கு அப்பாற்பட்டவர்.

ஐந்தாம் நூறு திருநாமங்கள் நிறைவு

  • 501. ஸ²ரீர பூ⁴த ப்⁴ருத்³ - தத்துவங்களைச் சரீரமாகக் கொண்டு தாங்குபவர். அனைத்து உயிரினங்களின் அடிப்படை கட்டமைப்பான பூமி, நெருப்பு, நீர், காற்று மற்றும் ஈதர் ஆகிய 5 கூறுகளை ஆதரிக்கிறார்.
  • 502. போ⁴க்தா - உண்பவர். அநுபவிப்பவர். அனைவரையும் ஆதரிப்பவர். முழுமையான பேரின்பத்தை அனுபவிப்பவர்.
  • 503. கபீந்த்³ரோ - குரங்கு முகம் கொண்ட வானரங்களுக்குத் தலைவர். வராஹ அவதாரத்தில் ஒரு பெரிய பன்றியின் வடிவத்தைப் பெற்றிருந்தவர். மனித மனம் பெரும்பாலும் ஒரு குரங்குடன் ஒப்பிடப்படுகிறது, அது ஒரு எண்ணத்திலிருந்து மற்றொன்றுக்குத் தாவுகிறது. இந்த நாமத்தை தியானிப்பது, சுயம் மற்றும் இறைவனை உணருவதற்கு அவசியமான நமது எண்ணங்களை கட்டுப்படுத்த உதவும். 
  • 504. பூ⁴ரி த³க்ஷிணஹ - மிகுந்த தட்சணைகளை வாரி வழங்குபவர். ஏராளமான பரிசுகளை காணிக்கைகளாகவும் ஆசீர்வாதங்களாகவும் கொடுக்கிறார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 2.20

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||

ஸ்லோகம் - 2.20 

ந ஜாயதே ம்ரியதே வா கதா³சிந்
நாயம் பூ⁴த்வா ப⁴விதா வா ந பூ⁴ய:|
அஜோ நித்ய: ஸா²ஸ்²வதோ அயம் புராணோ 
ந ஹந்யதே ஹந்ய மாநே ஸ²ரீரே||

  • ந - என்றுமில்லை 
  • ஜாயதே - பிறப்பு 
  • ம்ரியதே - இறப்பு 
  • வா - அல்லது 
  • கதா³சிந் - எக்காலத்திலும் (இறந்த, நிகழ், எதிர்)
  • ந - என்றுமில்லை 
  • அயம் - இந்த ஆத்மா 
  • பூ⁴த்வா - தோன்றியது 
  • ப⁴விதா - தோன்றும் 
  • வா - அல்லது 
  • ந - கிடையாது 
  • பூ⁴யஹ - மீண்டும் தோன்றுவது 
  • அஜோ - பிறப்பற்றவன் 
  • நித்யஸ் - நித்தியமானவன்
  • ஸா²ஸ்²வதோ - என்றும் நிலைத்திருப்பவன் 
  • அயம் - இந்த 
  • புராணோ - மிகப் பழமையானவன் 
  • ந - இல்லை 
  • ஹந்யதே - கொல்லப்படுவது 
  • ஹந்யமாநே- கொல்லப்படும் போது 
  • ஸ²ரீரே - உடல்

இந்த ஆத்மாவிற்கு எந்த காலத்திலும் பிறப்போ, இறப்போ என்றும் இல்லை. அவன் தோன்றியதோ அல்ல, தோன்றுபவனும் அல்ல. மீண்டும் தோன்றுவதும் கிடையாது. அவன் பிறப்பற்றவன், நித்தியமானவன், என்றும் நிலைத்து இருப்பவன், மிகப் பழமையானவன். உடல் கொல்லப்படும் போதும், அவன் கொல்லப்படுவது இல்லை.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பாகவதம் - 1.3.18

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்ருதீயோ அத்⁴யாய꞉||
||பகவதஸ்² சதுர் விம்ஸ²த் யவதாராணாம் 
ஸம்க்ஷேபதோ வர்ணம்||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||மூன்றாம் அத்யாயம்||
||ஸ்ரீ பகவானது திரு அவதாரங்களைக் கூறுதல்||

ஸ்லோகம் - 1.3.18

சதுர் த³ஸ²ம் நாரஸிம்ஹம் 
பி³ப்⁴ரத்³ தை³த் யேந்த்³ர மூர்ஜிதம்|
த³தா³ர கரஜைர் வக்ஷஸ்
யேர காம் கட க்ருத்³ யதா²||

  • சதுர் த³ஸ²ம் - பதிநான்கவதாக 
  • நாரஸிம்ஹம் - நரஸிம்ஹ ஸ்வரூபத்தை
  • பி³ப்⁴ரத்³ - தரித்தவராய்
  • ஊர்ஜிதம் - மிகவும் பலம் வாய்ந்த
  • தை³த் யேந்த்³ரம் - ஹிரண்ய கசிபுவை
  • கட க்ருத்³ - பாய்முடைபவன்
  • ஏரகாம் யதா² - கோரையை கிழிப்பது போல்
  • கரஜைர் - கையில் உண்டான நகங்களால்
  • வக்ஷஸி த³தா³ர - மார்பை பிளந்தார்

பதினான்காவதாக, 'நரஸிம்ஹ அவதாரம்' எடுத்து, மிகுந்த பலம் வாய்ந்த அசுரத் தலைவனான இரண்யகசிபுவின் மார்பை, பாய் முடைபவன் கோரையைக் கிழிப்பது போல், தன் கை நகங்களால் கிழித்தார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.18

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

உலகின் உன்னத மனிதனைக் குறித்து 
நாரதரிடம் கேட்ட வால்மீகி 
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்

ஸ்லோகம் - 1.1.18

விஷ்ணு நா ஸத்³ருஸோ² வீர்யே 
ஸோமவத் ப்ரிய த³ர்ஸ²ந:|
காலாக்³நி ஸத்³ ருஸ²: க்ரோதே⁴ 
க்ஷமயா ப்ருதி² வீஸம:||

  • வீர்யே - பராக்கிரமத்தில்
  • விஷ்ணு நா - விஷ்ணுவுக்கு
  • ஸத்³ருஸோ² - ஸமமானவர்
  • ஸோமவத் - சந்திரன் போல்
  • ப்ரிய த³ர்ஸ²நஹ - ப்ரியமான பார்வையை உடையவர்
  • க்ரோதே⁴ - கோபத்தில்
  • காலாக்³நி ஸத்³ரு ஸ²ஹ் - ப்ரளய அக்னிக்கு சமமானவர் 
  • க்ஷமயா - பொறுமையில்
  • ப்ருதி²வீஸமஹ - பூமிக்கு ஸமமானவர்

அவன் விஷ்ணுவுக்கு ஒப்பான ஆற்றலையும், சோமனை {சந்திரனைப்} போன்ற இனிய தோற்றத்தையும், காலாக்னிக்கு ஒப்பான கோபத்தையும், பிருத்விக்கு {பூமிக்கு} இணையான பொறுமையையும் கொண்டிருக்கிறான்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

திவ்ய ப்ரபந்தம் - 64 - பெரியாழ்வார் திருமொழி - 1.5.1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் - 64 - போர் செய்ய, ரிஷபம் போலே நின்றவனே! 
பெரியாழ்வார் திருமொழி 
முதலாம் பத்து - ஐந்தாம் திருமொழி - முதலாம் பாசுரம்

உய்ய உலகு படைத்துண்ட மணிவயிறா* 
ஊழிதோறூழி பல ஆலின் இலையதன் மேல்* 
பைய உயோகு துயில் கொண்ட பரம்பரனே!* 
பங்கய நீள் நயனத்து அஞ்சன மேனியனே!*
செய்யவள் நின்னகலம் சேமமெனக் கருதி* 
செல்வு பொலி மகரக் காது திகழ்ந்திலக* 
ஐய! எனக்கொரு கால் ஆடுக செங்கீரை* 
ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே| (2)

  • உய்ய - மக்கள் வாழ்வதற்காக 
  • உலகு - உலகங்களைப்
  • படைத்து - ஸ்ருஷ்டித்து, 
  • உண்ட - பின்பு ப்ரளயம் வந்த போது அவற்றை உண்டு
  • மணி வயிறா! - திரு வயிற்றில் வைத்துக் காத்தவனே!
  • பல ஊழி ஊழி தொறு - பல பல யுகங்கள், கல்பங்கள் தோறும்
  • ஆலின் இலை அதன் மேல் - ஆலிலையின் மேல்
  • பைய - மெள்ள 
  • உயோகு துயில் கொண்ட - யோக நித்திரை செய்தருளின (உறங்கும்)
  • பரம்பரனே - பரமாத்மாவே!
  • பங்கயம் - தாமரை மலர் போன்று
  • நீள் - நீண்டிருக்கின்ற
  • நயனம் - அழகான திருக்கண்களையும்
  • அஞ்சனம் - மை போன்ற
  • மேனியனே ஐய - திருமேனியை டைய ஸர்வேச்வரனே!
  • செய்யவள் - செந்தாமரை மலரில் பிறந்த பிராட்டிக்கு இருப்பிடமான
  • நின் அகலம் - உன் திருமார்பானது 
  • சேமம் என கருதி - சேமமான இடம் என நினைத்துக் கொண்டு
  • செல்வு பொலி - செல்வப் பொலிவுடன்
  • மகரம் - அழகிய மகர வடிவக் குண்டலங்களோடு (காதணிகள்கூடின
  • காது - திருக்காதுகளானவை
  • திகழ்ந்து இலக - மிகவும் சிறந்து விளங்க
  • ஐய! எனக்கு - அப்பனே! எனக்காக
  • ஒரு கால் - ஒரு முறை
  • செங்கீரை ஆடுக - செங்கீரை ஆடியருள வேணும்
  • ஆயர்கள் - இடையர்களுக்காக 
  • போர் ஏறே - போர் செய்ய, ரிஷபம் போலே நின்ற கண்ணனே! 
  • ஆடுக ஆடுகவே - ஆடிக் காட்டுவாயாக

பரம்பொருளே! எண்ணிலடங்கா யுகங்களாக, உலகிலுள்ள உயிரினங்கள் மற்றும் உயிரற்ற பொருள்கள் அனைத்தையும் உருவாக்கியதோடு, பிரளய காலத்தின் போது அவைகளை ரட்சிக்கும் பொருட்டு அவற்றையெல்லாம் உண்டு, தன் அழகிய வயிற்றினுள் வைத்து பாதுகாத்து, பல கல்பங்கள் ஆலிலை மேல் மெல்ல சயனித்து அறிதுயில் கொண்ட முழுமுதற் கடவுளே! அகன்ற வெண்தாமரை மலரின் இதழ்களைப் போல் நீண்ட கண்களையுடைய கருமேக திருமேனியை கொண்டவனே! நின் சின்னஞ்சிறு காதுகளில், விளக்கமாய் அமைந்து, மிகுவாய் பொலிகின்ற அந்த அழகிய குண்டலங்கள் அசைந்து ஆடும் வண்ணம், உன் இதயத் தாமரையில், என்றும் நீக்கமற நிறைந்துள்ள திருமகளை எண்ணிக் கொண்டே, எங்கள் குலத் தலைவனே, எனக்கு ஒரு முறை செங்கீரை ஆடிக் காட்டுவாயாக. ஆயர் குலத்தில் தோன்றிய, போர் செய்ய வல்ல காளையைப் போன்றவனே ஒரே ஒரு முறை செங்கீரை ஆடுவாயாக! என்று கண்ணனை கெஞ்சுகிறாள் யசோதை! செங்கீரை எனபது குழந்தைகள் ஐந்து மாத தவழும் பருவத்தில் கை கால்களை அசைத்து ஆடும் ஒரு வகையான நடனம்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 017 - திருக்கண்ணபுரம் 5

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

017. திருக்கண்ணபுரம்
க்ருஷ்ணாரண்ய க்ஷேத்ரம் – நாகப்பட்டினம்
பதினாறாவது திவ்ய க்ஷேத்ரம்

இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 129 - 3

திருமங்கையாழ்வார்

051. திவ்ய ப்ரபந்தம் - 1685 - சௌரி ராஜனின் முடி மேல் துழாயை ஊது
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - நான்காம் திருமொழி - எட்டாம் பாசுரம்
நீல மலர்கள்* நெடு நீர் வயல் மருங்கில்*
சால மலர் எல்லாம்* ஊதாதே* வாள் அரக்கர் காலன்* 
கண்ணபுரத்து எம் பெருமான் கதிர் முடிமேல்*
கோல நறுந் துழாய்* கொண்டு ஊதாய் கோல் தும்பீ|

052. திவ்ய ப்ரபந்தம் - 1686 - கண்ணபிரான் சூடிய நறுந்துழாயை ஊது
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - நான்காம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
நந்தன் மதலை* நில மங்கை நல் துணைவன்*
அந்தம் முதல்வன்* அமரர்கள் தம் பெருமான்*
கந்தம் கமழ்* காயா வண்ணன் கதிர் முடிமேல்*
கொந்து நறுந் துழாய்* கொண்டு ஊதாய் கோல் தும்பீ|

053. திவ்ய ப்ரபந்தம் - 1687 - வண்டே! நாங்கள் பாட நீ துழாயை ஊது
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - நான்காம் திருமொழி - பத்தாம் பாசுரம்
வண்டு அமரும் சோலை* வயல் ஆலி நல் நாடன்*
கண்ட சீர் வென்றிக்* கலியன் ஒலி மாலை*
கொண்டல் நிற வண்ணன்* கண்ணபுரத்தானை*
தொண்டரோம் பாட* நினைந்து ஊதாய் கோல் தும்பீ|

054. திவ்ய ப்ரபந்தம் - 1688 - தனியேனை மாலை மதியம் சுடுகின்றதே!
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - ஐந்தாம் திருமொழி - முதலாம் பாசுரம்
தந்தை காலில் விலங்கு அற*  வந்து தோன்றிய தோன்றல் பின்* 
தமியேன் தன் சிந்தை போயிற்றுத்* 
திருவருள் அவனிடைப் பெறும் அளவு இருந்தேனை*
அந்திகாவலன் அமுது உறு பசுங் கதிர்* அவை சுட அதனோடும்*
மந்தமாருதம் வன முலை தடவந்து* வலிசெய்வது ஒழியாதே|

055. திவ்ய ப்ரபந்தம் - 1689 - இருள் பரவி விட்டதே! யான் என் செய்வேன்?
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - ஐந்தாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
மாரி மாக் கடல் வளைவணற்கு இளையவன்* வரை புரை திருமார்வில்*
தாரின் ஆசையில் போயின நெஞ்சமும்* தாழ்ந்தது ஓர் துணை காணேன்*
ஊரும் துஞ்சிற்று உலகமும் துயின்றது* ஒளியவன் விசும்பு இயங்கும்*
தேரும் போயிற்று திசைகளும் மறைந்தன* செய்வது ஒன்று அறியேனே|

056. திவ்ய ப்ரபந்தம் - 1690 - அஞ்சாதே என்று சொல்ல யாரும் இல்லையே!
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - ஐந்தாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
ஆயன் மாயமே அன்றி மற்று என் கையில்* வளைகளும் இறை நில்லா*
பேயின் ஆர் உயிர் உண்டிடும் பிள்ளை* நம் பெண் உயிர்க்கு இரங்குமோ?*
தூய மா மதிக் கதிர் சுட துணை இல்லை* இணை முலை வேகின்றதால்*
ஆயன் வேயினுக்கு அழிகின்றது உள்ளமும்* அஞ்சேல் என்பார் இலையே|

057. திவ்ய ப்ரபந்தம் - 1691 - தென்றல் நின்றால் என் உயிர் நிற்கும்
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - ஐந்தாம் திருமொழி - நான்காம் பாசுரம் 
கயம் கொள் புண் தலைக் களிறு உந்து வெம்திறல்* 
கழல் மன்னர் பெரும் போரில்*
மயங்க வெண் சங்கம் வாய் வைத்த மைந்தனும்* 
வந்திலன் மறி கடல் நீர்*
தயங்கு வெண் திரைத் திவலை நுண் பனி எனும்* 
தழல் முகந்து இள முலைமேல்*
இயங்கும் மாருதம் விலங்கில் என் ஆவியை* எனக்கு எனப் பெறலாமே|

058. திவ்ய ப்ரபந்தம் - 1692 - தோழி! அந்தி வருகின்றதே! என் செய்வேன்
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - ஐந்தாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்
ஏழு மா மரம் துளைபடச் சிலை வளைத்து*
இலங்கையை மலங்குவித்த ஆழியான்* 
நமக்கு அருளிய அருளொடும்* பகல் எல்லை கழிகின்றதால்*
தோழி நாம் இதற்கு என் செய்தும்? துணை இல்லை* சுடர் படு முதுநீரில்*
ஆழ ஆழ்கின்ற ஆவியை அடுவது ஓர்* அந்தி வந்து அடைகின்றதே|

059. திவ்ய ப்ரபந்தம் - 1693 - தூக்கமே வரவில்லை; இரவு நீள்கிறதே!
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - ஐந்தாம் திருமொழி - ஆறாம் பாசுரம்
முரியும் வெண் திரை முது கயம் தீப்பட* முழங்கு அழல் எரி அம்பின்*
வரி கொள் வெம் சிலை வளைவித்த மைந்தனும்* வந்திலன் என் செய்கேன்?*
எரியும் வெம் கதிர் துயின்றது* பாவியேன் இணை நெடுங் கண் துயிலா*
கரிய நாழிகை ஊழியின் பெரியன* கழியும் ஆறு அறியேனே|

060. திவ்ய ப்ரபந்தம் - 1694 - இராப்பொழுது துன்புறுத்துகிறதே!
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - ஐந்தாம் திருமொழி - ஏழாம் பாசுரம்
கலங்க மாக் கடல் கடைந்து அடைத்து* 
இலங்கையர் கோனது வரை ஆகம் மலங்க* 
வெம் சமத்து அடு சரம் துரந்த* எம் அடிகளும் வாரானால்*
இலங்கு வெம் கதிர் இள மதி அதனொடும்* விடை மணி அடும்* 
ஆயன் விலங்கல் வேயினது ஓசையும் ஆய்* இனி விளைவது ஒன்று அறியேனே|

061. திவ்ய ப்ரபந்தம் - 1695 - தலைவன் வரவில்லை: இதனினும் கொடிய வினை இல்லை
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - ஐந்தாம் திருமொழி - எட்டாம் பாசுரம்
முழுது இவ் வையகம் முறை கெட மறைதலும்* முனிவனும் முனிவு எய்தி*
மழுவினால் மன்னர் ஆர் உயிர் வவ்விய* மைந்தனும் வாரானால்*
ஒழுகு நுண் பனிக்கு ஒடுங்கிய பேடையை* அடங்க அம் சிறை கோலி*
தழுவும் நள் இருள் தனிமையின் கடியது ஓர்* கொடு வினை அறியேனே|

062. திவ்ய ப்ரபந்தம் - 1696 - பிரிவுத் துயர் என்னைக் கொல்கின்றதே!
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - ஐந்தாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
கனம் செய் மா மதிள் கணபுரத்தவனொடும்* கனவினில் அவன் தந்த*
மனம் செய் இன்பம் வந்து உள் புக வெள்கி* என் வளை நெக இருந்தேனை*
சினம் செய் மால் விடைச் சிறு மணி ஓசை* என் சிந்தையைச் சிந்துவிக்கும்*
அனந்தல் அன்றிலின் அரி குரல்* பாவியேன் ஆவியை அடுகின்றதே|

063. திவ்ய ப்ரபந்தம் - 1697 - இவற்றைப் படிப்போர் தேவரோடு சேர்வர்
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - ஐந்தாம் திருமொழி - பத்தாம் பாசுரம்
வார் கொள் மென் முலை மடந்தையர்* தடங்கடல் வண்ணனைத் தாள் நயந்து*
ஆர்வத்தால் அவர் புலம்பிய புலம்பலை* அறிந்து முன் உரை செய்த*
கார் கொள் பைம் பொழில் மங்கையர் காவலன்* கலிகன்றி யொலி வல்லார்*
ஏர்கொள் வைகுந்த மாநகர் புக்கு* இமையரோடும் கூடுவரே|

064. திவ்ய ப்ரபந்தம் - 1698 - திருக்கண்ணபுரம் தொழுதால் உய்வுண்டு
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - ஆறாம் திருமொழி - முதலாம் பாசுரம்
தொண்டீர் உய்யும் வகை கண்டேன்* துளங்கா அரக்கர் துளங்க* 
முன் திண் தோள் நிமிரச் சிலை வளையச்* சிறிதே முனிந்த திருமார்வன்*
வண்டு ஆர் கூந்தல் மலர் மங்கை* வடிக் கண் மடந்தை மா நோக்கம் கண்டான்*
கண்டுகொண்டு உகந்த* கண்ணபுரம் நாம் தொழுதுமே|

065. திவ்ய ப்ரபந்தம் - 1699 - கருட வாகனனை நாம் தொழுவோம்
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - ஆறாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
பொருந்தா அரக்கர் வெம் சமத்துப்* பொன்ற அன்று புள் ஊர்ந்து*
பெருந் தோள் மாலி தலை புரளப்* பேர்ந்த அரக்கர் தென் இலங்கை*
இருந்தார் தம்மை உடன்கொண்டு* அங்கு எழில் ஆர் பிலத்துப் புக்கு ஒளிப்ப*
கருந் தாள் சிலை கைக்கொண்டான் ஊர்* கண்ணபுரம் நாம் தொழுதுமே|

066. திவ்ய ப்ரபந்தம் - 1700 - இராவணனை வதைத்தவனை நாம் தொழுவோம்
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - ஆறாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
வல்லி இடையாள் பொருட்டாக* மதிள் நீர் இலங்கையார் கோவை*
அல்லல் செய்து வெம் சமத்துள்* ஆற்றல் மிகுத்த ஆற்றலான்*
வல் ஆள் அரக்கர் குலப்பாவை வாட* முனி தன் வேள்வியை*
கல்விச் சிலையால் காத்தான் ஊர்* கண்ணபுரம் நாம் தொழுதுமே|

067. திவ்ய ப்ரபந்தம் - 1701 - சேதுபந்தனம் செய்தவனைத் தொழுவோம்
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - ஆறாம் திருமொழி - நான்காம் பாசுரம் 
மல்லை முந்நீர் அதர்பட* வரி வெம் சிலை கால் வளைவித்து*
கொல்லை விலங்கு பணிசெய்ய* கொடியோன் இலங்கை புகல் உற்று*
தொல்லை மரங்கள் புகப் பெய்து* துவலை நிமிர்ந்து வான் அணவ*
கல்லால் கடலை அடைத்தான் ஊர்* ண்ணபுரம் நாம் தொழுதுமே|

068. திவ்ய ப்ரபந்தம் - 1702 - மன்மதனின் தந்தையை நாம் தொழுவோம்
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - ஆறாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்
ஆமை ஆகி அரி ஆகி* அன்னம் ஆகி* 
அந்தணர் தம் ஓமம் ஆகி ஊழி ஆகி* உவரி சூழ்ந்த நெடும் புணரி* 
முன் சேம மதிள் சூழ் இலங்கைக் கோன்* சிரமும் கரமும் துணித்து* 
காமன் பயந்தான் கருதும் ஊர்* கண்ணபுரம் நாம் தொழுதுமே|

069. திவ்ய ப்ரபந்தம் - 1703 - மனமே! வருந்தாதே: கண்ணபுரம் தொழுவோம்
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - ஆறாம் திருமொழி - ஆறாம் பாசுரம்
வருந்தாது இரு நீ மட நெஞ்சே* நம் மேல் வினைகள் வாரா* 
முன் திருந்தா அரக்கர் தென் இலங்கை* செந் தீ உண்ண சிவந்து ஒரு நாள்*
முன் பெருந் தோள் வாணற்கு அருள் புரிந்து* பின்னை மணாளன் ஆகி* 
கருந் தாள் களிறு ஒன்று ஒசித்தான் ஊர்* கண்ணபுரம் நாம் தொழுதுமே|

070. திவ்ய ப்ரபந்தம் - 1704 - விபீடணனுக்கு அருளியவனைத் தொழுவோம்
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - ஆறாம் திருமொழி - ஏழாம் பாசுரம்
இலை ஆர் மலர்ப் பூம் பொய்கைவாய்* முதலை தன்னால் அடர்ப்புண்டு*
கொலை ஆர் வேழம் நடுக்கு உற்றுக் குலைய* அதனுக்கு அருள் புரிந்தான்*
அலை நீர் இலங்கைத் தசக்கிரீவற்கு* இளையோற்கு அரசை அருளி* 
முன் கலை மாச் சிலையால் எய்தான் ஊர்* கண்ணபுரம் நாம் தொழுதுமே|

071. திவ்ய ப்ரபந்தம் - 1705 - மயங்காதே மனமே! கண்ணபுரம் தொழுவோம்
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - ஆறாம் திருமொழி - எட்டாம் பாசுரம்
மால் ஆய் மனமே அருந் துயரில்* வருந்தாது இரு நீ வலி மிக்க*
கால் ஆர் மருதும் காய் சினத்த கழுதும்* கத மாக் கழுதையும்*
மால் ஆர் விடையும் மத கரியும்* மல்லர் உயிரும் மடிவித்து*
காலால் சகடம் பாய்ந்தான் ஊர்* கண்ணபுரம் நாம் தொழுதுமே|

072. திவ்ய ப்ரபந்தம் - 1706 - கண்ணனின் கண்ணபுரம் தொழுவோம்
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - ஆறாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
குன்றால் மாரி பழுது ஆக்கி* கொடி ஏர் இடையாள் பொருட்டாக*
வன் தாள் விடை ஏழ் அன்று அடர்த்த* வானோர் பெருமான் மா மாயன்*
சென்றான் தூது பஞ்சவர்க்கு ஆய்த்* திரி கால் சகடம் சினம் அழித்து*
கன்றால் விளங்காய் எறிந்தான் ஊர்* கண்ணபுரம் நாம் தொழுதுமே|

073. திவ்ய ப்ரபந்தம் - 1707 - இவற்றைப் பாடுக: தேவர்களும் வணங்குவர்
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - ஆறாம் திருமொழி - பத்தாம் பாசுரம்
கரு மா முகில் தோய் நெடு மாடக்* கண்ணபுரத்து எம் அடிகளை*
திரு மா மகளால் அருள்மாரி* செழுநீர் ஆலி வள நாடன்*
மருவு ஆர் புயல் கைக் கலிகன்றி* மங்கை வேந்தன் ஒலி வல்லார்*
இரு மா நிலத்துக்கு அரசு ஆகி* இமையோர் இறைஞ்ச வாழ்வாரே|

074. திவ்ய ப்ரபந்தம் - 1708 - திருமகள் கணவன் உறைவிடம் கண்ணபுரம்
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - ஏழாம் திருமொழி - முதலாம் பாசுரம்
வியம் உடை விடை இனம்* உடைதர மட மகள்*
குயம் மிடை தட வரை* அகலம் அது உடையவர் *
நயம் உடை நடை அனம்* இளையவர் நடை பயில்*
கயம் மிடை கணபுரம் * அடிகள் தம் இடமே|

075. திவ்ய ப்ரபந்தம் - 1709 - கண்ணபிரானின் இடம் கண்ணபுரம்
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - ஏழாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
இணை மலி மருதினொடு* எருதிற இகல் செய்து*
துணை மலி முலையவள்* மணம் மிகு கலவியுள் *
மணம் மலி விழவினொடு* அடியவர் அளவிய*
கணம் மலி கணபுரம் * அடிகள் தம் இடமே|

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

லீலை கண்ணன் கதைகள் - 74

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

சம்பராசுரன் வதம்|

பிரத்யும்னனின் அழகில் மயங்கி மாயாதேவியும் அவனை காதலிக்க ஆரம்பித்தாள். அதை அவள் எத்தனையோ வழிகளில் பிரத்யும்னனுக்குத் தெரிவித்தாள். அதைக் கேட்ட பிரத்யும்னன், "என்ன அம்மா, இப்படி இருக்கிறாய், இது உனக்கே அழகாக இருக்கிறதா?" என்று கேட்டான்.


அதற்கு அவள், "சுவாமி! நீங்கள் என்னுடைய மகன் அல்ல. நீங்கள் கிருஷ்ணரின் மகன். மன்மதனாகிய நீங்கள் தாம் இப்படிப் பிறந்து இருக்கிறீர்கள். உங்கள் மனைவி ரதியாக நான் தான் இப்படி பிறந்துளேன். நீங்கள் குழந்தையாக இருந்த போது, சம்பராசுரன் உங்களை கடலில் தூக்கி எறிந்தான். உங்களை ஒரு மீன் விழுங்க அதன் வயிற்றில் இருந்து நீங்கள் அகப்பட்டீர்கள். நீங்கள் இந்த அசுரனை கொல்ல வேண்டும். இந்த வித்தையை அவனும் அறிந்திருக்கிறான். மகரமாயா என்னும் வித்தையின் ரகசிய மந்திரங்களை அவள் அவனுக்குச் சொல்லிக் கொடுத்தாள்.

பிறகு பிரத்யும்னன் சம்பராசுரனிடம் சென்று அவளைக் கோபம் மூட்டுவதற்காக அவனைத் தகாத முறையில் பேசினான், வசவுகளைத் தாங்க முடியாமல், பிரத்யும்னனைக் கொல்லுவதற்க்காகச் சம்பராசுரன் கதையை எடுத்துக் கொண்டு வெளியே வந்தான். ஆனால் தன் கதையைக் கொண்டு பிரத்யும்னன் சம்பராசுரனின் கதையை உடைத்து எறிந்தான்.

உடனே சம்பராசுரன் மாயப் போர் நடத்த ஆரம்பித்தான். அவன் ஆகாயத்தில் மறைந்து பிரத்யும்னன் மீது அம்பு மழை பொழிய ஆரம்பித்தான். இதைப் பிரத்யும்னன் ஏற்கனவே எதிர் பார்த்தான். ஆதலால், அவனும் மறைந்து தன வாளின் பலமான வீச்சினால் சம்பராசுரனின் தலையைத் துண்டித்தான். ஆகாயத்தில் பறக்கக் கூடிய சக்தி பெற்ற மாயாதேவி, பிரத்யும்னனைத் தூக்கிக் கொண்டு துவாரகை சென்றாள்.

கிருஷ்ணரைப் போலவே தோற்றமளித்த பிரத்யும்னனைக் கண்டு எல்லோரும் வியப்படைந்தார்கள். அவன் கிருஷ்ணர் தான் என்று நினைத்து, உடன் இருக்கும் பெண் யார் என்று வியந்தார்கள். அவன் கிருஷ்ணன் அல்ல என்று புரிந்து கொள்ள அவர்களுக்கு சிறிது நேரம் பிடித்தது. "யார் இந்த இளைஞன்" என்று எல்லோரும் ஒருவரை ஒருவர் கேட்டுக் கொண்டார்கள்.

ருக்மிணிக்கும் குழப்பமாகத் தான் இருந்தது, "எத்தனையோ வருடங்களுக்கு முன்பு நான் என் குழந்தையை இழந்தேன், இன்று அவன் உயிரோடு இருந்தால், இந்த வயதிலும், தோற்றத்திலும் தான் இருப்பான். இவன் எனக்குப் பிறந்த மகனாகத் தான் இருக்க வேண்டும். ஏனெனில் இவன் மீது எனக்கு ஒரு தனி பாசம் ஏற்படுகிறது" என்று நினைத்தாள். அப்பொழுது நாரதர் அங்கே தோற்றமளித்து, எல்லா சந்தேகங்களையும் தீர்த்து வைத்தார். வெகு நாட்களாகக் காணாமற் போயிருந்த கிருஷ்ணரின் மகன் மீண்டும் கிடைத்தது குறித்து எல்லோரும் மகிழ்ச்சியில் குதூகலித்தனர். மாண்டவன் மீண்டது போலவே அவர்கள் நினைத்தார்கள்.

கிருஷ்ணர் தமது மகன் என்று தெரிந்து கொண்டதும் அவனை கட்டி அணைத்துக் கொண்டார். பிரத்யும்னன் அவனது தாய் தந்தையான கிருஷ்ணர் ருக்மிணி கால்களில் விழுந்து வணங்கினான்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் - எண்பதாவது வார்த்தை

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

080 தோள் காட்டி வந்தேனோ பட்டரைப் போலே|

அந்நாட்களில், ஸ்ரீரங்கத்து எம்பெருமான் பல்லக்கில் வீதி உலா வரும் பொழுது, முன்னால் சவுக்கால் விதியை அடித்து சுத்தப் படுத்திக் கொண்டே இருவர் வருவர். அவர்களின் செயலால், முன் நிற்கும் கூட்டமும் விலகும். சில சமயங்களில், எதிர்பாராமல், அவ்வடி பக்தர்கள் மேலும் படக்கூடும். 


ஒரு முறை, எம்பெருமான் பல்லக்கில் வீதி உலா வரும்பொழுது, அவ்வாறு சவுக்கால் விதியை அடித்து சுத்தப் படுத்தி வருகிறார்கள் இருவர்.

அவ்வாறு சவுக்கை அடிக்கும் பொழுது, அது பராசர பட்டரின் தோள் பட்டையில் அடியாக விழ, பட்டரின் சீடர்கள் சவுக்கு வைத்திருப்பவரை கடிந்து கொண்டனர். தெரியாமல் அடித்து விட்டதாக அடித்தவன் பட்டரிடம் மன்னிப்புக் கேட்க, பட்டரோ, “பரவாயில்லை. எம்பெருமானுக்கான கைங்கரியத்தின் போது விழுந்த அடி. மற்றொரு தோளிலும் விழவில்லையே என்றே நான் வருந்துகிறேன்”, என வருந்திக் கூறினாராம். பொறுமையும் மன்னிக்கும் குணமும் ஸ்ரீ வைஷ்ணவனின் குணமாக இருக்க வேண்டும்.

இதற்கு மற்றொரு விளக்கமும் சொல்வார்கள். 

எம்பெருமானுக்கு பல்லக்குத் தூக்கி சேவை புரிந்து வந்தவர் ஒருவரின் அந்திமக் காலம். அவர் உயிர் போகும் நேரம் எம தூதர்களுக்கும், விஷ்ணு தூதர்களுக்கும் மேலே தர்க்கம் நடக்கிறதாம்.

எமதூதர்கள் அவர் உயிரை எமலோகத்திற்கு எடுத்துச் செல்லக் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

விஷ்ணு தூதர்களுக்கோ, எம்பெருமானுக்கு இவர் பல்லக்குத் தூக்கி ஆற்றிய பணியால், இவரை வைகுண்டம் அழைத்துச் செல்ல இருக்கின்றனர்.

இதை அறிந்தவர். "அடடா! எம்பெருமானுக்கு நான் ஆற்றிய இந்த சேவைக்கே இப்படி ஒரு பயனா" என வியந்து, பராசர பட்டரிடம் தனக்கு பஞ்ச சமஸ்காரம் செய்ய வேண்டினார்.

அதற்கு பட்டர், அதற்கான நேரம் இல்லை என்று கூறி, பல்லக்குத் தூக்கிய வைஷ்ணவரின் தோள்கள் காய்த்துப் போயிருப்பதைக் காட்டி, இதுவே பஞ்ச சமஸ்காரம் உமக்கு என்றார்.

திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, "அப்படி தோள்காட்டி சொன்ன பட்டரைப் போல நான் சொன்னேனா? பட்டர்பிரானைப் போல் ஸ்ரீ வைஷ்ணவ குணத்துடன் வாழ்ந்தேனா? இல்லையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பாகவத புராணம் - 27

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

கண்ணனின் மறைவு

ஸ்கந்தம் 01

தர்மபுத்ரர் பயங்கரமான துர்நிமித்தங்களைக் கண்டார்.

மரம் செடி கொடிகள் அந்தந்த பருவங்களின் பலனைத் தரவில்லை. மக்களிடையே துர்குணங்களும் சண்டை சச்சரவுகளும் மிகுந்தன. கலியுகத்தின் அறிகுறியாக மக்கள் பொறாமை கொண்டு, சூழ்ச்சிகளில் ஈடுபட்டனர்.


இவற்றைக் கண்டு யுதிஷ்டிரர் மிகவும் கவலை கொண்டு பீமனிடம் சொன்னார்.

"பீமா, நாரதர் சொன்ன காலம் வந்து விட்டதோ என்று எண்ணுகிறேன். துவாரகைக்குச் சென்ற அர்ஜுனனை ஏழு மாதங்கள் ஆகியும் காணவில்லை. அங்கிருந்து செய்திகளும் இல்லை. எனக்கு ஏராளமான துர்நிமித்தங்கள் தென்படுகின்றன. இடது தோள், துடை, கண் இவை துடிக்கின்றன. பசுக்கள் இடமாகச் சுற்றுகின்றன.  கழுதைகள் வலமாகச் சுற்றுகின்றன. புறாவைப் பார்த்தால் யம தூதனோ என்று தோன்றுகிறது. கோட்டானும், காக்கைகளும் விடாமல் அலறுகின்றன. நாய்கள் அரசனான என்னைப் பார்த்து தைரியமாய்க் குலைக்கின்றன. திக்குகள் தெளிவின்றி உள்ளன. பூமி ஆடுகிறது. புழுதிக் காற்று வீசுகிறது. சூரியன் ஒளி இழந்து காணப்படுகிறது. கிரகங்கள் ஒன்றுக்கு ஓன்று மோதிக் கொள்கின்றன. நதிகளும் நீர்நிலைகளும் கலங்கி இருக்கின்றன. பூமா தேவிக்கு பகவானின் சரண சம்மந்தம் விடுபட்டு விட்டதா? கன்றுகள் பால் குடிப்பதில்லை. பசுக்களும் கறப்பதில்லை. தெய்வச் சிலைகள் அழுவதைப் போல் இருக்கின்றன. ஒருவர் மனதிலும் மகிழ்ச்சி இல்லை." என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, சபைக்குள் ஒருவர் நுழைந்தார்.

கண்கள் பஞ்சடைந்து, களை இழந்த முகத்துடன், தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு தள்ளாடி தள்ளாடி வந்தார். அர்ஜுனனைப் போல் ஜாடை இருந்தது. அடையாளம் தெரியவில்லை. 

அருகில் வந்ததும் பார்த்தால், அர்ஜுனனே தான் அது.

அதிர்ந்து போனார்கள் அனைவரும்.

"என்னாச்சு அர்ஜுனா?" ஓடி வந்து அவன் கரங்களைப் பற்றி முகத்தை நிமிர்த்தினான் பீமன். 

அவன் கண்களில் ஆறாகக் கண்ணீர். முகம் அழுதழுது வீங்கிப் போயிருந்தது.

"விஜயா, தேர் எங்கே? படைகள் எங்கே? நடந்தா வருகிறாய்? கண்ணன் எப்படி இருக்கிறான்? துவாரகையில் எல்லோரும் நலமா? உன்னை யாராவது அவமதித்தார்களா? ஏதாவது ப்ரதிக்ஞை செய்து விட்டு அதை மீறினாயா? பெரியோர்கள் பசியோடு இருக்க நீ முதலில் சாப்பிட்டாயா? நல்ல பெண்டிரிடம் தவறாக நடந்தாயா? யாரிடமாவது தோற்று விட்டாயா? துவாரகையையும் கண்ணனையும் விட்டு வந்த பிரிவாற்றாமையா? வேறேதும் கெட்ட செய்தி இல்லையே?" அடுக்கடுக்காய்க் கேள்விகள்.

தலையில் அடித்துக் கொண்டு ஓவென்று கதறி அழுது கொண்டே தரையில் அமர்ந்தான் அர்ஜுனன்.

அழுது கொண்டே, "நம் உறவினன் என்று நினைத்த அந்த பகவான் கண்ணன் நம்மை ஏமாற்றிவிட்டு இவ்வுலகை விட்டுக் கிளம்பி விட்டார்."

"ஹா" அதிர்ந்தனர் அனைவரும்.

"இவ்வளவு நாட்களாக என்னிடம் இருந்த வீரம், தைரியம், தேஜஸ் எல்லாம் அவர் என்னருகில் இருந்தவரை இருந்தது. அவரோடு எல்லாம் போய் விட்டது. கண்ணனாலேயே நான் தேவ லோகம் வரை சென்று வந்தேன். இந்திரனை வென்று காண்டவ வனத்தை அக்னிக்குத் தந்தேன். உயர்ந்த இந்திரப்ரஸ்தம் நமக்குக் கிடைத்தது. எல்லா அரசர்களும் கப்பம் செலுத்தினார்கள். பீமன் அண்ணா ஜராசந்தனைக் கொன்றதும் கண்ணனால் தான். யுத்தத்தின் போது நம்முடனேயே இருந்தானே.  குதிரைகளை எல்லாம் குளிப்பாட்டினான். வனவாசத்தின் போதும், அக்ஞாத வாசத்தின்போதும் எவ்வளவு இடர்கள். அத்தனைக்கும் துணை நின்றானே. யுத்தம் முடியும் வரை பகவானான அவன் தேர்த் தட்டிலேயே உறங்கினான். இவ்வளவு நாள் வில்லுக்கொரு விஜயன் என்று நான் பெயர் வாங்கியதெல்லாம் கண்ணன் என்னருகில் இருந்ததால் தானே! வஞ்சித்து விட்டானே!" ஒவ்வொரு நிகழ்வையும் சொல்லிச் சொல்லி பகவான் காத்ததைச் சொல்லி அழுதான் அர்ஜுனன்.

"கண்ணன் கிளம்பியதும் வரும் வழியில் சாதாரணமான தீயோர் படையால் தோற்கடிக்கப் பட்டேன். அதே தேர், அதே காண்டீபம், அதே குதிரைகள், சண்டையிட்டதும் அதே அர்ஜுனனான நானே தான். ஆனால், கண்ணன் இல்லை என்றதும் என் பராக்ரமம் அழிந்து விட்டதே. துவாரகையில் அனைவரும் அந்தணர் சாபத்தால் அறிவிழந்து, கள்ளைக் குடித்து, மனம் தடுமாறி, கோரைப் பற்களால் கடித்துக் கொண்டு இறந்தனர். நாலைந்து பேர் தான் எஞ்சி இருக்கின்றனர். பலமற்றவர்களை பலம் பொருந்தியவர்கள் வெல்வார்கள். பலமுள்ளவர்களோ தங்களுக்குள்ளேயே அடித்துக் கொள்வார்கள். நம்மைப் பயன்படுத்தி யுத்தத்தின் மூலம் பூமியின் பாரத்தை பகவான் குறைத்தார். பகவானின் குலமான இடையர் குலத்தை எவரால் அழிக்க முடியும்? அதனால், அவர்களுக்குள்ளேயே சண்டையிடச் செய்து அழித்து விட்டார். "கண்ணன், என்னை, அர்ஜுனா, பார்த்தா, நண்பா, விஜயா என்றெல்லாம் ஆசை ஆசையாய்க் கூப்பிடுவானே. அவன் குரல் என் காதில் கேட்டுக் கொண்டே இருக்கிறதே" என்று பலவாறு புலம்பி அழுதான்.

இவ்விஷயங்களை மைத்ரேயர் ஏற்கனவே விதுரரிடம் சொல்லி இருந்தார். எனினும் விதுரர் துக்ககரமான இச்செய்தியைச் சொல்ல தைரியமற்றுப் போய் சொல்லாமல் விட்டு விட்டார்.

நாரதரும் ஒரு சூசனை செய்துவிட்டுப் போனார்.

அனைவரும் சொல்லொணாத துயரில் மூழ்கினர்.

எவ்வளவு பேசினாலும், விதுரர் உற்சாகமிழந்து காணப்பட்டதையும், பின்னர் த்ருதராஷ்ட்ரனும், காந்தாரியும் கிளம்பியதையும், நாரதர் சொன்னதையும் தொடர்பு படுத்திப் பார்த்தார் தர்மபுத்ரர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்