About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Saturday, 6 January 2024

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 92

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 62

த்ரிஸாமா ஸாமக³: ஸாம
நிர்வாணம் பே⁴ஷஜம் பி⁴ஷக்:|
ஸந்யாஸ க்ருச்ச²மஸ்² ஸா²ந்தோ
நிஷ்டா² ஸா²ந்தி: பராயணம்||

  • 581. த்ரிஸாமா - சாமங்களினால் பாடப்படுபவர். மும்மடங்கு சாம வேதத்தால் முன்னிறுத்தப்பட்டவர்
  • 582. ஸாமக³ஸ் - ஸாமத்தை (ஸாம கானத்தைப்) பாடுபவர். 
  • 583. ஸாம - தன்னைப் பாடுபவர்களின் பாவங்களை ஒழிப்பவர்.
  • 584. நிர்வாணம் - முக்தி வடிவானவர். முழுமையான பேரின்பம்.
  • 585. பே⁴ஷஜம் - பிறவிப் பிணிக்கு மருந்தானவர். 
  • 586. பி⁴ஷக்கு - மருத்துவர்.
  • 587. ஸந்யாஸ க்ருச் - தியாகம் செய்பவர். ஆசைகள் துறக்கப்படும் போது அவர் பிணைப்புகளை துண்டிக்கிறார்.
  • 588. ச²மஸ்² - உபதேசிப்பவர்.
  • 589. ஸா²ந்தோ - அமைதியானவர்.
  • 590. நிஷ்டா² - தியானத்துக்குப் பொருளாயிருப்பவர்.
  • 591. ஸா²ந்திஃ - சாந்தியுடையவர்.
  • 592. பராயணம் - பரமபக்தியைத் தானே அளிப்பவர்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 2.29

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||

ஸ்லோகம் - 2.29 

ஆஸ்²சர்ய வத் பஸ்²யதி கஸ்²சிதே³ நம்
ஆஸ்²சர்ய வத்³ வத³தி ததை²வ சாந்ய:|
ஆஸ்²சர்ய வச் சை நமந்ய: ஸ்²ருணோதி 
ஸ்²ருத்வா அப்யே நம் வேத³ ந சைவ கஸ்²சித்||

  • ஆஸ்²சர்ய வத் - ஆச்சரியமானதாக 
  • பஸ்²யதி - காண்கின்றனர் 
  • கஸ்²சித் - சிலர் 
  • ஏநம் - இந்த ஆத்மாவை 
  • ஆஸ்²சர்ய வத் - ஆச்சரியமானதாக 
  • வத³தி - சொல்கின்றனர் 
  • ததா - இவ்வாறு 
  • ஏவ - நிச்சயமாக 
  • ச - மேலும் 
  • அந்யஹ - பிறர் 
  • ஆஸ்²சர்ய வச் - அது போலவே ஆச்சரியமானதாக 
  • ச - மேலும் 
  • ஏநம் - இந்த ஆத்மாவை 
  • அந்யஸ் - பிறர் 
  • ஸ்²ருணோதி - கேட்கின்றனர் 
  • ஸ்²ருத்வா - அவ்வாறு கேட்ட 
  • அபி - பின்னும் 
  • ஏநம் - இந்த ஆத்மாவை 
  • வேத³ - அறிபவர் 
  • ந - ஒரு போதும் இல்லை 
  • ச - மேலும் 
  • ஏவ - நிச்சயமாக 
  • கஸ்²சித் - எவருமே

இந்த ஆத்மாவை சிலர், ஆச்சரியமானதாக காண்கின்றனர். மேலும் பிறர், ஆச்சரியமானதாக பேசுகின்றனர். அதுபோலவே, மேலும் சிலர், இந்த ஆத்மாவை ஆச்சரியமானதாக கேட்கின்றனர். அவ்வாறு கேட்ட பின்னும், இந்த ஆத்மாவை, அறிபவர் ஒரு போதும் எவருமே இல்லை.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவதம் - 1.3.27

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்ருதீயோ அத்⁴யாய꞉||
||பகவதஸ்² சதுர் விம்ஸ²த் யவதாராணாம் 
ஸம்க்ஷேபதோ வர்ணம்||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||மூன்றாம் அத்யாயம்||
||ஸ்ரீ பகவானது திரு அவதாரங்களைக் கூறுதல்||

ஸ்லோகம் - 1.3.27

ருஷயோ மநவோ தே³வா 
மநு புத்ரா மஹௌ ஜஸ:|
கலா: ஸர்வே ஹரேர் ஏவ 
ஸப்ரஜா பதயஸ் ததா²||

  • ஸப்ரஜா பதயஸ் ருஷயோ - ப்ரஜாபதிகளோடு கூடிய ரிஷிகளும் 
  • மநவோ - மனுக்களும் 
  • தே³வா - தேவர்களும் 
  • மநு புத்ரா - மனுக்களின் புதல்வர்களும் 
  • ததா² - அவ்வாறே 
  • மஹௌ ஜஸஹ - மஹா வீரியம் வாய்ந்த 
  • ஸர்வே - யாவருமே 
  • ஹரேர் - அந்த பரமாத்மாவின் 
  • கலாஸ் ஏவ - அம்சங்களே ஆவர்

நாரதர் முதலிய மகரிஷிகள், ஸ்வாயம்புவர் முதலிய மனுக்கள், இந்திரன் முதலிய தேவர்கள், பிரிய விரதன் முதலிய மநு புத்திரர்கள், தக்ஷன் முதலிய பிரஜாபதிகள் மற்றும் ஏதாவது ஒரு விதத்தில் மேம்பட்டவர்கள் எல்லோருமே, பகவானுடைய கலைகள் தான்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.27

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

உலகின் உன்னத மனிதனைக் குறித்து 
நாரதரிடம் கேட்ட வால்மீகி 
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்

ஸ்லோகம் - 1.1.27

ஜநகஸ்ய குலே ஜாதா 
தே³வ மாயேவ நிர்மிதா|
ஸர்வ லக்ஷண ஸம்பந்நா 
நாரீணா முத்தமா வதூ⁴:|| 

  • ஜநகஸ்ய - ஜனகருடைய
  • குலே - குலத்தில்
  • ஜாதா - உண்டானவளான
  • தே³வ மாயா இவ - தேவ மாயை போல்
  • நிர்மிதா - அமைந்தவளான
  • ஸர்வ லக்ஷண - ஸகல லக்ஷணங்களோடு
  • ஸம்பந்நா - நிறைந்தவளான
  • நாரீணாம் - ஸ்த்ரீகளுக்குள்
  • உத்தமா - சிறந்த
  • வதூ⁴ஹ் - பெண்ணான

ஜனகனின் குலத்தில் பிறந்தவளும், தேவ மாயையால் வடிவு அமைக்கப் பட்டவளைப் போல அனைத்து நற்குறிகளும் பொருந்தியவளும், பெண்களில் சிறந்தவளுமான,

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

திவ்ய ப்ரபந்தம் - 73 - பெரியாழ்வார் திருமொழி - 1.5.10

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் - 73 - இடையர்கள் வம்சத்துக்கு ராஜாவானவனே!
பெரியாழ்வார் திருமொழி 
முதலாம் பத்து - ஐந்தாம் திருமொழி - பத்தாம் பாசுரம்

செங்கமலக் கழலிற் சிற்றிதழ் போல் விரலில்* 
சேர் திகழாழிகளும் கிண்கிணியும்* 
அரையில் தங்கிய பொன் வடமும் 
தாள நன் மாதுளையின்* 
பூவொடு பொன் மணியும் மோதிரமும் கிறியும்* 
மங்கல ஐம்படையும் தோள் வளையும் குழையும்* 
மகரமும் வாளிகளும் சுட்டியும் ஒத்திலக* 
எங்கள் குடிக்கரசே! ஆடுக செங்கீரை* 
ஏழுலகும் உடையாய்! ஆடுக ஆடுகவே|

  • செம் கமலம் - செந்தாமரைப் பூப் போன்ற
  • கழலில் - திருவடிகளில்
  • சிற்றிதழ் போல் - அந்தப் பூவினுடைய உள்ளிதழ் போலே சிறுத்திருக்கிற
  • விரலில் - திரு விரல்களில்
  • சேர் திகழ் - சேர்ந்து சோபிக்கிற
  • ஆழிகளும் - மோதிரங்களும்
  • கிண் கிணியும் - திருவடி சதங்கைகளும்
  • அரையில் தங்கிய - இடுப்பில் சாத்தியிருந்த
  • பொன் வடமும் - பொன் அரை நாணும்
  • தாள - பொன்னால் செய்த காம்பையுடைய
  • நல் - நல்லதான
  • மாதுளையின் பூவொடு - மாதுளம் பூக்கோவையும்
  • பொன் மணியும் - நடு நடுவே கலந்து கோத்த பொன் மணிக் கோவையும்
  • மோதிரமும் - திருக்கை மோதிரங்களும்
  • சிறியும் - மணிக் கட்டில் சாத்தின சிறுப் பவள வடமும்
  • மங்கலம் - மங்களகரமான
  • ஐம்படையும் - பஞ்சாயுதங்களும் (ஐம்படைத் தாலி)
  • தோள் வளையும் - திருத் தோள் வளைகளும்
  • குழையும் - காதணிகளும்
  • மகரமும் - மகர குண்டலங்களும்
  • வாளிகளும் - திருச் செவி மடல் மேல் சாத்தின வாளிகளும்
  • சுட்டியும் - திரு நெற்றிச் சுட்டியும்
  • ஒத்து - சேர்ந்து
  • இலக - விளங்கும்படி 
  • எங்கள் குடிக்கு - எங்கள் வம்சத்துக்கு
  • அரசே - ராஜாவானவனே!
  • ஆடுக செங்கீரை — ஆடுக செங்கீரை
  • ஏழ் உலகும் உடையாய்! — ஏழ் உலகுக்கும் அதிபதியே!
  • ஆடுக ஆடுகவே — ஆடுவாய் ஆடுவாய்

எங்கள் குல அரசே! செந்தாமரை போன்ற உன் திருவடிகளின் விரல்கள் தாமரையின் உள்ளிதழ்கள் போலிருக்கிறது. உன் திருவாழி மோதிரங்கள், கால் சதங்கைகள், இடுப்பில் இருக்கும் பொன் நாண், பொன்னால் செய்த மாதுளம் பூ பொன்மணி சேர்ந்து கோத்த மாலை, திருக்கை மோதிரங்கள் , மணிக்கட்டில் சாத்திய வடம், மங்களமான பஞ்சாயுதம் பதித்த கழுத்து மாலை, திருத்தோள்வளைகள் , காதணிகள் , மகர குண்டலங்கள், நெற்றி சுட்டி இவை எல்லாம் ஒன்று சேர்ந்தாற் போல் அழகாக அசைய நீ செங்கீரை ஆடவேண்டும்! ஏழுலகமும் ஆள்பவனே, நீ ஆடவேண்டும்!

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 020 - திரு தஞ்சைமாமணி கோவில் 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

020. திரு தஞ்சைமாமணி கோவில் (தஞ்சாவூர்)
இருபதாவது திவ்ய க்ஷேத்ரம்

ஸ்ரீ நீலமேகப் பெருமாள் திருக்கோயில்

ஸ்ரீ செங்கமலவல்லி தாயார் ஸமேத ஸ்ரீ நீலமேக பெருமாள்
திருவடிகளே சரணம்

  • பெருமாள் மூலவர்: நீலமேகம், மணிக்குன்றம், நரஸிம்ஹர்                                                                  (தஞ்சையாளி)
  • பெருமாள் உற்சவர்: வெண்ணாத்தங்கரை (நாராயணர் பெருமாள்)
  • தாயார் மூலவர்: செங்கமலவல்லி, தஞ்சைநாயகி
  • தாயார் உற்சவர்: அம்புஜவல்லி
  • திருமுக மண்டலம் திசை: கிழக்கு 
  • திருக்கோலம்: வீற்றிருந்த
  • புஷ்கரிணி: கன்னிகா, சூரிய
  • தீர்த்தம்: அமிர்த, வெண்ணாறு, ஸ்ரீராம 
  • விமானம்: சௌந்தர்ய, மணிக்கூட, வேதஸுந்தர
  • ஸ்தல விருக்ஷம்: மகிழம்
  • ப்ரத்யக்ஷம்: பராசரமுனி, மார்கண்டேயர்
  • ஆகமம்: வைகாநஸம்
  • ஸம்ப்ரதாயம்: தென் கலை
  • மங்களாஸாஸநம்: 3 ஆழ்வார்கள்
  • பாசுரங்கள்: 5

--------------------
ஸ்ரீ. உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி


ஸ்தல புராணம்

திருமணங் கொள்ளையில் மகாவிஷ்ணுவிடம் திருமந்திர உபதேசம் பெற்ற திருமங்கையாழ்வார் இத்தலத்தை இரண்டாவதாக மங்களாஸாஸநம் செய்துள்ளார். வீர நரசிம்மர் கருவறையில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி தருகிறார். மூன்று மூலவர்களுக்கும் தைலக் காப்பு மட்டுமே செய்யப் படுகிறது.  நீலமேகப்பெருமாள் உற்சவராக கையில் செங்கோல் ஏந்திய படியும், உற்சவர் தாயார் அக்னி கிரீடம் அணிந்து கொண்டு சாந்தமான கோலத்தில் காட்சி தருவதும் சிறப்பு. இவரது கருவறையில் பராசரர் ஸ்வாமியை வணங்கிய கோலத்தில் இருக்கிறார். ஹயக்ரீவர் இங்கு லட்சுமியுடன் வடக்கு பார்த்தபடி இருக்கிறார். கல்விக்கு அதிபதியான ஹயக்ரீவர், செல்வத்திற்கு அதிபதியான லட்சுமி ஆகிய இருவருக்கும் ஏலக்காய் மாலை சாத்தி, நெய் விளக்கு, கற்கண்டு நைவேத்யம் படைத்து வணங்கினால் கல்வியில் சிறக்கலாம், செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. 

பராசரர் எனும் மகரிஷி பாற்கடலில் கிடைத்த அமிர்தத்தை, மணிமுக்தா நதியில் இட்டு அதன் கரையில் ஆசிரமம் அமைத்து தவம் செய்து வந்தார். ஆசிரமத்துக்கு அருகே ஒரு சுனையில் மட்டும் நன்னீர் இருந்தது. அப்போது சிவனிடம் சாகா வரம் பெற்ற தஞ்சகன், தண்டகன், தாராசுரன் எனும் மூன்று கொடிய அசுரர்கள் மூவரும் அங்கு வந்து அத் தண்ணீரை பருகி விட்டு அங்குள்ள பராசரையும், அவருடன் தவம் செய்து வந்த முனிவர்களையும் தொந்தரவு செய்தனர். பராசரர் அவர்களிடம் அசுர குணங்களை விட்டு விடும் படி சொல்லிப் பார்த்தார். அவர்களோ கேட்பதாக இல்லை. எனவே அசுரர்களை அழிக்கும் படி சிவனிடம் வேண்டினார் பராசரர். சிவன் மாயா சக்தியாக காளி தேவியை அனுப்பி அசுரர்களை வதம் செய்தார். ஆனால், அசுரர்கள் மூவரும் அமிர்தம் கலந்திருந்த தீர்த்தத்தை பருகி மீண்டும், மீண்டும் உயிர் பெற்று முனிவர்களை கொடுமைப் படுத்தினர். கலக்கமடைந்த பராசரர் மகாவிஷ்ணுவிடம் வேண்டினார். மகாவிஷ்ணு அசுரர்களை அழிக்க சென்றார். அப்போது தஞ்சகன் யானை வடிவம் எடுக்கவே, மகாவிஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்து வீழ்த்தினார். அவனை கொல்வதற்காக தன் மடியில் கிடத்தினார். மகாவிஷ்ணுவின் திருமேனியில் கிடத்தப்பட்டவுடன் தஞ்சகனுக்கு ஞானம் பிறந்தது. அசுர குணங்கள் ஒழியப் பெற்ற அவன் மகா விஷ்ணுவிடம், "எனக்காக நரசிம்மராக வந்த நீங்கள் இங்கேயே தங்கி மக்களுக்கும் அருள வேண்டும், எனது பெயராலேயே இத்தலமும் அழைக்கப்பட வேண்டும்'' எனக் கேட்டான். அவரும் அருள் புரிந்தார். அவனது பெயரால் இத்தலம் "தஞ்சமாபுரி' எனப்பட்டது. 

தஞ்சகனின் அழிவைக் கண்ட தண்டகன், பூமியை பிளந்து கொண்டு தப்பித்துச் சென்றான். மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து பூமிக்குள் சென்று அவனை அழித்தார். பின் காளியை அனுப்பி தாரகனை வதம் செய்ய அருளினார். யாளியாகிய நரஸிம்ஹர் ரூபத்தில் கஜமுகனை அழித்ததால் தஞ்சையாளி என்றும், தண்டகாசுரனை இங்கே அழித்ததால் தண்டகாரணியம் ஆயிற்று. கருடன் பறந்து வந்து இந் நகரத்தை காப்பதாக சொல்லுவர்கள். இந்நகரத்திற்கு பராசர க்ஷேத்ரம், வம்புலாஞ் சோலை, அழகாபுரி, கருடாபுரி, சமீவனம், தஞ்சையாளி நகர் என பலப் பெயர்கள் உண்டு மூன்று அசுரர்களும் அழிக்கப்பட்ட பிறகு அவர் பராசரருக்கு நீலமேகப் பெருமாளாக காட்சி தந்தார். இவர் மூன்று திருநாமங்களில் தனித்தனி கோயில்களில் இத்தலத்தில் அருள் புரிகிறார். 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

லீலை கண்ணன் கதைகள் - 83

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஜராசந்தனின் கதை|

ஜராசந்தனின் கதையைக் கிருஷ்ணர் சொல்ல ஆரம்பித்தார். 

பிருகத்ரன் என்ற ஓர் அரசன் இருந்தான். வெகு நாளாக அவனுக்குக் குழந்தையே பிறக்கவில்லை. ஒரு நாள் காட்டில் அவன் ஒரு முனிவரைப் பார்த்தான். அவரிடம் அவன் தன் குறையைச் சொன்னதும், பழம் ஒன்றை அவர் அவனிடம் கொடுத்தார், "இதை உன் மனைவியைச் சாப்பிடச் சொல், அவளுக்கு ஒரு பிள்ளை பிறப்பான். அவன் மிகுந்த பராக்கிரமசாலியாகவும் சிறந்த சிவபக்தனாகவும் விளங்குவான்" என்றார். 


அரசனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தார்கள். அதனால் அரசன் பழத்தை இரண்டு துண்டாக்கித் தன் மனைவிகளுக்கு ஆளுக்கொரு பாதியைக் கொடுத்தான். இரண்டு பெரும் கருவுற்று உரிய காலத்தில் ஆளுக்கு ஒரு குழந்தையைப் பெற்றார்கள். ஆனால் என்ன ஆச்சரியம்! இரண்டு ராணிகளுமே ஆளுக்கு ஒரு பாதிக் குழந்தையைப் பெற்றெடுத்தனர். பாதி தலை, ஒரு கண், ஒரு மூக்குத் துவாரம், ஒரு தோள் என்று இப்படி இருந்த அந்த உயிரற்ற குழந்தைகளைப் பார்க்கக் கோரமாக இருந்தது. அரசன் வெறுப்புற்று, அந்த இரண்டு பத்திக் குழந்தைகளையும் ஒரு குழியில் போட்டுவிட்டான். 

அந்த நகரில் ஜரா என்ற ஓர் அரக்கி இருந்தாள். ஒவ்வோர் இரவும் அவள் நகருக்குள் நுழைந்து, கிடைத்ததைச் சாப்பிடுவாள். அன்று இரவு அந்த இரண்டு பாதி உடல்களைப் பார்த்து அவள் ஆச்சரியப் பட்டாள். பிறகு அவள் அந்த இரண்டு பாதிகளையும் ஒன்று சேர்த்தாள். என்ன ஆச்சரியம்! அந்த இரண்டு பாதி உடல்களும் ஒட்டிக் கொண்டதோடு, குழந்தை உயிர் பெற்று அழ ஆரம்பித்தது. 

அவள் குழந்தையை எடுத்துக் கொண்டு அரசனிடம் சென்று, "இந்தா, உன் மகன்" என்று கொடுத்தாள். நடந்ததை கேட்டு அரசன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான். ஜராவினால் சேர்க்கப்பட்டதனால், அந்தக் குழந்தைக்கு ஜராசந்தன் என்று பெயர் வைத்தான், இப்பொழுது ஜராசந்தன் நல்ல பலசாலியாக விளங்குவதுடன் சிறந்த சிவபக்தனாகவும் விளங்கினான்.

கிருஷ்ணர் சொன்ன ஜராசந்தனின் கதையைக் கேட்டு எல்லோருக்கும் வியப்பாக இருந்தது.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவத புராணம் - 36

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

யோக ஸாதனை

ஸ்கந்தம் 02

ஸ்ரீ சுகாசார்யார் அடுத்ததாக யோக வழியைச் சொல்கிறார்.

“யோகியானவன் உடலை விட்டு விட விரும்பினால், இடம், காலம் நிகழ்வுகளில் மனத்தைச் செலுத்தாமல், அசைவற்ற ஒரு சுகமான ஆசனத்தில் அமர்ந்து, புலன்களை அதன் வழியில் செல்லாமல் தடுத்து நிறுத்த வேண்டும்.


ப்ராணாயமத்தால் மூச்சைக் கட்டுப்படுத்த வேண்டும். புலன்களை வசப்படுத்த மனதை அடக்க வேண்டும். மனத்தை புத்தியால் தன் வயப்படுத்தி வேண்டும். மனம், புத்தி இரண்டையும் அவற்றின் ஆதாரமான ஆத்மாவில் அல்லது க்ஷேத்ரக்ஞனில் ஒடுக்க வேண்டும். மனம், புத்தி, க்ஷேத்ரக்ஞன் மூன்றையும் சுத்த ஸத்வமான ஆத்மாவில் லயமாக்க வேண்டும். பிறகு நான்கையும் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரமாத்மாவில் லயமடையச் செய்தால் அதன் பின் சாந்தி தான்.

பகவானது கால ஸ்வரூபம் ப்ரும்மா உள்பட அனைவரையும் ஆட்டிப் படைக்கிறது. தேவர்கள் புலன்களின் அதிபதிகளாக இருந்து ஆட்டிப் படைக்கிறது. பகவானின் பரமாத்ம ஸ்வரூபத்தில் லயமடைந்தவனை பகவானின் கால ரூபமான சக்தி கூட ஒன்றும் செய்ய இயலாது. ப்ரக்ருதியே ஒன்றும் செய்ய இயலாதெனில், முக்குணங்கள் என்ன செய்து விட முடியும்? யோகிகள் பரமாத்மாவைத் தவிர, மற்ற அனைத்தையும் இதுவல்ல இதுவல்ல என்று தள்ளி விடும் போது, நான் என்றோ, என் மனைவி மக்கள் என்றோ எப்படி உணர்வான்?

யோக மார்கத்தைப் பின்பற்றும் சாதகன் நானே ப்ரும்மம் என்ற எண்ணத்துடன், ஆசார்யர்களின் கருணையால், புலன்களின் செயல்களை அடக்கி, உடலை விட வேண்டும். முதலில் குதி கால்களால் அழுத்தி அமர்ந்து உடலில் காற்று உருவில் இருக்கும் ப்ராணன், அபானன் முதலிய வாயுக்களை தொப்புள், இதயம், மார்பு, உள் நாக்கு, புருவ மத்தி, ப்ரும்மரந்திரம் ஆகிய இடங்களுக்கு ஒன்றின் மேல் ஒன்றாகக் கொண்டு போக வேண்டும்.

மணி பூரகம் என்ற தொப்புளில் உள்ள ப்ராணனை, இதயத்தில் உள்ள அநாஹத சக்கரத்திலும், பின் ப்ரும்ம நாடி வழியாக மார்பிலுள்ள விசுத்தி சக்கரத்தில் கொண்டு போக வேண்டும். அங்கிருந்து, புத்தியால் அநுஸந்தானம் செய்து கொண்டு, ப்ராணனை உள் நாக்கிற்குக் கொண்டு போக வேண்டும். பின்னர் புருவ மத்தியில் செலுத்த வேண்டும். அப்போது, கண், காது, மூக்கு, வாய் ஆகிய ஏழு துவாரங்களையும் அடைத்து விட வேண்டும். ஆக்ஞா சக்கரத்தில் புருவ மத்தியில் இருக்கும் போது ஸ்வர்கம் முதலிய உலகங்களுக்குச் செல்லலாம். அவ்வாறு விருப்பமில்லை எனில், இறைவனை அரை முஹூர்த்த நேரம் த்யானிக்க வேண்டும். பின்னர் ப்ராணனை ஸஹஸ்ராரம் என்ற உச்சிக்குக் கொண்டு செல்ல வேண்டும். இப்போது ப்ரும்ம ஸாக்ஷாத்காரம் அடைந்தவனாவான். புலன்களையும் உடலையும் விடுவதற்கு, ப்ராணன் உச்சிக் குழியைப் பிளந்து வெளிச் செல்ல வேண்டும்.

யோகாப்யாசம் இல்லாதவனுக்கும் இதுவரை சொல்லப்பட்ட வழியில் தான் இறுதி காலத்தில் ப்ராணன் வெளியேறுகிறதும் தொண்டைக் குழியில் உள்ள ப்ராணன் மற்றவர்களுக்கு கண் காது மூக்கு இவைகளில் ஏதாவது ஒன்றின் வழியாக வெளியேறும். ஏனெனில் அத்துவாரங்களின் புலன்கள் அடக்கப்படாததே காரணம்.

ப்ரும்மாதி லோகங்களை அடைய விரும்புபவரோ, சித்தராகத் திரியவோ, ப்ரும்மாண்டத்தில் எங்காவது சுற்றவோ விரும்பும் யோகி, இவ்வுடலை உதறிக் கிளம்பும் போது, மனம், புலன்களைத் தன்னுடன் எடுத்துச் செல்ல வேண்டும்.

சூக்ஷ்மமான உடலுடைய பக்தி யோக, தபோ யோக, ஞான யோக சித்தர்கள், உள்ளும் புறமும் விரும்பியபடி தடையின்றி சஞ்சாரம் செய்கிறார்கள். இவ்வாறு சுற்றித் திரியும் யோகிகளின் சஞ்சாரங்களையும், அவர்கள் அடையும் உலகங்களையும் அவர்கள் எவ்வாறு பகவானின் விராட் ஸ்வரூபத்தில் அடங்குகிறார்கள் என்பதையும் விவரிக்கிறார் ஸ்ரீ சுகாசார்யார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்