||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
அரங்கேற்றம்
ஸ்கந்தம் 01
நைமிஷாரண்யத்தில் சௌனகாதி ரிஷிகள் அனைவரும் சேர்ந்து ஸத்ர யாகம் செய்தனர். ஆயிரம் வருஷங்களுக்கு நடைபெறும் அந்த யாகத்தில் விராம காலத்தில் அதாவது, யாகம் நடைபெறாத நேரங்களில் வீண் பொழுது போக்குவதோ, உறங்கவோ கூடாது. அதனால், அந்த நேரங்களில் புராணக் கதைகளைக் கேட்பதும், ஸத்சங்கமுமாக நடத்துவது வழக்கம். அந்த சமயத்தில் ஸூத பௌராணிகர் அவ்விடத்திற்கு வந்தார். அவரைக் கண்டதும் ரிஷிகளின் முகங்கள் அன்றலர்ந்த தாமரையாய் மலர்ந்தன.
அவரை வரவேற்று ஆசனம் கொடுத்து அவரிடம் சொன்னார்கள்,
உங்கள் தந்தையான ரோம ஹர்ஷணரின் ஸ்வரூபமாகவே நீங்கள் சரியான சமயத்தில் இங்கு வந்திருக்கிறீர்கள். புராணங்கள் அனைத்தையும் வியாஸர் ரோம ஹர்ஷணரிடம் ஒப்படைத்தார் என்பதை முன்னமே பார்த்தோம். புராணங்களைச் சொல்லும் போது பாவங்களில் மூழ்கி, தன்னை மறந்து சொல்வார். அப்போது அடிக்கடி மயிர்க் கூச்சம் ஏற்பட்டு பகவானின் லீலைகளில் மூழ்கி மூர்ச்சை அடைவார் என்பதனாலேயே அவருக்கு ரோம ஹர்ஷணர் என்பது காரணப் பெயராயிற்று. அவரது மகனான, ஸூதரும் தந்தையைப் போலவே பாவ பூர்ணராக இருந்து கதை சொல்வதால் அவருக்கும் தந்தையின் பெயரான ரோம ஹர்ஷணர் என்பதே வழக்காயிற்று.
ரிஷிகள் சொன்னார்கள்,
கலியுகம் துவங்கி விட்டது. கலியுகத்தில் மக்கள் படும் கொடுமைகளை நினைத்தாலே ஹ்ருதயம் கலங்குகிறது. அந்த ஜனங்களுக்கு நற்கதியடைய சரியான உபாயம் என்ன?
அவர்களின் கேள்வியால் மகிழ்ந்த ஸூத பௌராணிகர் சொல்ல ஆரம்பித்தார். கலியுகத்தில் மக்கள் உய்ய ஒரே வழி ஹரி கதா ச்ரவணமாகும். ஹரியின் அனந்தமான லீலைகளை ஒருவன் கேட்பதாலேயே அவனுக்கு முக்தியின் வாசல் திறந்து விடுகின்றது. கலியுகத்திற்கேற்ற புராணமான ஸ்ரீமத் பாகவதத்தை சொல்கிறேன்.
ஸ்ரீ மத் பாகவத புராணமா? அது எப்போது யாரால் இயற்றப்பட்டது? நீங்கள் எப்படி அதை அறிந்தீர்கள்?
வியாஸ பகவான் இயற்றிய புராணம். அவரது புத்ரரான ஸ்ரீ சுக மஹரிஷி அதை பாண்டு வம்சத்து அரசனான பரீக்ஷித்திற்கு கங்கைக் கரையில் ஏழு நாள்கள் சொன்னார். அப்போது பல மஹரிஷிகள் உபச்ரோதாவாக இருந்து கேட்டனர். நானும் கேட்டேன். ஸ்ரீ சுக ப்ரும்மம் சொன்னதை என் அறிவிற்கு எட்டிய வரை, நான் புரிந்து கொண்ட வரை, நினைவில் நின்ற வரையில் எடுத்துச் சொல்ல முயற்சி செய்கிறேன்..
ஸ்ரீ சுக ப்ரும்மம் சொன்னாரா? ஏழு நாள்களா? அவர் பரிவ்ராஜகராயிற்றே. பசு மாட்டின் மடியிலிருந்து பால் பாத்திரத்தில் விழும் நேரம் கூட ஓரிடத்திலும் நிற்க மாட்டாரே. அவர் ஏழு நாள்கள் ஓரிடத்தில் எப்படி தங்கினார்? மேலும் பரீக்ஷித் இளைஞன், ஸார்வ பௌமன், அவன் எதற்காக இவ்விளம் வயதில் கங்கைக் கரைக்கு வந்தான்? சற்று விளக்கமாகச் சொல்லுங்கள்.
என்றனர் ரிஷிகள்.
ஸூத பௌராணிகர், முதலில் வியாஸரையும், பிறகு சுக மஹரிஷியையும் த்யானம் செய்து துதித்து விட்டுப் பேச ஆரம்பித்தார்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment