About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Saturday, 6 January 2024

108 திவ்ய தேசங்கள் - 020 - திரு தஞ்சைமாமணி கோவில் 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

020. திரு தஞ்சைமாமணி கோவில் (தஞ்சாவூர்)
இருபதாவது திவ்ய க்ஷேத்ரம்

ஸ்ரீ நீலமேகப் பெருமாள் திருக்கோயில்

ஸ்ரீ செங்கமலவல்லி தாயார் ஸமேத ஸ்ரீ நீலமேக பெருமாள்
திருவடிகளே சரணம்

  • பெருமாள் மூலவர்: நீலமேகம், மணிக்குன்றம், நரஸிம்ஹர்                                                                  (தஞ்சையாளி)
  • பெருமாள் உற்சவர்: வெண்ணாத்தங்கரை (நாராயணர் பெருமாள்)
  • தாயார் மூலவர்: செங்கமலவல்லி, தஞ்சைநாயகி
  • தாயார் உற்சவர்: அம்புஜவல்லி
  • திருமுக மண்டலம் திசை: கிழக்கு 
  • திருக்கோலம்: வீற்றிருந்த
  • புஷ்கரிணி: கன்னிகா, சூரிய
  • தீர்த்தம்: அமிர்த, வெண்ணாறு, ஸ்ரீராம 
  • விமானம்: சௌந்தர்ய, மணிக்கூட, வேதஸுந்தர
  • ஸ்தல விருக்ஷம்: மகிழம்
  • ப்ரத்யக்ஷம்: பராசரமுனி, மார்கண்டேயர்
  • ஆகமம்: வைகாநஸம்
  • ஸம்ப்ரதாயம்: தென் கலை
  • மங்களாஸாஸநம்: 3 ஆழ்வார்கள்
  • பாசுரங்கள்: 5

--------------------
ஸ்ரீ. உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி


ஸ்தல புராணம்

திருமணங் கொள்ளையில் மகாவிஷ்ணுவிடம் திருமந்திர உபதேசம் பெற்ற திருமங்கையாழ்வார் இத்தலத்தை இரண்டாவதாக மங்களாஸாஸநம் செய்துள்ளார். வீர நரசிம்மர் கருவறையில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி தருகிறார். மூன்று மூலவர்களுக்கும் தைலக் காப்பு மட்டுமே செய்யப் படுகிறது.  நீலமேகப்பெருமாள் உற்சவராக கையில் செங்கோல் ஏந்திய படியும், உற்சவர் தாயார் அக்னி கிரீடம் அணிந்து கொண்டு சாந்தமான கோலத்தில் காட்சி தருவதும் சிறப்பு. இவரது கருவறையில் பராசரர் ஸ்வாமியை வணங்கிய கோலத்தில் இருக்கிறார். ஹயக்ரீவர் இங்கு லட்சுமியுடன் வடக்கு பார்த்தபடி இருக்கிறார். கல்விக்கு அதிபதியான ஹயக்ரீவர், செல்வத்திற்கு அதிபதியான லட்சுமி ஆகிய இருவருக்கும் ஏலக்காய் மாலை சாத்தி, நெய் விளக்கு, கற்கண்டு நைவேத்யம் படைத்து வணங்கினால் கல்வியில் சிறக்கலாம், செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. 

பராசரர் எனும் மகரிஷி பாற்கடலில் கிடைத்த அமிர்தத்தை, மணிமுக்தா நதியில் இட்டு அதன் கரையில் ஆசிரமம் அமைத்து தவம் செய்து வந்தார். ஆசிரமத்துக்கு அருகே ஒரு சுனையில் மட்டும் நன்னீர் இருந்தது. அப்போது சிவனிடம் சாகா வரம் பெற்ற தஞ்சகன், தண்டகன், தாராசுரன் எனும் மூன்று கொடிய அசுரர்கள் மூவரும் அங்கு வந்து அத் தண்ணீரை பருகி விட்டு அங்குள்ள பராசரையும், அவருடன் தவம் செய்து வந்த முனிவர்களையும் தொந்தரவு செய்தனர். பராசரர் அவர்களிடம் அசுர குணங்களை விட்டு விடும் படி சொல்லிப் பார்த்தார். அவர்களோ கேட்பதாக இல்லை. எனவே அசுரர்களை அழிக்கும் படி சிவனிடம் வேண்டினார் பராசரர். சிவன் மாயா சக்தியாக காளி தேவியை அனுப்பி அசுரர்களை வதம் செய்தார். ஆனால், அசுரர்கள் மூவரும் அமிர்தம் கலந்திருந்த தீர்த்தத்தை பருகி மீண்டும், மீண்டும் உயிர் பெற்று முனிவர்களை கொடுமைப் படுத்தினர். கலக்கமடைந்த பராசரர் மகாவிஷ்ணுவிடம் வேண்டினார். மகாவிஷ்ணு அசுரர்களை அழிக்க சென்றார். அப்போது தஞ்சகன் யானை வடிவம் எடுக்கவே, மகாவிஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்து வீழ்த்தினார். அவனை கொல்வதற்காக தன் மடியில் கிடத்தினார். மகாவிஷ்ணுவின் திருமேனியில் கிடத்தப்பட்டவுடன் தஞ்சகனுக்கு ஞானம் பிறந்தது. அசுர குணங்கள் ஒழியப் பெற்ற அவன் மகா விஷ்ணுவிடம், "எனக்காக நரசிம்மராக வந்த நீங்கள் இங்கேயே தங்கி மக்களுக்கும் அருள வேண்டும், எனது பெயராலேயே இத்தலமும் அழைக்கப்பட வேண்டும்'' எனக் கேட்டான். அவரும் அருள் புரிந்தார். அவனது பெயரால் இத்தலம் "தஞ்சமாபுரி' எனப்பட்டது. 

தஞ்சகனின் அழிவைக் கண்ட தண்டகன், பூமியை பிளந்து கொண்டு தப்பித்துச் சென்றான். மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து பூமிக்குள் சென்று அவனை அழித்தார். பின் காளியை அனுப்பி தாரகனை வதம் செய்ய அருளினார். யாளியாகிய நரஸிம்ஹர் ரூபத்தில் கஜமுகனை அழித்ததால் தஞ்சையாளி என்றும், தண்டகாசுரனை இங்கே அழித்ததால் தண்டகாரணியம் ஆயிற்று. கருடன் பறந்து வந்து இந் நகரத்தை காப்பதாக சொல்லுவர்கள். இந்நகரத்திற்கு பராசர க்ஷேத்ரம், வம்புலாஞ் சோலை, அழகாபுரி, கருடாபுரி, சமீவனம், தஞ்சையாளி நகர் என பலப் பெயர்கள் உண்டு மூன்று அசுரர்களும் அழிக்கப்பட்ட பிறகு அவர் பராசரருக்கு நீலமேகப் பெருமாளாக காட்சி தந்தார். இவர் மூன்று திருநாமங்களில் தனித்தனி கோயில்களில் இத்தலத்தில் அருள் புரிகிறார். 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

No comments:

Post a Comment