About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Thursday, 4 April 2024

108 திவ்ய தேசங்கள் - 034 - திருவாலி – திருநகரி 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

034. திருவாலி – திருநகரி (திருநாங்கூர்)
முப்பத்தி நான்காவது திவ்ய க்ஷேத்ரம்

ஸ்ரீ அழகிய சிங்கர் பெருமாள் திருக்கோயில் & ஸ்ரீ வேதராஜன் பெருமாள் திருக்கோயில்

ஸ்ரீ அம்ருதகடவல்லீ தாயார் ஸமேத ஸ்ரீ வயலாலி மணவாளன் பெருமாள் 
திருவடிகளே சரணம்||

  • பெருமாள் மூலவர்: அழகிய சிங்கர் (லக்ஷ்மி நரஸிம்ஹன்), வேதராஜன்
  • பெருமாள் உற்சவர்: திருவாலி நகராளன், கல்யாண ரங்கநாதன் 
  • தாயார் மூலவர்: பூர்ணவல்லி, அமிர்தவல்லி
  • தாயார் உற்சவர்: அம்ருதகடவல்லி
  • திருமுக மண்டலம் திசை: மேற்கு 
  • திருக்கோலம்: வீற்றிருந்த
  • புஷ்கரிணி/தீர்த்தம்: இலாக்ஷணி
  • விமானம்: அஷ்டாக்ஷர
  • ஸ்தல விருக்ஷம்: வில்வம்
  • ப்ரத்யக்ஷம்: கலியன், அலாதி நிகஞ்சம ப்ரஜாபதி
  • ஸம்ப்ரதாயம்: தென் கலை
  • மங்களாஸாஸநம்: 2 ஆழ்வார்கள்
  • பாசுரங்கள்: 42

-------------------------
ஸ்ரீ. உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி


ஸ்தல புராணம்

பத்ரிகாசிரமத்திற்கு அடுத்ததாக பெருமாள் திருமந்திரத்தை தானே உபதேசம் செய்த இடமாதலால் இத்தலம் பத்ரிக்கு இணையானது. லக்ஷ்மியுடன் பெருமாள் நரஸிம்ஹ கோலத்தில் வீற்றிருப்பதால் இத்தலத்திற்கு "லக்ஷ்மி நரஸிம்ஹ க்ஷேத்திரம்' என்ற பெயரும் உண்டு. திருவாலியையும் தரிசிப்பதால் இங்கே பஞ்ச நரஸிம்ஹ தலங்களைத் தரிசித்த புண்ணியம் கிடைக்கும். திருமங்கையாழ்வாருக்கு விரைவில் அருள்பாலிக்க வேண்டும் என லக்ஷ்மி தேவி பெருமாளை இடைவிடாது வேண்டினாள். பெருமாள் கூறியபடி லக்ஷ்மி திருவாலியில் தவம் செய்யும் பூர்ண மஹரிஷியின் மகளாக பிறந்தாள். பெருமாளை திருமணம் செய்து கொண்டு திருவாலி அருகே தேவராஜபுரம் என்ற இடத்திற்கு வரும் போது திருமங்கை மன்னன் வழிமறித்து வழிப்பறி நடத்த, பெருமாள் திருமங்கையின் காதில் அஷ்டாக்ஷர மந்திரத்தை உபதேசம் செய்து ஆட்கொண்டார். திருமங்கை வழிப்பறி செய்த இடத்தில் இருந்த மண்டபத்தை இன்றும் காணலாம். இதை முன்னிட்டு ஆண்டுதோறும் தேவராஜபுரத்தில் திருமங்கை மன்னன் பெருமாளை வழிப்பறி நடத்தி, திருமந்திர உபதேசம் பெறும் விழா சிறப்பாக நடக்கிறது.

திருமால் நரஸிம்ஹ அவதாரம் எடுத்த போது இரண்யனை வதம் செய்த சீற்றம் அடங்காமல் இருந்தார். இதனால் பயந்து போன தேவர்களும், ரிஷிகளும் பூலோகம் மேலும் அழியாது காக்கப்பட வேண்டும் என லக்ஷ்மி தேவியை வேண்டினர். இவர்களது வேண்டுகோளை ஏற்ற தாயார் பெருமாளின் வலது தொடையில் வந்து அமர்ந்தாள். தேவியை பெருமாள் ஆலிங்கனம் (அணைத்தல்) செய்து கொண்டார். எனவே இவ்வூர் திரு ஆலிங்கனம் என்ற பெயர் பெற்று திருவாலி (திருவாகிய லக்ஷ்மியை ஆலிங்கனம் செய்தல்) ஆயிற்று. இப்பகுதியில் (ஆலிநாடு) திருமங்கை ஆழ்வார் குறுநில மன்னனாக திகழ்ந்தார். எனவே அவருக்கு "ஆலிநாடன்' என்ற பெயர் உண்டாயிற்று.

பிரம்மாவின் புத்திரன் கர்த்தம பிரஜாபதி பெருமாளிடம் மோட்சம் வேண்டி இத்தலத்தில் கடும் தவம் செய்தான். இவனுக்கு தரிசனம் தர பெருமாள் தாமதம் செய்ததால், வருத்தம் அடைந்த லக்ஷ்மி பெருமாளிடம் கோபம் கொண்டு, இத்தலத்தில் குளத்தில் இருந்த தாமரை மலருக்குள் தன்னை ஒளித்து கொண்டாள். பெருமாள் லக்ஷ்மியை தேடி இத்தலம் வந்து லக்ஷ்மியை ஆலிங்கனம் செய்து கொண்டார். அருகிலுள்ள திருவாலியிலும் இதே போல் ஆலிங்கன கோலத்தில் இருப்பதால், இரண்டும் சேர்த்து திருவாலி-திருநகரி ஆனது. 

திரேதா யுகத்தில் பிரஜாபதி உபரிசிரவஸு மன்னனாக பிறந்தான். இவன் இத்தலத்தின் மீது புஷ்பக விமானத்தில் பறந்து வரும் போது இவ்விடத்தில் பறக்காமல் அப்படியே நின்று விட்டது. எனவே, இத்தலம் மிகவும் புண்ணியமானது எனக்கருதி தனக்கு மோட்சம் வேண்டி பெருமாளிடம் தவம் செய்தான். கிடைக்கவில்லை. அடுத்த யுகத்தில் சங்கபாலன் என்ற பெயரில் ஒரு மன்னனின் மந்திரியாகப் பிறந்தான். அப்பிறவியிலும் தனக்கு மோட்சம் கேட்க, பெருமாள் கலியுகத்தில் கிடைக்கும் என கூறினார். கலியுகத்தில் நீலன் என்ற பெயரில் ஒரு படைத்தலைவனின் மகனாக பிறந்தான். இவன் திருவாலியில் வசித்த குமுதவல்லி நாச்சியாரை திருமணம் செய்ய நினைத்தான். அவள்,"ஓராண்டிற்கு தினமும் ஆயிரம் வைஷ்ணவர்களுக்கு அன்னதானம் செய்தால் நான் உங்களுக்கு மனைவியாவேன்,' என்று நிபந்தனை விதித்தாள். இந்த அன்னதானத்திற்கு பொருள் தீர்ந்த பிறகு நீலன் வழிப்பறியில் ஈடுபட்டான். அந்த நேரத்தில் பெருமாள் லக்ஷ்மியை திருமணம் செய்து கொண்டு திருவாலி அருகே தேவராஜபுரம் என்ற இடத்திற்கு வரும் போது நீலன் மறித்து வழிப்பறி நடத்த, பெருமாள் நீலனின் காதில் அஷ்டாட்சர மந்திரத்தை உபதேசம் செய்து ஆட்கொண்டார். இவ்வாறு திருவாலியின் வரலாற்றிற்கும் திருநகரியின் வரலாற்றிற்கும் ஒரே வரலாறு உள்ளது

திருமங்கையாழ்வார் இத்தலத்தில் தனி சன்னதியில் திருஞானசம்பந்தர் கொடுத்த வேலுடன் காட்சி தருகிறார். இவருக்கு எதிரே ஒரு கொடி மரமும், பெருமாளுக்கு எதிரே ஒன்றும் என இரண்டு கொடி மரங்கள் உள்ளன.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவத புராணம் - 78

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

விதுர மைத்ரேய ஸம்வாதம் - 23

ஸ்கந்தம் 03

நூறு வருட காலம் திவ்ய விமானத்திலேயே சுகமாய் வாழ்ந்தனர் கர்தமரும், தேவஹூதியும். அத்தனை காலமும் ஒரு நொடிபோல் கடந்தது. கர்தமர், தேவஹூதி நிறைய மக்கட் செல்வம் விரும்புகிறாள் என்றறிந்து தன்னை ஒன்பது ரூபங்களாக ஆக்கிக் கொண்டு கர்பாதானம் செய்தார்.


அதன் பின் உரிய காலத்தில் ஒரே நாளில் ஒன்பது மிக அழகான பெண் குழந்தைகளைப் பெற்றாள் தேவஹூதி. குழந்தைகள் பிறந்ததும், கர்தமர் தான் துறவறம் மேற்கொள்ளப்போவதாகச் சொன்னார்.

மனம் கலங்கிய தேவஹூதி, கண்ணீருடன் தரையைப் பார்த்துக் கொண்டு சொன்னாள். பகவானே! எனக்கு அபயம்‌ கொடுங்கள். இக்குழந்தைகளுக்கு நல்ல ஒழுக்கமுள்ள கணவர்களைத் தேடிக் கொடுங்கள். தாங்கள் துறவறம் மேற்கொண்டபின் என் வருத்தம் போக்கவும், வாழ்விற்குப் பிடிமானமாகவும் ஒரு புதல்வன் வேண்டும்.

இன்பங்களில் மனத்தைச் செலுத்தி, அந்தோ, நூறு வருட காலம் ஒரு நொடிபோல் கழிந்தது. எனக்கு இனியாவது இறை சிந்தனை ஏற்படட்டும்.

ப்ரும்மத்தை அறிந்த தங்களுடன், எனக்கு ஏற்பட்ட இவ்வுறவே எனக்கு அபயம் அளிக்கட்டும். அருள் புரியுங்கள். அறியாமையால் அஸத்துக்களிடம் வைக்கும் அன்பு, உலகியல் தளைகளுக்குக் காரணமாகிறது. அதே அன்பை தங்களைப் போன்ற ஸாதுக்களிடம் வைத்தால், அதுவே உலகியல் தளைகளைக் களைகிறது. மாயையால் நான் வஞ்சிக்கப்பட்டு இருக்கிறேன். மோக்ஷத்தையே பெற்றுத் தரும்‌ தங்களைக் கணவராய் அடைந்தும்‌ உலகியல் இன்பங்களில் மனத்தைச் செலுத்தி தளைகளிலிருந்து விடுபட வேண்டும் என்ற எண்ணம்கூட எனக்கு எழும்பவில்லை.என்று வேண்டினாள்.

கர்தமருக்கு, அப்போதுதான் பகவான் தனக்கு மகவாய்ப் பிறப்பதாக வாக்களித்தது நினைவுக்கு வந்தது. தேவஹூதியைப் பார்த்துக் கூறலானார்.

மாசற்றவளே! நீ இவ்வாறு வருந்தவேண்டா. எல்லையற்ற கல்யாண குணங்கள் கொண்ட பகவான், உன் திருவயிற்றில் அவதாரம் செய்யப்போகிறார். உனக்கு மகவாய்ப் பிறந்து, அஞ்ஞானத்தைப் போக்கி, ஆன்ம தத்துவத்தை விளக்கி, என் புகழையும் பரப்பப்போகிறார். எனவே நீ புலன்களை அடக்கி, பகவானிடம்‌ மனத்தை நிறுத்தி, தானங்களாலும், கற்பு நிலையாலும், தவத்தாலும் பகவானை வழிபடுவாய், என்றார்.

அதையே உபதேசமாக ஏற்ற தேவஹூதி, அவ்வாறே பகவானைப் பூஜிக்கலானாள்.

வெகுகாலம் சென்றதும், ஒரு திருநாளில், பகவான் அவளது திருவயிற்றில் ப்ரவேசித்து உரிய காலத்தில் அரணியிலிருந்து அக்னி தோன்றுவதுபோல் அவதாரம் செய்தார். அப்போது, ப்ரும்மா உள்ளிட்ட அத்தனை தேவர்களும் கர்தமரின் ஆஸ்ரமத்திற்கு வந்தனர். பல மங்கள வாத்யங்களை முழங்கினர்.

இட்ட கட்டளையை ஏற்று செவ்வனே நிறைவேற்றியதற்காக ப்ரும்மா கர்தமரைப் பலவாறு புகழ்ந்தார். ஸாக்ஷாத் ஸ்ரீ ஹரியே உன் வீட்டில் பிறந்திருக்கிறார். அவர் கபிலர் என்னும் திருநாமத்துடன் ஸாங்க்ய யோகத்தை நிறுவுவார். உன் குமாரிகளை மரீசி முதலிய ரிஷிகளுக்கு அவரவர் விருப்பத்திற்கேற்ப திருமணம் செய்து கொடு, என்று கர்தமரை வாழ்த்தி, சின்னஞ்சிறு உருவில் பிறந்த குழந்தையாய்க் காட்சியளிக்கும் பகவானை வணங்கி விடை பெற்றார் ப்ரும்மா.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்