About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Tuesday, 12 December 2023

திவ்ய ப்ரபந்தம் - 64 - பெரியாழ்வார் திருமொழி - 1.5.1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் - 64 - போர் செய்ய, ரிஷபம் போலே நின்றவனே! 
பெரியாழ்வார் திருமொழி 
முதலாம் பத்து - ஐந்தாம் திருமொழி - முதலாம் பாசுரம்

உய்ய உலகு படைத்துண்ட மணிவயிறா* 
ஊழிதோறூழி பல ஆலின் இலையதன் மேல்* 
பைய உயோகு துயில் கொண்ட பரம்பரனே!* 
பங்கய நீள் நயனத்து அஞ்சன மேனியனே!*
செய்யவள் நின்னகலம் சேமமெனக் கருதி* 
செல்வு பொலி மகரக் காது திகழ்ந்திலக* 
ஐய! எனக்கொரு கால் ஆடுக செங்கீரை* 
ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே| (2)

  • உய்ய - மக்கள் வாழ்வதற்காக 
  • உலகு - உலகங்களைப்
  • படைத்து - ஸ்ருஷ்டித்து, 
  • உண்ட - பின்பு ப்ரளயம் வந்த போது அவற்றை உண்டு
  • மணி வயிறா! - திரு வயிற்றில் வைத்துக் காத்தவனே!
  • பல ஊழி ஊழி தொறு - பல பல யுகங்கள், கல்பங்கள் தோறும்
  • ஆலின் இலை அதன் மேல் - ஆலிலையின் மேல்
  • பைய - மெள்ள 
  • உயோகு துயில் கொண்ட - யோக நித்திரை செய்தருளின (உறங்கும்)
  • பரம்பரனே - பரமாத்மாவே!
  • பங்கயம் - தாமரை மலர் போன்று
  • நீள் - நீண்டிருக்கின்ற
  • நயனம் - அழகான திருக்கண்களையும்
  • அஞ்சனம் - மை போன்ற
  • மேனியனே ஐய - திருமேனியை டைய ஸர்வேச்வரனே!
  • செய்யவள் - செந்தாமரை மலரில் பிறந்த பிராட்டிக்கு இருப்பிடமான
  • நின் அகலம் - உன் திருமார்பானது 
  • சேமம் என கருதி - சேமமான இடம் என நினைத்துக் கொண்டு
  • செல்வு பொலி - செல்வப் பொலிவுடன்
  • மகரம் - அழகிய மகர வடிவக் குண்டலங்களோடு (காதணிகள்கூடின
  • காது - திருக்காதுகளானவை
  • திகழ்ந்து இலக - மிகவும் சிறந்து விளங்க
  • ஐய! எனக்கு - அப்பனே! எனக்காக
  • ஒரு கால் - ஒரு முறை
  • செங்கீரை ஆடுக - செங்கீரை ஆடியருள வேணும்
  • ஆயர்கள் - இடையர்களுக்காக 
  • போர் ஏறே - போர் செய்ய, ரிஷபம் போலே நின்ற கண்ணனே! 
  • ஆடுக ஆடுகவே - ஆடிக் காட்டுவாயாக

பரம்பொருளே! எண்ணிலடங்கா யுகங்களாக, உலகிலுள்ள உயிரினங்கள் மற்றும் உயிரற்ற பொருள்கள் அனைத்தையும் உருவாக்கியதோடு, பிரளய காலத்தின் போது அவைகளை ரட்சிக்கும் பொருட்டு அவற்றையெல்லாம் உண்டு, தன் அழகிய வயிற்றினுள் வைத்து பாதுகாத்து, பல கல்பங்கள் ஆலிலை மேல் மெல்ல சயனித்து அறிதுயில் கொண்ட முழுமுதற் கடவுளே! அகன்ற வெண்தாமரை மலரின் இதழ்களைப் போல் நீண்ட கண்களையுடைய கருமேக திருமேனியை கொண்டவனே! நின் சின்னஞ்சிறு காதுகளில், விளக்கமாய் அமைந்து, மிகுவாய் பொலிகின்ற அந்த அழகிய குண்டலங்கள் அசைந்து ஆடும் வண்ணம், உன் இதயத் தாமரையில், என்றும் நீக்கமற நிறைந்துள்ள திருமகளை எண்ணிக் கொண்டே, எங்கள் குலத் தலைவனே, எனக்கு ஒரு முறை செங்கீரை ஆடிக் காட்டுவாயாக. ஆயர் குலத்தில் தோன்றிய, போர் செய்ய வல்ல காளையைப் போன்றவனே ஒரே ஒரு முறை செங்கீரை ஆடுவாயாக! என்று கண்ணனை கெஞ்சுகிறாள் யசோதை! செங்கீரை எனபது குழந்தைகள் ஐந்து மாத தவழும் பருவத்தில் கை கால்களை அசைத்து ஆடும் ஒரு வகையான நடனம்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment