About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Wednesday, 16 August 2023

ஸ்ரீ வேங்கடேச கராவலம்ப ஸ்தோத்திரம்

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

1 ஸ்ரீ சேஷஸைல ஸுனிகேதன தி³வ்யமூர்தே।
நாராயணாச்யுத ஹரே! நளிநாயதாக்ஷ।
லீலாகடாக்ஷ! பரிரக்ஷித ஸர்வலோக!
ஸ்ரீ வேங்கடேஸ! மம தே³ஹி கராவலம்ப³ம்॥

சேஷாசலத்தில் எழுந்தருளியிருக்கும் திவ்யமூர்த்தியே, நாராயணா, அச்சுதா, ஹரியே உன்னை வணங்குகின்றேன். அனைத்து உலகத்தையும் விளயாட்டாகவே காத்தருளும் வேங்கடேசனே! எனக்கு உதவிட உன் திருக்கரத்தை அளிப்பாயாக.

2 ப்³ரஹ்மாதி³வந்தி³தபதா³ம்பு³ஜ ஸங்க²பாணே
ஸ்ரீமத் ஸுத³ர்ஸன ஸுஸோபி⁴த தி³வ்யஹஸ்த।
காருண்ய ஸாக³ர ஸரண்ய ஸுபுண்ய மூர்தே!
ஸ்ரீ வேங்கடேஸ மம தே³ஹி கராவலம்ப³ம்॥

பிரம்மா முதலியவர்களால் வணங்கப்படும் பாதத் தாமரைகளையுடைய சங்கு பாணியே. கையில் அழகான ஒளிவிடும் சுதர்சன் சக்கரத்தை ஏந்தியவரே, கருணைக் கடலென விளங்குபவரே, சரணடைவோரின் புண்ணிய மூர்த்தியே, ஸ்ரீ வேங்கடேசனே, உமது நேசக்கரத்தை எனக்காக நீட்டியருள்வாயாக.

3 வேதா³ந்த வேத்³ய ப⁴வஸாக³ர கர்ணதா⁴ர
ஸ்ரீபத்³மநாப⁴ கமலார்சித பாத³பத்³ம।
லோகைக பாவன பராத்பர பாபஹாரின்
ஸ்ரீ வேங்கடேஸ மம தே³ஹி கராவலம்ப³ம்॥

வேத வேதாந்தங்களாலும் ஆராய்ந்து அறிய முற்படும் லட்சிய முன்னோடியே, தாமரையில் வீற்றிருப்பவளால் பூஜிக்கப்படும் பாதத் தாமரைகளையுடைய பத்மநாபரே, உலகத்தையே காக்கும் பராத்பரரே, பாபஹாரியே, பாவங்களை அழிப்பவரே, ஸ்ரீ வேங்கடேசனே உம்முடைய அபயகரத்தை எனக்காக நீட்டுங்கள்.

4 லக்ஷ்மீபதே நிக³மலக்ஷ்ய நிஜஸ்வரூப
காமாதி³தோ³ஷ பரிஹாரக! போ³த⁴தா³யின்।
தை³த்யாதி³மர்த³ன ஜனார்த³ன வாஸுதே³வ
ஸ்ரீ வேங்கடேஸ மம தே³ஹி கராவலம்ப³ம்॥ 

மகாலட்சுமியின் நாயகரே, வேதங்கள் தேடும் பரம் பொருளே, காமம் போன்ற குரோதங்களை விலக்கியருளும் ஞானவடிவானவரே, அசுரகுலத்தைப் பூண்டோடு அழித்த ஜனார்த்தனா, தர்மத்தை காக்க அதர்மத்தை விளையாட்டாகவே அழிப்பவரே, வாசுதேவனே, எங்கும் உறைந்து விளையாட்டாகவே அனைவரையும் காப்பவரே, ஸ்ரீவேங்கடேசனே. உமது உதவும் கரங்களை எனக்காக நீட்டுங்கள்.

5 தாபத்ரயம் ஹர விபோ⁴ ரப⁴ஸா முராரே
ஸம்ரக்ஷ மாம் கருணயா ஸரஸீருஹாக்ஷ।
மச்சி²ஷ்ய இத்யனுதி³னம் பரிரக்ஷ விஷ்ணோ
ஸ்ரீ வேங்கடேஸ மம தே³ஹி கராவலம்ப³ம் ॥ 

அத்யாத்மிகம், ஆதிதைவதம், ஆதிமௌத்திகம் என்கிற மூன்று தாபங்களையும், வன்முறைகளையும் அழித்த முராரியே. தாமரைக் கண்ணாளரே. உம் அபார கருணையால் என்னைக் காப்பாற்றும், தரையில் விழுந்த மீன்களைப் போன்ற எம்மைக் காத்திட விஷ்ணுவாகிய, எல்லாவற்றிலும் அந்தர்யாமியாக இருப்பவரே, ஸ்ரீவேங்கடேசனே உம்முடைய நேசக்கரத்தை நீட்டுங்கள்.

6 ஸ்ரீ ஜாதரூப நவரத்ன லஸத்கிரீட!
கஸ்தூரிகா திலக ஸோபி⁴ லலாடதே³ஸ।
ராகேந்து³ பி³ம்ப³ வத³நாம்பு³ஜ வாரிஜாக்ஷ!
ஸ்ரீ வேங்கடேஸ மம தே³ஹி கராவலம்ப³ம்॥ 

நவரத்தினங்கள் அலங்கரிக்கும் ஒளிமயமான முகமுடையவனே, நெற்றிப் பகுதியில் கஸ்தூரி திலகம் தரித்து, பல வண்ணத் தாமரைகள் ஒருங்கிணைந்தாற் போன்ற முகாரவிந்தமுடைய வேங்கடேசனே, உம்முடைய அருட்கரத்தை நீட்டுங்கள்.

7 வந்தா³ரு லோக வரதா³ன வசோ விலாஸ!
ரத்னாட்⁴ய ஹார பரிஸோபி⁴த கம்பு³கண்ட²।
கேயூரரத்ன ஸுவிபா⁴ஸி தி³க³ந்தராள
ஸ்ரீ வேங்கடேஸ மம தே³ஹி கராவலம்ப³ம்॥

சரணடைந்த உலகத்தார் கோரும் வரங்களை விளையாட்டாகவே நிறைவேற்றுபவரும், கழுத்துப் பிரதேசத்தில் அணிந்திட்ட நவரத்னங்கள் இழைத்த ஆபரணங்களால் ஒளிர் பவரும், திக்கெல்லாம் ஒளிபரப்பும் ரத்ன வங்கிகளை தோள் வளைகளாக அணிந்து உள்ளவருமான வேங்கடேசனே. உமது உதவும் கரங்களை எனக்காக நீட்டுங்கள்.

8 தி³வ்யாங்க³தா³ஞ்சித பு⁴ஜத்³வய மங்க³ளாத்மன்!
கேயூரபூ⁴ஷித ஸுஸோபி⁴த தீ³ர்க்க⁴ பா³ஹோ।
நாகே³ந்த்³ர கங்கண கரத்³வய காமதா³யின்
ஸ்ரீ வேங்கடேஸ மம தே³ஹி கராவலம்ப³ம்॥ 

சுந்தரமான அங்கங்களுடன் நீண்ட இரு கரங்களுடன் திகழ்பவரே. தோளில் ரத்ன வளைகள் விகசிக்க, பாம்பணி வளையங்கள் கைகளில் ஒளிவீசிட விளங்குபவரே, சரண் அடைந்தவர்களின் ஆசைகளை நிறைவேற்றும் வேங்கடேசனே, உமது நேசக் கரங்களை எனக்காக நீட்டுங்கள்.

9 ஸ்வாமின் ஜக³த்³த⁴ரணவாரிதி⁴ மத்⁴ய மக்³னம்
மாமுத்³தா⁴ராத்ய க்ருபயா கருணா பயோதே⁴।
லக்ஷ்மீம்ஸ்ச தே³ஹி விபுலாம் ருணவாரணாய
ஸ்ரீ வேங்கடேஸ! மம தே³ஹி கராவலம்ப³ம் ॥

சம்சாரமாகிய ஆழ்கடலில் நடுவில் சிக்கிச் சுழன்று அவதிக்குள்ளாயிருக்கும் உலக உயிர்களை உய்விக்கும் ஜனார்த்தனரே, என்னை உய்விக்க வாருங்கள். தீராத ருணத்தினால் கடன் தொல்லையால் அவதிப்படும் எனக்கு லட்சுமி தேவியை அளியுங்கள். பெரிய யானை கஜேந்திரனைக் காக்க ஓடோடி வந்தவனே, வேங்கடேசனே. உமது உதவிக் கரங்களை நீட்டி எனக்கு உதவுங்கள்.

10 தி³வ்யாங்க³ராக³பரிசர்சித கோமளாங்க³
பீதாம்ப³ராவ்ருத தனோ! தருணார்கபா⁴ஸ
ஸத்காஞ்சனாப⁴ பரிகட்டன ஸுபட்டப³ந்த⁴!
ஸ்ரீ வேங்கடேஸ மம தே³ஹி கராவலம்ப³ம்॥ 

திவ்வியமான பல வண்ணங்களிலான அங்கிகளும், மஞ்சள் பட்டாடைகளும் மற்றும் தங்க மயமான பட்டு மேல் வஸ்திரங்களாலும், சுற்றிச் சுழலும் மேலங்கிகளாலும் கோமள ரங்கனாக, அழகோவியமாக காணப்படும் வேங்கடேசனே. எனக்காக உமது உதவும் கரங்களை நீட்டியருளுங்கள்.

11 ரத்னாட்⁴யதா³ம ஸுனிப³த்³த⁴ கடி ப்ரதே³ஸ
மாணிக்ய த³ர்பண ஸுஸன்னிப⁴ ஜானுதே³ஸ।
ஜங்கா⁴த்³வயேன பரிமோஹித ஸர்வலோக
ஸ்ரீ வேங்கடேஸ மம தே³ஹி கராவலம்ப³ம்॥ 

இடுப்புப் பிரதேசத்தில் அழகாகக் கட்டப்பட்டுள்ள ரத்ன மயமான ஆபரணங்கள், முழங்கால் பகுதியில் மாணிக்கங்களும் கண்ணாடி கற்களுமிழைத்த அங்கிகள், கணுக்காலிலும் முழங்காலிலும் மனதைக் கவரும் அலங்காரம் என எழிலுடன் விளங்கும் வேங்கடேசனே, உம் அபயக் கரத்தை எனக்காக அளியுங்கள்.

12 லோகைகபாவன லஸரித் பரிஸோபி⁴தாங்க்⁴ரே
த்வத்பாத³ த³ர்ஸன தி³னேச மவாபமீஸ।
ஹார்த³ம் தமஸ்ச ஸகலம் லயமாப பூ⁴மன்
ஸ்ரீ வேங்கடேஸ மம தே³ஹி கராவலம்ப³ம்॥ 

உலகையே புனிதமாக்கக்கூடிய ஆற்றல் நீயே, தினமும் உன்னைத் தரிசித்து மகா பிரசாதங்களைப் பெற்றுச் செல்லும் பக்தர்களின் இருள் அகல்வதுடன் பூமியெங்கும் அருள்வெள்ளம் பெருக்கெடுக்கும்படியும் செய்யும், உனது மகாபிரசாதங்கள் உலகையே உய்விக்கக் கூடியவை, வேங்கடேசனே, உனது உதவும் கரத்தை நீட்டியருள்வாயாக.

13 காமாதி³ வைரி நிவஹோச்யுத! மே ப்ரயாத:
தா³ரித்³ர்ய மப்யபக³தம் ஸகலம் த³யாளோ।
தீ³னஞ்ச மாம் ஸமவலோக்ய த³யார்த்³ர த்³ருஷ்ட்யா
ஸ்ரீ வேங்கடேஸ மம தே³ஹி கராவலம்ப³ம்॥ 

காமம் போன்ற ஏராளமான எதிரிகள் எனக்கு முன்னே இருந்தாலும் உன்னுடைய கருணா கடாட்சத்தினால் அவையனைத்தும் ஏழையேனாகிய என்னை பாதிக்காமலிருக்க வேங்கடேசனாகிய நீரே எனக்காக உமது உதவும் கரங்களை நீட்டி அருள்வீராக.

14 ஸ்ரீ வேங்கடேஸ பத³பங்கஜ ஷட்பதே³ன
ஸ்ரீமன் ந்ருஸிம்ஹ யதினா ரசிதம் ஜக³த்யாம்।
ஏதத் பட²ந்தி மனுஜா: புருஷோத்தமஸ்ய
தே ப்ராப்னுவந்தி பரமாம் பத³வீம் முராரே:॥

ஸ்ரீமன் நரசிம்ம முனி என்கிற யதிகளால் ஸ்ரீ வேங்கடேசனின் பாதங்களில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த துதிகளை மனம் ஒன்றிப் படிக்கும் ஒவ்வொருவரும், அந்த புருஷோத்தமனின் அருள் பெற்று அனைத்தையும் அடைவர்.

॥ இதி ஸ்ரீ ஸ்ரீ வேங்கடேஸ கராவலம்ப³ ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ॥

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

ஶ்ரீ விஷ்ணு ஷட்பதீ ஸ்தோத்ரம்

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

அவினய மபநய விஷ்ணோ தமய மந:
ஸமய விஷய ம்ருகத்ருஷ்ணாம்|
பூத தயாம் விஸ்தாரய 
தாரய ஸம்ஸார ஸாகரத:|| 

ஹே விஷ்ணோ! எனது பணிவின்மையைப் போக்கு! மனதை அடங்கச் செய். பேராசையையும் தணித்து விடு. எல்லா ஜீவராசிகளிடத்தும் தயை வரச்செய். என்னை ஸம்ஸாரக் கடலிலிருந்து அக்கரை சேர்ப்பித்து விடு.

2 திவ்யதுனீ  மகரந்தே பரிமள 
பரிபோக ஸச்சிதானந்தே|
ஶ்ரீபதி பதாரவிந்தே பவபய 
கேதச்சிதே வந்தே:||

கங்கையை மகரந்தமாகக் கொண்டதும், ஸத் சித் ஆனந்தமாகியவற்றை வாசனையாகக் கொண்டதும், உலகில் சம்சார துன்பத்தைப் போக்குவதுமான ஸ்ரீபதியான நாராயணனின் திருவடித் தாமரைகளை வணங்குகின்றேன்.

3 ஸத்யபி பேதாபகமே நாத 
தவாஹம் ந மாமகீநஸ்த்வம்|
ஸாமுத்ரோ ஹி தரங்க:  
க்வசன ஸமுத்ரோ ந தாரங்க:|| 

ஜீவாத்மாவான எனக்கும், பரமாத்மாவான உமக்குமிடையில் வேற்றுமை இல்லையெனினும், ஹே ஸ்வாமி நான் உம்மைச் சேர்ந்த அடிமையே. தாங்கள் எனது உடைமையானவரல்ல. அலைதானே ஸமுத்திரத்தையண்டியது. ஒரு போதும் கடல், அலைகளில் அடங்கியதில்லையன்றோ!

4 உத்ருதநக நகபிதநுஜ தநுஜ 
குலாமித்ர மித்ரசசித்ருஷ்டே|
த்ருஷ்டே பவதி ப்ரபவதி 
நபவதி கிம்பவதி ரஸ்கார:|| 

கோவர்தன மலையை தூக்கியவரே! இந்திரனின் இளையவரே! அசுரக் கூட்டத்தை அழித்தவரே! சூர்ய சந்திரர்களை கண்களாகக் கொண்டவரே! உங்களுடைய கருணைக் கடைக்கண் பார்வை ஒருவனுக்கு கிடைக்குமானால் எவருக்குத்தான் உலகியலில் இழிவு தோன்றாது?

5 மத்ஸ்யாதிபி  ரவதாரைர் வதாரவதா 
அவதா ஸதாவஸுதாம்|
பரமேச்வர பரிபால்யோ 
பவதா பவதாபீதோஹம்||

ஹே பெருமாளே! மத்ஸ்ய கூர்மாதி அவதாரங்களால் இறங்கிவந்து பூமியை காத்தருளும் தங்களால், ஸம்ஸார தாபத்தால் மருண்ட நான் காக்கப்பட வேண்டியவரன்றோ! 

6 தாமோதர குணமந்திர 
ஸுந்தரவதனாரவிந்த கோவிந்த|
பவ ஜலதி மதனமந்தர பரமம் 
தரமபனயத்வம் மே|| 

தாமோதரனே! குணங்களுக்கு கோயிலானவனே! அழகிய தாமரையொத்த முகம் கொண்டவனே! கோவிந்த! ஸம்ஸாரக் கடலை கடையும் மந்தர மலையானவனே! எனது பெரும் துன்பத்தைப் போக்குவாயாக!

7 நாராயண கருணாய சரணம் 
கரவாணி தாவகௌ சரணௌ|
இதி ஷட்பதீ மதீயே 
வதனஸரோஜே ஸாதாவஸது||

ஹே நாராயண கருணை வடிவானவனே! உனது திருவடிகளை சரணம் அடைகிறேன் என்ற இந்த ஆறு சொற்கள் என் முகத்தில் எப்பொழுதும் தங்கட்டும்.

இதனைப் பாராயணம் செய்தால் பகவானிடத்தில் பக்தி, வைராக்யம், மோக்‌ஷம், ஞானம் உண்டாகி மனக்கவலையும் கிரஹதோஷமும் நீங்கும்.

॥இதி ஸ்ரீ விஷ்ணு ஷட்பதீ ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்॥

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

லீலை கண்ணன் கதைகள் - 22

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

இரட்டை மருத மரங்கள்|

கிருஷ்ணன் சிறிது நேரம் அங்கு உட்கார்ந்திருந்தான். உரலோடு கட்டப்பட்டு இருந்ததால், அவனால் அங்கும் நகர முடியவில்லை. அது அவனுக்குச் சலிப்பை அளித்தது. பிறகு அவன் மெல்லத் தவழப் பார்த்த போது, உரலும் தன் பின்னால் உருண்டு வருவதைக் கண்டான். அவன் சப்தம் போடாமல் கதவருகில் வந்தான். பிறகு மெல்ல வீட்டை விட்டு வெளியே வந்தான். அங்கு சில சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டான். உரலோடு கட்டப்பட்ட தன்னைக் கண்டு அவர்கள் சிரிப்பார்கள் என்று நினைத்தான். பிறகு மெல்லக் கட்டாந்தரைக்கு வந்தான். அங்கிருந்த காட்டுக்கு ஒரு பாதை சென்றது. திடீரென்று கிருஷ்ணனுக்கு ஒரு யோசனை தோன்றியது. உரலை வெகு தூரம் இழுத்துச் சென்று விட்டால், பாவம்! அம்மா அதைக் கஷ்டப்பட்டுத் திரும்பக் கொண்டு வர வேண்டும். உரல் மிகவும் பளுவாக இருந்ததனால் அதை மீண்டும் இழுத்துக் கொண்டு வர யசோதை மிகவும் கஷ்டப்படுவாள். அதனால் மிகவும் களைத்துப் போனவன் போன்று, அவன் உரலின் மீது சற்று நேரம் உட்கார்ந்தான். 


தூரத்தில் இரட்டை மருத மரங்கள் தெரிந்தன. அவற்றின் பெயர் யமலன், அர்ஜுனன் என்பது. இரண்டு மரங்களுக்கும் இடையில் சிறிது இடைவெளி தான் இருந்தது. உரலில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள கிருஷ்ணன் ஒரு வழி கண்டு பிடித்தான். "நான் இந்த இரண்டு மரங்களுக்கு இடையில் செல்வேனாகில் உரல் பெரிதாகையால் அந்த இடைவெளி வழியாக வெளியே வராது. நான் என் எல்லா பலத்தையும் கொண்டு இழுத்தால், கயிறு அறுந்து விடும், நானும் விடுதலை ஆவேன்" என்று நினைத்தான். தன் முழுப் பலமும் கொண்டு, மிக்க உறுதியுடன், கிருஷ்ணன் மரங்களுக்கு இடையில் குறுக்காக இருந்த உரலை இழுத்தான். ஆனால் அவன் எதிர்பாத்தபடி கயிறு அறவில்லை. திரும்பவும் மூச்சைப் பிடித்துக் கொண்டு இழுத்தான். ஆனால் கயிறு அறுவதற்குப் பதிலாகப் பேரிரைச்சலுடன் இரண்டு மரங்களும் கீழே சாய்ந்தன.


என்ன ஆச்சரியம்! இரண்டு தேவ புருஷர்கள் அந்த மரங்களில் இருந்து வெளி வந்தனர்! அவர்கள் கிருஷ்ணனைத் தலை வணங்கி நமஸ்கரித்து, தாங்கள் குபேரனின் குமாரர்கள் என்று சொன்னார்கள். அவர்களுடைய தீய செயல்களுக்காக அவர்கள் மரங்கள் ஆக வேண்டும் என்று நாரதர் ஒரு சமயம் அவர்களை சபித்து விட்டார். கிருஷ்ணனுடைய பாதம் பட்டால் அவர்களுக்கு சாப விமோசனம் ஏற்படும் என்றும் சொல்லி இருந்தார். அவர்கக் கிருஷ்ணனைத் தலை வணங்கித் துதித்து விட்டுத் தங்கள் இருப்பிடத்திற்கு சென்றனர். 


கிருஷ்ணனுடைய இந்தச் சாகசத்தைத் தூரத்திலிருந்து சில சிறுவர்கள் மிகவும் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டு இருந்தார்கள். மரங்கள் முறிந்த சப்தம் கேட்டு யசோதையும் மற்றவர்களும் அந்த இடத்திற்கு விரைந்தோடி வந்தார்கள். தன் குழந்தை அந்தப் பெரிய உரலை அத்தனை தூரம் இழுத்துச் சென்று விட்டதைப் பார்த்து அவள் ஆச்சரியப் பட்டாள். அந்த இரண்டு பெரிய மரங்கள் அவனை நசுக்காததையும் அவள் கண்டாள். இது கிருஷ்ணனுடைய வேலை என்று அவளால் நம்பவே முடியவில்லை.  கயிற்றை அவிழ்த்து அவனைத் தன் மடியில் கிடைத்து முன்பை விட அதிக அன்புடன் அவனைச் சீராட்டத் தொடங்கினாள். 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 004 - திருவெள்ளறை 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

004. திருவெள்ளறை
ஸ்வேதகிரி – திருச்சி
நான்காவது திவ்ய க்ஷேத்ரம்

ஸ்ரீ புண்டரீகாஷன் பெருமாள் திருக்கோயில்

ஸ்ரீ பங்கயச்செல்வி தாயார் ஸமேத ஸ்ரீ புண்டரீகாஷன் பெருமாள் 
திருவடிகளே சரணம்||

  • பெருமாள் மூலவர்: புண்டரீகாஷன், செந்தாமரைக் கண்ணன்
  • பெருமாள் உற்சவர்: பங்கயச் செல்வன்
  • தாயார் மூலவர்: ஷெண்பகவல்லி
  • தாயார் உற்சவர்: பங்கயச் செல்வி
  • திருமுக மண்டலம் திசை: கிழக்கு
  • திருக்கோலம்: நின்ற 
  • புஷ்கரிணி/தீர்த்தம்: திவ்ய கந்த, கஷீர, குச, சக்கர, புஷ்கல, பத்ம, வராக, மணி  கர்ணிகா  
  • விமானம்: விமலாக்ருதி
  • ஸ்தல விருக்ஷம்: வில்வம்
  • ப்ரத்யக்ஷம்: கருடன் (பெரிய திருவடி), சிபி, பூதேவி, மார்கண்டேயன், லக்ஷ்மீ,  ப்ருஹ்ம ருத்ராதிகள் 
  • ஸம்ப்ரதாயம்: தென் கலை
  • மங்களாஸாஸநம்: 2 ஆழ்வார்கள்
  • பாசுரங்கள்: 24

---------------------------
ஸ்ரீ. உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி


ஸ்தல புராணம்
உய்யக்கொண்டார், எங்களாழ்வான் அவதார ஸ்தலம். கோயில் கோட்டை போல் அமைக்கப்பட்டுள்ளது. பெரிய ப்ரகாரத்தில் தென் பகுதியில் கல் அறைகள் உள்ளது. இங்கிருந்து ஒலி எழுப்பினால் எதிரொலி தெளிவாக கேட்கும்.

கோயில் சுமார் 50 அடி உயரத்தில் வெண்மையான பாறையால் ஆன ஒரு குன்றின் மீது இத்தலம் அமைந்துள்ளதால் "வெள்ளறை' என்ற பெயர் பெற்று மரியாதை நிமித்தமாக "திருவெள்ளறை' ஆனது. முன் கோபுரம் பூர்த்தியாகாத நிலையில் உள்ளது. புண்டரீகன் என்ற யோகி திருவெள்ளறையில் ஒரு நந்தவனம் அமைத்து அதில் வளர்ந்த துளசியால் பெருமாளையும் தாயாரையும் பூஜித்து வந்தார். இதில் மகிழ்ந்த பெருமாள் இவருக்கு தரிசனம் கொடுத்தார். இதனாலேயே இங்குள்ள பெருமாள் புண்டரீகாட்சப் பெருமாள்' ஆனார். கருவறையில் பெருமாளின் மேல் புறம் வலது பக்கம் சூரியனும், இடது பக்கம் சந்திரனும் சாமரம் வீசுகின்றனர். பெருமாளின் இரு பக்கமும் கருடனும் ஆதிசேஷனும் மனித வடிவில் நின்ற படி இருக்கின்றனர். ஏழு மூலவர்களைக் கொண்ட கோவில். ஸ்வஸ்திக் வடிவில் அமைந்த தீர்த்தம்.

இங்குள்ள பெருமளை தரிசிக்க 18 படிகளை கடக்க வேண்டும். இவை கீதையின் 18 அத்தியாயங்களை குறிக்கிறது. அடுத்த கோபுர வாயிலில் 4 படிகள் உள்ளது. இவை நான்கு வேதங்களை குறிக்கிறது. அதன் பின் பலி பீடத்தை வணங்கி ஐந்து படிகளை கடக்க வேண்டும். இவை பஞ்ச பூதங்களை குறிக்கிறது. பிறகு ஸ்வாமியை தரிசிக்க இரண்டு வழிகள் உள்ளது. முதல் வழி "தட்சிணாயணம்' ஆடி முதல் மார்கழி வரை திறந்திருக்கும். இரண்டாவது வழி "உத்தராயணம்' தை முதல் ஆனி வரை திறந்திருக்கும். இங்கு பலிபீடமே மிகவும் சிறப்பு. பலி பீடத்தின் முன் தங்கள் கோரிக்கை நிறைவேற வேண்டிக் கொண்டு, நிறைவேறிய பின் "பலி பீட திருமஞ்சனம்' செய்து பொங்கல் படையல் செய்து பிரார்த்தனையை நிறைவேற்றுவார்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கார்த்திகை ஞாயிற்றுக் கிழமைகளில் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி, பெருமாளுக்கு அமுது செய்த பொங்கலை சாப்பிட்டால் "புத்ர பாக்கியம்' நிச்சயம் என்பது ஐதீகம். இத்தல பெருமாள் கிழக்கு பார்த்த நின்ற திருக்கோலத்தில் உள்ளார். இவருக்கு மேல் உள்ள விமானம் விமலாக்ருத விமானம் எனப்படும். இவரை கருடன், சிபி, மார்க்கண்டேயர், பிரம்மா, சிவன் ஆகியோர் தரிசனம் செய்துள்னர்.

ஒரு முறை திருப்பாற்கடலில் மகாவிஷ்ணுவும், மகாலட்சுமியும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது பெருமாள், "லட்சுமி உனது கருணையால் இந்த உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் மிகவும் சந்தோஷமாக உள்ளது. இதனால் எனக்கு பரம திருப்தி ஏற்படுகிறது. எனவே உனக்கு வேண்டிய வரத்தை என்னிடமிருந்து கேட்டு பெறலாம்'' என்கிறார். அதற்கு லட்சுமி, "தங்களின் திருமார்பில் நித்ய வாசம் செய்யும் எனக்கு வேறு வரம் எதற்கு'' என்கிறாள். இருந்தாலும், எனது பிறந்த இடமான இந்த பாற்கடல். இங்கு தேவர்களை காட்டிலும் எனக்கு தான் அதிக உரிமை வேண்டும் என்கிறாள். அதற்கு பெருமாள், ‘உனது கோரிக்கையை இங்கு நிறைவேற்ற முடியாது. இங்கு நான் தான் அனைத்துமாக இருக்கிறேன். இருந்தாலும் பூமியில் சிபி சக்கரவர்த்திக்கு நான் தரிசனம் தரும் போது உனது விருப்பத்தை நிறைவேற்றி வைக்கிறேன்'' என்கிறார். ஒரு முறை இந்தியாவின் தென் பகுதியில் ராட்சஷர்கள் மிகுந்த தொல்லை கொடுத்து வந்தார்கள். அவர்களை அடக்க சிபி சக்கரவர்த்தி தன் படைகளுடன் அழிக்க செல்லும் போது ஒரு வெள்ளை பன்றி அவர்கள் முன் தோன்றி இவர்களுக்கு பெரும் தொந்தரவு கொடுத்தது. படை வீரர்களால் அந்த பன்றியை பிடிக்க முடியாமல் போக, சக்ரவர்த்தியே அதை பிடிக்க சென்றார். பன்றியும் இவரிடம் பிடிபடாமல் இங்கு மலை மீதுள்ள புற்றில் மறைந்து கொண்டது. அரசனும் இதை பிடிக்க மலையை சுற்றி வரும் போது, ஒரு குகையில் மார்க்கண்டேய முனிவர் கடுமையாக தவம் செய்து கொண்டிருப்பதை கண்டு அவரிடம் விஷயத்தை கூறினான். 

அதற்கு முனிவர், நீ மிகவும் கொடுத்து வைத்தவன். நாராயணனின் தரிசனத்திற்கு தான் நான் தவம் செய்து கொண்டு இருக்கிறேன். ஆனால் அவர் உனக்கு வராக (பன்றி) உருவத்தில் உனக்கு காட்சி கொடுத்திருக்கிறார். நீ இந்த புற்றில் பாலால் அபிஷேகம் செய்'' என்கிறார். அரசனும் அப்படியே செய்ய நாராயணன் தோன்றி அனைவருக்கும் காட்சி கொடுக்கிறார். இந்த தரிசனத்திற்கு வந்த மகாலட்சுமியிடம், "நீ விரும்பியபடி இத்தலத்தில் உனக்கு சகல அதிகாரத்தையும் தந்து விட்டு, அர்சா ரூபமாக இருந்து கொண்டு நான் அனைவருக்கும் அருள்பாலிக்கிறேன்'' என்கிறார் பெருமாள்.இதன் பின் அரசன் அனைவரிடமும் விடை பெற்று ராவண ராட்சஷர்களை அழிக்க சென்றான். ஆனால் மார்க்கண்டேயர், இவர்களை அழிக்க பெருமாள் ராம அவதாரம் எடுக்க உள்ளார். எனவே நீ திரும்ப நாட்டை ஆள செல் என்கிறார். ஆனால் மன்னனுக்கு மனம் திருப்தி அடையவே இல்லை. அதற்கு மார்க்கண்டேயர், "உனக்கு தரிசனம் கொடுத்த பெருமாளுக்கு நீ கோயில் கட்டி திருப்தி பெறுக'' என்கிறார். அரசனும் கோயில் கட்டி, சேவை செய்வதற்காக 3700 குடும்பங்களை அழைத்து வந்தான். வரும் வழியில் ஒருவர் இறந்து விட்டார். அதற்கு பெருமாள், அரசனிடம் நீ கவலைப் பட வேண்டாம். நானே இறந்தவருக்கு பதிலாக 3700 பேரில் ஒருவராக இருந்து, நீ நினைத்த மூவாயிரத்து எழுநூறு குடும்பக் கணக்கு குறைவு படாமல் பார்த்து கொள்கிறேன் என்கிறார். பெருமாள் அளித்த வரத்தின் படி தாயார் செங்கமலவல்லி மூல ஸ்தானத்திலேயே இருந்து கொண்டு, திருவிழா காலங்களில் பெருமாளுக்கு முன்பாக பல்லக்கில் எழுந்தருளுகிறார். இந்தக் கோயிலில் தாயாருக்கே முதல் மரியாதை. மூலவருக்கு செய்யப்படும் அனைத்து பூஜைகளும் பங்கஜவல்லி தாயாருக்கும் உண்டு. பங்குனி மாதம் அவிட்ட நட்சத்திரம் அன்று செங்கமலவல்லி தாயார், பெருமாள், பங்கஜவல்லி தாயார் மூவரும் ஒரே சிம்மாசனத்தில் எழுந்தருளுவார்கள். பல்லவர் காலத்தில் வெட்டப்பட்ட முற்றுப் பெறாத குடவரை. இது மார்க்கண்டேயர் தவம் செய்த குகை எனவும் கூறப்படுகிறது.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திவ்ய ப்ரபந்தம் - 16 - பெரியாழ்வார் திருமொழி - 1.1.4

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

திவ்ய ப்ரபந்தம் - 16 - ஆயர்களின் மெய்மறந்த செயல்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - முதலாம் திருமொழி - நான்காம் பாசுரம்

உறியை முற்றத்து* உருட்டி நின்றாடுவார்* 
நறு நெய் பால் தயிர்* நன்றாகத் தூவுவார்*
செறி மென் கூந்தல்* அவிழத் திளைத்து* 
எங்கும் அறிவழிந்தனர்* ஆய்ப்பாடி ஆயரே|

  • ஆய்ப்பாடி ஆயர் - ஆய்ப்பாடியில் உள்ள கோபர்கள், இடையர்கள்
  • உறியை - பால் தயிர் சேமித்து வைத்த உறிகளை
  • முற்றத்து உருட்டி நின்று - முற்றத்தில் உருட்டி விட்டு
  • ஆடுவார் - கூத்தாடுபவரானார்கள்
  • நறு நெய் - மணமிக்க நெய்
  • பால் தயிர் - பால் தயிர் முதலியவற்றை
  • நன்றாக - தாராளமாகத்
  • தூவுவார் - தானம் அளிப்பவரானார்கள்
  • செறிமென் - நெருங்கி மெத்தென்று படிந்திருக்கிற
  • கூந்தல் - தலைமுடி
  • அவிழத் - அவிழ்ந்து கலையும் படியாக
  • திளைத்து - நாட்டியமாடி
  • எங்கும் - ஆயர்பாடி முழுதும்
  • அறிவு அழிந்தனர் - தங்களூடைய விவேகம் ஒழியப் பெற்றனர்

ஆயர்ப்பாடியிலுள்ள ஆயர்கள் அனைவரும், நந்தகோபருடைய மாளிகைக்குச் சென்று குழந்தை கண்ணன் கோகுலத்தில் பிறந்த மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கித் தங்கள் நிதானத்தையும் தாம் என்ன செய்கின்றோம் என்ற அறிவையும் இழந்து பேரின்பம் கொண்ட நிலையைப் மிக ஆச்சர்யமாக சித்திரிக்கிறார் பெரியாழ்வார். ஆயர்கள் அனைவரும் தங்கள் வீட்டில் வைத்திருந்த, அவர்களின் வாழ்வுக்கு ஆதாரமான பாலின் பயன்களான தயிர், மோர், வெண்ணெய் ஆகியவற்றைக் கொண்ட பானைகளை உறியிலிருந்து வீட்டு முற்றத்தில் உருட்டி விட்டு விளையாடி மகிழ்ந்தனர்; சிறந்த, நல்ல மணமான நெய்யினையும், பால், தயிர் முதலியவற்றை எதிர்ப்படுவோர் அனைவரின் மீதும் உற்சாகம் பொங்கத் தூவிக் குதூகலித்தனர்; நிறைய தானமாக எல்லோருக்கும் கொடுத்து விடுவார்களாம். நன்கு கட்டப்பெற்ற, அடர்த்தியான கூந்தல் அவிழ்வதைக் கூட அறியாது மகிழ்ச்சி பெருங்கடலில் மூழ்கி, தங்களின் நிதானம் தவறியவர்களாக மாறியிருந்தனர், அறிவையும் சுயநினைவையும் இழந்தது போல் திரிந்தார்களாம் ஆயர்ப்பாடியில் உள்ள ஆயர்கள் அனைவரும்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 1.16

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² ப்ரத²மோ அத்⁴யாய꞉||
||அர்ஜுந விஷாத³ யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||முதல் அத்யாயம்||
||அர்ஜுந விஷாத யோகம்||
||குழப்பமும் கலக்கமும்||

ஸ்லோகம் - 1.16

அநந்த விஜயம் ராஜா
குந்தீ புத்ரோ யுதி⁴ஷ்டி²ர:|
நகுல: ஸஹ தே³வஸ்²ச
ஸுகோ⁴ஷ மணி புஷ்பகௌ||

  • அநந்த விஜயம் - அநந்த விஜயம் என்ற சங்கு 
  • ராஜா - ராஜா 
  • குந்தீ புத்ரோ - குந்தியின் புதல்வன் 
  • யுதி⁴ஷ்டி²ரஹ - யுதிஷ்டிரன் 
  • நகுலஸ் - நகுலன் 
  • ஸஹ தே³வஸ்² - சகாதேவன் 
  • ச - மேலும் 
  • ஸுகோ⁴ஷ மணி புஷ்பகௌ - ஸுகோஷம், மணிபுஷ்பகம் என்ற பெயருடைய சங்குகள் 

குந்தி தேவியின் மகனான யுதிஷ்டிரர் அநந்த விஜயம் என்ற சங்கையும், நகுலன் சகாதேவனும் ஷுகோஷம், மணி புஷ்பகம் என்ற சங்குகளையும் ஊதினார்கள். 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பாகவதம் - 1.1.23

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² ப்ரத²ம: அத்⁴யாய꞉||
||நைமிஷ க்ஷேத்ரே ஸ்ரீமத் பாகவத விஷயே  
ஸூதம், ப்ரதி ஸொ²னகாதி முனீநாம் ப்ரஸ்ந:||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்|| 
||முதல் ஸ்கந்தம்||
||முதல் அத்யாயம்|| 
||ஞானிகளின் கேள்விகள்||

ஸ்லோகம் - 1.1.23

ப்³ரூஹி யோகே³ஸ்²வரே க்ருஷ்ணே 
ப்³ரஹ்மண்யே த⁴ர்ம வர்மாணி।
ஸ்வாம் காஷ்டா²ம் அது⁴நோ பேதே 
த⁴ர்ம: கம் ஸ²ரணம் க³த:॥

  • தர்ம வர்மாணி - தர்மத்தை காப்பாற்றுபவரும்
  • யோகேஸ்²வரே - யோகிகளுக்கு ஈஸ்வரரும்
  • ப்ரஹ்மண்யே - பரபிரம்ம ஸ்வரூபியுமான
  • கிருஷ்ணே - ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா
  • அதுநா - இப்பொழுது
  • ஸ்வாம் காஷ்டம் - தனது எல்லையை
  • உபேதே - அடைந்த அளவில்
  • தர்மஹ் - தர்மமானது
  • கம் ஸ²ரணம் கதஹ - யாரை சரணமாக அடைந்தது?
  • ப்ரூஹி - சொல்வீராக!

அறநெறிகளைக் காப்பாற்றுபவரும், யோகிகளுக்கெல்லாம் ஈசனும், அந்தணர்களை ஆதரிப்பவருமாகிய ஸ்ரீ கிருஷ்ணன், தன் இருப்பிடத்தை அடைந்த பிறகு, தர்மம் யாரைச் சரணமாகப் பற்றியது? என்பதை இப்போது எங்களுக்குச் சொல்லுங்கள்.

ஸ்ரீமத் பாகவத மகாபுராணம், முதலாவது ஸ்கந்தத்தில் 
முதலாவது அத்யாயம் முற்றிற்று.

||இதி ஶ்ரீமத்³ பா⁴க³வதே மஹாபுராணே பாரம ஹம்ஸ்யாம் ஸம்ஹிதாயாம்
ப்ரத²ம ஸ்கந்தே⁴ நைமிஷீயோ பாக்²யாநே ப்ரத²மோ அத்⁴யாய:||

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 31

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ரம் ஆரம்பம்ll 
1008 நாமாவளி சொல்லி அவனை துதிப்போமாகll

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 1

ஓம்| 
விஸ்²வம் விஷ்ணுர் வஷட்காரோ 
பூ⁴த ப⁴வ்ய ப⁴வத் ப்ரபு⁴:|
பூ⁴த க்ருத்³ பூ⁴த ப்⁴ருத்³ பா⁴வோ 
பூ⁴தாத்மா பூ⁴த பா⁴வந:||

  • 1. விஸ்²வம் - இது மேலான நிலையை, பரத்வத்தைச் சொல்லும் திருநாமம். பிரபஞ்சத்தைப் படைத்தவர். தன்னையும் தவிர அனைத்துப் பொருட்களிலும் நுழைந்திருப்பவர்.
  • 2. விஷ்ணுர் - எல்லாவற்றிலும் அந்தர்யாமியாகப் புகுந்திருப்பவர். எல்லா இடங்களிலும் எங்கும் வியாபித்திருக்கிறார். அனைத்துப் பொருட்களையும் மறைப்பவர்.
  • 3. வஷட்காரோ - எல்லாவற்றையும் தம் வசத்தில் வைத்துக் கொண்டு ஆள்பவர், நியமிப்பவர். அவர் பிரபஞ்சத்தை கட்டுப் படுத்துகிறார். வேள்வி ஆகுதிகள் அனைத்தும் ஏற்கும் இடமாக இருப்பவர்.
  • 4. பூ⁴த ப⁴வ்ய ப⁴வத் ப்ரபு⁴ஹு - கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தின் தலைவர்.
  • 5. பூ⁴த க்ருத்³ - தனது இச்சையாலே எல்லாவற்றையும் படைப்பவர், பராமரிப்பவர் மற்றும் அழிப்பவர்.
  • 6. பூ⁴த ப்⁴ருத்³ - எல்லாவற்றையும் தாங்குபவர். பிரபஞ்சத்தை நிலைநிறுத்துபவர்.
  • 7. பா⁴வோ - எல்லாப் பொருள்களுடனும் கூடியிருப்பவர். தனது பல அழகான பாவங்களுடன், முழு சிறப்புடன், மகிமையுடன் இருக்கிறார். அனைத்துப் பொருட்களையும் நிலை நிறுத்துபவர்.
  • 8. பூ⁴தாத்மா - உலகத்துக்கு உயிராயிருப்பவர். அவர் அனைத்து உயிரினங்களின் சாரமாகவும், அனைத்து உயிரினங்களுக்கு உள்ளும் இருக்கிறார். 
  • 9. பூ⁴த பா⁴வநஹ - எல்லாப் பொருள்களையும் விருத்தி அடையும் படிப் பாதுகாத்து வளரச் செய்பவர். ஒரு தாய் தன் குழந்தையைப் பேணி வளர்ப்பது போல் அவர் எல்லா உயிர்களையும் போஷிக்கிறார். 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் - இருபத்தி எட்டாவது வார்த்தை

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

028 அந்தரங்கம் புக்கேனோ சஞ்சயனைப் போலே|

திருதராஷ்டிரனும் சஞ்சயனும் ஒரே குரு குலத்தில் பயின்றவர்கள். சஞ்சயன், மன்னன் திருதராஷ்டிரனின் தேரோட்டியும், ஆலோசகனும் ஆவார். அவனது அறிவு, பேச்சாற்றல் எல்லாம் அவனை திருதராஷ்டிரரின் அந்தரங்கச் செயலாளராக உயர்த்திவிட்டது. சஞ்சயனின் குரு, வேத வியாசர் ஆவார்.  


அப்படிப்பட்ட சஞ்சயன், இரண்டு அந்தரங்கமான செயல்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டான். குருக்ஷேத்திரத்தில் நடக்கும் யுத்தக் காட்சிகளை ஹஸ்தினாபுரத்தில் அரண்மனையில் இருந்தே காணும் படியான ஆற்றலை வேத வியாசர் அருளினார்.  பகவத் கீதையும் இவர் மூலமே மொழியப் படுகிறது. கண் இல்லாத திருதராஷ்டிரர், தன் நண்பன் சஞ்சயனுக்கு அந்த வரத்தைக் கொடுத்து யுத்த களக் காட்சியை நேரடியாகத் தெரிந்து கொண்டார். சஞ்சயன் போரில் நடந்தவைகளை, உள்ளதை உள்ள படியே விவரித்தார். கௌரவர்கள் தோற்கடிக்கப் படுவார்கள் என்ற தனது அன்றைய நாளின் மதிப்புரையைத் தயங்காது கூறினார். 

மன்னன் ஒரு நாள் சஞ்சயனிடம், போர் நடந்தால் யார் வெற்றி பெறுவார்கள் என்று வினவ, அதற்குச் சஞ்சயன், சிறிதும் தயங்காமல்: “எங்கு யோகேஸ்வரனான கிருஷ்ணன் இருக்கிறானோ, எங்கு வில்லேந்திய அர்ஜுனன் இருக்கிறானோ அங்கெல்லாம் மகாலக்ஷ்மியின் கடாட்சத்தோடு வெற்றியும், அழியாத செல்வமும், நீதியும் நிச்சயமாக இருக்கும்.” என்றார். 


பாண்டவர்களின் வனவாசம் முடிந்து, அமைதிக்கான தூது படலம் நடந்து கொண்டிருந்த நேரம், இந்திரப்ரஸ்தம் மட்டுமாவது பாண்டவர்களுக்கு வழங்குமாறு தர்மன் கேட்க, பேராசை கொண்ட மன்னன் திருதராஷ்டிரன், தன் மகன் துரியோதனன் மீதுள்ள பாசத்தால், அதை மறுத்து விடுகிறார். இச்செய்தியை பாண்டவர்களிடமும், கிருஷ்ணனிடமும் பக்குவமாக எடுத்துக் கூற சஞ்சயனை அனுப்பி வைத்தார் மன்னன் திருதராஷ்டிரன்.

போர் நிச்சயம் என்பதையும், மன்னன் திருதராஷ்டிரனின் புதல்வர்கள் மடிவார்கள் என்பதையும் நன்கு அறிந்த சஞ்சயன், மன்னன் மீதுள்ள மரியாதை, தன் கடமை மீது கொண்டுள்ள பக்தி மற்றும் கிருஷ்ணன் மீது கொண்டுள்ள பக்தி காரணமாக அச்செய்தியைப் பாண்டவர்களிடமும் கிருஷ்ணனிடமும் கொண்டு சேர்த்தார்.

சஞ்சயன் அரண்மனை வந்த நேரம், கிருஷ்ணன், தனது படுக்கையறையில், சத்யபாமா மடியில் தலை வைத்து, தன் இரு பாதங்களை அர்ஜுனனின் மடி மீது நீட்டி, அவரது படுக்கையில் படுத்திருக்க, திரௌபதி அவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தாள். சஞ்சயன் வந்திருந்த செய்தி கேட்டதும், கிருஷ்ணன் “சஞ்சயனா! உள்ளே அனுமதியுங்கள்! நமது உறவின் நெருக்கத்தைக் கண்டு விட்டு துரியோதனனிடம் சென்று கூறட்டும். அப்பொழுதாவது துரியோதனன் யோசிப்பானா என்று பார்ப்போம்! மன்னனும் மற்றவர்களுமாவது உணர்ந்து கொள்வர்.”, என்றார்.


உண்மையில், அந்தரங்க அறைக்குள் அந்நியர்கள் நுழையக் கூடாது என்றாலும், அர்ஜுனனும் திரௌபதியும் அங்கிருந்தனர். அவர்களுடன் சேர்ந்து சஞ்சயனுக்கும் அப்பாக்கியம் கிட்டியது என்றால் அர்ஜுனனுக்கு நிகராக சஞ்சயனை கிருஷ்ணர் மதித்தார் என்றல்லவா பொருள்! சஞ்சயனின் பணிவு, நம்பகத்தன்மை, கடமையில் கொண்டுள்ள பக்தி, உண்மையை எடுத்துக் கூறுவதில் உள்ள தைரியம், தன் மன்னன் தவறான பாதையில் சென்றாலும் அதைத் தைரியமாக எடுத்துக் கூறியும், தன் கடமை மறவாது அம்மன்னனுக்கே உண்மையாகக் கடமையாற்றுவதும் என அவரது குணங்கள் கிருஷ்ணனை ஈர்த்ததால் சஞ்சயனுக்கு இக்காட்சியைக் காண அருளினார்.

சஞ்சயன், இறைவனை அந்தப்புரத்தில் கண்டதும் மெய் மறந்து திகைத்து விட்டான். உள்ளத்திலே இறைவனை உறைய வைத்த சஞ்சயன் இறைவனின் அந்தரங்கம் வரை செல்லும் வாய்ப்பை பெற்றான். அந்தக் கிடைத்தற்கரிய காட்சியை இறைவன் சஞ்சயனுக்குக் கொடுத்தார்.

சஞ்சயன் மிக நல்லவன், அதனாலே தன் அந்தரங்க இடத்திலும் வரவேற்றார் கிருஷ்ணர். சஞ்சயன் இல்லை என்றால் கிருஷ்ணன் குருக்ஷேத்திரப் போரில் காட்டிய விஸ்வரூப தரிசனம் திருதராஷ்டிரனுக்கு கிடைத்திருக்காது.

திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, "அந்த எம்பெருமானின் அந்தரங்கக் கோலத்தை பார்க்கும் பாக்கியம் பெற்ற சஞ்சயன் போல நான் இல்லையே." ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

லீலை கண்ணன் கதைகள் - 21

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

கிருஷ்ணன் உரலோடு கட்டப்படுதல்|

ஒரு நாள் யசோதை தீவிரமாக தயிர் கடைந்து கொண்டிருந்தாள். அப்போது கிருஷ்ணனின் குறும்புத் தனங்கள் அவளுக்கு ஞாபகம் வந்தன. அவற்றை ஒரு பாட்டாக இட்டுக் கட்டி அவள் அதை பாடத் தொடங்கினாள். கண்ணன் ஓர் அறையில் தூங்கிக் கொண்டிருந்தான். 


தூங்கி விழித்ததும் அவனுக்குப் பசியெடுத்தது. உடனே அவன் சென்று தாயார் தயிர் கடையவொட்டாமல் மத்தைப் பிடித்து இழுத்தான். அவனது அந்தச் செயல் "அம்மா நீ தயிர் கடைந்தது போதும் என்னைப் பார் எனக்குப் பசிக்கிறது," என்று அவன் சொல்வது போல இருந்தது. யசோதை அவனைப் பார்த்து புன்னகை புரிந்து, அவனைத் தன் மடியில் கிடத்தி அவனுக்குப் பால் ஊட்ட ஆரம்பித்தாள். அப்பொழுது அடுப்பில் வைத்திருந்த பால் பொங்கி வழியும் வாசனை வரவே அவள் குழந்தையைத் தரையில் கிடத்தி விட்டுச் சமையலறைக்கு சென்றாள்.


கிருஷ்ணனுக்கு பாதி வயிறு தான் நிரம்பியிருந்தது. அதனால் அவன் எரிச்சல் அடைந்தான். பக்கத்தில் இருந்த அம்மிக் குழவியை எடுத்து கோபத்தோடு தயிர் கடையும் பானையின் மீது வீசினான். பானை உடையவே, தன் சின்னசிறு கைகளால் நிறைய வெண்ணெயை வாரி எடுத்தான். மாய்மாலக் கண்ணீருடன் ஓர் அறைக்குள் நுழைந்து அங்கிருந்த உரலின் மீது உட்கார்ந்து கொண்டு வெண்ணையைத் தின்ன ஆரம்பித்தான். சமையலறை சென்ற யசோதை திரும்பி வந்து பார்த்தால், தயிர் பானை உடைந்து கிடந்தது; தயிர் எங்கும் ஓடிக் கொண்டிருந்தது. கிருஷ்ணனோ அங்கு எங்கும் காணோம்! கிருஷ்ணன் தான் பானையை உடைத்திருப்பான் என்பதில் அவளுக்கு சந்தேகம் இல்லை. வெண்ணெய் பட்ட அவனுடைய பாத சுவடுகளை அவள் பின் தொடர்ந்தாள். உருட்டி விடப்பட்ட ஒரு மர உரலின் மீது உட்கார்ந்து கொண்டு, மரங்களிலிருந்து கீழே இறங்கி வந்திருந்த குரங்குகளுக்கு அவன் வெண்ணெய் கொடுத்துக் கொண்டிருந்தான்! அம்மா கோபித்துக் கொள்ளுவாள் என்று அவனுக்கு தெரியுமாதலால், அவள் எப்போது வருவாளோ என்று நாலா பக்கங்களிலும் பார்த்துக் கொண்டிருந்தான்.


கையில் ஒரு கழியுடன் யசோதை மெல்ல அவன் பின்பக்கமாக வந்தாள். அவளைக் கண்டதும் ஏதோ பயந்தவனைப் போலக் கிருஷ்ணன் உரலை விட்டுக் கீழே இறங்கி ஓட ஆரம்பித்தான். யசோதையும் கையில் கழியுடன் அவனை பின் தொடர்ந்தாள். சிறிது நேரம் ஓடிய பிறகு கிருஷ்ணன் வேண்டுமென்றே அன்னையிடம் அகப்பட்டுக் கொண்டான். "உன்னுடைய குறும்புகள் அளவு கடந்து போய் விட்டன. நான் உனக்கு அதிக இடம் கொடுத்து விட்டேன். நீ இனிக் குறும்பு செய்யாதபடி உன்னைக் கட்டி வைக்கப் போகிறேன். நீ உன் நண்பர்களோடு இனி விளையாட முடியாது" என்று சொல்லி ஒரு கயிறு கொண்டு கிருஷ்ணனை உரலோடு கட்டப் போனாள். ஆனால் கயிறு சற்று நீளம் குறைவாக இருந்தது. அதனால் இன்னொரு கயிறு கொண்டு முதல் கயிற்ரோடு முடித்தாள். என்ன ஆச்சரியம்! அப்போதும் கயிறு போதிய நீளமில்லை. அதோடு இன்னொரு கயிறு கட்டினாள். அப்போதும் கயிறு இரண்டு விரற்கடை குறைவாக இருந்தது. ஏமாற்றமடைந்து அவள் ஒவ்வொரு கயிறாகச் சேர்த்துக் கட்டினாள். ஆனால் நீளம் இரண்டு விரற்கடை குறைவாகவே இருந்தது. வீட்டில் உள்ள எல்லாக் கயிறுகளையும் சேர்த்துக் கட்டியாகி விட்டது; ஆனால் கிருஷ்ணனை கட்ட முடியவில்லை. சுற்றி நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்த கோபிகள் யசோதையின் திண்டாட்டத்தைக் கண்டு சிரித்தார்கள். 


பாவம் யசோதையும் என்ன செய்ய முடியும்? அவளும் அவர்களோடு சேர்ந்து சிரித்தாள். தன் தாயார் களைத்துப் போய் வேர்க்க விறுவிறுக்க இருப்பதைக் கண்டு கிருஷ்ணன் அவள் மீது இறக்கம் கொண்டு, கடைசியில் கட்டுப்படச் சம்மதித்தான். பிறகு யசோதை உரலோடு கட்டபட்ட கிருஷ்ணனை அங்கு விட்டு விட்டு தன் வீட்டு வேலைகளைக் கவனிக்க உள்ளே சென்றாள். 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 003 - திருக்கரம்பனூர் 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

003. திருக்கரம்பனூர்
உத்தமர் கோயில், கதம்ப க்ஷேத்ரம் – திருச்சி 
மூன்றாவது திவ்ய க்ஷேத்ரம்

மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
1 ஆழ்வார்   1 பாசுரம்

1. திருமங்கையாழ்வார் - 1 பாசுரம்
1. பெரிய திருமொழி (இரண்டாம் ஆயிரம்)

  • திவ்ய ப்ரபந்தம் - 1399 - ஐந்தாம் பத்து   ஆறாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்

---------- 
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி

தனியன்
மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ*

அந்தாதி
சிலமா தவம் செய்தும் தீ வேள்வி வேட்டும்
பலமா நதியில் படிந்தும் உலகில்
பரம்ப நூல் கற்றும் பயன் இல்லை நெஞ்சே
கரம்பனூர் உத்தமன் பேர் கல்

  • நெஞ்சே - எனது மனமே! 
  • உலகில் - இவ்வுலகத்தில்
  • சில மாதவம் செய்தும் - சில பெரும் தவங்களைச் செய்தும்
  • தீ வேள்வி வேட்டும் - ஓமாக்கினியை உடைய யாகத்தைச் செய்தும்
  • பல மா நதியில் படிந்தும் - பல சிறந்த நதிகளில் மூழ்கியும்
  • பரம்ப நூல் கற்றும் - விரிவாக நூல்களைப் படித்தும்
  • பயன் இல்லை - அவற்றால் யாதொருபயனும் உண்டாகாது. ஆதலால் அவ்வாறெல்லாம் செய்வதை விட்டுத் தவறாமற் பயன் பெறும் படியாக
  • கரம்பனூர் உத்தமன் பேர் கல் - திருக்கரம்பனூர் என்னும் ஸ்தலத்தில் எழுந்தருளி உள்ள புருஷோத்தமனது திருநாமத்தைப் பல தரம் கூறுவாயாக
----------
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 1

திருமங்கையாழ்வார்

001. திவ்ய ப்ரபந்தம் - 1399 - உலகேழும் உண்டவனை அரங்கத்தில் கண்டேன்
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து   ஆறாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
பேரானைக்* குறுங்குடி எம் பெருமானை* 
திருத்தண்கால் ஊரானைக்* கரம்பனூர் உத்தமனை*
முத்து இலங்கு கார் ஆர் திண் கடல் ஏழும்* 
மலை ஏழ் இவ் உலகு ஏழ் உண்டும்*
ஆராது என்று இருந்தானைக்* கண்டது தென் அரங்கத்தே|

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திவ்ய ப்ரபந்தம் - 15 - பெரியாழ்வார் திருமொழி - 1.1.3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

திவ்ய ப்ரபந்தம் - 15 - திருவோணத்தான் உலகை ஆளுவான்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - முதலாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்

பேணிச் சீருடைப்* பிள்ளை பிறந்தினில்*
காணத் தாம் புகுவார்* புக்குப் போதுவார்*
ணொப்பார்* இவன் நேரில்லை காண்* 
திருவோணத்தான்* உலகாளும் என்பார்களே|

  • சீர் உடை  - நற்குணம் மிக்க
  • பிள்ளை - பிள்ளை கிருஷ்ணன்
  • பேணி - கம்சன் கண் படாதபடி
  • பிறந்தினில் - பிறந்தவனைக் காத்து வந்ததால்
  • தாம் - ஆய்ப்பாடி ஆயர்கள்
  • காண - பிள்ளையைக் காண ஆசைப்பட்டு
  • புகுவார் - உள்ளே நுழைவாரும்
  • புக்கு - உள்ளே போய் பார்த்து
  • போதுவார் - திரும்புவாரும்
  • ஆணொப்பார் இவன் - இவனுக்கு ஈடான ஆண்
  • நேர் இல்லை காண் - யாரும் இல்லை
  • திரு வோணத்தான் - திருவோணத்தில் அவதரித்தவன்
  • உலகு ஆளும் - உலகங்களை எல்லாம் ஆள்வான்
  • என்பார்களே - என்று சொல்லலானார்கள்

கம்சனை போன்ற துஷ்டர்களிடமிருந்து காத்து வந்த இறை ஒளி வீசும், சிறந்த புகழ்களை உடைய குழந்தையான கண்ணன் பிறந்திருந்த நந்தகோபருடைய மாளிகைக்கு, குழந்தையைப் பார்க்க அவ்வூர் ஆயர் குலத்து பெருமக்கள் அவ்வப்போது அன்போடு பார்ப்பதும் வருவதுமாக இருந்தார்கள். அவர்களில் சிலர் இந்த உலகத்திலேயே இதுவரைக்கும், இக்குழந்தைக்கு ஒப்பான (கண்ணனுக்கு) நிகர் வேறு இல்லை என்பார்கள். இவன் திருவோண திருநக்ஷத்திரத்தில் பிறந்திருப்பதால் எல்லா உலகங்களையும் ஆளக்கூடிய திறன் படைத்தவன் என்பார் சிலர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்