About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Saturday, 18 November 2023

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 76

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 46

விஸ்தார: ஸ்தா² வரஸ் தா²ணு:
ப்ரமாணம் பீ³ஜ மவ்யயம்|
அர்த்ததோ² நர்த்தோ² மஹா கோஸோ²
மஹா போ⁴கோ³ மஹா த⁴ந:||

  • 427. விஸ்தாரஸ் - அவர் எல்லாவற்றிலும் பரவியிருக்கிறார். வேதங்களை பரப்புபவர். பிரளய காலத்தில் அனைத்தையும் உள்ளடக்கி விரிவடைபவர்.
  • 428. ஸ்தா² வரஸ் தா²ணுஃ - கிருத யுகத்தில் தர்மத்தை ஸ்தாபித்த பிறகு அமைதியானவர். பூமி போன்ற பொருள்கள் தங்கியிருக்கும் நிலையிலும், அசையாமலும், உறுதியுடனும் நிலையாக இருப்பவர். மனச்சாந்தியுடையவர். 
  • 429. ப்ரமாணம்: - பிரமாண மானவர். அதிகாரியாயிருப்பவர்.
  • 430. பீ³ஜம் அவ்யயம் - அழிவில்லாத வித்தாக இருப்பவர்.
  • 431. அர்த்ததோ² - அடையத்தக்கதான பயனாக உள்ளவர்.
  • 432. அநர்த்தோ² - சுயநினைவுடையவர். தேடுவதற்கு வேறு எந்த முடிவும் இல்லாதவர். சிலருக்கு இலக்காக இல்லாதவர்.
  • 433. மஹா கோஸோ² - பெரும் பொக்கிஷத்தை உடையவர். பெரும் பொக்கிஷமாக இருப்பவர். ஐந்து கோஷங்கள் அல்லது கவசங்களால் கவசமாக இருப்பவர்.
  • 434. மஹா போ⁴கோ³ - இன்பங்கள் அனைத்தும் அளிப்பவர்.
  • 435. மஹா த⁴நஹ - அளவற்ற பெருந்தனமாய் இருப்பவர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 2.13

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||

ஸ்லோகம் - 2.13 

தே³ஹிநோ ஸ்மிந் யதா² தே³ஹே 
கௌமாரம் யௌவநம் ஜரா|
ததா² தே³ஹாந் தர ப்ராப்திர்
தீ⁴ரஸ் தத்ர ந முஹ்யதி||

  • தே³ஹிநோ - உடல் பெற்றவன் 
  • அஸ்மிந் - இந்த
  • யதா² - அதனால் 
  • தே³ஹே - உடலில்
  • கௌமாரம் - பிள்ளைப் பிராயம் 
  • யௌவநம் - இளமை 
  • ஜரா - முதுமை 
  • ததா² - அதுபோலவே 
  • தே³ஹ அந்தர - உடல் மாறுவதும் 
  • ப்ராப்திஹி - அடைதல், 
  • தீ⁴ர - நிதான புத்தியுடையவர்
  • தத்ர - அதைப்பற்றி
  • ந - என்றுமில்லை
  • முஹ்யதி - மயங்குதல்

உயிர் கொண்ட உடலானது சிறுவயது, இளமை, முதுமையென முப்பருவம் அடைவதை போலவே மரணத்தின் போதும் ஆத்மாவானது, வேறு உடலை அடையும். அதனால், நிதான புத்தியுடையவர் அதைப் பற்றி மயங்குவதில்லை.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவதம் - 1.3.11

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்ருதீயோ அத்⁴யாய꞉||
||பகவதஸ்² சதுர் விம்ஸ²த் யவதாராணாம் 
ஸம்க்ஷேபதோ வர்ணம்||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||மூன்றாம் அத்யாயம்||
||ஸ்ரீ பகவானது திரு அவதாரங்களைக் கூறுதல்||

ஸ்லோகம் - 1.3.11

ஷஷ்ட²ம் அத்ரேர் அபத் யத்வம் 
வ்ருத: ப்ராப் தோ ந ஸூயயா|
ஆந்வீ க்ஷிகீம் அலர் காய 
ப்ரஹ்லாதா³ தி³ப்ய ஊசிவாந்||

  • அந ஸூயயா வ்ருதஃ - அத்ரி மகரிஷியின் பத்தினியால் வரிக்கப்பட்டவராய்
  • ஷஷ்ட²ம் - ஆறாவதான அவதாரத்தில்
  • அத்ரேர் - அத்ரி மகரிஷிக்கு
  • அபத் யத்வம் ப்ராப் தோ - குழந்தையாய் இருக்கும் தன்மையை அடைந்தவராய்
  • அலர் காய - அலக்கனுக்கும்
  • ப்ரஹ்லாதா³ தி³ப்ய - பிரஹ்லாதன் முதலானவர்களுக்கும்
  • ஆந்வீ க்ஷிகீம் - ஆத்ம வித்தையை
  •  ஊசிவாந் - உபதேசம் செய்தார்

ஆறாவதாக, அத்ரி மகரிஷியின் பத்தினியான அனசூயா தேவியினால் வேண்டிக் கொள்ளப்பட்டு, அவருக்குப் புத்திரனாய் 'தத்தாத்ரேயர்' என்ற பெயரோடு திருவவதாரம் செய்து, அலர்க்கன் என்ற ராஜரிஷிக்கும், பிரகலாதன் முதலியோருக்கும் ஆன்ம ஞானத்தை உபதேசம் செய்தார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.11

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

உலகின் உன்னத மனிதனைக் குறித்து 
நாரதரிடம் கேட்ட வால்மீகி 
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்

ஸ்லோகம் - 1.1.11

ஸம: ஸமவிப⁴க்தாங்க:
ஸ்நிக்த⁴வர்ண: ப்ரதாபவாந்|
பீநவக்ஷா விஸா²லாக்ஷோ
லக்ஷ்மீவாந் ஸு²ப⁴லக்ஷண:||

  • ஸமஸ் - சரியான உயரம் சரியான உறுப்புகளை அமையப் பெற்றவர்
  • ஸம விப⁴க்தாங்கஹ - சரியாகப் பிரிக்கப்பட்ட அவயவங்களை உடையவர்
  • ஸ்நிக்த⁴ வர்ணஃ - நேசிக்கத் தக்க நிறமுடையவர்
  • ப்ரதாப வாந் - ப்ரதாபம் உள்ளவர்
  • பீந வக்ஷா - பெருத்த மார்பை உடையவர்
  • விஸா²லாக்ஷோ - அகன்ற கண்களை உடையவர்
  • லக்ஷ்மீ வாந் - சோபையை உடையவர்
  • ஸு²ப⁴ லக்ஷணஹ - மங்களகரமான லக்ஷணங்களை உடையவர்

சமச்சீரான அங்கங்கள், பருத்த மார்பு, நீண்ட விழி, அழகிய நிறம் உட்பட நெடிதாகவோ, குட்டையாகவோ அல்லாத நல்ல விகிதத்தில் அமைந்த உடற்கட்டுடன் கூடிய அவன், மங்கல அம்சங்கள் அனைத்துடன் செழித்தவனாக இருக்கிறான். 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

திவ்ய ப்ரபந்தம் - 58 - பெரியாழ்வார் திருமொழி - 1.4.5

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் – 58 - சிரீதரன் மழலைச் சொல்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - நான்காம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்

அழகிய வாயில்* 
அமுத ஊறல் தெளிவுறா*
மழலை முற்றாத இளஞ் சொல்லால்* 
உன்னைக் கூவுகின்றான்*
குழகன் சிரீதரன்* 
கூவக் கூவ நீ போதியேல்*
புழையில் ஆகாதே* 
நின் செவி புகர் மா மதீ!

  • அழகிய வாயில் - அழகிய பவள வாயில் 
  • அமுதம் - எச்சில் அமுதத்துடன் கலந்து
  • ஊறல் - ஊறுகின்ற ஜலமாகிய
  • தெளிவுற - உருத் தெரியாததாய்
  • மழலை முற்றாத - மழலைத் தனம் மாறாமல் வருகின்ற
  • இளசொல்லால் - இளம்  மழலை பேச்சாலே 
  • உன்னை கூவுகின்றான் - உன்னைக் கூவி அழைக்கின்றான்
  • குழகன் - எல்லோரோடும் கலந்திருப்பவனாய்
  • சிரீதரன் - குழந்தையாய் இருக்கின்ற திருமகள் கேள்வனான இக்கண்ணபிரான்
  • கூவக்கூவ -  கொஞ்சிக் கொஞ்சி உன்னை பல முறை அழைத்தும்
  • நீ போதியேல் - நீ விலகி விலகிப் நீ போவாயேயானால்
  • புழை இல - துளை இல்லையோ 
  • ஆகாதே - என்றாகி விடும் 
  • நின் செவி - உன் காதுகளில்
  • புகர் - தேஜஸ்வியாயும், 
  • மா - புகழ் பொருந்தியவனுமான
  • மதீ - சந்திரனே! 

தேஜஸ்வியாயும், புகழ் பொருந்தியவனுமான சந்திரனே! குழந்தை கண்ணனின் அழகிய பவள வாயில் ஊறுகின்ற எச்சில் அமுதத்துடன் கலந்து, தெளிவுறாத, குழந்தைத்தனம் மாறாமல் வருகின்ற மழலைச் சொற்களால் உன்னைக் கூவி அழைக்கின்றான். அழகன், எல்லோரோடும் கலந்து இருப்பவனாய், குழந்தையாய் இருக்கின்ற திருமகள் கேள்வன் கொஞ்சிக் கொஞ்சி உன்னை பல முறை அழைத்தும் நீ விலகி விலகிப் போகின்றாயே! முழுநிலவே! உனது செவிகள் அடைக்கப் பெற்று விட்டனவோ?? இந்த பௌர்ணமி நாளில் நீ பூரணமாய் ஒளிவீசி, முழுமைப் பெற்றுத் தோன்றினாலும், கேளா செவிகளைக் கொண்டிருப்பதால் நீ குறையுடையவனே. அப்படியே, நினது செவிகள் கேட்கும் தன்மைக் கொண்டவையா இருந்தாலும், இப்பாலகனின் மழலைக் குரலுக்கு செவி மடுக்காமையால், உன் காதுகள் துளை இல்லதவைகளாகாதோ?

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 016 - திருக்கண்ணமங்கை 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
  ||ஸ்ரீமத் வரவர முநயே நம:||  

016. திருக்கண்ணமங்கை 
க்ருஷ்ண மங்கள க்ஷேத்ரம் - திருவாரூர்
பதினாறாவது திவ்ய க்ஷேத்ரம்

ஸ்ரீ பக்தவத்சலப் பெருமாள் திருக்கோயில்

ஸ்ரீ அபிஷேகவல்லி தாயார் ஸமேத ஸ்ரீ பக்தவத்சல பெருமாள் 
திருவடிகளே சரணம்||

  • பெருமாள் மூலவர்: பக்தவத்சலம், பத்தராவி
  • பெருமாள் உற்சவர்: பெரும் புறக்கடல்
  • தாயார் மூலவர்: அபிஷேகவல்லி
  • தாயார் உற்சவர்: கண்ணமங்கை நாயகி
  • திருமுக மண்டலம் திசை: கிழக்கு 
  • திருக்கோலம்: நின்ற 
  • புஷ்கரிணி/தீர்த்தம்: தர்ஷன
  • விமானம்: உத்பல
  • ஸ்தல விருக்ஷம்: மகிழ மரம்
  • ப்ரத்யக்ஷம்: வருணன், ரோமச முனி
  • ஸம்ப்ரதாயம்: தென் கலை
  • மங்களாஸாஸநம்:1 ஆழ்வார்
  • பாசுரங்கள்: 14 

----------
ஸ்ரீ. உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி


ஸ்தல புராணம்

ஒரு தலத்திற்கு இருக்க வேண்டிய விமானம், ஆரண்யம், மண்டபம், தீர்த்தம், க்ஷேத்ரம், நதி, நகரம் என்ற ஏழு லட்சணங்களும் அமைய பெற்றதால், ‘ஸப்த புண்ய க்ஷேத்ரம்', ‘ஸப்தாம்ருத க்ஷேத்ரம்' என்ற பெயர் பெற்றது. இத்தலத்தில் நடந்த திருமால் - திருமகள் திருமணத்தை காண தேவர்கள் கூட்டம் கூட்டமாக வந்து குவிந்ததோடு, எப்போதும் இந்த திருக்கோலத்தை கண்டு கொண்டே இருக்க வேண்டும் என நினைத்தார்கள். எனவே தேனீக்கள் வடிவெடுத்து கூடுகட்டி அதில் இருந்து கொண்டு தினமும் பெருமாளின் தரிசனம் கண்டு மகிழ்கிறார்கள். இன்றும் கூட தாயார் சன்னதியின் வடபுறத்தில் ஒரு தேன் கூடு உள்ளது. இந்த தேன் கூடு எவ்வளவு காலமாக உள்ளது என்பது யாருக்கும் தெரியாது. இந்த தேனீக்கள் பக்தர்களை ஒன்றும் செய்வதில்லை. பெருமாளின் 108 திருப்பதிகளில் இது ஓர் அற்புதமாகும். மோட்சம் வேண்டுபவர்கள் ஒரு இரவு மட்டும் இங்கு தங்கினால் போதும் என்பது நம்பிக்கை. பக்தர்களுக்காக ஆவி போல வேகமாக வந்து அருள் பாலிப்பதால், பக்தர் ஆவி என்றாகி, "பத்தராவி' என பெயர் பெற்றார் பெருமாள். இத்தல பெருமாள் உத்பல விமானத்தின் கீழ் அருள் பாலிக்கிறார். சிவபெருமான் நான்கு உருவம் எடுத்து இத்தலத்தின் நான்கு திசைகளையும் காத்து வருகிறார். பொதுவாக எல்லா கோயில்களிலும் நான்கு திருக்கரங்களுடன் விளங்கும் விஷ்வக்சேனர், பெருமாளின் சார்பாக லட்சுமியை சந்திக்க சென்றதால் இரண்டு திருக்கரங்களுடன் அழகிய வடிவில் அருள்பாலிக்கிறார்.

மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்த போது, வானத்தை அளந்த காலை பிரம்மன் தன் கமண்டல நீரால் அபிஷேகம் செய்தார். அதிலிருந்து தெறித்து விழுந்த ஒரு துளி இவ்விடத்தில் விழுந்தது. அதுவே தர்ஷன (தரிசன) புஷ்கரணி ஆனது. சந்திரன் தனக்கு ஏற்பட்ட சாபம் நீங்க அலைந்த போது இந்த புஷ்கரணியை கண்டான். இதைப் பார்த்த உடனேயே அவனது சாபம் தீர்ந்தது. எனவே தான் இதற்கு தர்ஷன புஷ்கரணி (தரிசித்த மாத்திரத்தில் பயன் தர வல்லது) என்ற பெயர் ஏற்பட்டது.இங்குள்ள தாயாரை பெருமாள் இந்த தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து, பட்ட மகிஷியாக்கினார். இதனால் இந்த தாயாருக்கு அபிஷேகவல்லி என்று பெயர்.

நாலாயிரத் திவ்ய ப்ரபந்தத்தை தொகுத்த நாதமுனிகளுக்கு திருக்கண்ண மங்கை ஆண்டான் என்ற சீடர் ஒருவர் இருந்தார். இவ்வூரில் பிறந்த இவர் பெருமாளிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். கோயிலைச் சுத்தம் செய்து பெருமாளே அடைக்கலம் என்று இருந்தார். ஒரு நாள் இவர் வேத பாராயணம் செய்து கொண்டே நாய் வடிவம் கொண்டு மூலஸ்தானத்திற்குள் ஓடி ஜோதியாகி, இறைவனுடன் கலந்தார். இன்றும் ஆனி மாதம் திருவோண நட்சத்திரம் இவரின் மகா நட்சத்திரமாக கொண்டாடப்படுகிறது. இவரது பெயரே இவ்வூருக்கும் நிலைத்து விட்டது.

பாற்கடலை கடைந்த போது, அதிலிருந்து கற்பக விருட்சம், காமதேனு ஆகியவை தோன்றியது. இறுதியில் மகாலெட்சுமி வெளிப்பட்டாள். முதலில் அவள் பெருமாளின் அழகிய தோற்றத்தைக் கண்டாள். அதை மனதில் நிறுத்தி இத்தலம் வந்து பெருமாளை அடைய தவம் இருந்தாள். திருமகள் தவம் இருக்கும் விஷயமறிந்த பெருமாள் தனது மெய்க் காவலரான விஷ்வக் சேனரிடம் முகூர்த்த நாள் குறித்து தர சொன்னார். பின் லட்சுமிக்கு காட்சி தந்து, முப்பத்து முக்கோடி தேவர்கள் புடை சூழ பெருமாள் இங்கு வந்து லட்சுமியை திருமணம் செய்தார். பெருமாள் தன் பாற்கடலை விட்டு வெளியே வந்து இங்கிருந்த லட்சுமியை திருமணம் செய்ததால் பெருமாளுக்கு "பெரும் புறக்கடல்' என்ற திருநாமம் ஏற்பட்டது. லட்சுமி இங்கு தவம் செய்ததால் இத்தலத்திற்கு "லட்சுமி வனம்' என்ற பெயரும், இங்கேயே திருமணம் நடந்ததால் 'கிருஷ்ண மங்கள க்ஷேத்திரம்' என்ற பெயரும் ஏற்பட்டது.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

லீலை கண்ணன் கதைகள் - 67

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
 ||ஸ்ரீமத் வரவர முநயே நம:||  

கிருஷ்ணரின் வாக்குறுதி|

ருக்மிணியின் செய்தியைக் கேட்ட கிருஷ்ணர் சிரித்துக் கொண்டே, "என்னை திருமணம் செய்துக் கொள்ள ருக்மிணி ஆவலாக இருக்கிறாள் என்பதைக் கேட்க மகிழ்ச்சியாக உள்ளது. நானும் அதே ஆவலுடன் தான் இருக்கிறேன். ருக்மியின் எதிர்ப்புக் காரணமாக நான் ருக்மிணியைத் திருமணம் செய்து கொள்வதில் தடைப்பட்டு விட்டது என்பது எனக்குத் தெரியும். இந்தப் பாவிகளை நான் முறியடிப்பேன். அவர்கள் கண் எதிரிலேயே நான் ருக்மிணியைத் துவாரகைக்கு கொண்டு வருவேன்" என்று சவால் விட்டார். இதனை கேட்ட அந்தணர், சந்தோஷத்தில் கிருஷ்ணனை தழுவிக் கொண்டார்.


ருக்மிணியின் திருமணம் நாளை மறுநாள் நடைபெறுவதாக இருந்தது. அதை அறிந்த கிருஷ்ணர் தமது சாரதி தாருகனைக் கூப்பிட்டான், இரதத்தை உடனே தயார் செய்யும்படி கட்டளையிட்டார். நான்கு குதிரைகள் பூட்டப்பட்ட இரதத்தை தாருகன் கொண்டு வந்து நிறுத்தினான். கிருஷ்ணர் அந்த அந்தணரையும் தம்மோடு இரதத்தில் ஏற்றிக் கொண்டார். அந்தக் குதிரைகள் வலிமை வாய்ந்தவையாகவும் வேகமாகச் செல்லக் கூடியதாகவும் இருந்தன. ஆதலால் அவர்கள் இரவு முழுவதும் பயணம் செய்து, விடியற்காலை விதர்ப்ப தேசத்தை அடைந்தார்கள்.

இதற்கிடையில் பீஷ்மகர் தம் மகளின் திருமணத்திற்கு வேண்டிய ஏற்பாடுகள் எல்லாம் செய்து விட்டார். சிசுபாலனும் அவனைச் சேர்ந்தவர்களும் நன்கு அலங்கரிக்கப்பட்ட தேர்கள். யானைப் படைகள், குதிரைப் படைகள், காலாட் படைகள் இவற்றுடன் முன்னமேயே வந்து விட்டார்கள். பீஷ்மகர் அவர்களை வரவேற்று தக்கபடி உபசரித்து அவர்களை அவர்களுக்கென்று ஒதுக்கப் பட்டிருந்த தனி மாளிகையில் தங்கச் செய்தார்.

மணப்பந்தலில் எத்தனையோ அரசர்கள் காணப்பட்டனர். அவர்கள் எல்லோரும் சிசுபாலனின் நண்பர்கள். கிருஷ்ணரும் அந்தணரும் யாதவப் படைகளை கொண்டு ருக்மிணியைத் தூக்கிச் செல்ல நேரம் பார்த்துக் கொண்டு காத்திருந்தனர், அவர்கள் தங்கள் பெருத்த சேனையை உடன் அழைத்து வந்திருந்தனர். 

சிசுபாலனிடமிருந்து ருக்மிணியைக் காப்பாற்ற, கிருஷ்ணர் அவசரமாக விதர்ப்ப தேசம் சென்றிருக்கிறார் என்ற விஷயம் பலராமருக்கு தெரிய வந்தது. அவர், சிசுபாலனும் அவனுடைய நண்பர்களும் கிருஷ்ணருக்குத் தொந்தரவு கொடுக்கக்கூடும் என்று நினைத்தார். அவரும் ரத, கஜ, துரக, பதாதிகள் கொண்ட பெரிய சேனையுடன் விதர்ப்பம் விரைந்தார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் - எழுபத்தி மூன்றாவது வார்த்தை

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

073 உடம்பை வெறுத்தேனோ நறையூராரைப் போலே|

திருவரங்கத்துக்கு மேற்கில் அருகில் திரு நாராயணபுரம் என்ற கிராமம் இருக்கிறது. இங்கே இருக்கும் பெருமாள் வேதநாராயணன். இந்தப் பெருமாள் திருவரங்கம் பெருமாள் மாதிரி படுத்துக்கொண்டு, தலைக்கு அடியில் நான்கு வேதங்களையும் வைத்திருக்கும் பெருமாள். மேலே ஆதிசேஷன். காலுக்கு அடியில் சின்ன வடிவில் மூன்று வயதுக் குழந்தையாகப் பிரகலாதனுடன் மிக அழகான பெருமாள். திருவரங்கத்தில் இருக்கும் ஆதிசேஷன் ஐந்து தலைகளுடன் இருப்பார் இங்கே இருக்கும் ஆதிசேஷனுக்கு பத்துத் தலைகள்!


இந்த அழகிய பெருமாளைத் தரிசிக்கப் பிள்ளை திருநறையூர் அரையர் அவர் மனைவி, ஆறு குழந்தைகளுடன் அங்குச் சென்றார். அப்போது கோயிலிருந்து சிலர் வெளியே வேகமாக ஓடி ஓடினார்கள். அரையருக்கு என்ன என்று புரியவில்லை. அங்கே ஓடியவரைப் பார்த்து “ஏன் எல்லோரும் பெருமாளை விட்டு இப்படி ஓடுகிறீர்கள்?” என்று கேட்டார். “சாமி! சில விரோதிகள் கோயிலுக்கு நெருப்பு வைத்து விட்டார்கள்! உள்ளே தீப்பிடித்து எறிகிறது! நீங்களும் ஓடுங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்!” என்று ஓடிக் கொண்டே சொன்னார்.

அரையர் திடுக்கிட்டார் சட்டென்று “ஐயோ உள்ளே பெருமாள் இருக்கிறாரே!” என்று வேகமாகப் பெருமாளை நோக்கி ஓடினார். அவரைத் தொடர்ந்து அவர் மனைவியும் குழந்தைகளும் அவர் பின்னால் ஓடினார்கள்.

நெருப்பு எல்லா இடங்களிலும் பரவிக் கொழுந்து விட்டு எறிந்து கொண்டு இருந்தது. அரையர் பெருமாள் கருவறைக்குள் ஓடினார். பெருமாள் பக்கம் நெருப்பு வரத் தொடங்கியிருந்தது. பக்கத்தில் இருந்த நீரை எடுத்து நெருப்பின் மீது வீசினார். ஆனால் நெருப்பு அடங்கவில்லை. பெருமாளுக்குத் தீங்கு நேர்ந்து விடக் கூடாதே என்று அச்சத்தில் தவித்தார். பெருமாளை வெளியே எடுத்து வர முடியாது.

தீயின் வெளிச்சத்தில் பெருமாள் நன்றாகத் தெரிந்தார். “”எல்லோரும் இங்கே வாருங்கள்!” என்று தன் மனைவியும் குழந்தைகளும் அழைத்தார். “பெருமாளை நன்றாகச் சேவித்துக் கொள்ளுங்கள் இங்கே நாம் மட்டும் தான் இருக்கிறோம் பெருமாளைக் காப்பாற்ற” என்றார்.

குழந்தைகள் புகை மண்டலத்தில் மூச்சு விட முடியாமல் கண்களில் பீதியுடன் மூச்சு விட முடியாமல் திணறி ”தந்தையே! பொறுக்க முடியவில்லையே! பயமாக இருக்கிறது!” என்றனர்.

அரையர் “பிள்ளைகளே! கவலைப் படாதீர்கள். இந்தக் கஷ்டம் நமக்குக் கொஞ்சம் நேரம் தான். பொறுத்துக் கொள்ளுங்கள். பிறகு நமக்குப் பேரின்பம் கிட்டும்!” என்றார்

”அதற்கு என்ன செய்ய வேண்டும் தந்தையே?” என்று பிள்ளைகள் அப்பாவியாகக் கேட்டார்கள். அரையர் சாந்தமாக ”நம்முடைய பெருமாள் நமக்காக வைகுண்டத்தை விட்டு இங்கே வந்து படுத்துக் கொண்டு இருக்கிறார். அவரைக் காக்க வேண்டியது நம் கடமை அல்லவா?” என்றார் பிள்ளைகள் “ஆம் தந்தையே !” என்றார்கள்.

அரையர் ஆனந்தக் கண்ணீருடன் “வாருங்கள் நாம் எல்லோரும் சேர்ந்து பெருமாளைக் கட்டிக்கொண்டு அவருக்குக் கவசமாக இருக்கலாம்!” என்றார்

அரையர் பெருமாளை அணைத்துக் கொள்ள, அவர் மனைவியும் குழந்தைகளும் அரையரை அணைத்துக் கொள்ள தீ அவர்களைத் தீண்டி விட்டுச் சென்றது.

அரையரின் மனைவியும் குழந்தைகளையும் முதலில் கருகி உயிரை விட்டார்கள். பிறகு அரையர் உயிரை விட்டார். பெருமானின் திருமேனி எவ்வித பாதிப்பும் இன்றி காப்பாற்றப்பட்டது. அவர்களின் தியாகத்தில், அன்பில் நெகிழ்ந்த எம்பெருமான் அவர்களுக்கு மோக்ஷம் வழங்கினார். 

திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, "திருநறையூரார் போல், உடம்பை வெறுத்து எம்பெருமானை நான் காத்தேனா? இல்லையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பாகவத புராணம் - 20

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

ப்ரும்மாஸ்திரத்தினால் வந்த நன்மை

ஸ்கந்தம் 01

வானத்தில் நெருப்பைக் கக்கிக் கொண்டு தூம கேதுவைப் போல் இரும்பாலான அம்பு ஒன்று உத்தரையைக் குறி வைத்து வந்து கொண்டு இருந்தது. உத்தரை ஓடி வந்து கண்ணனின் கால்களில் விழுந்து சரணாகதி செய்ததும், அனைவரும் அதை நோக்கினர்.

அது பாண்டவ வம்சத்தைப் பூண்டோடு அழிக்க அச்வத்தாமன் விடுத்த ப்ரும்மாஸ்திரம் என்று அறிந்து கொண்டான் கண்ணன்.


கர்பத்திலிருக்கும் சிசுவைக் கொல்ல அஸ்திரங்களிலேயே உயர்ந்ததான ப்ரும்மாஸ்திரத்தை ஏவினான் அந்தக் கொடியவன்.

ப்ரும்மாஸ்திரம் என்பது தற்போதைய அணு ஆயுதத்திற்கும் அதிகமாக சேதங்களை விளைவிப்பது.

அதனால் தான் மஹாபாரத யுத்தத்திற்கு ஊரை விட்டுத் தள்ளி குருக்ஷேத்திரத்தைத் தேர்ந்தெடுத்தான் கண்ணன்.

யுத்தத்தின் பாதிப்பினாலேயே ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரும் குருக்ஷேத்திரம் வறண்ட பூமியாகக் காட்சி அளிக்கிறது.

பாண்டவர்கள் அனைவரும் சட்டென்று தத்தம் ஆயுதங்களை எடுக்க, கண்ணன் ஸுதர்சனத்தை எடுத்தான்.

சட்டென்று ஸுதர்சனத்தினால் உத்தரையின் கர்பத்தை மறைத்தான். அதாவது, உத்தரையின் கர்பத்தினுள் ஸுதர்சனம் ப்ரவேசித்து அதைச் சுற்றிக் கவசமாயிற்று.

கர்பத்தை நோக்கி வந்த ப்ரும்மாஸ்திரத்தை தானே உள் வாங்கிக் கொண்டு, மீண்டும் கண்ணனிடம் வந்தது.

உப பாண்டவகளைக் கொன்றது அச்வத்தாமன் என்றறிந்து அர்ஜுனன் அவனைப் பிடிக்கப் போகும்போதும் அவன் தன்னைக் காத்துக் கொள்ள ப்ரும்மாஸ்திரத்தை ஏவினான். ப்ரும்மாஸ்திரத்திற்கு ப்ரதி அஸ்திரம் போடக் கூடாது என்பது விதி. என்ன செய்வது என்று திகைத்தான் அர்ஜுனன்.

அப்போது உடனிருந்த கண்ணன்,

"அர்ஜுனா, இவனுக்கு ப்ரும்மாஸ்திரத்தைப் போடத் தான் தெரியும். திரும்ப வாங்கத் தெரியாது. ப்ரதி அஸ்திரம் போடக் கூடாது என்பது விதியாக இருந்தாலும், நீ இப்போது அதற்குப் ப்ரதியா இன்னொரு ப்ரும்மாஸ்திரம் போடு. பின்னர் இரண்டையும் சேர்த்து திருப்பி வாங்கு."

என்று சொல்ல அர்ஜுனன் அவ்வாறே செய்தான்.

தர்மத்தின் பக்கம் நிற்கும் தன் பக்தனுக்காக பகவான் எப்படி வேலை செய்கிறான் பாருங்கள்.

இதில் இன்னொரு அற்புதம் என்னவெனில், குருவான துரோணர், தன் மகனான அச்வத்தாமனுக்குக்கூட ப்ரும்மாஸ்திரத்தை திரும்ப வாங்கக் கற்பிக்கவில்லை. சீடனான அர்ஜுனனுக்கோ தனக்குத் தெரிந்த அத்தனை வித்தைகளையும் பூர்ணமாகக் கற்றுக் கொடுத்திருக்கிறார்.

குருவான அவரது ஹ்ருதயம் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்?

குரு சிஷ்ய உறவின் மேன்மையை எப்படிக் கூறுவது?

வித்யை சொல்லித் தரும் குருவே இப்படி என்றால், ஞானாசிரியனாக விளங்கும் ஒரு ஞானி குருவாகக் கிடைத்தால் அவர் பகவானையே தூக்கி சிஷ்யனிடம் கொடுத்து விடுகிறார்.

எப்படியாவது ஒரு குருவின் க்ருபைக்கு பாத்திரமாகி விட வேண்டும் என்று வலியுறுத்துவதும் அதற்காகத் தான்.
இதில் இன்னொரு ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால்,

அப்போது ப்ரும்மாஸ்திரத்திற்கு அர்ஜுனனை ப்ரதி அஸ்திரம் போடச் சொன்ன பகவான், உத்தரை அபயம் என்று அலறியதும் எதையும் யோசிக்காமல் தானே சுதர்சனத்தால் காத்தான்.

எதனால் அப்படி?

தன்னிடம் அபயம் என்று வந்தவளைக் காக்க இன்னொருவனின் உதவி பகவானுக்குத் தேவையில்லை.

தன் பக்தர்களான பாண்டவர்களைக் காத்த பெருமை தன் ஒருவனுக்கே என்ற பெருமையை பகவான் விட்டுக் கொடுக்க விரும்பவில்லை.

யோகி, ஞானி என்றெல்லாம் கீதையில் சொல்பவன் பக்தனை மட்டும் மத் பக்த:, மத் பக்த: என் பக்தன் என் பக்தன் என்று மார்தட்டிக் கொள்கிறான்.

பக்தனின் வீட்டில் குதிரை குளிப்பாட்டுவது முதல் ஆசையாகச் செய்பவன், அவனது வம்ச சிசுவைப் பார்க்க ஆவல் கொண்டு கர்பத்தினுள் புகுந்தான். ஸுதர்சன சக்கரத்தில் குட்டியாக பகவானின் திருவுருவம் ஒன்று இருக்கும்.

பின்னாளில் தன் கதையைக் கேட்டே முக்தி அடையப் போகும் பரம பாகவதனான அந்தக் குழந்தையோடு தானும் சிறிது நேரம் கர்ப வாசம் செய்ய விரும்பினான்.

முதன் முதலில் கர்பத்திலிருக்கும் சிசுவை ஆய்வு (scan) செய்தவன் பகவான். க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும் என்பது அத்தனை கலைகளுக்கும் சேர்த்துத் தான்.

இன்னும் ஆயிரம் விளக்கங்களைப் பெரியோர் சொல்வர்.

குலத்தை அழிக்க வந்த ப்ரும்மாஸ்திரம் கர்பத்திலிருந்த சிசுவிற்கு பகவத் தரிசனத்தைப் பெற்றுத் தந்தது.

சுற்றி நின்று கொண்டிருந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அம்பு வந்ததும், கண்ணன் சுதர்சனத்தை எடுத்ததும் மறைந்து போனதையுமே அவர்கள் பார்த்தனர்.

ஆனால், அவர்களுள் ஒருவர் என்ன நடந்தது என்று கண்டு பிடித்து விட்டார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்