||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
திவ்ய ப்ரபந்தம் - 73 - இடையர்கள் வம்சத்துக்கு ராஜாவானவனே!
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - ஐந்தாம் திருமொழி - பத்தாம் பாசுரம்
செங்கமலக் கழலிற் சிற்றிதழ் போல் விரலில்*
சேர் திகழாழிகளும் கிண்கிணியும்*
அரையில் தங்கிய பொன் வடமும்
தாள நன் மாதுளையின்*
பூவொடு பொன் மணியும் மோதிரமும் கிறியும்*
மங்கல ஐம்படையும் தோள் வளையும் குழையும்*
மகரமும் வாளிகளும் சுட்டியும் ஒத்திலக*
எங்கள் குடிக்கரசே! ஆடுக செங்கீரை*
ஏழுலகும் உடையாய்! ஆடுக ஆடுகவே|
- செம் கமலம் - செந்தாமரைப் பூப் போன்ற
- கழலில் - திருவடிகளில்
- சிற்றிதழ் போல் - அந்தப் பூவினுடைய உள்ளிதழ் போலே சிறுத்திருக்கிற
- விரலில் - திரு விரல்களில்
- சேர் திகழ் - சேர்ந்து சோபிக்கிற
- ஆழிகளும் - மோதிரங்களும்
- கிண் கிணியும் - திருவடி சதங்கைகளும்
- அரையில் தங்கிய - இடுப்பில் சாத்தியிருந்த
- பொன் வடமும் - பொன் அரை நாணும்
- தாள - பொன்னால் செய்த காம்பையுடைய
- நல் - நல்லதான
- மாதுளையின் பூவொடு - மாதுளம் பூக்கோவையும்
- பொன் மணியும் - நடு நடுவே கலந்து கோத்த பொன் மணிக் கோவையும்
- மோதிரமும் - திருக்கை மோதிரங்களும்
- சிறியும் - மணிக் கட்டில் சாத்தின சிறுப் பவள வடமும்
- மங்கலம் - மங்களகரமான
- ஐம்படையும் - பஞ்சாயுதங்களும் (ஐம்படைத் தாலி)
- தோள் வளையும் - திருத் தோள் வளைகளும்
- குழையும் - காதணிகளும்
- மகரமும் - மகர குண்டலங்களும்
- வாளிகளும் - திருச் செவி மடல் மேல் சாத்தின வாளிகளும்
- சுட்டியும் - திரு நெற்றிச் சுட்டியும்
- ஒத்து - சேர்ந்து
- இலக - விளங்கும்படி
- எங்கள் குடிக்கு - எங்கள் வம்சத்துக்கு
- அரசே - ராஜாவானவனே!
- ஆடுக செங்கீரை — ஆடுக செங்கீரை
- ஏழ் உலகும் உடையாய்! — ஏழ் உலகுக்கும் அதிபதியே!
- ஆடுக ஆடுகவே — ஆடுவாய் ஆடுவாய்
எங்கள் குல அரசே! செந்தாமரை போன்ற உன் திருவடிகளின் விரல்கள் தாமரையின் உள்ளிதழ்கள் போலிருக்கிறது. உன் திருவாழி மோதிரங்கள், கால் சதங்கைகள், இடுப்பில் இருக்கும் பொன் நாண், பொன்னால் செய்த மாதுளம் பூ பொன்மணி சேர்ந்து கோத்த மாலை, திருக்கை மோதிரங்கள் , மணிக்கட்டில் சாத்திய வடம், மங்களமான பஞ்சாயுதம் பதித்த கழுத்து மாலை, திருத்தோள்வளைகள் , காதணிகள் , மகர குண்டலங்கள், நெற்றி சுட்டி இவை எல்லாம் ஒன்று சேர்ந்தாற் போல் அழகாக அசைய நீ செங்கீரை ஆடவேண்டும்! ஏழுலகமும் ஆள்பவனே, நீ ஆடவேண்டும்!
||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment