About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Saturday, 18 November 2023

ஸ்ரீமத் பாகவத புராணம் - 20

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

ப்ரும்மாஸ்திரத்தினால் வந்த நன்மை

ஸ்கந்தம் 01

வானத்தில் நெருப்பைக் கக்கிக் கொண்டு தூம கேதுவைப் போல் இரும்பாலான அம்பு ஒன்று உத்தரையைக் குறி வைத்து வந்து கொண்டு இருந்தது. உத்தரை ஓடி வந்து கண்ணனின் கால்களில் விழுந்து சரணாகதி செய்ததும், அனைவரும் அதை நோக்கினர்.

அது பாண்டவ வம்சத்தைப் பூண்டோடு அழிக்க அச்வத்தாமன் விடுத்த ப்ரும்மாஸ்திரம் என்று அறிந்து கொண்டான் கண்ணன்.


கர்பத்திலிருக்கும் சிசுவைக் கொல்ல அஸ்திரங்களிலேயே உயர்ந்ததான ப்ரும்மாஸ்திரத்தை ஏவினான் அந்தக் கொடியவன்.

ப்ரும்மாஸ்திரம் என்பது தற்போதைய அணு ஆயுதத்திற்கும் அதிகமாக சேதங்களை விளைவிப்பது.

அதனால் தான் மஹாபாரத யுத்தத்திற்கு ஊரை விட்டுத் தள்ளி குருக்ஷேத்திரத்தைத் தேர்ந்தெடுத்தான் கண்ணன்.

யுத்தத்தின் பாதிப்பினாலேயே ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரும் குருக்ஷேத்திரம் வறண்ட பூமியாகக் காட்சி அளிக்கிறது.

பாண்டவர்கள் அனைவரும் சட்டென்று தத்தம் ஆயுதங்களை எடுக்க, கண்ணன் ஸுதர்சனத்தை எடுத்தான்.

சட்டென்று ஸுதர்சனத்தினால் உத்தரையின் கர்பத்தை மறைத்தான். அதாவது, உத்தரையின் கர்பத்தினுள் ஸுதர்சனம் ப்ரவேசித்து அதைச் சுற்றிக் கவசமாயிற்று.

கர்பத்தை நோக்கி வந்த ப்ரும்மாஸ்திரத்தை தானே உள் வாங்கிக் கொண்டு, மீண்டும் கண்ணனிடம் வந்தது.

உப பாண்டவகளைக் கொன்றது அச்வத்தாமன் என்றறிந்து அர்ஜுனன் அவனைப் பிடிக்கப் போகும்போதும் அவன் தன்னைக் காத்துக் கொள்ள ப்ரும்மாஸ்திரத்தை ஏவினான். ப்ரும்மாஸ்திரத்திற்கு ப்ரதி அஸ்திரம் போடக் கூடாது என்பது விதி. என்ன செய்வது என்று திகைத்தான் அர்ஜுனன்.

அப்போது உடனிருந்த கண்ணன்,

"அர்ஜுனா, இவனுக்கு ப்ரும்மாஸ்திரத்தைப் போடத் தான் தெரியும். திரும்ப வாங்கத் தெரியாது. ப்ரதி அஸ்திரம் போடக் கூடாது என்பது விதியாக இருந்தாலும், நீ இப்போது அதற்குப் ப்ரதியா இன்னொரு ப்ரும்மாஸ்திரம் போடு. பின்னர் இரண்டையும் சேர்த்து திருப்பி வாங்கு."

என்று சொல்ல அர்ஜுனன் அவ்வாறே செய்தான்.

தர்மத்தின் பக்கம் நிற்கும் தன் பக்தனுக்காக பகவான் எப்படி வேலை செய்கிறான் பாருங்கள்.

இதில் இன்னொரு அற்புதம் என்னவெனில், குருவான துரோணர், தன் மகனான அச்வத்தாமனுக்குக்கூட ப்ரும்மாஸ்திரத்தை திரும்ப வாங்கக் கற்பிக்கவில்லை. சீடனான அர்ஜுனனுக்கோ தனக்குத் தெரிந்த அத்தனை வித்தைகளையும் பூர்ணமாகக் கற்றுக் கொடுத்திருக்கிறார்.

குருவான அவரது ஹ்ருதயம் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்?

குரு சிஷ்ய உறவின் மேன்மையை எப்படிக் கூறுவது?

வித்யை சொல்லித் தரும் குருவே இப்படி என்றால், ஞானாசிரியனாக விளங்கும் ஒரு ஞானி குருவாகக் கிடைத்தால் அவர் பகவானையே தூக்கி சிஷ்யனிடம் கொடுத்து விடுகிறார்.

எப்படியாவது ஒரு குருவின் க்ருபைக்கு பாத்திரமாகி விட வேண்டும் என்று வலியுறுத்துவதும் அதற்காகத் தான்.
இதில் இன்னொரு ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால்,

அப்போது ப்ரும்மாஸ்திரத்திற்கு அர்ஜுனனை ப்ரதி அஸ்திரம் போடச் சொன்ன பகவான், உத்தரை அபயம் என்று அலறியதும் எதையும் யோசிக்காமல் தானே சுதர்சனத்தால் காத்தான்.

எதனால் அப்படி?

தன்னிடம் அபயம் என்று வந்தவளைக் காக்க இன்னொருவனின் உதவி பகவானுக்குத் தேவையில்லை.

தன் பக்தர்களான பாண்டவர்களைக் காத்த பெருமை தன் ஒருவனுக்கே என்ற பெருமையை பகவான் விட்டுக் கொடுக்க விரும்பவில்லை.

யோகி, ஞானி என்றெல்லாம் கீதையில் சொல்பவன் பக்தனை மட்டும் மத் பக்த:, மத் பக்த: என் பக்தன் என் பக்தன் என்று மார்தட்டிக் கொள்கிறான்.

பக்தனின் வீட்டில் குதிரை குளிப்பாட்டுவது முதல் ஆசையாகச் செய்பவன், அவனது வம்ச சிசுவைப் பார்க்க ஆவல் கொண்டு கர்பத்தினுள் புகுந்தான். ஸுதர்சன சக்கரத்தில் குட்டியாக பகவானின் திருவுருவம் ஒன்று இருக்கும்.

பின்னாளில் தன் கதையைக் கேட்டே முக்தி அடையப் போகும் பரம பாகவதனான அந்தக் குழந்தையோடு தானும் சிறிது நேரம் கர்ப வாசம் செய்ய விரும்பினான்.

முதன் முதலில் கர்பத்திலிருக்கும் சிசுவை ஆய்வு (scan) செய்தவன் பகவான். க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும் என்பது அத்தனை கலைகளுக்கும் சேர்த்துத் தான்.

இன்னும் ஆயிரம் விளக்கங்களைப் பெரியோர் சொல்வர்.

குலத்தை அழிக்க வந்த ப்ரும்மாஸ்திரம் கர்பத்திலிருந்த சிசுவிற்கு பகவத் தரிசனத்தைப் பெற்றுத் தந்தது.

சுற்றி நின்று கொண்டிருந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அம்பு வந்ததும், கண்ணன் சுதர்சனத்தை எடுத்ததும் மறைந்து போனதையுமே அவர்கள் பார்த்தனர்.

ஆனால், அவர்களுள் ஒருவர் என்ன நடந்தது என்று கண்டு பிடித்து விட்டார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment