||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
- அம்சம் - சார்ங்கம் (வில்)
- அவதார ஸ்தலம் - திருக்குறையலூர் (திருவாலி)
- காலம் - கி.பி. 8ம் நூற்றாண்டு
- வருடம் - நள - கலி பிறந்து 398 ம் வருஷம்
- மாதம் - கார்த்திகை
- திரு நக்ஷத்திரம் - க்ருத்திகை
- திதி - பவுர்ணமி
- கிழமை - வியாழன்
- ஆசார்யன் - ஸேனை முதலியார்
- தந்தை - ஆலிநாடுடையார்
- தாய் - வல்லித்திரு அம்மையார்
- பரமபத ப்ராப்தி ஸ்தலம் - திருக்குறுங்குடி
- அருளிச் செய்தவை - 1. பெரிய திருமொழி - இரண்டாம் ஆயிரம் - 948-2031 (1084 பாசுரங்கள்) 2. திருக்குறுந்தாண்டகம் - இரண்டாம் ஆயிரம் - 2032-2051 (20 பாசுரங்கள்) 3. திருநெடுந்தாண்டகம் - இரண்டாம் ஆயிரம் - 2052-2081 (30 பாசுரங்கள்) 4. திருவெழுகூற்றிருக்கை - மூன்றாம் ஆயிரம் - 2672 (1 பாசுரம்) 5. சிறிய திருமடல் - மூன்றாம் ஆயிரம் - 2673 (40 சூர்னிகை) (1 பாசுரம்) 6. பெரிய திருமடல் - மூன்றாம் ஆயிரம் - 2674 (78 சூர்னிகை) (1 பாசுரம்)
- பாசுரங்கள் - 1137
----------
மங்களாஸாஸநம் செய்த திவ்ய தேச
ஸ்தலங்கள் - 86; பாசுரங்கள் - 1057
- திருவரங்கம் 73 பாசுரங்கள்
- திருக்கோழி 1 பாசுரம்
- திருக்கரம்பனூர் 1 பாசுரம்
- திருவெள்ளறை 13 பாசுரங்கள்
- திருப்பேர் நகர் 19 பாசுரங்கள்
- திருக்கண்டியூர் 1 பாசுரம்
- திருக்கூடலூர் 10 பாசுரங்கள்
- திருப்புள்ளம்பூதங்குடி 10 பாசுரங்கள்
- திருஆதனூர் 1 பாசுரம்
- திருக்குடந்தை 25 பாசுரங்கள்
- திருவிண்ணகரம் 34 பாசுரங்கள்
- திருநறையூர் 10 பாசுரங்கள்
- திருச்சேறை 13 பாசுரங்கள்
- திருக்கண்ணமங்கை 14 பாசுரங்கள்
- திருக்கண்ணபுரம் 104 பாசுரங்கள்
- திருக்கண்ணங்குடி 10 பாசுரங்கள்
- திருநாகை 10 பாசுரங்கள்
- திருத்தஞ்சை மாமணிக்கோயில் 3 பாசுரங்கள்
- திருநந்தீபுர விண்ணகரம் 10 பாசுரங்கள்
- திருவெள்ளியங்குடி 10 பாசுரங்கள்
- திருவழுந்தூர் 45 பாசுரங்கள்
- திருச்சிறுபுலியூர் 10 பாசுரங்கள்
- திருத்தலைச்சங்க நாண்மதியம் 2 பாசுரங்கள்
- திருஇந்தளூர் 11 பாசுரங்கள்
- திருக்காவளம்பாடி 10 பாசுரங்கள்
- திருக்காழிச் சீராம விண்ணகரம் 10 பாசுரங்கள்
- திருஅரிமேய விண்ணகரம் 10 பாசுரங்கள்
- திருவண்புருடோத்தமம் 10 பாசுரங்கள்
- திருச்செம்பொன்செய் கோயில் 10 பாசுரங்கள்
- திருமணிமாடக்கோயில் 12 பாசுரங்கள்
- திருவைகுந்த விண்ணகரம் 10 பாசுரங்கள்
- திருவாலி திருநகரி 41 பாசுரங்கள்
- திருத்தேவனார் தொகை 10 பாசுரங்கள்
- திருத்தெற்றியம்பலம் 10 பாசுரங்கள்
- திருமணிக் கூடம் 10 பாசுரங்கள்
- திருவெள்ளக்குளம் 10 பாசுரங்கள்
- திருப்பார்த்தன் பள்ளி 10 பாசுரங்கள்
- திருச்சித்திரகூடம் 21 பாசுரங்கள்
- திருவஹீந்த்ரபுரம் 10 பாசுரங்கள்
- திருக்கோவிலூர் 18 பாசுரங்கள்
- திருக்கச்சி 4 பாசுரங்கள்
- திருஅஷ்டப்புஜகரம் 11 பாசுரங்கள்
- திருத்தண்கா 2 பாசுரங்கள்
- திருவேளுக்கை 1 பாசுரம்
- திருநீரகம் 1 பாசுரம்
- திருப்பாடகம் 2 பாசுரங்கள்
- திருநிலாதிங்கள் துண்டம் 1 பாசுரம்
- திருஊரகம் 4 பாசுரங்கள்
- திருவெஃகா 6 பாசுரங்கள்
- திருக்காரகம் 1 பாசுரம்
- திருக்கார்வானம் 1 பாசுரம்
- திருக்கள்வனூர் 1 பாசுரம்
- திருப்பவள வண்ணம் 1 பாசுரம்
- திருப்பரமேஷ்வர விண்ணகரம் 10 பாசுரங்கள்
- திருப்புட்குழி 2 பாசுரங்கள்
- திருநின்றவூர் 2 பாசுரங்கள்
- திருஎவ்வுள் 11 பாசுரங்கள்
- திருவல்லிக்கேணி 10 பாசுரங்கள்
- திருநீர்மலை 19 பாசுரங்கள்
- திருவிடவேந்தை 13 பாசுரங்கள்
- திருக்கடல் மல்லை 26 பாசுரங்கள்
- திருக்கடிகை 3 பாசுரங்கள்
- திருநாவாய் 2 பாசுரங்கள்
- திருமூழிக்களம் 3 பாசுரங்கள்
- திருவல்லவாழ் 11 பாசுரங்கள்
- திருப்புலியூர் 1 பாசுரம்
- திருக்குறுங்குடி 25 பாசுரங்கள்
- திருத்தங்கல் 4 பாசுரங்கள்
- திருக்கூடல் 1 பாசுரம்
- திருமாலிருஞ் சோலை 33 பாசுரங்கள்
- திருமோகூர் 1 பாசுரம்
- திருக்கோஷ்டியூர் 13 பாசுரங்கள்
- திருப்புல்லாணி 21 பாசுரங்கள்
- திருமெய்யம் 9 பாசுரங்கள்
- திரு அயோத்தி 1 பாசுரம்
- திரு நைமிசாரண்யம் 10 பாசுரங்கள்
- திருப்பிரூதி 10 பாசுரங்கள்
- திருவதரியாஷ்ரமம் 21 பாசுரங்கள்
- திருசாளக்கிராமம் 10 பாசுரங்கள்
- திரு வடமதுரா 4 பாசுரங்கள்
- திருவாய்ப்பாடி 7 பாசுரங்கள்
- திரு துவாரகா 2 பாசுரங்கள்
- திரு சிங்கவேள் குன்றம் 10 பாசுரங்கள்
- திருவேங்கடம் 62 பாசுரங்கள்
- திருப்பாற்கடல் 11 பாசுரங்கள்
- திரு பரமப்பதம் 1 பாசுரம்
----------
பிற பெயர்கள்
நீலன், பரகாலன், கலியன், கலிகன்றி, கலித்வம்சம், தூயோன், லோக திவாகர கவி, சதுஷ்கவி சிகாமணி, ஷத் பிரபந்த கவி, கலிவைரி, நாலுகவி பெருமாள், திருவா வீருடைய பெருமாள், மங்கையர் கோன், அருள்மாரி, மங்கை வேந்தன், ஆலிநாடன், அரட்டாமுகி, அடையார் சீயம் அதயார் சீயம், கொற்ற வேள் பரகாலன், கொற்ற வேள் மங்கை வேந்தன், ஆடல்மா வளவன், மானவேல் கலியன், திருவாளன், வாள் கலியன், சீர் கலியன், மிடுக்கன், முள்ளி செழு மலர் தாரான், பரக்கால நாயகி
----------
மிகப்பெரிய வீரர். மேலும் மிகுந்த மிடுக்கை உடையவர். எனவே கலியன் எனப் பெயர் பெற்றார். மற்ற மதத்தவர்களுக்கு (பரர்கள்) காலனைப் போன்று இருப்பதனால் பரகாலன் என்ற பெயர் கொண்டார். பிற மதத்தவர்களை வாதம் செய்து வெற்றி பெற்றவர். எம்பெருமானே இவரைப் பார்த்து பயந்ததனாலும், இவருக்கு பரகாலன் எனப் பெயர் வந்தது எனலாம். திருநறையூர் நம்பி மற்றும் திருக்கண்ணபுரம் சௌரி ராஜப் பெருமாளிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இந்த இரு எம்பெருமானும் திருமங்கையாழ்வாருக்கு ஆசார்யன் ஸ்தானத்தில் இருக்கக் கூடியவர்கள். இவர் பல திவ்ய தேசங்களை தன்னுடைய ஆடல்மா குதிரையில் சென்று மங்களாசாசனம் செய்திருக்கிறார். ஏறக்குறைய நாற்பது திவ்யதேசங்கள் திருமங்கையாழ்வாரால் தனித்து மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது. இவர் காட்டிக் கொடுக்கவில்லை என்றால் அந்த நாற்பது திவ்யதேசங்களும் நம்மால் அறியப்படாமல் இருந்திருக்கும். அப்படிப்பட்ட திருமங்கையாழ்வார் ஸ்ரீரங்கம் முதலான பல திவ்ய தேசங்களில் பல கைங்கர்யங்களையும் செய்துள்ளார். ஆழ்வார்கள் வரிசைக் கிரமத்தில் இவர் தான் கடைசி ஆழ்வார். நம்மாழ்வாரிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். நம்மாழ்வார் அருளிய நான்கு ப்ரபந்தங்கள் நான்கு வேதங்களுக்குச் சமமாகக் கொண்டாடப்படுகின்றன. அந்த நான்கு வேதங்களுக்கு எப்படி ஆறு அங்கங்கள் உள்ளதோ அதே போன்று நம்மாழ்வாரின் நான்கு ப்ரபந்தங்களுக்கு திருமங்கையாழ்வாரின் ஆறு ப்ரபந்தங்களும் ஆறு அங்கங்களாகக் கருதப்படுகின்றன.
தொடக்கத்தில் ஆத்மாவை வெயிலில் இட்டு உடம்பை நிழலிலே வைத்தவர். அதாவது பகவத் விஷயத்தில் புகாமல் விஷய சுகங்களில் ஈடுபட்டவர். ஆழ்வார் தான் எம்பெருமானுடைய கிருபைக்கு பாத்திரமாகி, ஸர்வேஸ்வரனாலேயே திருமந்திரம் உபதேசிக்கப் பெற்று, அந்த ஆனந்த அனுபவத்தை நால்வகை (ஆசு, மதுர, சித்ர & விஸ்தார) கவிகளால் பிரபந்தங்களில் அருளிச்செய்தார்.
எம்பெருமான் தனக்கு செய்த பேர் உபகாரத்திற்கு தான் செய்யக்கூடியதோ, செய்ய வேண்டியதோ - நன்றி மறவாதிருத்தல் ஒன்றே என்ற உறுதியுடன் அவன் காட்டிக் கொடுத்த அவனுடைய ஸ்வரூப, ரூப, குண, விபூதிகளை பலவிதமாக பலமுறை சொல்லிச் சொல்லி பெரிய திருமொழியில் அனுபவிக்கிறார்.
திருவெழுகூற்றிருக்கை என்னும் பிரபந்தத்தில் ஜகத் ஸ்ருஷ்டி, பிரம்மாவின் படைப்பு போன்ற அவரது மேன்மைகளை அனுபவித்து அப்படிப்பட்டவனே திருக்குடந்தையில் ஆராவமுதனாய் எழுந்தருளி இருக்கிறான் என்று அவனிடம் சரணம் அடைகிறார்.
சிறிய திருமடலில் ஆழ்வார் தான் பரகால நாயகியாகி பகவானை நாயகனாய் கொண்டு ஜீவனுக்கும் பகவானுக்கும் உள்ள ஒழிக்கவொண்ணா ஸம்பந்தம், அவரை விட்டுப் பிரிந்து ஜீவன் படும் துன்பம், அவனை அடையும் உபாயம் ஆகியவற்றைக் காட்டும் உட்பொருளை உபதேசிப்பதாக அருளிச்செய்துள்ளார்.
பெரிய திருமடலில் 'கண்ணனுக்கே ஆமது காமம்' என்ற வகையில் காமம் என்ற புருஷார்த்தத்தை சிறப்பாக பேசுகிறார். எம்பெருமானிடம் ஏற்பட்ட அன்பின் மிகுதியால் அவனுடன் கலந்து பிரிந்த பரகால நாயகியாக மடலூர்ந்தாகிலும் அவனை அடைந்தே தீர வேண்டும் என்ற நிலையில் இப்பிரபந்தத்தை அருளி செய்கிறார்.
திருக்குறுந்தாண்டகத்தில் பஞ்சபூதங்களிலும் அவற்றின் சேர்க்கையால் உண்டான அனைத்து வஸ்துக்களிலும் உள்ளும் புறமும் பரவி அந்தயாமியாக பகவான் விளங்குவதை அனுபவிக்கிறார்.
திருநெடுந்தாண்டகத்தில் முதல் பத்து பாசுரங்களை தானான தன்மையில் திருமந்திரார்த்தத்தையும், அடுத்த பத்து பாசுரங்களை திருத்தாயார் தன்மையில் த்வயார்த்தத்தையும் கடைசி பத்து பாசுரங்களை நாயகி தன்மையில் சரமஸ்லோகார்த்தத்தையும் உள்ளுரைப் பொருளாக வைத்து அருளிச் செய்கிறார். மேலும் முதல் பத்தில் பக்தியும், இரண்டாம் பத்தில் பிரபத்தியும், மூன்றாம் பத்தில் பிராட்டியின் புருஷகாரமும் பேசப்படுவதாக பூர்வாசார்யர்கள் காட்டுவர்.
இன்னும் பல பல விசேஷ அர்த்தங்களை அனுபவிக்கும்படி இருப்பதால் ஒரு ஸதாசாரிய திருவடிகளை ஆச்ரயித்து நாம் எல்லோரும் அறிவோம்.
----------
தனியன்
கலயாமி கலித்⁴ வம்ஸம்
கவிம் லோக தி³வாகாரம்|
யஸ்ய கோ³பி⁴: ப்ரகாஸா²பி⁴ர்
ஆவித்³யம் நிஹதம் தம:||
தனியனின் விளக்கம்
கலிகன்றி என்று திருநாமம் கொண்டவர், கவிகளில் ஸூர்யன் போல் ப்ரகாசிப்பவர், அடியேன் அஞ்ஞாந இருளைத் தம் ஒளிமிக்க சொற்களால் முற்றிலும் அகற்றிய ஞானக் கதிரவனான திருமங்கை ஆழ்வாரை த்யானிக்கிறேன்.
வாழி திருநாமம்
1. கலந்த திருக்கார்த்திகையில் கார்த்திகை வந்தோன் வாழியே|
காசினியில் குறையலூர்க் காவலோன் வாழியே|
நலந்திகழ் ஆயிரத்தெண்பத்து நாலு உரைத்தான் வாழியே|
நாலைந்தும் ஆறைந்தும் நமக்கு உரைத்தான் வாழியே|
இலங்கெழு கூற்றிருக்கை இரு மடல் ஈந்தான் வாழியே|
இம்மூன்றில் இருநூற்றிருபத்து ஏழிந்தான் வாழியே|
வலந்திகழும் குமுதவல்லி மணவாளன் வாழியே|
வாட்கலியன் பரகாலன் மங்கையர் கோன் வாழியே||
2. அய்யன் அருள்மாரி கலை ஆய்ந்து உரைத்தோன் வாழியே|
அந்துகிலும் சீராவும் அணியும் அரை வாழியே|
மையிலகு வேல் அணைத்த வண்மை மிகு வாழியே|
மாறாமல் அஞ்சலி செய் மலர்க் கரங்கள் வாழியே|
செய்ய கலனுடன் அலங்கல் சேர் மார்பும் வாழியே|
திண் புயமும் பணி அமர்ந்த திருக்கழுத்தும் வாழியே|
மையல் செய்யும் முக முறுவல் மலர் கண்கள் வாழியே|
மன்னு முடித் தொப்பாரம் வளையமுடன் வாழியே||
திருநாள் பாட்டு
1. பேதை நெஞ்சே!* இன்றை பெருமை அறிந்திலையோ*
ஏது பெருமை இன்றைக்கு என்றென்னில்*
ஓதுகின்றேன் வாய்த்த புகழ் மங்கையர் கோன்*
மாநிலத்தில் வந்துதித்த*
கார்த்திகையில் கார்த்திகை நாள் காண்*
2. மாறன் பணித்த* தமிழ்மறைக்கு*
மங்கையர்கோன் ஆரங்கம் கூற அவதரித்த*
வீறுடைய கார்த்திகையில் கார்த்திகை நாள்*
இன்றென்று காதலிப்பார்*
வாய்த்த மலர்த் தாள்கள் நெஞ்சே! வாழ்த்து!
திருமங்கை ஆழ்வாரின் வடிவழகில் ஈடுபட்டு
மணவாள மாமுனிகள் அருளிய
வடிவழகு சூர்ணிகையும் தனிப் பாடல்களும்
அணைத்த வேலும், தொழுத கையும், அழுந்திய திருநாமமும், ஓம்
என்ற வாயும், உயர்ந்த மூக்கும், குளிர்ந்த முகமும், பரந்த விழியும்,
பதிந்த நெற்றியும், நெறித்த புருவமும், சுருண்ட குழலும், வடித்த
காதும், அசைந்த காது காப்பும், தாழ்ந்த செவியும், செறிந்த
கழுத்தும், அகன்ற மார்பும், திரண்ட தோளும், நெளிந்த முதுகும்,
குவிந்த இடையும், அல்லிக் கயிறும், அழுந்திய சீராவும், தூக்கிய
கருங் கோவையும், தொங்கலும் தனி மாலையும், தளிரும்
மிளிருமாய் நிற்கிற நிலையும், சாற்றிய திருத் தண்டையும்,
சதிரான வீரக் கழலும், தஞ்சமான தாள் இணையும், குந்தியிட்ட
கணைக் காலும், குளிர வைத்த திருவடி மலரும், வாய்த்த மணங்
கொல்லையும், வயலாலி மணவாளனும், வாடினேன் வாடி என்று
வாழ்வித்து அருளிய நீலக் கலிகன்றி, மருவலர் தம் உடல் துணிய
வாள் வீசும் பரகாலன், மங்கை மன்னனான வடிவே|
உறை கழித்த வாளை ஒத்த விழி மடந்தை மாதர் மேல், உருக
வைத்த மனம் ஒழித்து இவ் உலகளந்த நம்பி மேல், குறையை
வைத்து, மடல் எடுத்த குறையலாளி திருமணங் கொல்லை
தன்னில், வழி பறித்த குற்றமற்ற செங்கையான், மறை உரைத்த
மந்திரத்தை மால் உரைக்க, அவன் முன்னே, மதி ஒடுக்கி, மனம்
அடக்கி, வாய் புதைத்து, ஒன்னலார் கறை குளித்த வேல்
அணைத்து நின்ற விந்த நிலைமை, என் கண்ணை விட்டு
அகன்றிடாது கலியன் ஆணை ஆணையே|
காதும் சொரி முத்தும், கையும் கதிர் வேலும், தாது புனை
தாளினையும், தனிச் சிலம்பும், நீதி புனை தென்னாலி நாடன்
திருவழகைப் போல, என் ஆணை ஒப்பார் இல்லையே|
வேல் அணைத்த மார்பும், விளங்கு திரு எட்டெழுத்தை மால்
உரைக்க, தாழ்த்த வலச் செவியும், தாளினை தண்டையும், வீரக்
கழலும், தார்க் கலியன் நன் முகமும் கண்டு களிக்கும் என் கண்|
இதுவோ| திருவரசு இதுவோ| திருமணங்கொல்லை
இதுவோ| எழிலாலி என்னுமூர் இதுவோ| தாள் வெட்டும்
கலியன் வெருட்டி நெடுமாலை எட்டெழுத்தும் பறித்த இடம்|
மங்கள ஸ்லோகம்
ஸ்ரீமதாலி ஸ்ரீநகரி நாதாய கலி வைரிணே|
சதுஷ் கவிப்ர தானாய பரகாலாய மங்களம்||
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்