||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
016. திருக்கண்ணமங்கை
க்ருஷ்ண மங்கள க்ஷேத்ரம் - திருவாரூர்
பதினாறாவது திவ்ய க்ஷேத்ரம்
ஸ்ரீ பக்தவத்சலப் பெருமாள் திருக்கோயில்
ஸ்ரீ அபிஷேகவல்லி தாயார் ஸமேத ஸ்ரீ பக்தவத்சல பெருமாள்
திருவடிகளே சரணம்||
- பெருமாள் மூலவர்: பக்தவத்சலம், பத்தராவி
- பெருமாள் உற்சவர்: பெரும் புறக்கடல்
- தாயார் மூலவர்: அபிஷேகவல்லி
- தாயார் உற்சவர்: கண்ணமங்கை நாயகி
- திருமுக மண்டலம் திசை: கிழக்கு
- திருக்கோலம்: நின்ற
- புஷ்கரிணி/தீர்த்தம்: தர்ஷன
- விமானம்: உத்பல
- ஸ்தல விருக்ஷம்: மகிழ மரம்
- ப்ரத்யக்ஷம்: வருணன், ரோமச முனி
- ஸம்ப்ரதாயம்: தென் கலை
- மங்களாஸாஸநம்:1 ஆழ்வார்
- பாசுரங்கள்: 14
----------
ஸ்ரீ. உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி
ஸ்தல புராணம்
ஒரு தலத்திற்கு இருக்க வேண்டிய விமானம், ஆரண்யம், மண்டபம், தீர்த்தம், க்ஷேத்ரம், நதி, நகரம் என்ற ஏழு லட்சணங்களும் அமைய பெற்றதால், ‘ஸப்த புண்ய க்ஷேத்ரம்', ‘ஸப்தாம்ருத க்ஷேத்ரம்' என்ற பெயர் பெற்றது. இத்தலத்தில் நடந்த திருமால் - திருமகள் திருமணத்தை காண தேவர்கள் கூட்டம் கூட்டமாக வந்து குவிந்ததோடு, எப்போதும் இந்த திருக்கோலத்தை கண்டு கொண்டே இருக்க வேண்டும் என நினைத்தார்கள். எனவே தேனீக்கள் வடிவெடுத்து கூடுகட்டி அதில் இருந்து கொண்டு தினமும் பெருமாளின் தரிசனம் கண்டு மகிழ்கிறார்கள். இன்றும் கூட தாயார் சன்னதியின் வடபுறத்தில் ஒரு தேன் கூடு உள்ளது. இந்த தேன் கூடு எவ்வளவு காலமாக உள்ளது என்பது யாருக்கும் தெரியாது. இந்த தேனீக்கள் பக்தர்களை ஒன்றும் செய்வதில்லை. பெருமாளின் 108 திருப்பதிகளில் இது ஓர் அற்புதமாகும். மோட்சம் வேண்டுபவர்கள் ஒரு இரவு மட்டும் இங்கு தங்கினால் போதும் என்பது நம்பிக்கை. பக்தர்களுக்காக ஆவி போல வேகமாக வந்து அருள் பாலிப்பதால், பக்தர் ஆவி என்றாகி, "பத்தராவி' என பெயர் பெற்றார் பெருமாள். இத்தல பெருமாள் உத்பல விமானத்தின் கீழ் அருள் பாலிக்கிறார். சிவபெருமான் நான்கு உருவம் எடுத்து இத்தலத்தின் நான்கு திசைகளையும் காத்து வருகிறார். பொதுவாக எல்லா கோயில்களிலும் நான்கு திருக்கரங்களுடன் விளங்கும் விஷ்வக்சேனர், பெருமாளின் சார்பாக லட்சுமியை சந்திக்க சென்றதால் இரண்டு திருக்கரங்களுடன் அழகிய வடிவில் அருள்பாலிக்கிறார்.
மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்த போது, வானத்தை அளந்த காலை பிரம்மன் தன் கமண்டல நீரால் அபிஷேகம் செய்தார். அதிலிருந்து தெறித்து விழுந்த ஒரு துளி இவ்விடத்தில் விழுந்தது. அதுவே தர்ஷன (தரிசன) புஷ்கரணி ஆனது. சந்திரன் தனக்கு ஏற்பட்ட சாபம் நீங்க அலைந்த போது இந்த புஷ்கரணியை கண்டான். இதைப் பார்த்த உடனேயே அவனது சாபம் தீர்ந்தது. எனவே தான் இதற்கு தர்ஷன புஷ்கரணி (தரிசித்த மாத்திரத்தில் பயன் தர வல்லது) என்ற பெயர் ஏற்பட்டது.இங்குள்ள தாயாரை பெருமாள் இந்த தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து, பட்ட மகிஷியாக்கினார். இதனால் இந்த தாயாருக்கு அபிஷேகவல்லி என்று பெயர்.
நாலாயிரத் திவ்ய ப்ரபந்தத்தை தொகுத்த நாதமுனிகளுக்கு திருக்கண்ண மங்கை ஆண்டான் என்ற சீடர் ஒருவர் இருந்தார். இவ்வூரில் பிறந்த இவர் பெருமாளிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். கோயிலைச் சுத்தம் செய்து பெருமாளே அடைக்கலம் என்று இருந்தார். ஒரு நாள் இவர் வேத பாராயணம் செய்து கொண்டே நாய் வடிவம் கொண்டு மூலஸ்தானத்திற்குள் ஓடி ஜோதியாகி, இறைவனுடன் கலந்தார். இன்றும் ஆனி மாதம் திருவோண நட்சத்திரம் இவரின் மகா நட்சத்திரமாக கொண்டாடப்படுகிறது. இவரது பெயரே இவ்வூருக்கும் நிலைத்து விட்டது.
பாற்கடலை கடைந்த போது, அதிலிருந்து கற்பக விருட்சம், காமதேனு ஆகியவை தோன்றியது. இறுதியில் மகாலெட்சுமி வெளிப்பட்டாள். முதலில் அவள் பெருமாளின் அழகிய தோற்றத்தைக் கண்டாள். அதை மனதில் நிறுத்தி இத்தலம் வந்து பெருமாளை அடைய தவம் இருந்தாள். திருமகள் தவம் இருக்கும் விஷயமறிந்த பெருமாள் தனது மெய்க் காவலரான விஷ்வக் சேனரிடம் முகூர்த்த நாள் குறித்து தர சொன்னார். பின் லட்சுமிக்கு காட்சி தந்து, முப்பத்து முக்கோடி தேவர்கள் புடை சூழ பெருமாள் இங்கு வந்து லட்சுமியை திருமணம் செய்தார். பெருமாள் தன் பாற்கடலை விட்டு வெளியே வந்து இங்கிருந்த லட்சுமியை திருமணம் செய்ததால் பெருமாளுக்கு "பெரும் புறக்கடல்' என்ற திருநாமம் ஏற்பட்டது. லட்சுமி இங்கு தவம் செய்ததால் இத்தலத்திற்கு "லட்சுமி வனம்' என்ற பெயரும், இங்கேயே திருமணம் நடந்ததால் 'கிருஷ்ண மங்கள க்ஷேத்திரம்' என்ற பெயரும் ஏற்பட்டது.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment