About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Tuesday, 12 December 2023

திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் - எண்பதாவது வார்த்தை

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

080 தோள் காட்டி வந்தேனோ பட்டரைப் போலே|

அந்நாட்களில், ஸ்ரீரங்கத்து எம்பெருமான் பல்லக்கில் வீதி உலா வரும் பொழுது, முன்னால் சவுக்கால் விதியை அடித்து சுத்தப் படுத்திக் கொண்டே இருவர் வருவர். அவர்களின் செயலால், முன் நிற்கும் கூட்டமும் விலகும். சில சமயங்களில், எதிர்பாராமல், அவ்வடி பக்தர்கள் மேலும் படக்கூடும். 


ஒரு முறை, எம்பெருமான் பல்லக்கில் வீதி உலா வரும்பொழுது, அவ்வாறு சவுக்கால் விதியை அடித்து சுத்தப் படுத்தி வருகிறார்கள் இருவர்.

அவ்வாறு சவுக்கை அடிக்கும் பொழுது, அது பராசர பட்டரின் தோள் பட்டையில் அடியாக விழ, பட்டரின் சீடர்கள் சவுக்கு வைத்திருப்பவரை கடிந்து கொண்டனர். தெரியாமல் அடித்து விட்டதாக அடித்தவன் பட்டரிடம் மன்னிப்புக் கேட்க, பட்டரோ, “பரவாயில்லை. எம்பெருமானுக்கான கைங்கரியத்தின் போது விழுந்த அடி. மற்றொரு தோளிலும் விழவில்லையே என்றே நான் வருந்துகிறேன்”, என வருந்திக் கூறினாராம். பொறுமையும் மன்னிக்கும் குணமும் ஸ்ரீ வைஷ்ணவனின் குணமாக இருக்க வேண்டும்.

இதற்கு மற்றொரு விளக்கமும் சொல்வார்கள். 

எம்பெருமானுக்கு பல்லக்குத் தூக்கி சேவை புரிந்து வந்தவர் ஒருவரின் அந்திமக் காலம். அவர் உயிர் போகும் நேரம் எம தூதர்களுக்கும், விஷ்ணு தூதர்களுக்கும் மேலே தர்க்கம் நடக்கிறதாம்.

எமதூதர்கள் அவர் உயிரை எமலோகத்திற்கு எடுத்துச் செல்லக் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

விஷ்ணு தூதர்களுக்கோ, எம்பெருமானுக்கு இவர் பல்லக்குத் தூக்கி ஆற்றிய பணியால், இவரை வைகுண்டம் அழைத்துச் செல்ல இருக்கின்றனர்.

இதை அறிந்தவர். "அடடா! எம்பெருமானுக்கு நான் ஆற்றிய இந்த சேவைக்கே இப்படி ஒரு பயனா" என வியந்து, பராசர பட்டரிடம் தனக்கு பஞ்ச சமஸ்காரம் செய்ய வேண்டினார்.

அதற்கு பட்டர், அதற்கான நேரம் இல்லை என்று கூறி, பல்லக்குத் தூக்கிய வைஷ்ணவரின் தோள்கள் காய்த்துப் போயிருப்பதைக் காட்டி, இதுவே பஞ்ச சமஸ்காரம் உமக்கு என்றார்.

திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, "அப்படி தோள்காட்டி சொன்ன பட்டரைப் போல நான் சொன்னேனா? பட்டர்பிரானைப் போல் ஸ்ரீ வைஷ்ணவ குணத்துடன் வாழ்ந்தேனா? இல்லையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment