About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Saturday, 18 November 2023

திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் - எழுபத்தி மூன்றாவது வார்த்தை

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

073 உடம்பை வெறுத்தேனோ நறையூராரைப் போலே|

திருவரங்கத்துக்கு மேற்கில் அருகில் திரு நாராயணபுரம் என்ற கிராமம் இருக்கிறது. இங்கே இருக்கும் பெருமாள் வேதநாராயணன். இந்தப் பெருமாள் திருவரங்கம் பெருமாள் மாதிரி படுத்துக்கொண்டு, தலைக்கு அடியில் நான்கு வேதங்களையும் வைத்திருக்கும் பெருமாள். மேலே ஆதிசேஷன். காலுக்கு அடியில் சின்ன வடிவில் மூன்று வயதுக் குழந்தையாகப் பிரகலாதனுடன் மிக அழகான பெருமாள். திருவரங்கத்தில் இருக்கும் ஆதிசேஷன் ஐந்து தலைகளுடன் இருப்பார் இங்கே இருக்கும் ஆதிசேஷனுக்கு பத்துத் தலைகள்!


இந்த அழகிய பெருமாளைத் தரிசிக்கப் பிள்ளை திருநறையூர் அரையர் அவர் மனைவி, ஆறு குழந்தைகளுடன் அங்குச் சென்றார். அப்போது கோயிலிருந்து சிலர் வெளியே வேகமாக ஓடி ஓடினார்கள். அரையருக்கு என்ன என்று புரியவில்லை. அங்கே ஓடியவரைப் பார்த்து “ஏன் எல்லோரும் பெருமாளை விட்டு இப்படி ஓடுகிறீர்கள்?” என்று கேட்டார். “சாமி! சில விரோதிகள் கோயிலுக்கு நெருப்பு வைத்து விட்டார்கள்! உள்ளே தீப்பிடித்து எறிகிறது! நீங்களும் ஓடுங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்!” என்று ஓடிக் கொண்டே சொன்னார்.

அரையர் திடுக்கிட்டார் சட்டென்று “ஐயோ உள்ளே பெருமாள் இருக்கிறாரே!” என்று வேகமாகப் பெருமாளை நோக்கி ஓடினார். அவரைத் தொடர்ந்து அவர் மனைவியும் குழந்தைகளும் அவர் பின்னால் ஓடினார்கள்.

நெருப்பு எல்லா இடங்களிலும் பரவிக் கொழுந்து விட்டு எறிந்து கொண்டு இருந்தது. அரையர் பெருமாள் கருவறைக்குள் ஓடினார். பெருமாள் பக்கம் நெருப்பு வரத் தொடங்கியிருந்தது. பக்கத்தில் இருந்த நீரை எடுத்து நெருப்பின் மீது வீசினார். ஆனால் நெருப்பு அடங்கவில்லை. பெருமாளுக்குத் தீங்கு நேர்ந்து விடக் கூடாதே என்று அச்சத்தில் தவித்தார். பெருமாளை வெளியே எடுத்து வர முடியாது.

தீயின் வெளிச்சத்தில் பெருமாள் நன்றாகத் தெரிந்தார். “”எல்லோரும் இங்கே வாருங்கள்!” என்று தன் மனைவியும் குழந்தைகளும் அழைத்தார். “பெருமாளை நன்றாகச் சேவித்துக் கொள்ளுங்கள் இங்கே நாம் மட்டும் தான் இருக்கிறோம் பெருமாளைக் காப்பாற்ற” என்றார்.

குழந்தைகள் புகை மண்டலத்தில் மூச்சு விட முடியாமல் கண்களில் பீதியுடன் மூச்சு விட முடியாமல் திணறி ”தந்தையே! பொறுக்க முடியவில்லையே! பயமாக இருக்கிறது!” என்றனர்.

அரையர் “பிள்ளைகளே! கவலைப் படாதீர்கள். இந்தக் கஷ்டம் நமக்குக் கொஞ்சம் நேரம் தான். பொறுத்துக் கொள்ளுங்கள். பிறகு நமக்குப் பேரின்பம் கிட்டும்!” என்றார்

”அதற்கு என்ன செய்ய வேண்டும் தந்தையே?” என்று பிள்ளைகள் அப்பாவியாகக் கேட்டார்கள். அரையர் சாந்தமாக ”நம்முடைய பெருமாள் நமக்காக வைகுண்டத்தை விட்டு இங்கே வந்து படுத்துக் கொண்டு இருக்கிறார். அவரைக் காக்க வேண்டியது நம் கடமை அல்லவா?” என்றார் பிள்ளைகள் “ஆம் தந்தையே !” என்றார்கள்.

அரையர் ஆனந்தக் கண்ணீருடன் “வாருங்கள் நாம் எல்லோரும் சேர்ந்து பெருமாளைக் கட்டிக்கொண்டு அவருக்குக் கவசமாக இருக்கலாம்!” என்றார்

அரையர் பெருமாளை அணைத்துக் கொள்ள, அவர் மனைவியும் குழந்தைகளும் அரையரை அணைத்துக் கொள்ள தீ அவர்களைத் தீண்டி விட்டுச் சென்றது.

அரையரின் மனைவியும் குழந்தைகளையும் முதலில் கருகி உயிரை விட்டார்கள். பிறகு அரையர் உயிரை விட்டார். பெருமானின் திருமேனி எவ்வித பாதிப்பும் இன்றி காப்பாற்றப்பட்டது. அவர்களின் தியாகத்தில், அன்பில் நெகிழ்ந்த எம்பெருமான் அவர்களுக்கு மோக்ஷம் வழங்கினார். 

திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, "திருநறையூரார் போல், உடம்பை வெறுத்து எம்பெருமானை நான் காத்தேனா? இல்லையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment