||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||
||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||
உணர்ச்சி முன்னால் வரும், ஞானம் பின்னால்தான் வரும். முதலில் தர்மம், அதர்மம் எல்லாம் தெரிந்த ஞானி போல் உணர்ச்சியில் பேசிய அர்ஜுநன் கடைசியில் தன் நிலை உணர்ந்து தனக்கு நியாயம், அநியாயம் ஒன்றும் தெரியவில்லை, புலன்களை வாட்டும் இந்தத் துன்பத்தைப் போக்கும் வழியும் எனக்கு தெரியவில்லை. தனக்கு நல்லதை எடுத்துக் கூறு என்று பகவானை சரணடைகிறான் அர்ஜுநன்.
அர்ஜூனனுக்கு இரண்டு குழப்பங்கள்:
1.நாட்டிற்கு பெரும் ஊறு விளைவிப்பவன் உறவினரே ஆயினும் ஒரு அரசன் அவர்களைக் கொல்லலாமா? இது கொலை செய்வது என்ற வினை/செயலை பற்றியது.
2. அப்படிக் கொலை செய்வதால் தனக்குப் பாவம் வந்து சேராதா? இது கொலை செய்வது என்ற வினையால்/செயலால் ஏற்படும் பலனை பற்றியது.
மனித வாழ்க்கையின் புதிர்கள் இரண்டே 1.மரணம் 2. இன்ப துன்பம் பற்றியது.
தன்னிடம் முழுமையாகச் சரணடைந்த அர்ஜூனனுக்கு இந்த இரண்டிற்கும் விடையாகப் பிறவியின் தத்துவத்தை பகவான் உபதேசிக்கலானார்
தவறு செய்பவன் உறவினனே ஆயினும் நீதியை நிலைநாட்ட போரிடுவதே ஒரு மன்னனின் கடமை தர்மமாகிறது. போர்களத்தில் ஒரு உடல் இன்னோரு உடலை வதைக்கிறதே அன்றி புலன்களுக்கு எட்டாத ஆத்மாவை எதனாலும், எவராலும் வதைக்க முடியாது. மரணத்தில் உடல் மட்டுமே அழிகிறது, எண்ண முடியாத அளவில் உலகெங்கும் நிறைந்துள்ள ஆத்மா என்றென்றும் அழிவதில்லை. ஆத்மா தான் வாசம் செய்யும் உடல் அழிந்தால் இன்னொரு உடலை எடுத்துக் கொள்கிறது. இல்லையென்றாலும் பிறந்தவன் இறப்பதும் இறந்தவன் பிறப்பதும் தவிர்க்க முடியாதது. அதை நினைத்து வருந்துவதில் பயனில்லை. இத்தீயவர்களின் உடலை இன்று நீ அழிக்கா விட்டாலும் நாளை அவைகள் அழியக் கூடியதே. அதை நீ அழித்தால் உனக்கு பேரும், புகழும் வந்து சேரும், இல்லையென்றால் கடமை தவறியவன், கோழை போன்ற மரணத்தை விட மோசமான அபகீர்த்திகள் உனக்கு வந்து சேரும். எனவே உறுதியோடு போரிடு என்று முதல் சந்தேகத்திற்கு விடை அளிக்கிறார் பகவான்.
இரண்டாம் சந்தேகமான செயல் புரிவதால் வரும் பலனை பற்றி பகவான் விளக்குகிறார். வேதத்தை அறிந்தவர் போல் சுவர்க்கம், நரகம் என்று பயன் கருதும் வினை சொல்வார். அதைக் கேட்டு மதி மயங்காதே! பயன் கருதி செயல் செய்வோர் ஞானம் இல்லாதவர். செயலாற்ற மட்டுமே உனக்கு அதிகாரம். அதற்கானப் பலனை நானே முடிவு செய்கிறேன். அதனால் பலனை எதிர்பார்த்து செயல் புரிவதில் அர்த்தமில்லை. பலனைக் கருதாதவன் மனம் செயலில் மட்டுமே செல்கிறது, பலனை எதிர்பார்ப்பவன் மனமோ பல வழிகளில் செல்கிறது. இன்பம் துன்பம் போன்ற வினைப் பலன்கள் எல்லாம் புலன்களின் உணர்வே. அதனால் நன்மை தீமைகளைத் துறந்து, விருப்பு வெறுப்பின்றி செய்யும் செயலே மேலானது, பந்தத்தைப் போக்க வல்லது, இழப்பு இல்லாதது, பயத்தைப் போக்க வல்லது, என்று தனது சந்தேகத்திற்கு அடிப்படையான மதி மயக்கத்தின் காரணத்தை விளக்குகிறார். மேலும் புலன்களை அடக்கி மனதை இறைவனிடத்தில் நிலை நிறுத்தி, எதிர்பார்ப்பில்லாமல் செயல் புரிபவன் துன்பத்தில் துவள மாட்டான், இன்பத்தில் மகிழ மாட்டான், யாருக்காகவும் எதற்க்காகவும் பயப்பட மாட்டான், எதற்காகவும் யார்மீதும் கோபப்படமாட்டான் என்று பகவான் இங்கே விளக்குகிறார். சாங்கிய யோகம் ”அதர்மத்தை எதிர்த்து போராடுவதே சிறந்த தர்மம்”.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்