||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
திவ்ய ப்ரபந்தம் – 58 - சிரீதரன் மழலைச் சொல்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - நான்காம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்
அழகிய வாயில்*
அமுத ஊறல் தெளிவுறா*
மழலை முற்றாத இளஞ் சொல்லால்*
உன்னைக் கூவுகின்றான்*
குழகன் சிரீதரன்*
கூவக் கூவ நீ போதியேல்*
புழையில் ஆகாதே*
நின் செவி புகர் மா மதீ!
- அழகிய வாயில் - அழகிய பவள வாயில்
- அமுதம் - எச்சில் அமுதத்துடன் கலந்து
- ஊறல் - ஊறுகின்ற ஜலமாகிய
- தெளிவுற - உருத் தெரியாததாய்
- மழலை முற்றாத - மழலைத் தனம் மாறாமல் வருகின்ற
- இளசொல்லால் - இளம் மழலை பேச்சாலே
- உன்னை கூவுகின்றான் - உன்னைக் கூவி அழைக்கின்றான்
- குழகன் - எல்லோரோடும் கலந்திருப்பவனாய்
- சிரீதரன் - குழந்தையாய் இருக்கின்ற திருமகள் கேள்வனான இக்கண்ணபிரான்
- கூவக்கூவ - கொஞ்சிக் கொஞ்சி உன்னை பல முறை அழைத்தும்
- நீ போதியேல் - நீ விலகி விலகிப் நீ போவாயேயானால்
- புழை இல - துளை இல்லையோ
- ஆகாதே - என்றாகி விடும்
- நின் செவி - உன் காதுகளில்
- புகர் - தேஜஸ்வியாயும்,
- மா - புகழ் பொருந்தியவனுமான
- மதீ - சந்திரனே!
தேஜஸ்வியாயும், புகழ் பொருந்தியவனுமான சந்திரனே! குழந்தை கண்ணனின் அழகிய பவள வாயில் ஊறுகின்ற எச்சில் அமுதத்துடன் கலந்து, தெளிவுறாத, குழந்தைத்தனம் மாறாமல் வருகின்ற மழலைச் சொற்களால் உன்னைக் கூவி அழைக்கின்றான். அழகன், எல்லோரோடும் கலந்து இருப்பவனாய், குழந்தையாய் இருக்கின்ற திருமகள் கேள்வன் கொஞ்சிக் கொஞ்சி உன்னை பல முறை அழைத்தும் நீ விலகி விலகிப் போகின்றாயே! முழுநிலவே! உனது செவிகள் அடைக்கப் பெற்று விட்டனவோ?? இந்த பௌர்ணமி நாளில் நீ பூரணமாய் ஒளிவீசி, முழுமைப் பெற்றுத் தோன்றினாலும், கேளா செவிகளைக் கொண்டிருப்பதால் நீ குறையுடையவனே. அப்படியே, நினது செவிகள் கேட்கும் தன்மைக் கொண்டவையா இருந்தாலும், இப்பாலகனின் மழலைக் குரலுக்கு செவி மடுக்காமையால், உன் காதுகள் துளை இல்லதவைகளாகாதோ?
||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment