||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
- அம்சம் - ஸ்ரீ வத்ஸம்
- அவதார ஸ்தலம் – திரு உறையூர்
- காலம் - கி.பி. 8ம் நூற்றாண்டு
- வருடம் - துன்மதி - கலி பிறந்து 343 ம் வருஷம்
- மாதம் - காத்திகை
- திரு நக்ஷத்திரம் - ரோஹிணி
- திதி - வளர்பிறை துவிதியை
- கிழமை - புதன்
- ஆசார்யன் - ஸேனை முதலியார்
- பரமபத ப்ராப்தி ஸ்தலம் - திருவரங்கம்
- அருளிச் செய்தவை - 1. அமலனாதிபிரான் - முதலாம் ஆயிரம் - 927-936
- பாசுரங்கள் – 10
----------
மங்களாஸாஸநம் செய்த திவ்ய தேச
ஸ்தலங்கள் - 3; பாசுரங்கள் - 13
- திருவரங்கம் 10 பாசுரங்கள்
- திருவேங்கடம் 2 பாசுரங்கள்
- திரு பரமப்பதம் 1 பாசுரம்
----------
பிற பெயர்கள்
முனிவாஹன யோகி, பாணர், யோகி வாஹனர், காவீஸ்வரர்
----------
இவரும் தொண்டரடிப் பொடி ஆழ்வார் போல் ஸ்ரீரங்கநாதனிடம் மிகவும் ஈடுபாடு கொண்டிருந்தவர். அர்ச்சாவதாரத்தில் மிகவும் ஈடுபட்டிருந்தவர்கள் கடைசி மூன்று ஆழ்வார்கள் என்று கூறுவர். அவர்கள் முறையே தொண்டரடிப் பொடி ஆழ்வார், திருப்பாண் ஆழ்வார் மற்றும் திருமங்கை ஆழ்வார் ஆவர். அதிலும் தொண்டரடிப் பொடி ஆழ்வாரும், திருப்பாண் ஆழ்வாரும் ஸ்ரீரங்கநாதன் இடத்தில் மட்டுமே ஊறியவர்கள். திருமங்கை ஆழ்வார் அனைத்து அர்ச்சாவதார எம்பெருமானிடமும் மிகவும் ஈடுபாடு கொண்டிருந்தார். இவர் நம்பெருமாளுடைய திவ்ய மங்கள விக்ரஹத்திற்கு மங்களாஸாஸநம் செய்யும் வகையில் அமலனாதிபிரான் என்ற ப்ரபந்தத்தை அருளிச் செய்தார். ஸ்ரீரங்கநாதரின் திருமேனியை மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் வாழ்ந்தவர். திருப்பாண் ஆழ்வார் பஞ்ச மங்களத்தில் பிறந்தவர். அதாவது சாஸ்திரத்தில் நான்கு வர்ணங்கள் காட்டப் படுகிறது. பிராமணர், க்ஷத்ரியர், வைஸ்யர் மற்றும் சூத்திரர் என்று நான்கு வர்ணங்கள். இந்த நான்கு வர்ணங்களுக்கும் அப்பாற்பட்டவர்கள் என்று சிலர் இருப்பார்கள். இந்த வர்ண தர்மங்களை ஒத்துக் கொள்ளாமல் அவர்கள் இஷ்டப்படி வாழ்க்கையை வாழக் கூடியவர்கள். ஆனால் அந்த குலத்திலும் எம்பெருமானுடைய கருணையினால் சிலர் எம்பெருமானுக்கு அடியவர்களாக மிகுந்த பக்தி கொண்டவர்களாக இருந்து இருக்கிறார்கள். திருப்பாண் ஆழ்வாரும் நம்பாடுவானைப் போன்று நான்கு வர்ணங்களுக்கும் அப்பாற்பட்ட பாணர் குலத்தில் பிறந்தவர்.
இவருடைய வைபவத்தை அமலனாதிபிரான் வ்யாக்யானத்தில் காட்டும் போது இவரை இந்த உலகத்தில் இருப்பவர்கள் நான்கு வர்ணத்திற்கு அப்பாற்பட்டவர்கள், தாழ்ந்த குலத்தவர்கள் என்று நினைப்பார்கள். எம்பெருமானும் அதே போன்று நினைப்பான். அதாவது எவ்வாறு நித்ய சூரிகள் இந்த நான்கு வர்ணங்களுக்கு அப்பாற்பட்டவர்களோ அதே போன்று நான்கு வர்ணங்களுக்கும் அப்பாற்பட்ட திருப்பாண் ஆழ்வாரை நித்ய சூரிகளுக்கு நிகராக எம்பெருமான் நினைப்பானாம். இவ்வாறு எம்பெருமானின் பரிபூரணமான கருணையைப் பெற்றவர் திருப்பாண் ஆழ்வார்.
இவருடைய சரித்திரம் நாம் அறிந்ததே. திருவரங்கத்தில காவிரிக் கரைக்கு மறு பக்கத்தில் அமர்ந்து, ஊருக்குள் வராமல் எம்பெருமானைப் பற்றி பாடிக் கொண்டு இருப்பார். ஒரு முறை “லோக சாரங்க முனி” என்பவர் காவிரிக் கரையில் தீர்த்தம் எடுக்க வர வழியில் அமர்ந்திருந்த திருப்பாண் ஆழ்வார் மீது ஒரு கல்லை எடுத்து போட்டார். அது ஆழ்வாருடைய நெற்றியில் பட்டு ரத்தம் வந்தது. லோக சாரங்க முனிவர் மிகவும் வருத்தத்துடன் எம்பெருமானிடம் வந்தார். எம்பெருமான் லோக சாரங்க முனியை அழைத்து “நீங்கள் மிகப் பெரிய அபசாரம் செய்து விட்டீர்கள். நீங்களே சென்று அவரை அழைத்துக் கொண்டு வர வேண்டும்” எனக் கட்டளையிட உடனே லோக சாரங்க முனி திருப்பாண் ஆழ்வாரிடம் சென்று மன்னிப்புக் கேட்டு திருவரங்கத்திற்குள் வரும் படி வேண்ட திருப்பாண் ஆழ்வார் “நான் தாழ்ந்த குலத்தைச் சார்ந்தவன் என்னுடைய கால் திருவரங்கத்தை மிதிக்கக் கூடாது; ஊருக்கு வெளியே தான் இருக்க வேண்டும்” என்று சொல்ல அதற்கு லோக சாரங்க முனி மறுத்து “எம்பெருமானுடைய ஆணை நீர் வந்து தான் ஆக வேண்டும்”. “உமது திருவடி தானே ஊருக்குள் படக்கூடாது என்னுடைய தோளில் ஏறிக் கொள்ளும்” என்று கூற முதலில் மறுத்த திருப்பாண் ஆழ்வார் பின் சம்மதித்தார். இது மிகவும் ரொம்ப ஆச்சரியமான விஷயமாகக் கருதப்பட்டது. அடியவர்களுக்கு ஆட்பட்டு இருக்க வேண்டும் என்ற தாத்பர்யத்தை அறிந்து முதலில் மறுத்த திருப்பாண் ஆழ்வார். எம்பெருமானின் சிறந்த அடியவரான லோக சாரங்க முனிவரின் வேண்டுகோளை மறுக்க மனமின்றி அவருடைய ஆசையை நிறைவேற்றித் தான் ஆக வேண்டும்; சிறந்த அடியவருடைய வேண்டுகோளை நாம் மறுக்கக் கூடாது என்ற கருத்தை நெஞ்சில் வைத்துக் கொண்டு லோக சாரங்க முனி தோளில் ஏறி திருவரங்கத்தை நோக்கி வருகிறார். அமலனாதி பிரான் பாசுரங்களைப் பாடிக் கொண்டே திருவரங்கத்திற்குள் வருகிறார். பெரிய பெருமாள் சந்நிதிக்கு எதிரே வந்த உடன் லோக சாரங்க முனியின் தோளில் இருந்து இறங்கி எம்பெருமானின் திருவடியை அடைந்து உய்வடைந்தார் என்று அறிகிறோம். இன்றைக்கும் திருப்பாண் ஆழ்வார் பரமபதம் அடைந்த போதும் அவர் எம்பெருமானின் திருவடிகளை அநுபவித்துக் கொண்டு இருப்பதாக ஐதீகம்.
பர, வியூக, விபவங்களின் மேன்மைகளைக் கூறாமல், 'உள்ளங்கை நெல்லிக் கனி' போல இங்கு, இப்பொழுது அனுபவிக்க கிடைக்கும் அர்ச்சாவதாரமாய் திருக்கண் வளர்ந்து அருளும் திருவரங்கனை அனுபவித்து பாடுகிறார். அரங்கனின் அருளே காரணமாக தனக்கு அவனிடம் அன்பு பெருக, அவன் தானே வந்து தன்னை காட்டித்தர, அவனது திவ்ய மங்கள விக்ரஹ திருமேனியை பாதாதி கேசம் அனுபவிக்கிறார்.
பிரபந்தத்தை தொடங்கும் பொழுதே பரமாத்மாவின் ஸ்வரூப நிரூபக தர்மங்களில் ஒன்றான அமலத்துவத்தை பேசுகிறார். அமலன் ஆதிபிரான் என்ற ஆரம்பித்து எம்பெருமானின் திருவடிகள் தாமே வந்து தம்மை அடிமை கொண்டது என்கிறார். திருவடிகளில் பதித்த தன் கண்கள் அங்கேயே நிலைத்து இருக்க, எம்பெருமானின் அரைச் சிவந்த ஆடை தன்னை கவர சிந்தனையில் லயித்த ஆழ்வாரை பிரஹ்மனை படைத்த திருநாபி தன் பக்கம் ஈர்த்தது, அடுத்து உதர பந்தம் தன் அழகை காட்ட, தாயார் ஏறி அமர்ந்த திருவார மார்பு தன்னை ஆட்கொண்டதை பேசுகிறார். அடுத்து ஸர்வ லோகத்தையும் உண்ட திருக்கழுத்து தன் அழகை காட்டி வசீகரிக்க, அடுத்து தித்தித்து இருக்கும் திருப்பவளச் செவ்வாய் ஆழ்வாரை ஈர்க்க, தன் மனதை பறி கொடுத்தார். இப்படி ஈடுபட்ட வந்த ஆழ்வாரை அவனது பரத்வத்தை காட்டி கொடுக்கக் கூடிய நீண்ட பெரிய வாய கண்கள் தன்னை பேதமை செய்ததாகக் கூறுகிறார். இப்படி ஒவ்வொரு அங்கமாக ஆழ்வாரை கவர, ஆழ்வார் அந்த அநுபவத்தில் திளைத்து இருக்க, எம்பெருமானின் எழில் திருமேனியின் முழுமையான அழகு தன்னை நிறை கொண்டது என்கிறார். இவ்வாறு பரம போக்கியமாய் நம்பெருமாளை கண்ட தனது கண்கள் வேறொன்றையும் காணாவே என்று பிரபந்தத்தை தலைகட்டி திருவரங்க நாதனின் திருவடிகளை அடைந்து ப்ரஹ்மானுபவத்தில் திளைக்கிறார்.
----------
தனியன் 1
வ்ருச்சிகே ரோஹினி ஜாதம்
ஸ்ரீ பாணம் நிகளாபுரே|
ஸ்ரீ வத்சாங்கம் காய கேந்த்ரம்
முநி வாஹநம் ஆஸ்²ரயே||
தனியன் 2
ஆபாத³ சூட³ம் அநுபூ⁴ய ஹரிம் ஸ²யாநம்
மத்⁴யே கவே ரது³ ஹிதுர் முதி³தாந் தராத்மா|
அத்³ரஷ் ட்ருதாம் நயநயோர் விஷயாந் தராணாம்
யோ நிஸ்²சிகாய மநவை முநி வாஹநம் தம்||
தனியனின் விளக்கம்
இரண்டு ஆறுகளின் நடுவே அறிதுயில் கொண்ட அரங்கநாதனைத் திருவடி முதல் திருமுடி வரை அனுபவித்தப் பாடிய, லோக ஸாரங்க முனிவரால் தோள் மேல் சுமந்து அவனைக் கண்டு களித்து அவனைக் கண்டு களித்த கண்களால் இனி வேறொன்றும் காணேன் என்று அவன் திருவடி சேர்ந்த திருப்பாணாழ்வாரை த்யானிக்கிறோம்.
வாழி திருநாமம்
உம்பர் தொழும் மெய் ஞானத்து உறையூரான் வாழியே|
உரோகிணி நாள் கார்த்திகையில் உதித்த வள்ளல் வாழியே|
வம்பவிழ்தார் முனி தோளில் வந்த பிரான் வாழியே|
மலர்க்கண்ணை வேறொன்றில் வையாதான் வாழியே|
அம்புவியில் மதிள் அரங்கர் அகம் புகுந்தான் வாழியே|
அமலனாதிபிரான் பத்தும் அருளினான் வாழியே|
செம்பொன் அடி முடியளவும் சேவிப்போன் வாழியே|
திருப்பாணன் பொற் பதங்கள் செகதலத்தில் வாழியே||
திருநாள் பாட்டு
கார்த்திகையில் ரோகிணி நாள்*
காண்மின் இன்று காசினியீர்*
வாய்த்த புகழ்பாணர் வந்துதிப்பால்*
ஆத்தியர்கள் அன்புடனே தான்*
அமலனாதிபிரான் கற்றதர் பின்*
நன்குடனே கொண்டாடும் நாள்*
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment