About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Tuesday, 12 December 2023

ஸ்ரீமத் பாகவத புராணம் - 28

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

பாண்டவரின் ஸ்வர்க ஆரோஹணம்

ஸ்கந்தம் 01

உலகிலுள்ள அசுரர்கள் அனைவரையும் பல யுத்தங்கள் மூலமாக அழித்து முக்தி அளித்து பூபாரம் குறைத்த பெருமான், அதற்காகத் தன் உதவிக்கு இறங்கிய பரிவாரத்தின் பாரத்தை, முள்ளை முள்ளால் எடுப்பது போல் குறைத்தார். பின்னர் தன் உடலையும் மறைத்து விட்டார். ஆம், உடலைத் தான். ஜ்யோதிஸாகக் கிளம்பி ஸ்ரீமத் பாகவதத்திற்குள் புகுந்து விட்டான் என்று சொல்கிறது மாஹாத்மியம்.


புராண லக்ஷணத்திற்காக ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரங்கள், ஸ்வர்க நரகாதி வர்ணனைகள் எல்லாம் சொல்லப்பட்டாலும், பக்தர்களின் மேன்மையும், க்ருஷ்ண லீலைகளையுமே ப்ரதானமாய்ச் சொல்கிறது ஸ்ரீ மத் பாகவதம்.

ஆம், பக்தர்களின் சரித்திரத்திலும், அவனது லீலைகளை விளக்கும் கதைகளிலும், பாடல்களிலும் அவன் பூரண ஸாந்நித்யத்தோடு விளங்குகிறான். அதைப் படிப்பவர், பாடுபவர் நெஞ்சங்களில் குடி கொண்டு அவர்களோடு ப்ரத்யக்ஷமாக விளையாடவும் துவங்குகிறான்.

தர்ம புத்ரர் கலி பிறந்து விட்டது, தானும் கிளம்ப வேண்டிய காலம் வந்தது என்று உணர்ந்தார். தன் பேரனான பரீக்ஷித்திற்கு முடி சூட்டினார். கார்ஹபத்யம் என்ற அக்னியை ஒரு இஷ்டி யாகம் செய்து தன் மேல் ஏற்றிக் கொண்டார். தினமும் அக்னி ஹோத்ரம் செய்து பாதுகாக்கபடும் மூவித அக்னிகளை துறவு பூணும் போது தன்னிடமே ஆவாஹனம் செய்து கொள்ள வேண்டும் என்பது விதி. பின்னர் அனைத்தையும் துறந்து மனத்தை அடக்கி ப்ரும்மத்தை உணர்ந்தார்.

மரவுரி உடுத்து, பேச்சை அடக்கி, உணவை விரித்து, தலை விரிகோலமாய், பார்ப்பவர்கள் பித்தென்று எண்ணும் படியாக ப்ரும்மத்தை த்யானம் செய்து கொண்டு அரண்மனையை விட்டு வெளியேறி வட திசை நோக்கிக் கிளம்பினார். மற்ற பாண்டவர்களும் மனத்தில் ஸ்ரீ கிருஷ்ணனையே தியானம் செய்து அண்ணனின் வழிச் சென்று நற்கதியை அடைந்தனர்.
த்ரௌபதியும் தன்னைத் தன் கணவர்கள் எதிர் பார்க்காமல் சென்றதை உணர்ந்து ஸ்ரீ க்ருஷ்ண த்யானம் செய்து அவரையே அடைந்தாள்.

இந்த பரம மங்கலமான சரித்திரத்தைச் சிரத்தையுடன் கேட்பவர்கள் பகவானிடம் பக்தி பெற்று மோக்ஷத்தை அடைவர்கள் என்று பலச்ருதி சொல்லப்பட்டிருக்கிறது.

வாழ்வாங்கு வாழ்ந்த போதிலும், மரணத்தை எவ்வாறு அமைதியுடன் எதிர்கொள்ள வேண்டும் என்று தெளிவாக உரைக்கிறது இந்நிகழ்வு.

பரீக்ஷித் பெரியோர்கள் அறிவுரைப்படி செவ்வனே ஆட்சி செய்து வந்தான். அவன் பிறந்த போது ஜோதிட வல்லுநர்கள் உரைத்த அத்தனை நற்குணங்களையும் கொண்டு பேரரசனாகத் திகழ்ந்தான். ஸ்வர்கபுரி போல் பூமியை மாற்றினான். தன் மாமன் உத்தரனின் மகளான இராவதியை மணந்து ஜனமேஜயன் முதலான நான்கு புதல்வர்களைப் பெற்றான்.

ஒரு சமயம் திக் விஜயம் செல்லும் போது, ஓரிடத்தில் குரூரமாக நீசன் போலிருந்த ஒருவன், அரச வேஷம் தாங்கி ஒரு காளையையும், பசுவையும் காலால் உதைப்பது கண்டு அவனைப் பிடித்து தண்டித்தான்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment