||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
பகவானின் விசித்ர லீலைகள்
ஸ்கந்தம் 03
உத்தவர் தொடர்ந்தார். "பகவான் என்னை பதரிகாஸ்ரமம் செல்லக் கட்டளையிட்டார். நான் அவரைப் பிரிய மனமின்றிப் பின் தொடர்ந்தேன். பகவான் க்ருஷ்ணன் அழகோ அழகு. அனைத்திற்கும் பற்றுக் கோடு. அழகிற்கு அழகு சேர்க்கும் அழகரான அவர் ஸரஸ்வதி நதிக்கரையில் ஒரு அரச மரத்தடியில் அமர்ந்திருந்தார். தாமரை போன்ற தன் திருவடியைத் தன் தொடை மேல் வைத்திருந்தார். ஆனந்தமே வடிவெடுத்து போல் காணப்பட்டார். அப்போது மைத்ரேய மஹரிஷி தற்செயலாய் அங்கு வந்தார். அவர் பராசர முனிவரின் சீடர். குரு புத்ரரான வியாசரின் உற்ற தோழர். பகவானின் பரம பக்தர். சித்தர். அவரைக் கண்டதும், இவரது கனிந்த பார்வையும், புன்சிரிப்பும் கண்டு “என் சோர்வெல்லாம் தீர்ந்தது” என்று பகவான் என்னிடம் கூறினார்.
பகவான் மேலும் சொன்னார். “உத்தவா, யாராலும் அடைய முடியாததை உனக்கு அளிக்கப் போகிறேன். முற்பிறவியில் நீ அஷ்ட வசுக்களுள் ஒருவன். முன்பு ப்ரஜாபதிகளும், வசுக்களும் சேர்ந்து ஒரு வேள்வி இயற்றினர். அப்போது நீ என்னையே அடைய வேண்டும் என்ற ஒரே விருப்பத்தோடு என்னைப் பூஜித்தாய். நீ பரம சாது. என் பரிபூரணமான அருள் பெற்ற உனக்கு இஃதே கடைசிப் பிறவி. நான் இப்போது உடலைத் துறந்து வைகுண்டம் செல்லப் போகிறேன். உன் பக்தியால் நீ தனித்திருக்கும் என்னை தரிசித்து விட்டாய். முன்பு பாத்ம கல்பத்தில் படைப்பின் தொடக்கத்தில் என் தொப்புள் கொடியில் இருந்து தோன்றிய ப்ரும்மாவுக்கு என் திருவிளையாடல்கள் பற்றியும், என்னைப் பற்றியும் கூறினேன். ஞானத்தை வழங்கும் அதை ஞானிகள் பாகவதம் என்கின்றனர். அதை இப்போது உனக்குத் தரப் போகிறேன்.” (அதுவே உத்தவ கீதையாகும். பதினோராம் ஸ்கந்தத்தில் விரிவாகக் கூறப்படுகிறது.) விதுரரே! பகவானுக்கு என் மீது எவ்வளவு கருணை பார்த்தீரா!"
“இதைக் கேட்டு என் மேனி சிலிர்த்தது. ஆனந்தக் கண்ணீர் பெருகியது. இரு கரங்களையும் கூப்பி அஞ்சலி செலுத்தினேன். இறைவா! தங்கள் திருவடிகளை சேவிப்பவர்களுக்கு நான்கு பெரும் பேறுகளும் கிட்டுகின்றன. ஆனால் பிச்சைப் பொருளான அவற்றின் மீது எனக்கு இச்சையில்லை. தங்கள் திருவடிக் கமலங்களை சேவிப்பதொன்றே எனக்கு மகிழ்ச்சி. தங்களுக்கென்று விருப்பங்கள் இல்லை. செயல்களும் இல்லை. ஆனால், பற்பல செயல்களை எங்களுக்காக நிகழ்த்துகிறீர். எங்களுக்காகப் பிறக்கிறீர். காலகாலனான தாங்கள் பகைவர்க்கு பயந்தவர் போல் ஓடுகிறீர். நீர் ஆத்மா ராமன். தங்களை மகிழ்விக்க வேறு சாதனம் தேவையில்லை. ஆனால் 16000 பெண்களைத் திருமணம் செய்து திருவிளையாடல் புரிந்தீர். விசித்ரமான உங்கள் திருவிளையாடல் யாருக்கும் புரிவதில்லை. தங்களுடைய அறிவு என்றுமே மழுங்காதது. ஆழ்ந்து அகன்றது. குறைவற்றது. ஆனால், ஏதுமறியாதவர் போல் மந்திர ஆலோசனையில் என்னையும் அழைத்து என் அபிப்ராயம் கேட்பீர். அது என்னை என்னவோ செய்கிறது. ப்ரும்ம தேவருக்குத் தாங்கள் உபதேசித்த பாகவதத்தை அறிந்து கொள்ள எனக்குச் சக்தியும் தகுதியும் இருக்குமானால் எனக்குச் சொல்லுங்கள். நான் சிரமமின்றி சம்சாரக் கடலைக் கடப்பேன்.
இவ்வாறு நான் வணங்கி வேண்ட பகவான் எனக்கு நல்லுபதேசம் செய்தார். அவரை வலம் வந்து வணங்கி, இன்று அவரைப் பிரிந்த வருத்தத்தோடு உம்மைச் சந்தித்தேன். கண்ணனைக் கண்ட மகிழ்ச்சி ஒரு புறம். பிரிவுத் துயர் ஒரு புறம். நான் பத்ரிகாஸ்ரமம் கிளம்புகிறேன்” என்றார்.
விதுரர், தாங்கவொணாத துக்கச் செய்தியைக் கேட்டும் தன் ஞானத்தால் பொறுத்துக் கொண்டார். வணக்கமாக உத்தவரிடம் கேட்டார்.
“பகவான் தங்களுக்குச் சொன்ன நல்லுபதேசத்தை எனக்குச் சொல்ல வேண்டும். பகவானைப் பற்றிய உண்மை அறிவைப் புகட்ட தம்மைப் போன்ற அடியார்களால் தான் முடியும். அதற்காகத் தானே அடியார்கள் உலகெங்கும் சுற்றி வருகின்றனர்.”
உத்தவர் பதிலுரைத்தார். “விதுரரே, பகவான் எனக்குக் கூறியவற்றை அப்போது அங்கிருந்த மைத்ரேய மகரிஷியும் கேட்டார். அவற்றை தங்களுக்குச் சொல்லும்படி மைத்ரேயருக்கு என் எதிரில் தான் கட்டளையிட்டார். ஆகவே, நீங்கள் மைத்ரேய மஹரிஷியைக் கண்டு அவ்விவரங்களை அறிந்து கொள்ளுங்கள்” என்று சொல்லிப் புறப்பட்டார்.
விதுரர் துள்ளிக் குதித்தார்.
அனைவரும் தாம் உடலை விடும் நேரம் பகவானை ஸ்மரிக்க விரும்புவர். ஆஹா! பகவானுக்கு ஏழையான என் மேல் எவ்வளவு கருணை. அவர் உடலை விடும் சமயம் என் பெயரைச் சொன்னாரே.
ஒரு பக்கம் பகவான் கிளம்பிய துக்கம். இன்னொரு புறம் பகவான் தன்னை மறவாமல் நினைத்தானே என்ற ஆனந்தம். தவித்துக் கொண்டு ஒருவாறாக யமுனைக் கரையிலிருந்து புறப்பட்டு மைத்ரேயர் வாசம் செய்யும் கங்கைக் கரையை நோக்கி நடந்தார் விதுரர்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்