||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
விதுர மைத்ரேய ஸம்வாதம் - 23
ஸ்கந்தம் 03
நூறு வருட காலம் திவ்ய விமானத்திலேயே சுகமாய் வாழ்ந்தனர் கர்தமரும், தேவஹூதியும். அத்தனை காலமும் ஒரு நொடிபோல் கடந்தது. கர்தமர், தேவஹூதி நிறைய மக்கட் செல்வம் விரும்புகிறாள் என்றறிந்து தன்னை ஒன்பது ரூபங்களாக ஆக்கிக் கொண்டு கர்பாதானம் செய்தார்.
அதன் பின் உரிய காலத்தில் ஒரே நாளில் ஒன்பது மிக அழகான பெண் குழந்தைகளைப் பெற்றாள் தேவஹூதி. குழந்தைகள் பிறந்ததும், கர்தமர் தான் துறவறம் மேற்கொள்ளப்போவதாகச் சொன்னார்.
மனம் கலங்கிய தேவஹூதி, கண்ணீருடன் தரையைப் பார்த்துக் கொண்டு சொன்னாள். பகவானே! எனக்கு அபயம் கொடுங்கள். இக்குழந்தைகளுக்கு நல்ல ஒழுக்கமுள்ள கணவர்களைத் தேடிக் கொடுங்கள். தாங்கள் துறவறம் மேற்கொண்டபின் என் வருத்தம் போக்கவும், வாழ்விற்குப் பிடிமானமாகவும் ஒரு புதல்வன் வேண்டும்.
இன்பங்களில் மனத்தைச் செலுத்தி, அந்தோ, நூறு வருட காலம் ஒரு நொடிபோல் கழிந்தது. எனக்கு இனியாவது இறை சிந்தனை ஏற்படட்டும்.
ப்ரும்மத்தை அறிந்த தங்களுடன், எனக்கு ஏற்பட்ட இவ்வுறவே எனக்கு அபயம் அளிக்கட்டும். அருள் புரியுங்கள். அறியாமையால் அஸத்துக்களிடம் வைக்கும் அன்பு, உலகியல் தளைகளுக்குக் காரணமாகிறது. அதே அன்பை தங்களைப் போன்ற ஸாதுக்களிடம் வைத்தால், அதுவே உலகியல் தளைகளைக் களைகிறது. மாயையால் நான் வஞ்சிக்கப்பட்டு இருக்கிறேன். மோக்ஷத்தையே பெற்றுத் தரும் தங்களைக் கணவராய் அடைந்தும் உலகியல் இன்பங்களில் மனத்தைச் செலுத்தி தளைகளிலிருந்து விடுபட வேண்டும் என்ற எண்ணம்கூட எனக்கு எழும்பவில்லை.என்று வேண்டினாள்.
கர்தமருக்கு, அப்போதுதான் பகவான் தனக்கு மகவாய்ப் பிறப்பதாக வாக்களித்தது நினைவுக்கு வந்தது. தேவஹூதியைப் பார்த்துக் கூறலானார்.
மாசற்றவளே! நீ இவ்வாறு வருந்தவேண்டா. எல்லையற்ற கல்யாண குணங்கள் கொண்ட பகவான், உன் திருவயிற்றில் அவதாரம் செய்யப்போகிறார். உனக்கு மகவாய்ப் பிறந்து, அஞ்ஞானத்தைப் போக்கி, ஆன்ம தத்துவத்தை விளக்கி, என் புகழையும் பரப்பப்போகிறார். எனவே நீ புலன்களை அடக்கி, பகவானிடம் மனத்தை நிறுத்தி, தானங்களாலும், கற்பு நிலையாலும், தவத்தாலும் பகவானை வழிபடுவாய், என்றார்.
அதையே உபதேசமாக ஏற்ற தேவஹூதி, அவ்வாறே பகவானைப் பூஜிக்கலானாள்.
வெகுகாலம் சென்றதும், ஒரு திருநாளில், பகவான் அவளது திருவயிற்றில் ப்ரவேசித்து உரிய காலத்தில் அரணியிலிருந்து அக்னி தோன்றுவதுபோல் அவதாரம் செய்தார். அப்போது, ப்ரும்மா உள்ளிட்ட அத்தனை தேவர்களும் கர்தமரின் ஆஸ்ரமத்திற்கு வந்தனர். பல மங்கள வாத்யங்களை முழங்கினர்.
இட்ட கட்டளையை ஏற்று செவ்வனே நிறைவேற்றியதற்காக ப்ரும்மா கர்தமரைப் பலவாறு புகழ்ந்தார். ஸாக்ஷாத் ஸ்ரீ ஹரியே உன் வீட்டில் பிறந்திருக்கிறார். அவர் கபிலர் என்னும் திருநாமத்துடன் ஸாங்க்ய யோகத்தை நிறுவுவார். உன் குமாரிகளை மரீசி முதலிய ரிஷிகளுக்கு அவரவர் விருப்பத்திற்கேற்ப திருமணம் செய்து கொடு, என்று கர்தமரை வாழ்த்தி, சின்னஞ்சிறு உருவில் பிறந்த குழந்தையாய்க் காட்சியளிக்கும் பகவானை வணங்கி விடை பெற்றார் ப்ரும்மா.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment