||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
துவாரகா கட்டமைப்பு|
காலயவனன் என்ற ஒரு பெரிய யவனவீரன் இருந்தான். மிக்க பலசாலிகளுடன் சண்டை போட்டு வெற்றி கொள்வதையே அவன் தன் வேலையாகக் கொண்டிருந்தான். தனக்கு நிகரான பலசாலி இந்த உலகில் யாருமே கிடையாது என்று அவன் நினைத்துக் கொண்டிருந்தான்.
ஒரு சமயம் அவன் நாரத முனிவரைச் சந்தித்துத் தன் வீரத்தைப் பற்றிப் பெருமையாகப் பேசிக் கொண்டான். அதற்கு நாரதர் அவனுக்கு நிகரான பலசாலிகள் யாரும் இல்லை, ஆனால் அவனைவிட மிகப் பெரிய பலசாலிகளாக கிருஷ்ணனும் பலராமனும் தான் இருகிறார்கள் என்று சொன்னார்.
அதனால் அவன் மூன்றரைக் கோடி மிலேச்சத் துருப்புக்களை அழைத்துக் கொண்டு மதுரா நகரை முற்றுகையிட்டான். யாதவர்கள் இப்பொழுது இருதலைக் கொள்ளி எரும்பைப் போலத் தவித்தனர். ஒரு பக்கம் ஜராசந்தனின் பலம்வாய்ந்த படைகள்; இன்னொரு பக்கம் காலயவனின் படைகள்! நெருக்கடி நிலை ஏற்பட்டுவிட்டது என்பதைக் கிருஷ்ணன் உணர்ந்தான்.
ஏற்கனவே காலயவனன் மதுரா நகரை எல்லாப் பக்கங்களிலும் முற்றுகையிட்டிருந்தான். அடுத்த நாளே, ஜராசந்தனின் படைகள், முந்தைய பதினேழு தடவைகள் எத்தனை பலத்துடன் விளங்கினவோ அதே பலத்துடன் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆகவே மதுராவின் முக்கியப் பகுதிகளைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்று கிருஷ்ணன் உணர்ந்தான்.
தங்கள் மக்களை எப்படிக் காப்பாற்றுவது என்று பலராமனும், கிருஷ்ணனும் வெகு நேரம் சிந்தித்தனர். கடைசியாகக் கிருஷ்ணன், "நாம் எங்காவது நல்ல கோட்டை கட்டி அங்கு நம் மக்களை குடியேற்றுவோம்" என்று சொன்னான். உடனே கிருஷ்ணன், கடலின் நடுவில் மிகவும் அழகான ஒரு நகரத்தை கட்டச் சொன்னான். புது நகருக்குத் “துவாரகை” என்று பெயரிடப்பட்டது. கிருஷ்ணன் துவரகையைப் பலராமன் பொறுப்பில் விட்டுவிட்டு, ஓர் ஆயுதமுமின்றி, கழுத்தில் ஒரு தாமரை மலையை மட்டும் அணிந்துக் கொண்டு, காலயவனனைச் சந்திக்க, துவாரகையை விட்டு வெளியே வந்தான்.
காலயவனன் இதற்கு முன்பு கிருஷ்ணனைப் பார்த்ததில்லை. ஓர் அழகிய இளைஞன் பட்டாடை அணிந்து நிற்பதைப் பார்த்தான். அந்த இளைஞனின் மார்பில் ஸ்ரீவத்ஸ அடையாளம் இருந்தது. கழுத்தில் கௌஸ்துபமணி பிரகாசித்தது. முகத்தில் புன்சிரிப்பு தாண்டவமாடியது. அந்த இளைஞன் மனதைக் கொள்ளை கொள்ளும் அழகுடையவனாக இருந்தான்.
அந்த இளைஞன் தான் கிருஷ்ணன் என்பதைப் புரிந்து கொண்டான். கிருஷ்ணன் எந்த ஆயுதமுமின்றி நடந்து செல்வதைக் காலயவனன் பார்த்து, தானும் அவனைப் பின்தொடர்ந்தான். கிருஷ்ணன் திரும்பிப் பார்த்தான். அவன் ஒரு திட்டம் வைத்திருந்தான்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்