About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Friday, 3 November 2023

திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் - அறுபத்தி ஆறாவது வார்த்தை

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

066 அந்தாதி சொன்னேனோ அமுதனாரைப் போலே|

நம்பி என்ற செல்வந்தர் ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் தொண்டில் ஈடுபட்டு வந்தார். ஆனால், அவரது தொண்டுகள் பயனுள்ளதாக அமையவில்லை.


நம்பியைத் திருத்த ராமானுஜர் செய்த அறிவுரைகள் அனைத்தையும் அவர் அலட்சியப் படுத்தினார். அதனால் மனம் உடைந்த ராமானுஜர் காஞ்சிக்குத் திரும்பச் செல்ல நினைத்தார். கூரத்தாழ்வார் அவரை சமாதானம் செய்து, நம்பியை நல்வழிப்படுத்தி, ராமானுஜரின் சீடனாக ஆக்கினார். உடையவரின் நோக்கத்தில் இருந்த பரிசுத்தம் புரிந்து, அவரை சரணடைந்தார்.

ராமானுஜர் அவருக்கு "திருவரங்கத்து அமுதனார்" என்ற பெயரைச் சூட்டினார்

அவருக்கு ஒரு நூல் எழுத வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. அமுதனார் ஒரு நாள், ராமானுஜரின் பெருமையைப் போற்றும் விதமாக, அவரை வாழ்த்தி, அந்தாதி ஒன்று இயற்றி, ராமனுஜரிடம் வழங்கினார். ஆனால், ராமானுஜரோ, தன்னைப் பற்றிய போற்றுதல் அதிகமாக இருப்பதால், அந்த ஓலைச் சுவடியை வாங்கி வைத்துக் கொண்டார், அந்தாதிக்கு அங்கீகாரம் வழங்கவில்லை. மேலும், “உமக்கு எழுத வேண்டும் என்று தோன்றினால், நமது திவ்யதேசங்கள் பற்றியோ, அல்லது பன்னிரு ஆழ்வார்களைப் பற்றியோ, ஆச்சார்யர்கள் பற்றியோ அல்லது கூரத்தாழ்வாரை குறித்தோ எழுது." என்றார்.

அமுதனாரோ, "ராமானுஜர் நூற்றந்தாதி” எழுதினார். ஒவ்வொரு பாடலிலும் முதல் இரண்டு வரிகளில் ஆழ்வார்கள் மற்றும் ஆச்சாரியர்களின் பெருமையைச் சொல்லி, பிந்தைய இரண்டு வரிகளில் அவர்களின் சம்பந்தம் பெற்ற ராமானுஜரின் பெருமையை எழுதினார். ஸ்ரீரங்கத்தில் உள்ள காட்டு அழகிய சிங்கர் சன்னதியில் அமர்ந்து அனைவருக்கும் சொல்லிய போது, தற்செயலாக ஸ்ரீ ராமானுஜர் அங்கு எழுந்தருளினார். அவரும் நூற்றந்தாதியை முழுமையாகக் கேட்டார். அவர் மறுத்துச் சொல்ல முடியாதபடி ஆழ்வார்கள் மற்றும் ஆச்சாரியர் பெருமை கூறப்பட்டபடியால், அதை ஏற்றுக் கொண்டார்.

இந்த நூற்றந்தாதியினை திருவரங்கத்தில் ராமானுசரின் சிஷ்யர்கள் ஓதுவது வழக்கமாயிற்று. இதை தானும் கேட்டு இன்புற வேண்டும் என்று விரும்பிய நம்பெருமாள், ராமானுஜரை மடத்திற்கு செல்லப் பணித்து விட்டு, சப்தாவரணப் புறப்பாடின் போது, வாத்திய கோஷத்தை நிறுத்தி விட்டு, ராமானுஜ நூற்றந்தாதியை மட்டும் ஓதச் சொல்லிக் கேட்டு உகந்தருளினார்.

திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, "அமுதனாரைப் போல் என் ஆச்சார்யான் மீது அந்தாதி பாடினேனா? இல்லையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment